Wednesday, 5 May 2021

அன்பு தன்னலம் நாடாது, பிறர் நலம் நாடும்

 பார்செலோனாவில் இரமதான் மாதத்தில் பிறரன்பு


அன்புகூரப்படுவதை விரும்புவதைவிட அன்புகூர விரும்புவதே, மிகவும் முறையான பிறரன்பாகும் - புனித தாமஸ் அக்வினாஸ் (அன்பின் மகிழ்வு 102)

மேரி தெரேசா: வத்திக்கான் 

“நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது”. இவ்வாறு, கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமடல், 13ம் பிரிவை நிறைவுசெய்துள்ள பவுலடிகளார், அந்தப் பிரிவில், குறிப்பிட்டுள்ள, அன்பின் பல்வேறு அம்சங்கள் பற்றிய தன் கருத்துக்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன், 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், ‘திருமணத்தில் அன்பு’ என்ற நான்காம் பிரிவில் பதிவுசெய்துள்ளார். அன்பு தன்னலம் நாடாது என்பதற்கு, அந்தப் பிரிவின், 101,102ம் பத்திகளில், திருத்தந்தை குறிப்பிட்டுள்ள சிந்தனைகள்.....

மற்றவரை அன்புகூர்வதற்கு, முதலில் நம்மையே நாம் அன்புகூரவேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது. எனினும், பவுலடிகளாரின் அன்பு பற்றிய பாடலில், ”அன்பு, தனது சொந்த விருப்பத்தையோ, தன்னலத்தையோ நாடாது“ என்று சொல்லப்பட்டுள்ளது. இதே கருத்து, அவரது மற்றொரு திருமடலிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. “நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ளவேண்டும்” (பிலி.2:4). தன்னையே அன்புகூர்வதைவிட, மற்றவருக்குத் தாராளத்துடன் பணிபுரிவதே சிறந்த அன்பு என்பதை திருவிவிலியம் தெளிவுபடுத்துகின்றது. தன்னையே அன்புகூர்வது, மற்றவரை அன்புகூர இயல்வதற்குத் தேவையான உளவியல் சார்ந்த முன்நிபந்தனை மட்டுமே. “ஒரு மனிதர் தன்னையே கடுமையாக நடத்தினால், வேறு யாருக்கு அவர் நன்மை செய்பவராக இருப்பார்? தனக்குத்தானே கருமியாய் இருக்கும் மனிதரைவிடக் கொடியவர் இலர்” (சீராக் 14:5-6). (அன்பின் மகிழ்வு 101).

“அன்புகூரப்படுவதை விரும்புவதைவிட அன்புகூர விரும்புவதே, மிகவும் முறையான பிறரன்பாகும்”. உண்மையில், “மிக அதிகமாக அன்புகூர்கின்ற அன்னையர், அன்புகூரப்படுவதற்கு ஆசைப்படுவதைவிட அன்புகூர்வதையே மிக அதிகமாக விரும்புவர்” (Summa Theologiae,110,111) என்று, புனித தாமஸ் அக்வினாஸ் அவர்கள் அன்பு பற்றி விளக்குகிறார். ஆதலால், “திரும்பக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பின்றி” (லூக்.6,35), அன்பால், நீதியை அளவுக்கதிகமாக வலியுறுத்த முடியும். மேலும், அன்புகளில் மிகச் சிறந்த அன்பு, “ஒருவர், மற்றவருக்காக, தன் உயிரைக் கொடுக்க இட்டுச்செல்லும் (காண்க.யோவா.15:13). நம்மைச் சுதந்திரமாகவும், முழுமையாகவும் தரவல்ல அத்தகைய மனத்தாராளம், உண்மையிலேயே இயலக்கூடியதா? ஆம், இயலக்கூடியதே. ஏனெனில், இவ்வாறு செயல்பட,  “கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்” (மத்.10:8) என்ற நற்செய்தி சொற்களால், நாம் வலியுறுத்தப்படுகிறோம். (அன்பின் மகிழ்வு 102)

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...