Friday, 15 May 2015

செய்திகள்-14.05.15

செய்திகள்-14.05.15
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை: விளையாட்டுத் திடல் சிறந்ததொரு பள்ளியாக அமையும்

2. Pax Christi உலக 2. மாநாட்டிற்கு, திருத்தந்தையின் வாழ்த்துக்கள்

3. திருத்தந்தை: "அன்புப் பெற்றோரே, அதிகப் பொறுமை கொண்டிருங்கள்"

4. பாலஸ்தீன நாட்டிற்கும், வத்திக்கானுக்கும் இடையே தூதரக உறவுகள்

5. வத்திக்கான்-பாலஸ்தீன ஒப்பந்தம், ஒரு முன்னோட்டம்

6. குழந்தை இயேசு மருத்துவமனை விழாவில் திருப்பீடச் செயலர்

7. அனைத்துலகக் காரித்தாஸ் - 20வது மாநாட்டில் கர்தினால் டர்க்சன்

8. உரையாடல் ஒன்றே, நம்பிக்கையின் சின்னம் - கர்தினால் Tauran

9. துன்புறும் கிறிஸ்தவர்களுக்காக இலங்கையில் உண்ணா நோன்பு

10. மரண தண்டனையை எதிர்த்து, பாப்புவா நியூ கினி ஆயர்கள்
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை: விளையாட்டுத் திடல் சிறந்ததொரு பள்ளியாக அமையும்

மே,14,2015. ஒவ்வொரு மனிதருக்கும், குறிப்பாக, வளர்இளம் பருவத்தில் இருப்போருக்கு, வழிகாட்டியாக, பயிற்சியாளராக, கல்வி கற்பிப்பவராக இருப்பவர்கள் மிகவும் அவசியமானத் தேவை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
விளையாட்டுக்களில் பயிற்சி என்ற மையக்கருத்துடன் பொதுநிலையினர் திருப்பீட அவை, மே 14, இவ்வியாழன் முதல், 16, இச்சனிக்கிழமை முடிய உரோம் நகரில் ஏற்பாடு செய்துள்ள பன்னாட்டுக் கருத்தரங்கிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
வளர் இளம் பருவத்தில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களைப் புரிந்துகொண்டு, இளையோரை நல்வழிப்படுத்துவோர், அவர்களின் வாழ்வில் ஆழமானத் தாக்கங்களை உருவாக்குவர் என்று திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
விட்டுக்கொடுத்தல், தியாகம், குழுவாகச் செயல்படுதல் என்ற பல உன்னத பண்புகளைக் கற்றுக்கொள்ள, விளையாட்டுத் திடல் சிறந்ததொரு பள்ளியாக அமையும் என்று திருத்தந்தை, தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொது நிலையினர் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் Stanislaw Rylko அவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில், இத்திருப்பீட அவை ஏற்பாடு செய்துள்ள 4வது பன்னாட்டு கருத்தரங்கு வெற்றிபெற தன் ஆசீரை வழங்கியுள்ளார்.
திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களின் தூண்டுதலால், விளையாட்டுக்களை மையப்படுத்திய பன்னாட்டுக் கருத்தரங்குகள், பொதுநிலையினர் திருப்பீட அவையின் ஓர் அங்கமாக, ஏற்பாடு செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. Pax Christi உலக 2. மாநாட்டிற்கு, திருத்தந்தையின் வாழ்த்துக்கள்

மே,14,2015. மே 13, இப்புதன் முதல், 17, வருகிற ஞாயிறு முடிய, புனித பூமியின் பெத்லகேமில் நடைபெறும் Pax Christi உலக மாநாட்டிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் வாழ்த்துக்களையும், ஆசீரையும் அனுப்பியுள்ளார்.
நம் உள்ளத்தில் கிறிஸ்துவின் ஆட்சி எவ்வளவுக்கெவ்வளவு ஆழப் பதிகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு உடன்பிறப்பு உணர்விலும், நீதியிலும், அமைதியிலும் நம் உள்ளங்கள் நிறையும் என்று திருத்தந்தை, இவ்வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
திருத்தந்தையின் பெயரால், இவ்வியாழன் காலை, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இச்செய்தியை, Pax Christi அனைத்துலகத் தலைவர், மற்றும் பொதுச் செயலருக்கு அனுப்பியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை: "அன்புப் பெற்றோரே, அதிகப் பொறுமை கொண்டிருங்கள்"

