Wednesday, 27 April 2016

செய்திகள்-27.04.16

செய்திகள்-27.04.16
------------------------------------------------------------------------------------------------------

1. நாம் எல்லாரும் பொதுநிலையினராகவே திருஅவையில் நுழைந்தோம்

2. அருளாளர், இறையடியார்களின் வீரத்துவமான வாழ்வு ஏற்பு

3. துன்புறுவோரின் கண்ணீரைத் துடைக்கும் செப நாள் மே 5

4. அன்னை தெரேசா புனிதர் பட்ட நிகழ்வுக்கு பிரதமர் மோடி

5. செர்னோபில் அணுமின் நிலைய விபத்து கற்றுத்தரும் பாடம்

6. புலம்பெயர்வு ஆசிய-பசிபிக் பகுதியின் வளர்ச்சிக்கு வாய்ப்பு

7. El Niño காலநிலையால் ஆறு கோடிப் பேர் பாதிப்பு

------------------------------------------------------------------------------------------------------

1. நாம் எல்லாரும் பொதுநிலையினராகவே திருஅவையில் நுழைந்தோம்

ஏப்.27,2016. நம்மில் எவருமே ஆயராகத் திருஅவைக்குள் நுழையவில்லை, மாறாக, பொதுநிலையினராகவே திருஅவையில் நுழைந்தோம் என்று சொல்லி, திருஅவையில் குருகுலத்தை மையமாக வைக்கும் போக்கை எச்சரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருஅவையில் பொதுநிலையினரின் பங்கு குறித்த சிந்தனைகளை, நீண்ட கடிதமாக, திருப்பீட இலத்தீன் அமெரிக்க ஆணையத்தின் தலைவர் கர்தினால் Marc Ouellet அவர்களுக்கு எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குருகுலத்தார், பொதுநிலையினருக்குப் பணியாற்ற வேண்டும் மற்றும் அவர்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும் கூறியுள்ளார்.
இலத்தீன் அமெரிக்க நாடுகளின் பொது வாழ்வில், பொதுநிலை விசுவாசிகளின் தவிர்க்க இயலாத பங்கு என்ற தலைப்பில், கடந்த மார்ச் மாதத்தில், வத்திக்கானில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகளைச் சந்தித்ததைத் தொடர்ந்து, மேலும் பல சிந்தனைகளை, இம்மடல் வழியாகத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
இலத்தீன் அமெரிக்கத் திருஅவையை, பெரிதாகப் பாதிப்பவைகளில், குருகுலத்தை மையமாக வைக்கும் போக்கும் ஒன்று என, குருக்கள் மற்றும் அர்ப்பண வாழ்வு வாழ்வோருக்கு நினைவுபடுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குருகுலத்தார், பொதுநிலை விசுவாசிகளுக்குப் பணியாற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாம் எல்லாருமே பொதுநிலையினராகவே திருஅவையில் நுழைந்தோம் என்றும், திருஅவை, குருக்கள், ஆயர்கள், துறவறத்தார் ஆகிய உயர்ந்தோர் குழுவின் திருஅவை அல்ல என்றும், நாம் எல்லாருமே, விசுவாசிகள் மற்றும் இறைவனின் தூய மக்களால் ஆனவர்கள் என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. அருளாளர், இறையடியார்களின் வீரத்துவமான வாழ்வு ஏற்பு

ஏப்.27,2016. இத்தாலிய மறைமாவட்ட அருள்பணியாளர் அருளாளர் அல்போன்சோ மரிய ஃபூஸ்கோ (Alfonso Maria Fusco) அவர்கள் உட்பட, புனிதர் பட்டம் மற்றும் முத்திப்பேறு பட்டம் வழங்குவதற்கென பலரின் வீரத்துவமான வாழ்வு பற்றிய விபரங்களையும், அவர்களின் பரிந்துரைகளால் நடைபெற்ற புதுமைகளையும் ஏற்றுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.  
தூய திருமுழுக்கு யோவான் சகோதரிகள் சபையை நிறுவிய அருளாளர் அல்போன்சோ மரிய ஃபூஸ்கோ (1839-1910); இன்னும், அயர்லாந்து நாட்டின் இயேசு சபை அருள்பணியாளர் இறையடியார் ஜான் சுலைவான்(1861-1933) ஆகிய இருவரின் பரிந்துரைகளால் புதுமைகள் நடந்துள்ளன.
இறையடியார் அருள்பணியாளர் José Antón Gómez, OSB, அவரோடு சேர்ந்த மூன்று பெனடிக்ட் சபை அருள்பணியாளர்கள், 1936ம் ஆண்டில் இஸ்பானிய உள்நாட்டுச் சண்டையில் மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்டனர். 
மேலும், பிரான்சிஸ்கன் சபையின் Durazzo பேராயர் Nikollë Vinçenc Prennushi அவர்களும், அவரோடு சேர்ந்து 37 பேரும், 1945ம் ஆண்டுக்கும் 1974ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், அல்பேனியாவில், கம்யூனிச அதிகாரிகளால், மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்டனர். 2014ம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அல்பேனியா சென்றபோது, இம்மறைசாட்சிகளிடம் செபித்தார்.
தென் கொரிய மறைமாவட்ட அருள்பணியாளர் Thomas Choe Yang-Eop(1821-1861) அவர்களின் வீரத்துவமான பண்புகளையும், திருத்தந்தை அங்கீகரித்துள்ளார். இந்நாட்டிற்கும் திருத்தந்தை திருத்தூதுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
மேலும், 1941ம் ஆண்டில் பிறந்து, 1959ம் ஆண்டில் இறந்த பொதுநிலை விசுவாசி இறையடியார் Maria Montserrat Grases García, பிரான்சிஸ்கன் சபை இறையடியார் Venanzio Katarzyniec மற்றும் பல்வேறு துறவு சபைகளைத் தொடங்கிய இறையடியார்கள் Sosio Del Prete, Maria Consiglio dello Spirito Santo, Maria dell’Incarnazione, Maria Laura Baraggia, Ilia Corsaro ஆகியோரின் வீரத்துவமான வாழ்வுமுறைகளையும் ஏற்றுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. துன்புறுவோரின் கண்ணீரைத் துடைக்கும் செப நாள் மே 5

