Tuesday, 3 August 2021

அனைவரையும் சகோதரர், சகோதரிகளாக நடத்தும் மனப்பான்மை தேவை

 


இறைவனோடும், இயேசு கிறிஸ்துவில் ஒருவர் ஒருவருடனும் இணைந்திருப்பது, நம் வேறுபாடுகளைக் களையவும், ஒரே நோக்கத்தோடு முன்னோக்கிச் செல்லவும் உதவுகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆப்ரிக்க மக்கள் அனைவரும், தங்களிடையே காணப்படும் முரண்பாடுகளைக் கைவிட்டு, இயேசுவில், தங்கள் ஆணிவேரைக் கொண்டவர்களாக ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர், ஆப்ரிக்க மற்றும் மடகாஸ்கர் ஆயர்கள்.

ஆப்ரிக்க, மற்றும் மடகாஸ்கர் ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு நாள், ஜூலை 29 முதல், ஆகஸ்ட் 1, இஞ்ஞாயிறு வரை சிறப்பிக்கப்பட்டதையொட்டி, செய்தியொன்றை வெளியிட்ட அப்பகுதி ஆயர்கள், இறைவனோடும், இயேசு கிறிஸ்துவில் ஒருவர் ஒருவருடனும் இணைந்திருப்பது, நம் வேறுபாடுகளைக் களையவும், ஒரே நோக்கத்தோடு முன்னோக்கிச் செல்லவும் உதவுகிறது, என அதில் கூறியுள்ளனர்.

கடவுளுக்கு நம் வாழ்வில் முதலிடம் கொடுக்கும்போது, அனைவரையும் சகோதரர், சகோதரிகளாக நடத்தும் மனப்பான்மை பிறக்கும் எனக்கூறும் ஆயர்கள், ஆப்ரிக்க, மற்றும் மடகாஸ்கர் ஆயர் பேரவையின் நல்நோக்கங்கள் வெற்றிபெற, அனைத்து மக்களின் ஒன்றிணைந்த ஆர்வமும், தியாக மனப்பான்மையும் இன்றியமையாதவை என தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

1969ம் ஆண்டு ஜூலை மாதம் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்களால் உகாண்டாவின் கம்பாலாவில் துவக்கப்பட்ட SECAM எனப்படும், ஆப்ரிக்க, மற்றும் மடகாஸ்கர் ஆயர்களின் கூட்டமைமைப்பு, ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாத இறுதியில், தன் கூட்டமைப்பு நாளை சிறப்பித்து வருகிறது.

இவ்வாண்டின் கூட்டமைப்பு நாளுக்கென அப்பகுதி ஆயர்களின் செய்தியை கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அதன் தலைவர், கர்தினால் Philippe Ouédraogo அவர்கள், ஆயர்களின் பொதுநல நோக்கங்கள் நிறைவேற, மக்களின் ஒத்துழைப்பை வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...