மே,14,2015. "அன்புப் பெற்றோரே, அதிகப் பொறுமை கொண்டிருங்கள்; உங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து மன்னியுங்கள்" என்ற வார்த்தைகள், திருத்தந்தையின் Twitter செய்தியாக இவ்வியாழன் காலை வெளியானது.
திருத்தந்தையின் Twitter முகவரியாக விளங்கும், @pontifex என்ற இணையதள குறிப்பின்படி, இவ்வியாழன் வெளியான Twitter செய்தி, திருத்தந்தையின் 550வது செய்தி என்றும், திருத்தந்தையின் செய்திகளைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை, 60,70,000 என்றும் கூறப்படுகிறது.
பொதுவாக, ஒவ்வொருநாளும் இத்தாலியம், இலத்தீன், ஸ்பானியம், ஜெர்மன், ஆங்கிலம், போலந்து, பிரெஞ்சு, போர்த்துகீசியம், மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் திருத்தந்தையின் Twitter செய்திகள் வெளியாகி வருகின்றன.
கொரியா, இலங்கை, பிலிப்பின்ஸ் ஆகிய ஆசிய நாடுகளுக்கு அவர் திருத்தூதுப் பயணங்கள் மேற்கொண்ட வேளையில், அந்தந்த நாடுகளின் பெரும்பான்மை மொழிகளில் திருத்தந்தையின் Twitter செய்திகள் வெளியாயின.
இவ்வாண்டு சனவரியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இலங்கையில் திருத்தூது பயணம் மேற்கொண்ட வேளையில், சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் Twitter செய்திகளை வெளியிட்டார் என்பதும், "இறைவன் இலங்கையை ஆசீர்வதித்து காப்பாராக" என்பது சனவரி 15ம் தேதி அவர் வெளியிட்ட செய்தி என்பதும் குறிப்பிடத்தக்கவை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. பாலஸ்தீன நாட்டிற்கும், வத்திக்கானுக்கும் இடையே தூதரக உறவுகள்

மே,14,2015. பாலஸ்தீன நாட்டிற்கும், வத்திக்கானுக்கும் இடையே தூதரக உறவுகளை மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் குறித்த ஒப்பந்த அறிக்கையொன்று மே 13, இப்புதன் பிற்பகலில் வத்திக்கானில் கையெழுத்திடப்பட்டது.
2012ம் ஆண்டு, ஐ.நா.அவை பாலஸ்தீனத்தை ஒரு நாடாக ஏற்றுக்கொண்டது முதல், திருப்பீடமும் அதை ஒரு நாடாகவே கருதி வந்ததென்று, திருப்பீட செய்தித் தொடர்பாளர் அருள்பணி பெதெரிக்கோ லொம்பார்தி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் மேல்மட்ட அதிகாரிகளின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும், அவர்களின் ஒப்புதல் கிடைத்தபின், வத்திக்கான் முதல் முறையாக பாலஸ்தீனத்தை ஒரு நாடாகக் கருதி ஒப்பந்தக் கையெழுத்திடும் என்றும் அருள்பணி லொம்பார்தி அவர்கள் கூறினார்.
எருசலேம் நகர், உலக மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்குத் திறந்துவிடப்படும் என்றும், பாலஸ்தீன நாட்டில் வாழும் கிறிஸ்தவர்கள் மதச் சுதந்திரத்துடன் வாழ அந்நாட்டு அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்றும் இவ்வொப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
இப்புதனன்று நடைபெற்ற ஒப்பந்தக் கூட்டத்தில், திருப்பீடத்தின் சார்பில், நாடுகளுடன் உறவுகொள்ளும் திருப்பீடத் துறையின் நேரடிப் பொதுச் செயலர், அருள்பணி அந்துவான் கமில்லெரி அவர்களும், பாலஸ்தீன நாட்டின் சார்பில், அயல்நாட்டு விடயங்களின் துணை அமைச்சர், இரவான் சுலைமான் அவர்களும் பங்கேற்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. வத்திக்கான்-பாலஸ்தீன ஒப்பந்தம், ஒரு முன்னோட்டம்

