Friday, 7 May 2021

107வது குடிபெயர்ந்தோர்-புலம்பெயர்ந்தோர் உலக நாள் செய்தி

  Centro Astalli என்ற இயேசு சபை மையத்தில் புலம்பெயர்ந்தோரைச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ்


இன்னும் விரிவடைந்த 'நாம்' என்ற உண்மையே, இவ்வுலகில் நாம் மேற்கொள்ளும் பயணத்தின் தெளிவான தொடுவானமாக இருக்கவேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இன்னும் விரிவடைந்த 'நாம்' என்ற உண்மையே, இவ்வுலகில் நாம் மேற்கொள்ளும் பயணத்தின் தெளிவான தொடுவானமாக இருக்கவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 6 இவ்வியாழனன்று ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும், குடிபெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் உலகநாளை, செப்டம்பர் இறுதி ஞாயிறன்று கடைபிடித்துவரும் கத்தோலிக்கத் திருஅவை, இவ்வாண்டு, தன் 107வது உலக நாளை, செப்டம்பர் 26, ஞாயிறன்று கடைபிடிக்க உள்ளது.

"இன்னும் விரிவடைந்த 'நாம்'-ஐ நோக்கி"

இவ்வாண்டு கடைபிடிக்கப்படும் இவ்வுலக நாளுக்கென, திருத்தந்தை உருவாக்கியுள்ள செய்தி, "இன்னும் விரிவடைந்த 'நாம்'-ஐ நோக்கி" என்ற தலைப்பில் இவ்வியாழனன்று வெளியிடப்பட்டது.

"உலகமனைத்தும் சந்திக்கும் இந்த நலவாழ்வு நெருக்கடி கடந்துபோகும் வேளையில், நாம் இன்னும் கூடுதலான நுகர்வுக் கலாச்சாரத்திலும், தன்னை மட்டுமே காத்துக்கொள்ளும் சுயநலத்திலும் மூழ்கும் ஆபத்து உண்டு. இறைவனுக்கு விருப்பமானால், இனி, 'அவர்கள்' 'அவை' என்ற எண்ணங்களை விடுத்து, 'நாம்' என்ற எண்ணத்தில் சிந்திப்போமாக" (Fratelli Tutti - எண்.35) என்று, தன் Fratelli Tutti திருமடலில் எழுதியுள்ள சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செய்தியின் அறிமுக வரிகளாக பதிவு செய்துள்ளார்.

'நாம்' என்ற உண்மையை இன்னும் விரிவடையச் செய்யும் நோக்கத்துடன், இவ்வாண்டின் புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் உலக நாளுக்கு, "இன்னும் விரிவடைந்த 'நாம்'-ஐ நோக்கி" என்பதை தலைப்பாக தெரிவு செய்துள்ளதாகக் கூறியுள்ள திருத்தந்தை, 'நாம்' என்ற உண்மை, இறைவன் உருவாக்கிய படைப்பின் திட்டத்தில், துவக்கத்திலிருந்தே காணப்படுகிறது என்று கூறியுள்ளார்.

வேறுபட்டாலும், ஒன்றித்திருக்கும் இறைவனைப்போல்...

வெவ்வேறு தனி ஆள்களாக இருந்தாலும், ஒரே கடவுளாக ஒன்றித்திருக்கும் இறைவன், மனிதரைப் படைத்தபோது, அவர்களை ஆணென்றும், பெண்ணென்றும் வேறுபாடுகளுடன் படைத்தாலும், அவர்கள் ஒன்றித்திருக்கவேண்டும் என்று (தொ.நூ. 1:27-28) விரும்பினார் என்பதை, இச்செய்தியில் வலியுறுத்திக் கூறியுள்ளார், திருத்தந்தை.

கிறிஸ்து என்ற மறையுண்மையை மையமாகக் கொண்டு, "எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக" (யோவான் 17:21) என்பதே, மீட்பு வரலாற்றின் ஆரம்பத்திலிருந்தே சொல்லப்பட்டு வந்துள்ள ஒரு மந்திரம் என்பதை தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த 'நாம்' என்ற ஒன்றிப்பை, தற்போதைய உலகம் பெருமளவு உடைத்து, பிரித்து, காயப்படுத்தியுள்ளது என்ற கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

உடைக்கப்பட்டுள்ள மனித சமுதாயம், பெரும் நெருக்கடிகளைச் சந்திக்கும் வேளையில், தான் என்ற எண்ணத்தில் இன்னும் கூடுதலாக சுருங்கிப் போவதால், சமுதாயத்தின் விளிம்புக்குத் தள்ளப்படுவோர், இந்த சுயநலப் போக்கின் தீவிரத்தால் பாதிக்கப்படுகின்றனர் என்பதை திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கத்தோலிக்கருக்கும், இவ்வுலக மக்களுக்கும் விண்ணப்பம்

