கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரமுடியாத அளவில், பருவநிலை பெரிய அளவு சீர்குலைந்த மாற்றங்களைக் கண்டுள்ளதற்கு மனித நடவடிக்கைகள் முக்கியக் காரணம் என, ஐ.நா. நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்று குற்றம் சாட்டுகிறது.
IPCC எனப்படும், பருவ நிலை மாற்றம் குறித்து நாடுகளுக்கிடையே கலந்துரையாடும் ஐ.நா. அமைப்பு, அண்மையில் வெளியிட்டுள்ள 3000 பக்க அறிக்கையின்படி, பருவநிலை மாற்றத்தின் முக்கியக் காரணியாக மனிதர்களின் நடவடிக்கைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
'பருவ நிலை மாற்றம் 2021 : இயற்பியல் அறிவியல் அடிப்படை' என்ற தலைப்பில், 200 அறிவியலாளர்களால் தயாரிக்கப்பட்டுள்ள ஐ.நா. அறிக்கையின் தொகுப்பில், சுற்றுச்சூழல், கடல், மற்றும் நிலம், வெப்பமாகி வருவதற்கு மனிதர்களே காரணம் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அண்மைய பருவநிலை மாற்றங்கள், மனிதகுலத்திற்கு எச்சரிக்கையை விடுத்துவருகின்றன எனக்கூறும் இவ்வறிக்கை, உலகின் பசுமை நிலையை பாதிக்கும் வாயுக்களின் வெளியேற்றம், காடுகள் அழிப்பு போன்றவை நம் பூமியின் மூச்சை திணறடித்து, பல கோடி மக்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தலாக உள்ளன என கூறியுள்ளது.
ஒரு காலத்தில் 50 ஆண்டுகளுக்கு ஒருமுறையே இடம்பெற்று வந்த அனல்காற்று வீசுதல், தற்போது, ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறுவதாகவும் கவலையை வெளியிடும் இந்த அறிக்கை, தற்காலச் சூறாவளிகளின் பலமும் வேகமும் அதிகரித்துள்ளதையும் சுட்டிக்காட்டுகிறது.
2050ம் ஆண்டிற்குள் ஆர்டிக் பெருங்கடலின் மீதுள்ள பனிக்கட்டிகள் அனைத்தும் கரைந்து காணாமல் போய்விடும் என்ற அச்சத்தையும் வெளியிடுகிறது ஐ.நா. அறிக்கை.
உலகின் சராசரி வெப்ப விகிதத்தைவிட, வடபகுதியின் வெப்பம் இருமடங்கு அதிகரித்துள்ளதாக கவலையை வெளியிடும் இவ்வறிக்கை, உலகம் வெப்பமாகி வருவதால் பனிப்பாறைகள் உருகி, கடலின் நீர்மட்டம் 2 முதல் 3 மீட்டர் வரை உயரும் ஆபத்து உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
No comments:
Post a Comment