மே,14,2015. வத்திக்கானுக்கும், பாலஸ்தீன நாட்டிற்கும் இடையே உருவாகியுள்ள ஒப்பந்தம், இஸ்லாமியரை பெரும்பான்மையாகக் கொண்ட பல நாடுகளுடன் திருப்பீடம் மேற்கொள்ளக்கூடிய ஒப்பந்தங்களுக்கு ஒரு முன்னோட்டமாக அமைந்துள்ளது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
பாலஸ்தீன நாட்டிற்கும், வத்திக்கானுக்கும் இடையே தூதரக உறவுகளைத் துவங்க எதுவாக, மே 13, இப்புதன் பிற்பகலில், வத்திக்கானில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்த அறிக்கையைக் குறித்து, நாடுகளுடன் உறவுகொள்ளும் திருப்பீடத் துறையின் நேரடிப் பொதுச் செயலர், அருள்பணி அந்துவான் கமில்லெரி அவர்கள், வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
1979ம் ஆண்டு, திருத்தந்தை, புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், நியூயார்க் நகரில் அமைந்துள்ள  ஐ.நா.தலைமையகத்தில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்ததிலிருந்து, திருப்பீடத்திற்கும், பாலஸ்தீன நாட்டிற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு முயற்சிகளை, அருள்பணி கமில்லெரி அவர்கள் தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.
PLO எனப்படும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்துடன், 1979ம் ஆண்டு முதல் தன் உறவுகளை மேற்கொண்டு வந்த திருப்பீடம்2012ம் ஆண்டு, ஐ.நா.அவை, பாலஸ்தீனத்தை ஒரு நாடாக ஏற்றுக்கொண்ட நேரம் முதல், அதனை, தானும் ஒரு நாடாகக் கருதி வந்தது என்று அருள்பணி கமில்லெரி அவர்கள் குறிப்பிட்டார்.
இப்புதனன்று கையெழுத்திடப்பட்டுள்ள ஒப்பந்தம், வத்திக்கான், பாலஸ்தீனம் என்ற இரு நாடுகளுக்கிடையே தூதரக உறவுகளை மேற்கொள்ள ஒரு முக்கியமான உந்துதல் என்று அருள்பணி கமில்லெரி அவர்கள் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. குழந்தை இயேசு மருத்துவமனை விழாவில் திருப்பீடச் செயலர்

மே,14,2015. மனித உயிரை மதிப்பது மற்றும் மனித உயிர்களுக்கு, குறிப்பாக, குழந்தைகளின் உயிர்களுக்குப் பணியாற்றுவது என்பவை, குழந்தை இயேசு மருத்துவமனையைத் தாங்கி நிற்கும் இரு தூண்கள் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
உரோம் நகரில், குழந்தைகள் நலனுக்கென உருவாக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற குழந்தை இயேசு மருத்துவமனையின் ஆய்வுத் துறை தன் முப்பதாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதையொட்டி, மே 13, இப்புதன் மாலை, உரோம் நகரின் புனித பவுல் பசிலிக்காவில் திருப்பலி நிறைவேற்றிய திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
குழந்தைகளை மையப்படுத்தி வழங்கப்படும் உயர்ரக மருத்துவ உதவிகள், ஏழைக் குழந்தைகளையும் அடையும்வண்ணம், மருத்துவமனை செயலாற்றவேண்டும் என்ற வேண்டுகோளை கர்தினால் பரோலின் அவர்கள் தன் மறையுரையில் முன்வைத்தார்.
1869ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, திருப்பீடத்தின் நேரடி கண்காணிப்பில் இயங்கிவரும் குழந்தை இயேசு மருத்துவமனை, குழந்தைகள் நலனில் ஐரோப்பாவில் தலைசிறந்த மருத்துவமனையாகக் கருதப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. அனைத்துலகக் காரித்தாஸ் - 20வது மாநாட்டில் கர்தினால் டர்க்சன்

