Thursday, 28 April 2016

செய்திகள்- 28.04.16

செய்திகள்- 28.04.16
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை: தூய ஆவியார் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்

2. 2015ல் வத்திக்கான் மேற்கொண்ட நிதிநிலை விவரங்கள் அறிக்கை

3. திருத்தந்தை வர்த்தகத்திற்கு எதிரானவர் அல்ல - கர்தினால் டர்க்சன்

4. சுற்றுச்சூழல் சீரழிவு இந்தியாவில் மிக அதிகம் - கர்தினால் கிரேசியஸ்

5. திருஅவையும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையும் இணைந்த முயற்சி

6. மரண தண்டனைக்கு எதிராக, பெரு நாட்டின் ஆயர்கள்

7. பசுமைச் சூழல் நிதிக்கு அமெரிக்க அரசு 75 கோடி டாலர்கள் ஒதுக்கவேண்டும்

8. செர்னோபில் குழந்தைகளுக்கு இத்தாலியில் கோடை விடுமுறை

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை: தூய ஆவியார் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்

ஏப்ரல்,28,2016. முந்தையக் காலத்தைப் போலவே, இன்றும் தூய ஆவியாரின் செயல்பாடுகளுக்குத் தடைகளும், மறுப்பும் நம்மிடையே உள்ளன எனினும், அவற்றைத் தாண்டி, தூய ஆவியார் இன்றும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இவ்வியாழன் காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றியத் திருப்பலியில், எருசலேமில் நடைபெற்ற சங்கம் குறித்து திருத்தூதர் பணிகள் நூலில் கூறப்பட்டுள்ள பகுதியை மையப்படுத்தி, தன் மறையுரையை வழங்கினார் திருத்தந்தை.
திருஅவையின் துவக்கக் காலத்தில், தூய ஆவியார் திருத்தூதர்களை பல வழிகளில் ஆச்சரியத்தில் ஆழ்த்தி, புது வழிகளைக் காட்டினார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் குறிப்பிட்டார்.
வேகவைக்கப்பட்டக் கிழங்கை, சுடச்சுடக் கரங்களில் ஏந்தியிருப்பதை, தூய ஆவியார் செயலாற்றும் வழிகளுக்கு ஓர் உருவகமாகக் கூறியத் திருத்தந்தை, அத்தகையச் சூழலில் வாழ்ந்த திருத்தூதர்களும், சீடர்களும் எருசலேம் சங்கத்தில் கூடியிருந்தனர் என்று சுட்டிக்காட்டினார்.
விருத்தசேதனம் பெறாதவர்களை திருஅவையில் ஏற்றுக்கொள்வதில் துவங்கிய மாற்றங்கள், தூய ஆவியாரின் அருளால், இன்றளவும் நம் மத்தியில் தொடர்கின்றன என்றும், மாற்றங்களை ஏற்றுக்கொள்வதில் இன்றும் நம் நடுவே தயக்கங்களும், எதிர்ப்புக்களும் எழுகின்றன என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் குறிப்பிட்டார்.
திருஅவை வரலாற்றில் அன்று முதல், இன்று வரை தூய ஆவியார் வழங்கிவரும் ஆச்சரியங்களைப் புரிந்துகொள்ளும் வரத்தையும், தூய ஆவியாரின் வழி நடத்துதலின்படி வாழும் வரத்தையும் வேண்டுவோம் என்று திருத்தந்தை தன் மறையுரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. 2015ல் வத்திக்கான் மேற்கொண்ட நிதிநிலை விவரங்கள் அறிக்கை

