Tuesday, 8 January 2019

பூமியில் புதுமை : புவியின் நலத்திற்கு காடுகள்

பூமியில் புதுமை : புவியின் நலத்திற்கு காடுகள்  சிலே நாட்டு ARAUCARIA

உலகின் மொத்த நிலப்பரப்பில் 31 விழுக்காடு, அதாவது 400 கோடிக்கு அதிகமான ஹெக்டர் பகுதி காடுகளாகும். தெழிற்சாலையுகத்திற்கு முன்னர், உலகில், 590 கோடி ஹெக்டர் நிலப்பகுதி காடுகளாக இருந்தன
மேரி தெரேசா - வத்திக்கான்
ஒரு சிறிய நாடு காடுகளால் சூழப்பட்டிருந்தது. அந்த நாட்டை அமர் என்ற அரசர் ஆண்டு வந்தார். அரசர் பெரிய அரண்மனை ஒன்றைக் கட்டிக்கொண்டிருந்தார். அரண்மனை வெளிப்புற வேலை முடியவிருக்கும்நிலையில், அரசர் அமைச்சரை அழைத்து, அரண்மனையின் உட்புற அலங்காரங்கள் அனைத்தும் மரத்தால் செய்யப்பட வேண்டும், அதற்கு ஆவன செய்யுங்கள் என்றார். அதற்கு அமைச்சர், அரசே, அது நம்மால் முடியும், ஆனால் அதற்கு ஆயிரக்கணக்கான மரங்கள் தேவைப்படுமே என்றார். அதைப் பற்றிச் சிந்தித்த அரசர், மறுநாள் அமைச்சரை அழைத்து, நம் நாட்டைச் சுற்றி பலவிதமான மரங்கள் அதிகளவில் உள்ளனவே. அவற்றையே வெட்டி நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். அப்போது அமைச்சர், அரசே, காட்டை அழிப்பது அவ்வளவு நல்லதாக எனக்குத் தோன்றவில்லை என்றதும், அரசர் மிகுந்த கோபத்துடன், அமைச்சரே, நீங்கள் எனக்கு அறிவுரை சொல்லத் தேவையில்லை, எனது ஆணைப்படி செய்யுங்கள் என்றார். அமைச்சரும், நாட்டைச் சுற்றியிருந்த காடுகளில், மிகச் சிறந்த எல்லா மரங்களையும் வெட்டும்படி கட்டளையிட்டார். ஒரு மாதத்திற்குள், சிறப்பான அத்தனை மரங்களும் வெட்டப்பட்டு, அரண்மனையும்  அழகுபடுத்தப்பட்டது. இதற்கிடையே, மரங்கள் அழிக்கப்பட்டதால் காடுகளிலிருந்த பல்வேறு இனப் பறவைகள் அனைத்தும் இடம்பெயர்ந்துவிட்டன. பறவைகளின்றி அந்த இடங்களும் அழகிழந்தன. இதைப் பார்த்த நாட்டு மக்கள், அடுத்தடுத்து என்ன ஆகுமோ என அஞ்சிக்கொண்டிருந்தனர். இது நடந்த ஒரு வருடம் சென்று, அமைச்சர் அரசரிடம், இந்த வருடம் பருவ மழை சரியாகப் பெய்யாததால், நாட்டிற்குப் பஞ்சம் வரும் அபாயம் வந்துள்ளது என்றார். அதைக் கேட்ட அரசர், கவலையுடன், நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். அமைச்சரும், அவரிடம், அரசே கவலை வேண்டாம், நம் களஞ்சியத்தில் தேவையான தானியங்கள் உள்ளன. அவற்றை குடிமக்களுக்கு அளிக்கலாம், அதேநேரம், மரங்கள் வெட்டப்பட்ட இடங்களில் எல்லாம் புதிய கன்றுகளை நட வேண்டும் என்றார். அமைச்சரின் ஆலோசனைப்படி, உடனடியாக கன்றுகள் நடப்பட்டன. அந்த நாட்டுக் காடுகளும் வெகு விரைவில் புதுபொலிவுடன் விளங்கத் தொடங்கின.
இயற்கையின் அரும்கொடைகளில் முக்கிய பங்கினை வகிக்கின்ற காடுகள், மனிதரின் தேவைகளிலும் மிக முக்கிய இடத்தைக் கொண்டுள்ளன. இன்றைய உலகில் பெரும்பாலான இயற்கைப் பேரிடர்களுக்கு மிக முக்கிய காரணம். அமேசான், காங்கோ போன்ற உலகின் மிகப் பெரிய காடுகள், பெரும் அழிவினை எதிர்நோக்குவதாகும். எனவே இப்புவியின் நலத்திற்கு, காடுகள் பேணிக்காக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment