Wednesday, 5 May 2021

'அன்பு இழிவானதைச் செய்யாது'

 அன்பு ஆறுதல் தரும்


அன்பின் வார்த்தைகளும், செய்கைகளும், செயல்பாடுகளும், நாம் பிறருக்கு செவிமடுப்பதற்கும், பிறருடன் கனிவாக பேசவும், தேவைப்படும்போது அமைதி காக்கவும் கற்றுத்தருகின்றன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் -வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், 'திருமணத்தில் அன்பு' என்ற 4ம் பிரிவில், புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமடலின் 13ம் பிரிவில் அன்பு குறித்து எடுத்துரைப்பவைகளை முதலில் விளக்கியுள்ளார்.  அதில், 'அன்பு இழிவானதைச் செய்யாது', என்ற பண்பு குறித்து, 99, மற்றும் 100ம் பத்திகளில் திருத்தந்தை கூறியுள்ள எண்ணங்களின் சுருக்கம் இதோ:  

அன்பு கூர்வது என்பது கனிவாக, சாந்தமாக இருப்பதையும், அது முரட்டுத்தனமானதல்ல, நயமற்றதல்ல என்பதையும் குறிக்கிறது. இதன் வார்த்தைகளும், செய்கைகளும், செயல்பாடுகளும், மரியாதையற்றவைகள் அல்ல, அதேவேளை, மற்றவர்களுக்கு துன்பம் விளைவிப்பதிலிருந்து விலகி நிற்பவையும்கூட. பணிவன்பாகிய இது, பிறருக்கு செவிமடுப்பதற்கும், பிறருடன் கனிவாக பேசவும், தேவைப்படும்போது அமைதி காக்கவும் நம் மனதையும், உணர்வுகளையும் புடமிடுவதற்குக் கற்றுத்தருகிறது. நம்மைச் சுற்றியிருக்கும் ஒவ்வொருவருடனும் இசைவுடன் வாழ, அன்பு நம்மிடம் எதிர்பார்க்கின்றது. இதற்கு, ஒவ்வொரு நாளும் மற்றவர்கள் மீதான நம்பிக்கையும், மதிப்பும் புதுப்பிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது. நம் அன்பு எவ்வளவு ஆழமானதோ, அந்த அளவுக்கு, மற்றவர்களின் சுதந்திரத்தை மதிக்கவும், அவர்கள் நமக்காக தங்கள் இதயக் கதவுகளைத் திறக்கும்வரை காத்திருக்கவும் அழைப்பு விடுக்கிறது. (அன்பின் மகிழ்வு 99)

மற்றவர்களுடன் மேற்கொள்ளப்படும் நேர்மையான சந்திப்பில், மனம்திறந்து செயல்பட, 'கனிவான பார்வை' அத்தியாவசியமானது. நம் குறைபாடுகளைக் கண்டுகொள்ளாமல், மற்றவர்களின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டும் மனநிலைக்கு இது எதிரானது. நமக்குள் இருக்கும் வேறுபாடுகளையும் தாண்டி, மற்றவர்களுடன் ஒத்துழைத்து, அவர்களுடன் பொறுமையுடன் செயல்பட, இந்த கனிவான பார்வை நமக்கு உதவுகிறது.  இரக்கமுள்ள அன்பு, பிணைப்புகளை கட்டியெழுப்புவதுடன், உறவுகளை வளர்த்து, ஒருங்கிணைப்பில் புதிய தொடர்புகளை உருவாக்கி, ஓர் உறுதியான சமுதாய கட்டுமானத்தைப் பின்னுகிறது. இதன் வழியாக, அன்பு மேலும் பலப்படுகின்றது. ஏனெனில், நாமும் சமுதாயத்தின் ஒரு பகுதி என்ற உணர்வில்லாமல், நம்மால், மற்றவர்களுக்கு நம்மை அர்ப்பணிக்கமுடியாது. மற்றவர்கள் தங்களுடைய தேவைகளை நிறைவற்றுவதற்காகவே வாழ்கிறார்கள் என, சமுதாய விரோதிகள், சுயநலமாக எண்ணுகின்றனர். அப்படிப்பட்ட எண்ணங்கள் இருக்கும் சூழல்களில், கனிவான அன்புக்கும், அதன் வெளிப்பாடுகளுக்கும், இடமில்லை. அன்புகூர்பவர்கள், ஆறுதலின், பலத்தின், ஊக்கத்தின் வார்த்தைகளை எடுத்துரைக்க வல்லவர்கள்.  “மகனே, துணிவோடிரு” (மத் 9:2); “உமது நம்பிக்கை பெரிது” (மத் 15:28); “எழுந்திடு” (மாற் 5:41); “அமைதியுடன் செல்க” (லூக் 7:50); “அஞ்சாதீர்கள்” (மத் 14:27), என்பவை, இயேசு தன் வாழ்வில் பயன்படுத்திய வார்த்தைகள். நம் குடும்பங்களிலும் ஒருவர் ஒருவரோடு உரையாடும்போது, இயேசுவின் இந்த கனிவான வார்த்தைகளை பயன்படுத்த கற்றுக்கொள்வோம். (அன்பின் மகிழ்வு 100)

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...