ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்
திருத்தூதர் பவுல், கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் பதிவுசெய்துள்ள 'அன்பின் பாடல் என்ற பகுதி (1 கொரி. 13:1-13), விவிலியத்தின் புகழ்பெற்ற பகுதிகளில் ஒன்று. இப்பகுதியில், அன்பைப்பற்றி, திருத்தூதர் பவுல் கூறியுள்ள எண்ணங்களை, 13 பண்புகளாகப் பிரித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில் குறுகிய விளக்கங்களை வழங்கியுள்ளார்.
அன்பைக்குறித்து, புனித பவுல் அடியார், வரிசைப்படுத்தும் பண்புகளில், 'அன்பு பொறுமையுள்ளது' என்பதற்கு, முதலிடம் தந்துள்ளார். ‘பொறுமை’ என்ற பண்புடன் நெருக்கமான தொடர்புகொண்ட இரு பண்புகளைப்பற்றி, 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின், 103, மற்றும் 104 ஆகிய இரு பத்திகளில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் எண்ணங்களைப் பதிவுசெய்துள்ளார். 'அன்பு எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது' என்ற இவ்விரு பண்புகளில், ‘அன்பு எரிச்சல் அடையாது’ என்ற பண்பைக்குறித்து, திருத்தந்தை பகிர்ந்துள்ள எண்ணங்கள் இதோ:
"பவுல் உருவாக்கியுள்ள அன்பின் பாடல், முதலில் கூறும் சொல், பொறுமை. மற்றவர்களின் குறைகளையும், தவறுகளையும் கண்டு, கடுமையான பதிலிறுப்பை வெளிப்படுத்தாமல் இருப்பதே, பொறுமை. அத்துடன் தொடர்புகொண்ட மற்றொரு பண்பு, 'எரிச்சல் அடையாதிருப்பது'. பிறரின் செயல்பாடுகள் நமக்குள் உருவாக்கும் பதிலிறுப்பு, வன்முறையான வடிவில் வெளிவராமல் காக்கவேண்டும். அத்தகைய வன்முறை வடிவான எண்ணங்கள், நமக்குள் காயங்களையும், அடுத்தவரிடமிருந்து அன்னியப்படும் நிலையையும் உருவாக்குகின்றன. அநீதியான ஒன்று நிகழ்கிறது என்று தெரிந்து, அதைக்குறித்து கோபமடைவது நியாயமானது. ஆனால், அந்தக் கோபம், அடுத்தவர் மீது திருப்பப்படும்போது, தீங்கு விளைவிக்கும்." (அன்பின் மகிழ்வு 103)
No comments:
Post a Comment