Saturday, 14 August 2021

கலாச்சாரத்தில் வேரூன்றிய நம்பிக்கை – திருத்தந்தையின் செய்தி

 

அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வைத் தெரிவுசெய்தவர்கள், இறைமக்களுடன் இணைந்திருத்தல், அவர்களை உளமார மதித்தல் என்ற அம்சங்கள் வழியே, நற்செய்தியைப் பரப்பும் பணியில் முழுமையாக ஈடுபடமுடியும் – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஒருமைப்பாடு என்பது, அனைத்தையும் ஒரே மாதிரியாக மாற்றுவது அல்ல, மாறாக, அது, பல்வேறு பரிமாணங்கள் கொண்ட நல்லிணக்கம் என்பதை நாம் கற்றுக்கொள்வது, மிகுந்த நலம் விளைவிக்கும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இலத்தீன் அமெரிக்க துறவியர் மாநாட்டிற்கு அனுப்பிய ஒரு காணொளியில் கூறியுள்ளார்.

இலத்தீன் அமேரிக்கா, மற்றும் கரீபியன் பகுதிகளில் பணியாற்றும் துறவியர், ஆகஸ்ட் 13, இவ்வெள்ளி முதல், 15 இஞ்ஞாயிறு முடிய மேற்கொள்ளும் ஒரு மெய்நிகர் மாநாட்டிற்கு திருத்தந்தை அனுப்பியுள்ள காணொளிச் செய்தியில், கலாச்சாரத்தில் வேரூன்றிய நம்பிக்கையைக் குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

"துறவு சபைகளுக்கிடையே, கலாச்சாரங்களுக்கிடையே பயணிக்கும் துறவற வாழ்வு" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வோர், கலாச்சாரத்தில் ஊன்றப்பட்ட நம்பிக்கை, துறவற வாழ்வுக்கு வழங்கும் சவால்களின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது முக்கியம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

இறையியலை உருவாக்கி, வளர்ப்பது, துறவியரின் பணி

மக்களின் ஆழ்மனதில் வேரூன்றியிருக்கும் கலாச்சாரத்தை சரிவரப் புரிந்துகொண்டு, அதன் அடிப்படையில், கலாச்சாரத்தில் வேரூன்றிய இறையியலை உருவாக்குவதிலும், வளர்ப்பதிலும், துறவியரின் பணி அமைந்துள்ளது என்று, திருத்தந்தை தன் செய்தியில் கூறியுள்ளார்.

நம்பிக்கையை கலாச்சாரத்தில் வேரூன்ற வைப்பதும், கலாச்சாரத்தை நற்செய்தியாக மாற்றுவதும் இணைந்து செல்லவேண்டும் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியார் மக்களின் உள்ளங்களில் விதைத்துள்ள நம்பிக்கையை பாராட்டி வளர்ப்பது, இறைவன் நமக்கு வழங்கியுள்ள ஒரு கோடை என்று கூறினார்.

கிறிஸ்தவ வாழ்வு – கொள்கைத் திரட்டாக மாறும் ஆபத்து

கலாச்சாரத்தில் வேரூன்றுதல் நிகழாதபோது, கிறிஸ்தவ வாழ்வும், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வும், இயல்பு வாழ்விலிருந்து பிரிந்து, வெறும் அறிவுசார்ந்த கொள்கைத்திரட்டாக மாறிவிடுகிறது.

ஒருங்கிணைப்பதிலும், உடன்பிறந்த உணர்வை வளர்க்க பயணிப்பதிலும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு அதிக தேர்ச்சியடைந்திருக்க வேண்டும் என்று தன் செய்தியில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய காலக்கட்டத்தில், துறவு வாழ்வு உயிர் வாழ்ந்தால் போதும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

முழுமையான நற்செய்திப் பணி

அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வைத் தெரிவுசெய்தவர்கள், இறைமக்களுடன் இணைந்திருத்தல், அவர்களை உளமார மதித்தல் என்ற அம்சங்கள் வழியே, நற்செய்தியைப் பரப்பும் பணியில் முழுமையாக ஈடுபடமுடியும் என்று திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்திற்கும் மேலாக, உண்மையான மகிழ்வை வெளிப்படுத்துதல், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வை மேற்கொண்டிருப்பவர்கள் ஆற்றக்கூடிய மிகப்பெரும் மறைபரப்புப்பணி என்பதை தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த அருளை இறைவனிடம் அனைவரும் கேட்கும்படியாக அழைப்பு விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...