Tuesday, 12 May 2015

செய்திகள்-11.05.15

செய்திகள்-11.05.15
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : குழந்தைகள் அன்பில் வளர உதவும் உலகைக் கட்டியெழுப்புவோம்

2. திருத்தந்தை : மறைசாட்சிய மரணம் குறித்து தெளிவானச் சிந்தனை தேவை

3. ஆப்ரிக்காவின் பாரம்பரிய குடும்ப மதிப்பீடுகள் காக்கப்படவேண்டும்

4. திருத்தந்தை : வலுவற்றோர் அருகில் இருப்பது அன்புக்கு சிறந்த வெளிப்பாடு

5. திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கிய அன்னை தின வாழ்த்துக்கள்

6. தான் கத்தோலிக்க மதத்திற்கு திரும்பக்கூடும் என்கிறார் கியூபத் தலைவர்

7. கிறிஸ்தவ ஒன்றிப்பு நடவடிக்கைகள் குறித்து திருத்தந்தையுடன் உரையாடல்

8.  நேபாள மக்களுக்கு நிதி உதவிகள் செய்ய கர்தினால் கிளீமிஸ் விண்ணப்பம்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : குழந்தைகள் அன்பில் வளர உதவும் உலகைக் கட்டியெழுப்புவோம்

மே,11,2015. அநீதியும் வன்முறைகளுமின்றி அனைத்துக் குழந்தைகளும் அன்பில் வளர உதவும் உலகைக் கட்டியெழுப்ப அனைவரும் முயல்வோம் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அமைதியின் தொழிற்சாலைஎன்ற வட இத்தாலிய அமைப்பு ஒன்றின் அங்கத்தினர்களை இத்திங்கள் காலை முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பகைமை, சுயநலம், அனைத்தையும் தன்னகப்படுத்தும் பேராசை ஆகியவற்றால், போர் தொழிற்சாலைகள் வளர்ந்துவரும் இன்றையைச் சூழலில்ஒப்புரவையும், அனைவரையும் அணைக்கும் நிலைகளையும் உள்ளடக்கும் கலாச்சாரத்தை நாம் ஊக்குவிக்கவேண்டும் என்றார்.
உலகில் அமைதி உருவாக்கப்படவேண்டுமெனில், முதலில் அதற்கான சூழல்கள் ஏற்படுத்தப்படவேண்டும் என்ற திருத்தந்தை, பள்ளிகள், விளையாட்டுத் தளங்கள் போன்ற சிறார் கூடிவரும் இடங்கள் இதில் முக்கியத்துவம் பெறுகின்றன என்றார்.
ஒவ்வொரு குழந்தையும் மன்னிப்பு மற்றும் ஒப்புரவின் தேவையை உணர்ந்து அதற்கேற்றாற்போல் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற விண்ணப்பத்தையும், அங்கு குழுமியிருந்த சிறார் முன் வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமக்குள்ளேயே ஒப்புரவை வளர்க்க முடியவில்லையெனில் எவ்வாறு நாம் போர்களை நிறுத்தப் போகிறோம் என்ற கேள்வியையும் முன்வைத்தார்.
இன்றைய உலகில் அமைதியைக் கட்டியெழுப்பத் தேவையானக் கூறுகளாக, உரையாடல், மன்னிப்பு மற்றும் ஒப்புரவு நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இந்த அமைதியின் தொழிற்சாலைஅமைப்புக்குள் எவ்வித பாகுபாடுமின்றி அனைவரும் வரவேற்கப்படுவது குறித்தும் தன் மகிழ்ச்சியை வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை : மறைசாட்சிய மரணம் குறித்து தெளிவானச் சிந்தனை தேவை

