Saturday, 14 August 2021

வறியோர் வங்கியை உருவாக்கிய அருள்பணியாளர் மரணம்

 

பங்களாதேஷ், தினாஜ்பூர் மறைமாவட்டத்தின் ஒவ்வொரு பங்கிலும் சிறு சேமிப்பு வங்கிகளைத் துவக்கி, வறியோருக்கு பெருமளவு உதவிகள் செய்த அருள்பணி ஜூலியோ பெருத்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

PIME என்றழைக்கப்படும் அயல்நாட்டு மறைப்பணிகளின் பாப்பிறைக் கழகம் என்ற நிறுவனத்தின் மறைப்பணியாளராக பங்களாதேஷ் நாட்டில் பணியாற்றிவந்த அருள்பணி ஜூலியோ பெருத்தி (Giulio Berutti) அவர்கள் கோவிட பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு, ஜூலை 11, இப்புதனன்று இறையடி சேர்ந்தார்.

வட இத்தாலியின் Busto Arsizio எனுமிடத்தில் பிறந்த அருள்பணி பெருத்தி அவர்கள், 1970ம் ஆண்டு தன் 26வது வயதில் அருள்பணியாளராக திருப்பொழிவு பெற்று, அடுத்த ஆண்டு, பங்களாதேஷ் நாடு, விடுதலையடைந்தபின், அந்நாட்டிற்கு மறைப்பணியாளராக சென்றார்.

பங்களாதேஷ் நாட்டின் தினாஜ்பூர் மறைமாவட்டத்தில் பணியாற்றிவந்த அருள்பணி பெருத்தி அவர்கள், அம்மறைமாவட்டத்தின் ஒவ்வொரு பங்கிலும் சிறு சேமிப்பு வங்கிகளைத் துவக்கி, வறியோருக்கு பெருமளவு உதவிகள் செய்து வந்தார்.

அருள்பணி பெருத்தி அவர்கள் ஆற்றிவந்த பணிகளை பாராட்டிப் பேசிய தினாஜ்பூர் ஆயர் செபாஸ்டின் டுடு (Sebastian Tudu) அவர்கள், அருள்பணி பெருத்தி அவர்கள் வறியோருக்காக உருவாக்கிய இந்த வங்கிகளின் வழியே சிறுதொழில்கள், குழந்தைகளின் கல்வி, வீட்டு வசதி என்ற பல்வேறு பயன்களை வறியோர் அடைந்தனர் என்று கூறினார்.

மேலும், அருள்பணி பெருத்தி அவர்கள், பங்களாதேஷ் நாட்டில். புனித வின்சென்ட் தாதியர் நிறுவனத்தின் வழியே, கத்தோலிக்க தாதியர் அமைப்பை முதன் முதலாக உருவாக்கினார் என்றும், மக்களுக்கு மருத்துவ காப்பீடு முறையையும் அறிமுகம் செய்துவைத்தார் என்றும் ஆசிய செய்தி கூறுகிறது.

கோவிட் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட அருள்பணி பெருத்தி அவர்களுக்கு பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, அவர் மருத்துவ மனையிலிருந்து வெளியேறியபின், மீண்டும் இந்த பெருந்தொற்றின் பாதிப்புக்கு உள்ளாகி, தன் 77வது வயதில், இறையடி சேர்ந்தார்.

ஆகஸ்ட் 11 இப்புதனன்று இறையடி சேர்ந்த அருள்பணி ஜூலியோ பெருத்தி அவர்களின் உடல், ஆகஸ்ட் 13, இவ்வெள்ளியன்று தினாஜ்பூர் பேராலயத்தில் அடக்கம் செய்யபட்டது என்று, ஆசிய செய்தி கூறுகிறது. (AsiaNews)


No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...