ஏப்.27,2016. கிறிஸ்தவ நம்பிக்கை, கடவுள் நமக்கு வழங்கும் கொடையாகும். நாம் நம்மிலிருந்து வெளிவந்து, நம் இதயங்களைக் கடவுளுக்குத் திறந்தால், அக்கொடை நமக்குக் கிடைக்கும்என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இப்புதனன்று வெளியிடப்பட்டது. 
இச்செவ்வாயன்று, திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில், ஆண்டவர் முத்திரையிடப்பட்ட நம் கல்லறைகளில் நுழைந்து, நமக்கு வாழ்வளிக்கும்படியாக, அக்கல்லறைகளை, அவருக்குத் திறப்போம், அக்கல்லறைகள் என்ன என்பது நம் ஒவ்வொருவருக்கும் தெரியும் என்ற வார்த்தைகள் வெளியிடப்பட்டன.
மேலும், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், உடலிலும், உள்ளத்திலும் துன்புறுவோரின் கண்ணீரைத் துடைக்கும் செப நாள் வருகிற மே மாதம் 5ம் தேதி கடைப்பிடிக்கப்படுகின்றது.
வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், மே 5ம் தேதி வியாழன் மாலை 6 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில், திருவிழிப்பு செப வழிபாடு நடைபெறும்.
அந்நாளில், சிராகூசா நகரின், கண்ணீர் அன்னை மரியா திருஉருவத்தின் திருப்பண்டம் விசுவாசிகளின் வணக்கத்திற்கு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Angelo Iannuso மற்றும் Antonina Giusto என்ற இளம் தம்பதியரின் படுக்கையறையில் மாட்டி வைக்கப்பட்டிருந்த அன்னையின் திருஇதயப் படத்திலிருந்து, 1953ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதிக்கும், செப்டம்பர் முதல் தேதிக்கும் இடைப்பட்ட நாள்களில், கண்ணீர் வடிந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. அன்னை தெரேசா புனிதர் பட்ட நிகழ்வுக்கு பிரதமர் மோடி

ஏப்.27,2016. வருகிற செப்டம்பரில் வத்திக்கானில் அருளாளர் அன்னை தெரேசா அவர்கள் புனிதராக அறிவிக்கப்படவிருக்கும் நிகழ்வில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தனது தலைமையிலான பிரதிநிதிக் குழுவுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர் இந்திய கத்தோலிக்கத் திருஅவைத் தலைவர்கள்.
இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ் அவர்கள் தலைமையில், கடந்த திங்களன்று பிரதமர் மோடி அவர்களைச் சந்தித்து, இப்பரிந்துரையை முன்வைத்தனர்.
அதோடு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இந்தியாவுக்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொள்வதற்கு அழைப்பு விடுக்குமாறும், இக்குழு, பிரதமர் மோடி அவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
அருளாளர் அன்னை தெரேசா அவர்கள், வருகிற செப்டம்பர் நான்காம் தேதி புனிதராக அறிவிக்கப்படவிருக்கிறார். இந்நிகழ்வில் கலந்துகொள்வது குறித்து, தான் பரிசீலிப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி

