Saturday, 14 August 2021

திருப்பீடத்திற்கும் சீனாவுக்கும் இடையே நிலவும் உறவு

 

பல்வேறு தடைகளின் நடுவே, சீனாவில் வாழும் கத்தோலிக்கர்கள் கொண்டிருக்கும் பக்தியும், ஆர்வமும், சீனாவுடன் திருப்பீடம் துவங்கிய உரையாடல்களை, தொடர்ந்து நடத்த, உந்துசக்தியாக அமைந்துள்ளன – கர்தினால் பரோலின்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

2018ம் ஆண்டு சீனாவுடன் திருப்பீடம் நிறைவேற்றிய ஒப்பந்தங்களின் தொடர்ச்சியாக, உரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன என்றும், கோவிட் பெருந்தொற்றின் தடைகளால் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்த உரையாடல் முயற்சிகள் விரைவில் தொடரும் என்று தான் நம்புவதாகவும், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் ஊடகத்திற்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இத்தாலியின் Trent நகரில், தன் கோடை விடுமுறையை கழித்துவரும் கர்தினால் பரோலின் அவர்கள், அங்கு வெளியாகும் La Voce del Nordest என்ற வார இதழுக்கு அளித்த பேட்டியில், திருப்பீடத்திற்கும் சீனாவுக்கும் இடையே நிலவும் உறவு, திருத்தந்தையின் உடல் நலம், மற்றும் அரசுத்தலைவர் பொறுப்பிலிருந்து ஓய்வுபெறவிருக்கும் இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜியோ மத்தரெல்லா அவர்களின் பணிக்காலம் ஆகிய தலைப்புகளில் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

உரையாடல்கள் தொடரும்

சீன அரசுக்கும், கத்தோலிக்கத் திருஅவைக்கும் இடையே துவக்கப்பட்ட உரையாடல், தொடர்ந்து நடைபெறும் என்ற உறுதியை, தன் பேட்டியில் வழங்கிய கர்தினால் பரோலின் அவர்கள், பல்வேறு தடைகளின் நடுவே, சீனாவில் வாழும் கத்தோலிக்கர்கள் கொண்டிருக்கும் பக்தியும், ஆர்வமும், இந்த உரையாடல்களை தொடர்ந்து நடத்த உந்துசக்தியாக அமைந்துள்ளன என்று கூறினார்.

திருத்தந்தையின் உடல்நலம்

இவ்வாண்டு ஜூலை 4ம் தேதி, உரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில் அறுவைசிகிச்சை பெற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைப்பற்றி கேள்வி எழுந்தபோது, சிகிச்சைக்குப்பின் உடல் நலனில் இயல்பு நிலைக்குத் திரும்புவது, வயதின் காரணமாக, சற்று மெதுவாக இருந்தாலும், திருத்தந்தையின் உள்ளுணர்வு, எப்போதும்போல், இளமையுடன் இருக்கிறது என்று பதிலளித்தார் கர்தினால் பரோலின்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் புதன் மறைக்கல்வி உரைகளை மீண்டும் துவங்கியுள்ளதிலிருந்தும், செப்டம்பர் மாதம் ஹங்கேரி மற்றும் சுலோவாக்கியா நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள ஆவலாய் இருப்பதிலிருந்தும் அவரது உள்ள உறுதியைப் புரிந்துகொள்ளலாம் என்று கர்தினால் பரோலின் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

இத்தாலிய அரசுத்தலைவரின் ஏழு ஆண்டுகள்

தன் பேட்டியின் இறுதியில், இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜியோ மத்தரெல்லா அவர்களைக் குறித்து பேசிய கர்தினால் பரோலின் அவர்கள், மத்தரெல்லா அவர்கள், ஏழு ஆண்டுகளாக அரசுத்தலைவர் பணியை ஆற்றி ஓய்வெடுக்கப்போகும் இவ்வேளையில், அவர், இத்தாலி நாட்டின் மீதும், மக்கள் மீதும் கொண்டுள்ள அன்பை, தன் அர்ப்பண உணர்வின் வழியே காட்டியதற்காக நன்றி கூறினார்.

மேலும், லித்துவானியா நாட்டிற்கு தான் மேற்கொள்ளவிருக்கும் மேய்ப்புப்பணி பயணத்தைக் குறித்தும், உக்ரைன் நாட்டிற்கென நியமிக்கப்பட்டுள்ள புதிய தூதரை ஆயராக அருள்பொழிவு செய்யவிருப்பதைக் குறித்தும் திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின் அவர்கள் குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...