கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நோக்கத்தில், 3 இலட்சம் சிங்கப்பூர் டாலர்களை உடனடியாக அனுப்ப உள்ளதாக, சிங்கப்பூர் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
சிங்கப்பூரின் காரித்தாஸ் அமைப்பும் இந்திய காரித்தாஸும் இணைந்து, தொற்று நோய் பாதிப்பாளர்களுக்காக விடுத்த விண்ணப்பத்தைத் தொடர்ந்து, ஒரு சில நாட்களிலேயே அவர்கள் எதிர்பார்த்ததைவிட மும்மடங்கு நிதியுதவிகள் கிட்டியுள்ளதாக உரைத்த சிங்கப்பூர் காரித்தாஸின் மனிதாபிமான, மற்றும் இடர்துடைப்பு அமைப்பு, நிதி திரட்டல் பிரச்சாரத்தை தற்போது நிறுத்தி, திரட்டிய நிதியை எவ்வகையில் விநியோகிப்பது என்பது குறித்து திட்டமிட்டுவருவதாக தெரிவித்தது.
இந்தியாவின் கோவிட் பெருந்தொற்று மீட்புப் பணிகளுக்கு நிதியுதவிகளை ஆற்றவேண்டும் என, சிங்கப்பூர் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு, சிங்கப்பூரின் செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து ஏப்ரல் 28ம் தேதி விண்ணப்பம் ஒன்றை விடுத்ததைத் தொடர்ந்து, நான்கே நாட்களில் 5 இலட்சம் டாலர்களைப் பெற்றுள்ளது.
கோவிட் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய மக்களுக்கு சிகிச்சை வழங்க, ஏழு சிகிச்சை மையங்களை இந்திய காரித்தாஸ் அமைப்புடன் உருவாக்க உள்ளதாக அறிவித்துள்ளது, சிங்கப்பூர் காரித்தாஸ் அமைப்பு. இது தவிர, சுவாசிப்பதற்கு உதவும் மருத்துவக் கருவிகளையும் வாங்கி அனுப்ப உள்ளது, இக்கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு.
130 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில், தற்போது கோவிட் பெருந்தொற்று பரவலின் இரண்டாவது அலை இடம்பெற்றுவரும் நிலையில், கடந்த வாரம் ஒவ்வொரு நாளும் இந்தியாவில் மூன்று இலட்சம் புதிய தொற்றுகளும், ஒவ்வொரு நாளும் மூவாயிரம் இறப்புகளும் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்தியாவில் 2 கோடிக்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2 இலட்சத்து 20 ஆயிரம்பேர் இந்நோயால் உயிரிழந்துள்ளதாகவும் பதிவாகியுள்ளது.
No comments:
Post a Comment