நாம் அனைவரும் ஒரே படகில் பயணம் செய்பவர்கள் என்பதும், சுவர்களை எழுப்பி, நம்மையே பிரித்துக்கொள்வதற்குப் பதில், அனைவரும் இணைந்து இவ்வுலகப் பயணத்தை மேற்கொள்வதே சிறந்தது என்பதும் நாம் உணரவேண்டிய உண்மைகள் என்று இச்செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இச்செய்தியில், கத்தோலிக்கருக்கும், இவ்வுலக மக்களுக்கும் என தன் விண்ணப்பத்தை இரு வழிகளில் விடுத்துள்ளார்.

'கத்தோலிக்க' என்ற சொல்லின் முழுப்பொருளையும், கத்தோலிக்கத் திருஅவையின் அனைத்து உறுப்பினர்களும் உணர்வதற்கு உதவியாக, "நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பது போல, உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவர் ஒருவரே; நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே; திருமுழுக்கு ஒன்றே" (எபே. 4:4-5) என்று புனித பவுல் கூறியுள்ள சொற்களை திருத்தந்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

திருமுழுக்கு பெற்றுள்ள நாம் அனைவரும், ஒரு குறிப்பிட்ட குழுமத்தின் உறுப்பினராக மட்டுமல்லாமல், உலகளாவிய குடும்பத்தின் உறுப்பினர்களாகவும் வாழ அழைப்பு பெற்றுள்ளோம் என்பதை, கத்தோலிக்கர்களுக்கு சிறப்பான முறையில் நினைவுறுத்தியுள்ளார், திருத்தந்தை.   

இன்றைய உலகில், கத்தோலிக்கத் திருஅவை, முற்சார்பு எண்ணங்கள், அச்சம் ஆகியவற்றை நீக்கிவிட்டு, விளிம்புகளை நோக்கிச் சென்று, அங்குள்ள அனைவரையும் அரவணைப்பதற்கு அழைப்பு பெற்றுள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செய்தியில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

அனைவரையும் உள்ளடக்கிய உலகை அமைக்க...

ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள விண்ணப்பத்தில், நீதியும், அமைதியும் நிறைந்த எதிர்காலத்தை உருவாக்கும் முயற்சியில் யாரையும் பின்னே விட்டுச்செல்லாமல், அனைவரும் இணைந்தே செல்லவேண்டும் என்று கூறியுள்ளார்.

திருத்தூதர் பணிகள் நூலில் கூறப்பட்டுள்ள பல்வேறு இனத்தவரின் (தி.பணிகள் 2:9-11) ஒருங்கிணைப்பு, தன்னை பெரிதும் கவர்ந்த பகுதி என்பதை, இச்செய்தியில் குறிப்பிட்டுப் பேசும் திருத்தந்தை, அமைதியிலும், நல்லிணக்கத்திலும் இணைந்துள்ள இத்தகைய ஒரு சமுதாயமே, புதிய எருசலேம் (காண்க. எசா 60; திருவெளிப்பாடு 21:3) என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நமக்கு வழங்கப்பட்டுள்ள உலகம் என்ற நாணயம்

தொலைநாட்டிற்குப் புறப்பட்ட உயர் குடிமகன், தன் பணியாளரை அழைத்து அவர்களிடம் பத்து மினாக்களை வழங்கிய உவமையை (லூக்கா 19:12-13) இச்செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் ஒவ்வொருவரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ள இவ்வுலகம் என்ற நாணயத்தை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதற்கு நம்மிடமிருந்து இறைவன் கணக்கு எதிர்பார்ப்பார் என்பதை நினைவுறுத்தியுள்ளார்.

நாம், மற்றவர்கள், நாம், அந்நியர் என்ற பாகுபாடுகள் ஏதுமின்றி, அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ள இந்த உலகத்தை பேணிக்காப்பதும், இவ்வுலக மக்களை காப்பதும் நமது கடமை என்பதை, அனைத்து உலக மக்களுக்கும் ஓர் அழைப்பாக விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்; உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்; உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள். (யோவேல் 2:28) என்று இறைவாக்கினர் யோவேல் கண்ட கனவை, தன் செய்தியின் இறுதியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரே மனித குடும்பத்தையும், ஒரே பொதுவான இல்லத்தையும் பேணிக்காக்கும் கனவைக் காண நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறி, தன் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...