மே,11,2015. இன்றும் பலர் கிறிஸ்தவர்களைக் கொல்லும்போது, அது இறைவனுக்குத் தாங்கள் ஆற்றும் திருப்பணி என்று நம்புகின்றனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திங்கள் காலை தன் மறையுரையில் கூறினார்.
மே, 11, திங்கள் காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலியாற்றுகையில், "உங்களைக் கொல்லுவோர் கடவுளுக்குத் திருப்பணி செய்வதாக எண்ணும் காலமும் வருகிறது" (யோவான் 16:2) என்று இன்றையத் திருப்பலியில் இடம்பெறும் நற்செய்தியின் வார்த்தைகளை மையப்படுத்தி, திருத்தந்தை மறையுரை வழங்கினார்.
யூதர்கள், கிரேக்கர்கள், புறவினத்தார் அனைவருக்கும், சிலுவை ஓர் இடறலாக இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இன்றும், சிலுவையின் பொருளை உணராமல் வாழ்வோர் பலர் உள்ளனர் என்று எடுத்துரைத்தார்.
லிபியா கடற்கரையில் கொல்லப்பட்ட காப்டிக் கிறிஸ்தவர்களைப் பற்றி, தன் மறையுரையில் குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று, தனக்கும், காப்டிக் முதுபெரும் தந்தை முதலாம் Tawadros அவர்களுக்கும் இடையே நிகழ்ந்த தொலைபேசி உரையாடல் பற்றியும் பேசினார்.
லிபியா கடற்கரையில் கொல்லப்பட்டவர்கள், கிறிஸ்துவின் சாட்சிகள் என்ற எண்ணம், தங்கள் தொலைபேசி உரையாடலில் இடம்பெற்றது என்பதையும் திருத்தந்தை சிறப்பாகக் குறிப்பிட்டார்.
மறைசாட்சிய மரணம் குறித்து தெளிவானச் சிந்தனையும், மன உறுதியும் கொண்டிருப்பது, கிறிஸ்தவராய் வாழ்வதற்கு ஓர் அடிப்படைத் தேவை என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையின் இறுதியில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. ஆப்ரிக்காவின் பாரம்பரிய குடும்ப மதிப்பீடுகள் காக்கப்படவேண்டும்

மே,11,2015. வாழ்வு வரவேற்கப்படுதல், முதியோர்கள் உயரிய மரியாதையுடன் நடத்தப்படல் போன்ற மதிப்பீடுகள், ஆப்ரிக்கக் குடும்பங்களில் போற்றி பாதுகாக்கப்படவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
ஐந்தாண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் அத் லிமினா சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்துள்ள டோகோ நாட்டு ஆயர்களை இத்திங்களன்று காலை திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்குடும்பம் குறித்த உலக மாநாட்டிற்கான தயாரிப்புகள் இடம்பெற்றுவரும் இவ்வேளையில், ஆப்ரிக்காவின் பாரம்பரிய குடும்ப மதிப்பீடுகள் முக்கியத்துவம் பெறவேண்டும் என்றார்.
பல்வேறு சவால்களை ஆப்ரிக்கக் குடும்பங்களும் சந்தித்துவருவதை தன் உரையில் எடுத்தியம்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தலத்திருஅவை தன் கல்விப்பணி மற்றும் சமூகப்பணிகள் மூலம் ஆற்றிவரும் சேவையையும் பாராட்டினார்.
டோகோ நாட்டு இளைஞர்களின் வாழ்வில் திருஅவை அதிகாரிகளின் பொறுப்புணர்வு, நாட்டில் நற்செய்தியை அறிவிப்பதில் ஆண், பெண் துறவு சபைகளின் கடமை, குருத்துவப் பயிற்சி, நீதி மற்றும் ஒப்புரவுப்பணிகளில் தலத்திருவையின் அர்ப்பணம்ஏனைய கிறிஸ்தவ சபைகளுடன் கத்தோலிக்கத் திருஅவை ஒன்றிணைந்து உழைத்தல், பிற மதங்களுடன் பேச்சுவார்த்தைகளை ஊக்குவித்தல் போன்றவை குறித்தும் டோகோ ஆயர்களுடன் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை : வலுவற்றோர் அருகில் இருப்பது அன்புக்கு சிறந்த வெளிப்பாடு

மே,11,2015. நாம் ஒருவர் ஒருவரைப் புரிந்துகொள்வதோ, ஏற்றுக்கொள்வதோ கடினமாக இருந்தாலும், ஒருவர் ஒருவர் மீது அன்பு காட்ட அழைக்கப்பட்டுள்ளோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
மே 10, இஞ்ஞாயிறு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, 'விண்ணக அரசி' என்ற அல்லேலூயா வாழ்த்தொலி செய்தியை வழங்கியவேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.
இந்த ஞாயிறன்று வழங்கப்பட்ட நற்செய்தியில், "நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை" (யோவான் 15:12) என்று இயேசு கூறிய வார்த்தைகளை மேற்கோளாகக் கூறி, பெரிய, சிறிய விடயங்கள் அனைத்திலும் அன்பு நம்மிடையே வெளிப்படவேண்டும் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
இறுதி இரவுணவின் வேளையில் இந்த அன்புக் கட்டளையைக் கொடுத்த இயேசு, அந்த அன்பை, தன் சிலுவை மரணத்தால் நிறைவேற்றி, ஓர் எடுத்துகாட்டாக மாறினார் என்று கூறியத் திருத்தந்தை, இறைவன் மீது நாம் கொள்ளும் அன்பு, அயலவர் மீது நாம் கொள்ளும் அன்பின் வழியே வெளியாகிறது என்று சுட்டிக்காட்டினார்.
குழந்தை, வயதான ஒருவர், நோயுற்ற ஒருவர், வீடற்ற, வேலையை இழந்த மனிதர்கள், புலம்பெயர்ந்தோர் என பல வழிகளிலும் வலுவற்றிருப்போருக்கு அருகில் இருப்பது நம் அன்புக்கு சிறந்ததொரு வெளிப்பாடு என்று திருத்தந்தை தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கிய அன்னை தின வாழ்த்துக்கள்

