Wednesday, 18 August 2021

உண்மையான விடுதலை வாழ்வு

 


“ஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து, பிறகு, அவன் தானாகவே கிளர்ந்து எழுவான்” - டாக்டர் அம்பேத்கார்

மேரி தெரேசா வத்திக்கான்  

இந்தியா, ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்ததன் வைர விழாவில் அடியெடுத்து வைத்துள்ளது. இத்தனை ஆண்டுகளாக சுதந்திரக் காற்றை சுவாசித்து வரும் இந்தியர் ஒவ்வொருவரின் இதயங்களும் உண்மையான அக விடுதலையில் வாழ்கின்றனரா, உண்மையான விடுதலை வாழ்வு என்பது என்ன என்பது பற்றி, பல ஆன்றோரின் சிந்தனைகளோடு தன் கருத்துக்களையும் இணைத்து இன்று வழங்குகிறார், மரியின் ஊழியர் சபையின் அருள்பணி ஆ.அமல் ராஜ்

வத்திக்கான் வானொலி நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்றைய நாளில் உண்மையான விடுதலை வாழ்வு என்றால் என்ன என்பது பற்றிய எனது சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். விடுதலை, சுதந்திரம் மற்றும் உரிமை எனும் வார்த்தைகளை நாம் அடிக்கடி பயன்படுத்துகின்றோம். ஆனால், அதன் உண்மையான அர்த்தம்  தெரியாமலேயே பல நேரங்களில் இருந்து விடுகின்றோம். “எங்களுக்கு விடுதலை வேண்டும்” என்ற குரல் ஒவ்வொரு விநாடியும் இச்சமூகத்தின் ஏதாவது ஒரு மூலையில் இன்றும் ஒலித்துக்கொண்டேதான் இருக்கின்றது. பெண் விடுதலை, தலித் விடுதலை, சமூக விடுதலை, அரசியல் விடுதலை, சமய விடுதலை, பொருளாதார விடுதலை என்று பல தளங்களில் இந்த விடுதலைக்கான குரல் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக உலக நாடுகள் அனைத்திலும் ஒலிக்கத் தொடங்கியிருக்கும் ஒற்றை வார்த்தை “கொரோனாவிலிருந்து விடுதலை” என்பதாகும். அப்படியென்றால் இந்த "விடுதலை வாழ்வு" என்றால் என்ன என்பது பற்றி நாம் அறிந்திருக்க வேண்டியது மிக முக்கியமானதொன்றல்லவா?

ஒருமுறை ஒரு ஞானியிடம் ஒருவன் வந்தான். அவன் அம்முனிவரிடம், ஐயா, நீங்கள் எல்லாம் அறிந்தவர் அல்லவா? என்னுடைய உள்ளங்கையினுள் ஒரு வண்ணத்துப் பூச்சி உள்ளது. அவ்வண்ணத்துப் பூச்சி உயிரோடு உள்ளதா? அல்லது இறந்துவிட்டதா? என்று கேட்டான். அவனுடைய சூழ்ச்சி மிகுந்த சூட்சுமமான கேள்வியைப் புரிந்துகொண்ட அந்த ஞானி, “அந்த வண்ணத்துப்பூச்சி உயிரோடு இருப்பதோ அல்லது உயிரற்றுப் போவதோ உன் கையில்தான் உள்ளது தம்பி” என்று பதில் அளித்தார்.

ஆம் நண்பர்களே, நம்முடைய வாழ்வு என்பதும், விடுதலை வாழ்வு என்பதும் பிறர் நமக்குக் கொடுத்து நாம் பெற வேண்டிய ஒரு கடைச்சரக்கு அல்ல. அது நம்மிடம்தான் உள்ளது. நமது இந்திய நாடு தனது சுதந்திரத்தின் அல்லது விடுதலையின் 74-வது ஆண்டை நிறைவு செய்து வெகு சிறப்பாகத் தனது சுதந்திரத்தின் வைர விழாவைக் கொண்டாடத் தன்னையே தயாரித்துக் கொண்டிருக்கின்றது. இந்த நேரத்தில் நமது சுதந்திர இந்தியா கடந்து வந்த பாதையைச் சற்று திரும்பிப் பார்த்தோமே என்றால் அதனுடைய சாதனைகளாகப் பலவற்றைச் சொல்லலாம். இந்தியா வளர்ந்துள்ளதா? என்றால் நிச்சயமாக எந்தவித சந்தேகமுமின்றி இந்தியா பல துறைகளில் நம்மைப் பிரமிக்க வைக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது என்று சொல்ல முடியும். அதே சுதந்திர இந்தியாவில்தான் இன்றும் உலகின் எந்த நாட்டிலும் இல்லாத அதாவது மானுடவியலுக்கும் மனிதத்திற்கும் எதிரான மற்றும் அறிவியலுக்குச் சற்றும் பொருந்தாத சாதியின் பெயரிலான படுகொலைகளும், வன்முறைகளும் நடக்கின்றன. அப்படியென்றால், நமது தேசத்தில் உள்ள அனைவருக்கும் சுதந்திரம் அல்லது விடுதலை வாழ்வு கிடைத்து விட்டதா? என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறிதான். இந்தப் பிற்போக்குத்தனத்திற்கும் காட்டுமிராண்டித்தனத்திற்கும் யார் காரணம் என்ற கேள்வியை நான் எனக்கு முன்வைத்துச் சிந்திக்கின்றபொழுது, “தனி மனித விடுதலை மற்றும் உண்மையான விடுதலை வாழ்வு பற்றிய தெளிவும், ஆழ்ந்த புரிதலும் இல்லாததே இதற்குக் காரணம்" எனும் அறிவர் அமபேத்காரின் சிந்தனைதான் இதற்கு விடையாகக் கண்முன்னே தெரிகின்றது. உண்மையான விடுதலை வாழ்வு பற்றிய தெளிவு இருந்ததால்தான் அம்பேத்கர், “நீயே ஒளி நீதான் வழி” என்று சொன்ன புத்தரின் பாதையைத் தேர்ந்தெடுத்து நம் அனைவரையும் அத்தகைய விடுதலை வாழ்வை நோக்கிப் பயணிக்க அழைப்பு விடுத்தார்.