5. செர்னோபில் அணுமின் நிலைய விபத்து கற்றுத்தரும் பாடம்

ஏப்.27,2016. செர்னோபில் அணுமின் நிலைய விபத்து, அழிவைக்கொண்டுவரும் தொழில்நுட்பங்களைப் புறக்கணித்து, நம் எல்லாருக்கும் மேலானவராக இருக்கும் கடவுளுக்குப் பணிந்து நடப்பதற்கு, பாடம் கற்றுத் தந்துள்ளது என்று, கான்ஸ்டான்டிநோபிள் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்கள் கூறினார்.
உக்ரைன் நாட்டிலுள்ள செர்னோபில் அணுமின் நிலைய விபத்து நடந்ததன் முப்பதாம் ஆண்டு நிறைவை, இச்செவ்வாயன்று நினைவுகூர்ந்து செய்தி வெளியிட்டுள்ள, முதுபெரும் தந்தை பர்த்தலோமேயோ அவர்கள், இந்த விபத்தை நாம் என்றுமே நினைவில் வைத்திருப்போம் என்று கூறியுள்ளார்.
செர்னோபில் அணுமின் நிலைய விபத்தின் கடும் விளைவுகளை நினைவில் வைத்துள்ள நாம், நம் தவறுகளின் விளைவுகளையும் மறக்கக் கூடாது என்றும், அதிலிருந்து பாடம் கற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் முதுபெரும் தந்தை பர்த்தலோமேயோ.
மனித வரலாற்றிலேயே மிகவும் மோசமான அணு விபத்தாக, செர்னோபில் விபத்து கருதப்படுகிறது. 1986ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி இது நடந்தது.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி

6. புலம்பெயர்வு ஆசிய-பசிபிக் பகுதியின் வளர்ச்சிக்கு வாய்ப்பு

ஏப்.27,2016. மக்கள் நாடுவிட்டு நாடு சென்று குடிபெயர்வது, இக்காலத்தில் வேகமாக இடம்பெற்றுவரும்வேளை, ஆசிய-பசிபிக் பகுதி, இதற்கேற்ப திட்டங்களை வகுக்கவில்லையெனில், வருங்காலத்தில், வளர்ச்சியையும், முதலீடுகளையும் ஊக்குவிப்பதற்கான சிறந்த வாய்ப்பை இழக்கக் கூடும் என்று, ஐ.நா. அமைப்பு ஒன்று எச்சரித்துள்ளது.
ஆசிய-பசிபிக் நாடுகள், தற்போது வேலைசெய்யும் வயதுடைய மக்களை அதிகமாகவும், சார்பு நிலையில் உள்ளவர்களைக் குறைவாகவும் கொண்டிருப்பதால், இந்நிலை வளர்ச்சிக்கு அதிகம் உதவும் என்றுரைத்துள்ள, UNDP  என்ற ஐ.நா. வளர்ச்சித் திட்ட அமைப்பு, ஏமாற்ற நிலையில் வாழும் இளையோர் மற்றும் அப்பகுதியின் நிலையற்றதன்மை குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆசிய-பசிபிக் பகுதியில், 68 விழுக்காட்டினர், வேலைசெய்யும் வயதுடைய மக்கள் மற்றும் 32 விழுக்காட்டினர் சார்பு நிலையில் உள்ளவர்கள் என்றுரைக்கும் அவ்வமைப்பு,    வேலைசெய்யும் திறனுள்ள மக்களை அதிகமாகக் கொண்டிருக்கும் நாடுகள், தங்களின் பொருளாதாரத்தை மாற்றக்கூடிய சக்தியைக் கொண்டுள்ளன என்றும் கூறியது.   

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி

7. El Niño காலநிலையால் ஆறு கோடிப் பேர் பாதிப்பு

ஏப்.27,2016. El Niño காலநிலையால் ஏற்படும், பஞ்சம், வெள்ளம் மற்றும் பிற கடுமையான மாற்றங்களால், உலகில் ஆறு கோடிப் பேர் பாதிக்கப்பட்டுள்ளவேளை, வருங்காலத்தில் மக்கள் பேரிடர்களை எதிர்கொள்வதற்கு, அவர்களைத் தயாரிக்குமாறு  அனைத்துலக சமுதாயத்தை வலியுறுத்தியுள்ளார் ஐ.நா. அதிகாரி ஒருவர்.
தங்களின் முழு வாழ்வுமே அச்சுறுத்தப்பட்டுள்ள நிலையில் வாழும் மக்களுக்கு, உடனடியாக உதவிகள் வழங்கப்பட வேண்டுமென்று, ஐ.நா. மனிதாபிமான விவகார மற்றும் அவசரகால நிவாரணப் பணியின் நேரடிப் பொதுச் செயலர் ஸ்டீபன் ஓப்ரெய்ன் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
வருகிற மே 23,24 தேதிகளில், துருக்கியின் இஸ்தான்புல் நகரில், உலக மனிதாபிமான உச்சி மாநாடு நடைபெறவிருப்பதைக் குறிப்பிட்ட ஓப்ரெய்ன் அவர்கள், 1997, 1998ம் ஆண்டுகளில், El Niño காலநிலையால், ஏறக்குறைய 21 ஆயிரம் பேர் இறந்துள்ளனர் மற்றும் 3,600 கோடி டாலர் மதிப்புடைய உள்கட்டமைப்பு சேதமடைந்தது என்று குறிப்பிட்டார்.

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி     

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...