மே,11,2015. இஞ்ஞாயிறு நண்பகல், புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அல்லேலூயா வாழ்த்தொலி செய்தியை வழங்கியவேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று கொண்டாப்பட்ட அன்னை தினத்தையொட்டி, தன் சிறப்பான வாழ்த்துக்களை அன்னையருக்கு வழங்கினார்.
அன்னை தினத்தன்று, நம் குடும்பங்களில் வாழும் அன்னையரை, மற்றும் உடலால் நம்மை விட்டுப் பிரிந்து, ஆன்மீக அளவில் நம்மோடு இணைந்திருக்கும் அன்னையரை, அன்புடனும், நன்றியோடும் எண்ணிப்பார்ப்பது நம் கடமை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
நம்மிடையே இங்கு இவ்வளாகத்தில் கூடியிருக்கும் அன்னையருக்கு, சிறப்பான வாழ்த்துக்களை, கைத்தட்டலுடன் தெரிவிப்போம் என்று திருத்தந்தை கூறியபோது, வளாகத்தில் கைத்தட்டலும் ஆரவாரமும் நிறைந்தன.
மேலும், வாழ்வை ஆதரிப்போர் என்ற அமைப்பினர், இத்தாலியில் ஐந்தாவது ஆண்டாக மேற்கொண்ட பேரணியில் கலந்துகொண்டோரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அல்லேலூயா வாழ்த்தொலி செய்திக்குப் பின்னர் வாழ்த்தினார்.
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆஸ்திரேலியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் உட்பட, 80க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் இரண்டாம் ஞாயிறு, அன்னை தினமாகக் கொண்டாடப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. தான் கத்தோலிக்க மதத்திற்கு திரும்பக்கூடும் என்கிறார் கியூபத் தலைவர்

மே,11,2015. இஞ்ஞாயிறன்று காலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து ஏறத்தாழ ஒருமணி நேரம் உரையாடினார் கியூபா அரசுத்தலைவர் இரவுல் காஸ்த்ரோ. 
50 ஆண்டுகளுக்கு மேலாக முறிந்திருந்த  அமெரிக்க-கியூப உறவை சீராக்க திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிய பெரும் பங்கிற்கு நன்றி தெரிவிப்பதற்காக இந்த பயணத்தை இரவுல் காஸ்த்ரோ  மேற்கொண்டார் என பத்திரிகைகள் எழுதிவரும் வேளையில், இந்த பயணத்தின்போது கியூபா அரசுத்தலைவர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு வழங்கிய பரிசும் அதையே உறுதிச்செய்வதாக இருந்தது.
புலம் பெயர்ந்த மக்களின் சிதையுண்ட படகுகளின் மரத்துண்டுகளைக் கொண்டு செய்யப்பட்ட ஒரு சிலுவையின் முன்பு குடியேற்றதார் ஒருவர் செபம் செய்து கொண்டிருப்பது போன்ற கலை வேலைப்பாட்டுடன் கூடிய சிற்பம் ஒன்றை பரிசளித்தார் அரசுத்தலைவர்.
குடியேற்றதார் சார்பாக திருத்தந்தை லாம்பதூசா தீவு வரைச் சென்று அவர்களைச் சந்தித்துப் பேசியதையும் இச்சந்திப்பின்போது கியூப அதிகாரிகள் நினைவூட்டி அக்கலைப்படைப்பிற்கு விளக்கமளித்தனர்.
வத்திக்கானில் திருத்தந்தையைச் சந்தித்தபின், உரோம் நகரில் இத்தாலிய அரசுத்தலைவர் மத்தேயோ ரென்சியையும் சந்தித்தபின், பத்திரிகையாளர் கூட்டத்தில் உரையாற்றிய கியூபா அரசுத்தலைவர், இரவுல் காஸ்த்ரோ அவர்கள், தான் கத்தோலிக்க மதத்திற்கு திரும்பக்கூடும் என்று தெரிவித்துள்ளார். தான் இளம்வயதில் இயேசுசபையினரால் கற்பிக்கப்பட்டதையும் நினைவுக் கூர்ந்தார் கியூபா அரசுத்தலைவர். 
கத்தோலிக்க மதத் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின்  ஞானமும் பணிவும் தம்மை வெகுவாக கவர்ந்துள்ளதென்றும், திருத்தந்தையின் உரைகள் அனைத்தையும் தான் கவனமுடன் வாசித்துள்ளதாகவும் தெரிவித்தார் அவர்.
செப்டெம்பரில் திருத்தந்தை கியூபா வரும்போது அவர் நிறைவேற்ற உள்ள பொது வழிபாட்டு சடங்குகள் அனைத்திலும் தான் கலந்துகொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார் கியூப அரசுத்தலைவர் இரவுல் காஸ்த்ரோ.
இரவுல் காஸ்த்ரோவும் அவரது சகோதரர் ஃபிதல் காஸ்த்ரோவும் திருமுழுக்குப் பெற்ற கத்தோலிக்கர்கள் எனினும், கியுபாவில் அவர்களது கம்யூனிசிய புரட்சியின் வெற்றியைத் தொடர்ந்து, கத்தோலிக்க மத வழிபாடுகளில் கலந்துகொள்வதை நிறுத்தியிருந்தனர்.    