ஏப்ரல்,28,2016. "மனிதகுலம் உருவாக்கும் ஆன்மீக, நன்னெறி பாதளங்களிலிருந்து, இறைவனின் அளவற்ற இரக்கமே நமக்கு மீட்பைக் கொணர முடியும்" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றன.
மேலும், 2015ம் ஆண்டில் வத்திக்கான் மேற்கொண்ட வரவு, செலவு மற்றும் நிதிநிலை விவரங்கள் அடங்கிய அறிக்கையொன்று, இவ்வியாழன் காலையில் வத்திக்கான் செய்தித் தொடர்பகத்தில் வெளியிடப்பட்டது.
நிதிநிலை விவரங்களின் துறையைச் சார்ந்த தலைவர், இயக்குனர், மற்றும், வத்திக்கான் செய்தித் தொடர்பாளர் அருள்பணி பெதெரிக்கோ லொம்பார்தி ஆகியோர், இவ்விவரங்களை செய்தியாளர்களிடம் வெளியிட்டனர்.
இவ்வறிக்கையின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளாக, வத்திக்கான் மேற்கொண்டு வரும் வரவு, செலவு செயல்பாடுகளில், ஒளிவு மறைவற்ற முறைகள் அதிகமதிமாக கடைபிடிக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டது.
வத்திக்கானின் வரவு, செலவு கணக்குகள், உலகத் தரம் வாய்ந்த நிதி தணிக்கையாளர்களின் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படவேண்டும் என்ற எண்ணத்துடன், 2010ம் ஆண்டு, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால், வத்திக்கான் நிதிநிலை விவரங்கள் துறை உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை வர்த்தகத்திற்கு எதிரானவர் அல்ல - கர்தினால் டர்க்சன்

ஏப்ரல்,28,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வர்த்தகத்திற்கு எதிரானவர் அல்ல, மாறாக, வர்த்தகச் சந்தையை ஒரு கடவுள் போல மாற்றும் போக்கினை கண்டனம் செய்பவர் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
சுரங்கத் தொழிலையும், வேளாண்மையையும் மையப்படுத்தி, சாம்பியா நாட்டின் லுசாக்கா நகரில் நடைபெறும் ஒரு கருத்தரங்கில், திருப்பீட நீதி அமைதி அவைத் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.
நமது பொதுவான இல்லத்தைக் காப்பது மற்றும், சுரங்கத்தொழிலிலும் வேளாண்மையிலும் பெரும் முதலீடு செய்வது என்ற தலைப்பில் நடைபெற்றுவரும் இக்கருத்தரங்கில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள 'இறைவா உமக்கேப் புகழ்' என்ற திருமடலில் கூறப்பட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையில் கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் உரையை வழங்கினார்.
கத்தோலிக்கரும் படைப்பும், கத்தோலிக்கரும் பேணுதலும், வேளாண்மையிலும், சுரங்கத் தொழிலிலும் படைப்பைப் பேணுதல் என்ற மூன்று முக்கியக் கருத்துக்களை தன் உரையில் பகிர்ந்துகொண்டார், கர்தினால் டர்க்சன்.
படைப்பின் வழியே மக்கள் இனத்திற்கு வழங்கப்பட்டுள்ள கொடைகளை ஒரு சிலரின் சுயநலம் அபகரித்துக்  கொள்வதால், வறியோருக்கு இக்கொடைகள் சென்றடைவதில்லை என்பதையே, திருத்தந்தையின் திருமடல் நமக்கு உணர்த்துகிறது என்று கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.
ஓர் அழகிய தோட்டத்தைப் பெற்றுக்கொண்ட நாம், அடுத்தத் தலைமுறையினருக்கு ஒரு பாலைவனத்தை விட்டுச்செல்லக் கூடாது என்ற வேண்டுகோளுடன், கர்தினால் டர்க்சன் அவர்கள், தன் உரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி

4. சுற்றுச்சூழல் சீரழிவு இந்தியாவில் மிக அதிகம் - கர்தினால் கிரேசியஸ்

ஏப்ரல்,28,2016. இந்தியாவில் உருவாக்கப்படும் சுற்றுச்சூழல் சீரழிவின் தாக்கங்களால் வறியோரே மிக அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்று, மும்பை பேராயர், கர்தினால் ஆச்வல்ட் கிரேசியஸ் அவர்கள் விடுத்துள்ள ஒரு செய்தி கூறுகிறது.
பாரிஸ் மாநகரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை உலகத் தலைவர்கள் உடனடியாக செயல்முறைப் படுத்தவேண்டும் என்று 260 மதத் தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள விண்ணப்பத்தில் கையெழுத்திட்ட கர்தினால் கிரேசியஸ் அவர்கள், தன் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
உலகில் சுற்றுச்சூழல் மிகவும் மாசடைந்துள்ள பத்து நகரங்களில் 6 நகரங்கள் இந்தியாவில் உள்ளன என்றும், 7 கோடியே, 60 இலட்சம் மக்கள் பாதுகாப்பான குடிநீர் இன்றி தவிப்பதும் இந்தியாவில் காணப்படுகிறது என்றும் கர்தினால் கிரேசியஸ் அவர்களின் செய்தி கூறுகிறது.
நிலத்தடி படிம எரிபொருளுக்குப் பதில், இயற்கையில் புதுப்பிக்கப்படக் கூடிய சக்திகளைப் பயன்படுத்தும் முயற்சிகளில், உலக அரசுகள், 2050ம் ஆண்டுக்குள் முழுவதும் ஈடுபடவேண்டும் என்பதை, இந்த விண்ணப்பம் வலியுறுத்துகிறது.
சுற்றுச்சூழல் சீரழிவுக்குக் காரணமாக இல்லாத வறியோர், இந்தச் சீரழிவினால் பெரும் ஆபத்துக்களைச் சந்திக்கவேண்டியுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் கிரேசியஸ் அவர்கள், நம் பொதுவான இல்லமான பூமியைக் காப்பது குறித்து திருத்தந்தை கூறியுள்ள கருத்துக்களை ஒவ்வொருவரும் வாசித்து, பயனடையவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
டில்லி போன்ற மாநகரங்களில் காற்று மாசுபாட்டைக் குறைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பாராட்டுக்குரியன என்று தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள கர்தினால் கிரேசியஸ் அவர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு இன்னும் மிக அதிகமான முயற்சிகளை இந்தியா மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

5. திருஅவையும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையும் இணைந்த முயற்சி

ஏப்ரல்,28,2016. சிரியா நாட்டின் ஹோம்ஸ் நகரில், இராணுவ மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர் சிறுமியருக்கு உதவிகள் செய்யும் ஒரு  முயற்சியை, கத்தோலிக்கத் திருஅவையும், மாஸ்கோவின் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையும் இணைந்து மேற்கொண்டுள்ளது.
Aid to the Church in Need என்ற கத்தோலிக்க பிறரன்பு அமைப்பின் முயற்சியால் உருவாகியுள்ள இந்த இணை செயல்பாட்டின் ஒரு பகுதியாக, இவ்விரு அமைப்பின் பிரதிநிதிகள் ஹோம்ஸ் நகரை அண்மையில் பார்வையிட்டனர் என்று ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
சிரியா நாட்டில் நிலவிவரும் போரினால் சேதமடைந்துள்ள கிறிஸ்தவ தலங்களை மறு சீரமைக்கும் பணியில் கத்தோலிக்கத் திருஅவையும், மாஸ்கோவின் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையும் இணைந்து செயலாற்றுவதுபோல், இம்முயற்சியிலும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இத்தனை அழிவுகளையும், மரணங்களையும் கண்முன்னே கண்டுள்ள சிறுவர் சிறுமியர், இன்னும் புன்னகைப் பூக்க முடிகிறது என்பது, நம்பிக்கை தரும் ஓர் அடையாளம் என்று, இரஷ்யப் பேராயர் Paolo Pezzi அவர்கள், Aid to the Church in Need அமைப்பினரிடம் கூறினார்.
கத்தோலிக்கத் திருஅவையும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையும் இணைந்து செயலாற்றுவது, வெறும் ஏட்டளவு ஒப்பந்தம் அல்ல, மாறாக, நடைமுறையில் காணக்கூடிய ஓர் உண்மை என்று, இந்த குழுவின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

6. மரண தண்டனைக்கு எதிராக, பெரு நாட்டின் ஆயர்கள்

ஏப்ரல்,28,2016. மனித உயிர், இறைவன் வழங்கும் கொடை, எனவே, அது உருவாகும் தருணம் முதல், இயற்கையாக அழியும் வரை அதை மதித்து, காப்பது கிறிஸ்தவர்களின் கடமை என்று பெரு நாட்டின் ஆயர்கள், இச்செவ்வாயன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
பெரு நாட்டின் பொதுத் தேர்தல்களையொட்டி, மரண தண்டனை குறித்து அங்கு எழுந்துள்ள விவாதங்களையடுத்து, அந்நாட்டு ஆயர்கள் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர் என்று பிதேஸ் செய்தி கூறுகிறது.
குற்றங்களின் தீவிரத்தைப் பொருத்து, அரசு விதிக்கக்கூடிய தண்டனைகள் மாறுபடும் என்பதை ஏற்றுக்கொள்ளும் ஆயர்களின் செய்தி, எக்காரணம் கொண்டும் மரணதண்டனையை திருஅவை ஏற்றுக்கொள்ளாது என்பதையும் தெளிவு படுத்தியுள்ளது.
மரண தண்டனையை ஒழிப்பதற்கும், மனித மாண்பைக் குலைக்கும்வண்ணம் சிறைகளில் நிலவும் சூழல்களை மாற்றுவதற்கும் அனைத்து கிறிஸ்தவர்களும் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள விண்ணப்பத்தை, பெரு நாட்டின் ஆயர்கள், தங்கள் செய்தியில் சுட்டிக் காட்டியுள்ளனர்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