சில நாட்களுக்கு முன்பாக நான் “சார்பட்டா பரம்பரை” என்கின்ற சினிமாவைப் பார்த்தபொழுது அதில் வந்த ஒரு பாடலினுடைய வரிகள் என்னை மிகவும் சிந்திக்கத் தூண்டின: அதாவது,

  • நீயே ஒளி நீதான் வழி
  • ஓயாதினி உடம்பு
  • நீயே தடை நீயே விடை
  • சூடாக்கிடு நரம்பு
  • எது உன்னைத் தடுக்கின்றது
  • ஏன் தடுமாறுகின்றாய்
  • உன் மனதில் நம்பிக்கை இல்லையா?
  • உன்னைத் தோற்கடித்துவிடுவார்கள் என்று பயப்படுகிறாயா?

என்கின்ற கேள்விகளை எழுப்பி நம் அனைவரையும் நம்முள் இருக்கும் நமது அடிமைத்தனங்களிலிருந்து நம்மை விடுவித்து விடுதலையை நோக்கி நகர இப்பாடல் அழைக்கின்றது. இந்த இடத்தில் எனக்கு அமிஸ்டாட் (Amistad) என்ற ஆங்கில படத்தில் வரும் ஒரு காட்சியும் நினைவுக்கு வருகிறது. அப்படத்தின் கதையில், 1839ம் ஆண்டு, மேற்கு ஆப்ரிக்காவைச் சேர்ந்த அடிமைகளை, வேறு இடத்திற்குக் கொண்டு சென்று கொண்டிருந்த படகை, அந்த அடிமைகள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர், அந்தப் படகின் கேப்டனையும், வேறு சில நபர்களையும் கொன்றனர், ஆனால் உடனடியாக அவர்கள் பிடிபட்டனர், சிறையில் அடைக்கப்பட்டனர், பின்னர், விசாரணைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஒரு மறக்க முடியாத நீதிமன்றக் காட்சியில், அடிமைகளின் தலைவன், எப்படியாகிலும் தனக்கு விடுதலை தரும்படி, உணர்ச்சி வசப்பட்டுக் கெஞ்சுகின்றான். மூன்று எளிய வார்த்தைகள், சங்கிலிகளால் கட்டப்பட்ட ஒரு மனிதனின் வாயிலிருந்து, உடைபட்ட ஆங்கில வார்த்தைகளாகத் திரும்பத் திரும்ப, மேலும் மேலும் வலிமையோடு வெளியாகிக் கொண்டேயிருக்கின்றன, அந்த நீதி மன்றமே அமைதியாக இருக்கின்றது, “எங்களுக்கு விடுதலை தாருங்கள்!” என்பதே அந்த வார்த்தைகள். அவர்களுக்கு நியாயம் வழங்கப்பட்டது, அந்த மனிதர்கள் விடுதலையைப் பெற்றார்கள்.

ஆம், விடுதலை உணர்வு என்பது ஒவ்வொரு உயிரினத்திடமும் அதனதன் இயல்பிலேயே உள்ளது. எனவேதான் கட்டப்பட்ட மாடுகூடத் தனது கட்டை அவிழ்த்து தன்னை விடுவித்துக் கொள்ள விரும்புகின்றது. கூண்டிலிடப்பட்டக் கிளி தன் உரிமைக் குரலை எழுப்பிக்கொண்டே இருக்கின்றது. இந்த விடுதலை உணர்வானது, மனிதர்களுக்கு அதிலும் சிறப்பாக நம் தமிழ் இனத்திற்குச் சற்றே அதிகம் உள்ளது என்பதை, “நாம் யார்க்கும் குடி அல்லோம் .... நாமினி அஞ்சோம்" என்று தேவாரத்தைப் பாடிய திருநாவுக்கரசர் சொன்ன வார்த்தைகளிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம். ஆம். நாமார்க்கும் குடியல்லோம் என்று திருநாவுக்கரசர் கூறியது நாங்கள் தமிழர்கள் யாருக்கும் அடிமைகளல்ல, எமனுக்குக்கூடப் பயப்படமாட்டோம், எமது கொள்கைக்காக, நாங்கள் தேர்ந்தெடுத்த எமது வழியில் செல்வதற்கு எவருக்கும் பயப்படத் தேவையில்லை என்பதுதான் இதன் புரிதலாகக் கொள்ளப்பட வேண்டுமென நான் நினைக்கிறேன்.

“கற்றூணைப் பூட்டிக் கடலினுள் பாச்சினும் நற்றுணை வேண்டும்” என்று சொன்னாரே ..... அப்பர் சுவாமிகள்! என்ன அர்த்தத்தில் இதைச் சொல்லி இருப்பார் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்? அவரும் இதே விடுதலை உணர்வோடுதான் இப்படிச் சொல்லி இருக்க வேண்டும். “உண்மையை அறிந்து கொள்ளுங்கள். உண்மை உங்களுக்கு விடுதலை தரும்” (யோவா. 8, 31-32) என்கின்றது திருவிவிலியம்.

ஆம். உண்மையிலிருந்து விலகுகிறீர்கள் என்றால், உங்களுக்கு எதிராக நீங்கள் வேலை செய்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களை நீங்களே அடிமைத்தனத்திற்குள் தள்ளுகிறீர்கள் என்று அர்த்தம். உங்களுக்கு நீங்களே ஒரு வேலி அமைத்துக் கொள்கிறீர்கள் அல்லது விலங்கிட்டுக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

“ஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து, பிறகு, அவன் தானாகவே கிளர்ந்து எழுவான்” என்று கூறுவார் டாக்டர் அம்பேத்கார்.

மேலும், அவர், “சுதந்திரச் சிந்தனையே உண்மையான விடுதலை. தீண்டத்தகாதவர்களுக்குச் சட்டம் வழங்கும் உரிமைகளைக் காட்டிலும், சமூக விடுதலையே தேவை. அந்தச் சமூக விடுதலை உங்களுக்குக் கிடைக்காத வரைக்கும் சட்டம் வழங்கும் எந்த உரிமைகளும் எதற்கும் பயன்படாது.

சிலர் உங்களுக்கு உடல் சார்ந்த சுதந்திரம் முழுமையாக இருக்கிறது என்று அறிவுறுத்த

விழைவார்கள். உண்மைதான். நீங்கள் சட்டத்திற்கு உட்பட்டு எங்கு வேண்டுமானாலும் போகலாம், எதை வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அந்தச் சுதந்திரத்தால் என்ன ஆகப்போகிறது? ஒரு மனிதன் உடம்பினால் மட்டுமல்ல, சிந்தனைகளினாலும் ஆக்கப்பட்டவன். வெறும் உடல் சார்ந்த சுதந்திரத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது? சிந்தனைகளின் விடுதலையே அவசியமான விடுதலை.

ஒரு கைதியின் விலங்கு ஏன் கழற்றப்படுகிறது? அதன் கோட்பாடு என்ன? விலங்கு கழற்றப்பட்டதால் விடுதலை பெற்ற அவன் இனி தன் விருப்பப்படியே தன் நடத்தைகளை அமைத்துக்கொள்ளவும் தனக்கு இருக்கும் ஆற்றல்களைத் தடையின்றி முற்றும் முதலாகப் பயன்படுத்திக்கொள்ளவுமே. ஆனால் தன் சிந்தனைகளில் விடுதலையை அடையாத ஒருவனுக்கு உடல் சார்ந்த விடுதலை மட்டும் வழங்கப்பட்டால் அதனால் என்ன பயன்? சுதந்திரச் சிந்தனையே உண்மையான விடுதலை. சிந்தனைகள் சுதந்திரமானவைகளாக இல்லையென்றால், கையில் விலங்கிடாவிடினும் அவன் அடிமைதான்! உயிரோடு இருந்தாலும் அவன் பிணம்தான்.

இதை உணர்ந்தே புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார் நம் தமிழ் இளைஞர்களைப் பார்த்து அன்றே அதாவது 1945-களிலேயே,

  • பூட்டிய இரும்புக் கூட்டின்
  • கதவு
  • திறக்கப்பட்டது!
  • சிறுத்தையே வெளியில் வா!
  • எலி என
  • உன்னை இகழ்ந்தவர்
  • நடுங்கப்
  • புலி எனச் செயல் செய்யப் புறப்படு வெளியில்!
  • நம்பினை பகலினை நள்ளிருள் என்றே
  • சிம்புட் பறவையே
  • சிறகைவிரி! எழு!
  • சிங்க இளைஞனே திருப்பு முகம்! திறவிழி! என்று கர்ச்சித்தார்.

ஆம், உண்மையான விடுதலை உணர்வு நமை ஆட்கொள்ளும்போது நம் நாடும் வீடும் ஊரும், நகரும், பேரும், புகழும், அதன் எல்லைகளைத் தாண்டி விரியும். விடுதலை வானம்  நம் வசப்படும். (அருள்பணி ஆ.அமல் ராஜ், மஊச)

 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...