Saturday, 14 August 2021

பழங்குடியின மக்களின் ஞானம், அறிவை, கொண்டாட ஐ.நா. அழைப்பு

 

ஐ.நா. நிறுவனத்தின் பொது அவை, 1994ம் ஆண்டு, டிசம்பர் 23ம் தேதியன்று, பழங்குடிகள் உலக நாளை உருவாக்கியது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலகில் வாழ்கின்ற 47 இலட்சத்து 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட பழங்குடியின மக்கள் எதிர்கொள்ளும் உரிமை மீறல்களை ஏற்கும் அதேவேளை, அம்மக்களின் ஞானம் மற்றும், அறிவைக் கொண்டாடவும், அவர்களோடு உண்மையான ஒருமைப்பாட்டுணர்வு கொள்ளவும், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் அழைப்புவிடுத்துள்ளார்.

ஆகஸ்ட் 09, வருகிற திங்களன்று கடைபிடிக்கப்படும், பழங்குடியினர் உலக நாளுக்கென்று செய்தி வெளியிட்டுள்ள கூட்டேரஸ் அவர்கள், பழங்குடிகளுக்கு இழைக்கப்படும்  கொடுமையான சமத்துவமற்றநிலைகளை முடிவுக்குக் கொணருமாறு, இந்த உலக நாளில், அனைத்துலக சமுதாயத்திடம் தான் விண்ணப்பிப்பதாகக் கூறியுள்ளார்.

இன்றையச் சூழலில், பழங்குடியின மக்களின் நிலங்களும், குடியிருப்புப் பகுதிகளும், அவர்களின் அரசியல் மற்றும், பொருளாதாரத் தன்னாட்சியும், அவர்களின் பிள்ளைகளும்கூட சுரண்டப்பட்டு வருகின்றன என்று கூறியுள்ள கூட்டேரஸ் அவர்கள், இந்நிலை, அவர்களின் மாண்பு, மற்றும், சுதந்திரங்கள் ஆகியவற்றையும் பறித்துவிடுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பழங்குடிகள் உலக நாள்

“எவரும் ஒதுக்கப்பட்டுவிடக் கூடாது: பழங்குடியின மக்கள், மற்றும், புதியதொரு சமுதாய ஒப்பந்தத்திற்கு அழைப்பு” என்ற தலைப்பில், ஆகஸ்ட் 09, வருகிற திங்களன்று, பழங்குடியினர் உலக நாள் கடைபிடிக்கப்படுகிறது.

1982ம் ஆண்டு, ஆகஸ்ட் 9ம் தேதி, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பழங்குடி இன மக்கள் பற்றிய பணிக்குழு, தன் முதல் கூட்டத்தை கூட்டியது. 1994ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதியன்று, பழங்குடியினர் உலக நாளை உருவாக்கிய ஐ.நா. நிறுவனத்தின் பொது அவை, அதே ஆகஸ்ட் 9ம் தேதியையே, பழங்குடியினர் உலக நாளாகவும் அறிவித்தது.

பழங்குடிகள்

உலகில் 90 நாடுகளில் வாழ்கின்ற பழங்குடியின மக்கள், உலக மக்கள் தொகையில் 6.2 விழுக்காடாகும். இம்மக்கள், தனிச்சிறப்புமிக்க பன்முகக் கலாச்சாரங்கள், மரபுகள், மொழிகள், அறிவு, மற்றும், தாங்கள் வாழ்கின்ற பூமியோடு சிறந்ததோர் உறவு ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றனர்.   

எண்ணற்ற பழங்குடியினத்தவர், பல்வேறு வடிவங்களில் தன்னாட்சி அமைப்புக்களை உருவாக்கி சிறப்பாக வாழ்ந்து வந்தாலும், அவர்களின் நிலப்பகுதி மற்றும் வளங்களின் மீது அதிகாரம் கொண்டிருக்கும் நடுவண் அரசுகளின் அதிகாரத்தின் கீழே அவர்கள் வாழவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. (UN)


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...