7. பசுமைச் சூழல் நிதிக்கு அமெரிக்க அரசு 75 கோடி டாலர்கள் ஒதுக்கவேண்டும்

ஏப்ரல்,28,2016. பசுமைச் சூழலை உருவாக்கும் நிதிக்கு அமெரிக்க அரசு இன்னும் கூடுதலானத் தொகையை அளிக்க முன்வர வேண்டும் என்று அமெரிக்க ஆயர்கள் பேரவை விண்ணப்பித்துள்ளது.
பசுமைச் சூழல் நிதிக்கு 50 கோடி டாலர்கள் நிதியை வழங்கியுள்ளதாக அமெரிக்க அரசுத் தலைவரின் வெள்ளை மாளிகை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதை அடுத்து, 120க்கும் மேற்பட்ட பல்சமய அமைப்புக்கள் விடுத்துள்ள ஒரு விண்ணப்பத்தில் அமெரிக்க ஆயர் பேரவையும் இணைந்துள்ளது.
இந்த விண்ணப்பத்தின்படி, இவ்வாண்டு 50 கோடி டாலர்கள் வழங்கியுள்ள அமெரிக்க அரசு, வரும் ஆண்டில் இந்த உதவித் தொகையை 75 கோடியாக உயர்த்தவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளில் வளரும் நாடுகள் முழுமையாக ஈடுபட 300 கோடி டாலர்கள் நிதி உதவி வழங்குவதாக அமெரிக்க அரசு உறுதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து நடைபெற்ற பாரிஸ் உலக உச்சி மாநாட்டின் இறுதியில், வளர்ச்சி பெற்றுள்ள நாடுகள், இன்னும் பத்து ஆண்டுகளில் சுற்றுச்சூழல் பாதுக்காப்பிற்கென 10,000 கோடி டாலர்கள் நிதி உதவி வழங்க மேற்கொண்ட முடிவின் காரணமாக, இதுவரை 1000 கோடி டாலர்கள் வழங்கியுள்ளன என்று CNS செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி

8. செர்னோபில் குழந்தைகளுக்கு இத்தாலியில் கோடை விடுமுறை

ஏப்ரல்,28,2016. செர்னோபில் (Chernobyl) நகரில் ஏற்பட்ட அணு உலை விபத்தினால் பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர், தங்கள் உடல் நலத்தில் முன்னேற்றம் காண்பதற்கு, இத்தாலியில் கோடை விடுமுறையைக் கழிப்பதற்கு, Girotondo எனப்படும் பிறரன்பு அமைப்பு ஒவ்வோர் ஆண்டும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
1986ம் ஆண்டு ஏப்ரல் 26ம் நடைபெற்ற இந்த அணு உலை விபத்தின் 30ம் ஆண்டு நிறைவு கடந்த செவ்வாயன்று கடைபிடிக்கப்பட்டது.
இத்தாலியின் தூரின் நகரில் துவங்கப்பட்ட Girotondo  எனப்படும் பிறரன்பு அமைப்பினால், ஒவ்வோர் ஆண்டும், செர்னோபில் குழந்தைகள், கோடை விடுமுறையைக் கழிப்பதற்கு, இத்தாலியக் குடும்பங்கள் உதவி செய்து வருகின்றன என்று ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இத்தகைய முயற்சியின் வழியே இத்தாலியக் குடும்பங்கள் இச்சிறுவர், சிறுமியருக்கு வழங்கக்கூடிய உதவிகளைவிட, இக்குழந்தைகள் இக்குடும்பங்களுக்கு வழங்கும் பயன்கள் பெரிதானவை என்று, Girotondo அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர், ஆசிய செய்தியிடம் கூறினார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...