மே,14,2015. 169 நாடுகளில் இயங்கிவரும் காரித்தாஸ் அமைப்புக்கள், உலகின் 200க்கும் அதிகமான நாடுகளில் பணியாற்றி வருவதை, திருப்பீடத்தின் நீதி அமைதி அவை மனதாரப் பாராட்டுகிறது என்று இந்த அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் கூறினார்.
மே 12, இச்செவ்வாய் முதல், 17, வருகிற ஞாயிறு முடிய, உரோம் நகரில் நடைபெற்றுவரும் அனைத்துலகக் காரித்தாஸ் அமைப்பின் 20வது மாநாட்டில், இவ்வியாழனன்று உரைவழங்கிய கர்தினால் டர்க்சன் அவர்கள், மாநாட்டின் வெற்றிக்காக தான் வேண்டுவதாகக் கூறினார்.
காலநிலை மாற்றமும், மனித முன்னேற்றமும் மனித சமுதாயத்திற்கு முன் பல சவால்களை வைக்கின்றன என்று கூறிய கர்தினால் டர்க்சன் அவர்கள், இவ்விரு கூறுகளையும் தகுந்த முறையில் இணைப்பது உலகின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்று எடுத்துரைத்தார்.
செல்வந்தர்களுக்கும் வறியோருக்கும் இடையே நிலவும் இடைவெளி ஒவ்வோர் ஆண்டும் கூடிவருவது நமது மனசாட்சியை தட்டி எழுப்பவேண்டும் என்று கூறிய கர்தினால் டர்க்சன் அவர்கள், தனி மனித மாண்பை நிலைநாட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகளை உலகின் பொருளாதார அறிஞர்கள் புரிந்துகொள்வதையும் தன் உரையில் குறிப்பிட்டார்.
அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம் என்ற துறைகளில் கத்தோலிக்கத் திருஅவை உயர்ந்த புலமைப் பெற்றிருக்கவில்லை என்றபோதிலும், மனிதம் என்ற உண்மையில் உன்னத அறிவும், ஆற்றலும் பெற்றுள்ளது என்பதை மறுக்க இயலாது என்று கர்தினால் டர்க்சன் அவர்கள் கூறினார்.
மனிதத்தை வளர்க்க திருஅவை மேற்கொள்ளும் முயற்சிகளில், காரித்தாஸ் அமைப்பினரின் பங்கு மிக முக்கியமானது என்று கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் உரையின் இறுதியில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

8. உரையாடல் ஒன்றே, நம்பிக்கையின் சின்னம் - கர்தினால் Tauran

மே,14,2015. நம்மைச் சுற்றி நிகழும் வன்முறைகள், நெருக்கடிகள் அனைத்தின் மத்தியிலும் உரையாடல் முயற்சிகளை மேற்கொள்வது, நம்பிக்கையின் சின்னமாக விளங்கும் என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மே 13, இப்புதன் முதல், 15, இவ்வெள்ளி முடிய சுவிட்சர்லாந்து நாட்டின், St. Maurice என்ற நகரில் நடைபெறும் ஒரு கூட்டத்தில், பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் Jean Louis Tauran அவர்கள் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
இஸ்லாமிய உரையாடல் பணியில் ஈடுபட்டிருக்கும் ஐரோப்பிய ஆயர்கள் பேரவைகளின் உறுப்பினர்கள், 'ஐரோப்பாவில் இஸ்லாமியருடன் உரையாடல்: நம்பிக்கையின் ஒளி' என்ற தலைப்பில் மேற்கொண்ட ஒரு கலந்துரையாடலில், கர்தினால் Tauran அவர்கள் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள் மேற்கொள்ளும் வன்முறைகளை, பெரும்பான்மையான இஸ்லாமியர் கண்டனம் செய்து வருவது, அம்மதத்தினரோடு நாம் மேற்கொள்ளக்கூடிய உரையாடலுக்கு வழிவகுக்கிறது என்று, கர்தினால் Tauran அவர்கள் சுட்டிக்காட்டினார்.
ஐரோப்பாவின் பல நாடுகளில் Jihadi அடிப்படைவாதக் குழுக்கள் ஊடுருவி வருவதை செய்திகளாகக் கேட்கும் அதே நேரத்தில், அனைத்து இஸ்லாமியரைக் குறித்தும் தேவையற்ற பயத்தை வளர்த்துக் கொள்வது, உரையாடலுக்குப் பெரும் தடையாக அமைகிறது என்று வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

9. துன்புறும் கிறிஸ்தவர்களுக்காக இலங்கையில் உண்ணா நோன்பு

மே,14,2015. ஜூன் 7, ஞாயிறன்று கொண்டாடப்படவிருக்கும் இயேசுவின் திரு உடல், திரு இரத்தத் திருவிழாவன்று, உலகின் பல நாடுகளில் துன்புறும் கிறிஸ்தவர்களுக்காக ஒரு நாள் உண்ணா நோன்பும், செபமும் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை ஆயர்கள் பேரவை அறிவித்துள்ளது.
தன்னையே உன்னதப் பலியாகத் தந்த இயேசுவின் திரு உடல், திரு இரத்தத் திருவிழாவன்று, இரத்தம் சிந்தும் கிறிஸ்துவர்களை எண்ணி செபமும், தவமும் மேற்கொள்வோம் என்று, கூறப்பட்டுள்ள இந்த அறிக்கையில், இலங்கை ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் கையெழுத்திட்டுள்ளார்.
வழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் மக்கள் மீது, குறிப்பாக, குழந்தைகள் மீது வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை அறியும்போது, நாம் மிகுந்த வேதனையுறுகிறோம் என்று ஆயர்கள் இவ்வறிக்கையில் கூறியுள்ளனர்.
வன்முறைகளைச் சந்திக்கும் நாடுகளில் உள்ள அரசுகளும், அந்நாடுகளில் உள்ள நல்மனம் கொண்டோரும் இந்த வன்முறைகளை உடனடியாக முடிவுக்குக் கொணரும் முயற்சிகளில் ஈடுபட தாங்கள் விண்ணப்பிப்பதாக, இலங்கை ஆயர்கள் அறிக்கை கூறுகிறது.
மதத்தின் அடிப்படையில் இலங்கை மக்களும் வன்முறைகளைச் சந்தித்துள்ளனர் என்று குறிப்பிடும் ஆயர்கள், அனைவரும் இணைந்து எழுப்பும், செபங்களும், தவ முயற்சிகளும் இறைவனின் அருளைப் பெற்றுத்தரும் என்று கூறியுள்ளனர்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

10. மரண தண்டனையை எதிர்த்து, பாப்புவா நியூ கினி ஆயர்கள்

மே,14,2015. பாப்புவா நியூ கினி மற்றும் சாலமோன் தீவுகளைச் சேர்ந்த ஆயர்களாகிய நாங்கள், மரண தண்டனை பயன்படுத்தப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று அந்நாட்டு ஆயர்கள் அறிக்கையொன்றை விடுத்துள்ளனர்.
கிறிஸ்தவ நாடு என்று தன்னையே கூறிக்கொள்ளும் எந்த நாட்டிலும், மரண தண்டனை முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும் என்று ஆயர்களின் அறிக்கை வலியுறுத்துகிறது.
ஒரு நாட்டின் அரசு, மரண தண்டனையை அதிகாரப் பூர்வமாக மேற்கொள்ளும்போது, அந்நாட்டு மக்கள், வன்முறையை வன்முறையால் தீர்ப்பதைப் பற்றி தயக்கம் காட்ட மாட்டார்கள் என்று கூறிய ஆயர்கள், நியாயப்படுத்தப்படும் வன்முறைகள், இல்லங்களில், மூடியக் கதவுகளுக்குப் பின் மிக அதிக அளவில் ஏற்படுவதையும் தடுக்க இயலாது என்று கூறினர்.
1991ம் ஆண்டு, பாப்புவா நியூ கினி அரசு, மரண தண்டனையை மீண்டும் சட்டமயமாக்கியதுடன், 2013ம் ஆண்டு, இத்தண்டனை எவ்வகையில் நடத்தப்படலாம் என்பது குறித்தும் சட்டத் திட்டங்களை வெளியிட்டுள்ளது என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
மக்களின் நடத்தையில் மாற்றங்களைக் கொணர்வதற்கும், அவர்களை மீண்டும் மனித சமுதாயத்தில் தகுந்த வழியில் இணைப்பதற்குமே தண்டனைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று கூறும் ஆயர்கள், மரண தண்டனை இந்த மாற்றங்களைக் கொணர்வதற்குப் பதில் மனித உயிரை அழிக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...