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. கிறிஸ்தவ ஒன்றிப்பு நடவடிக்கைகள் குறித்து திருத்தந்தையுடன் உரையாடல்

மே,11,2015. காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் முதுபெரும் தந்தை போப் இரண்டாம் Tawadros அவர்கள், இஞ்ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை தொலைபேசி வழி தொடர்புகொண்டு கிறிஸ்தவ ஒன்றிப்பு நடவடிக்கைகள் குறித்து உரையாடினார்.
கிரிஸ்தவ ஒன்றிப்பை நோக்கி முயற்சிகள் மேற்கொண்டுள்ள இவ்விரு கிறிஸ்தவ சபைகளின் அர்ப்பணம் தொடரவேண்டும் என்றும், கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவை இரு சபைகளும் ஒரே நாளில் சிறப்பிப்பது குறித்து ஒத்திசைவு ஏற்படவேண்டும் என்றும் திருத்தந்தையுடனான தொலைபேசி உரையாடலின்போது கேட்டுக்கொண்டார் காப்டிக் ஆர்த்தாடாக்ஸ் தலைவர்.
ஏற்கனவே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று காலை போப் இரண்டாம்  Tawadros அவர்களுக்கு வாழ்த்துச் செய்தி ஒன்று அனுப்பியிருந்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை Tawadros அவர்களும் வத்திக்கானில் சந்தித்ததன் இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு திருத்தந்தையின் இந்த செய்தி அனுப்பப்பட்டிருந்தது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி

8.  நேபாள மக்களுக்கு நிதி உதவிகள் செய்ய கர்தினால் கிளீமிஸ் விண்ணப்பம்

மே,11,2015. இந்தியாவில் வாழும் நல்மனம் கொண்ட அனைவரும், நேபாள மக்களின் துயர் துடைக்க, நிதி உதவிகள் செய்வதை, திருஅவை ஆயர்களும், பணியாளர்களும், அனைத்து கத்தோலிக்கரும் ஊக்குவிக்க வேண்டும் என்று இந்திய ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் மார் பசிலியோஸ் கிளீமிஸ் தொட்டுங்கல் அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.
இந்த மனிதாபிமான நெருக்கடி நம் ஒவ்வொருவரின் மனசாட்சியைத் தட்டி எழுப்பும் ஓர் அழைப்பு என்று கூறிய கர்தினால் கிளீமிஸ் அவர்கள், பணம், பொருள் வடிவிலும், உழைப்பின் வடிவிலும் நேபாள மக்களுடன் இணைவது நம் கடமை என்று குறிப்பிட்டார்.
முற்றிலும் சிதைந்துபோன கிராமங்களில் நேபாள காரித்தாஸ் அமைப்பு, தன் பணியை மேற்கொண்டு வருகிறது என்றும், நேபாள நாட்டை பெருமளவு சிதைத்துள்ள நிலநடுக்கத்தால் இறந்தோரின் எண்ணிக்கை 10,000த்திற்கும் அதிகமாகும் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
பல்வேறு திருத்தலங்களும், பழமைக் கலாச்சார சின்னங்களும் பெரும் அழிவுகளைச் சந்தித்துள்ளன என்றும், நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக தொற்றுநோய்கள் பரவும் ஆபத்து எழுந்துள்ளது என்றும் ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...