Wednesday, 13 May 2015

செய்திகள்-13.05.15

செய்திகள்-13.05.15
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையால் நியமனம் பெற்ற ஔரங்காபாத் புதிய ஆயர்

2. திருத்தந்தையின் ஆசீரோடு, "வறியோருடன், வறியோருக்கென இசை"

3. இயற்கையைக் காக்க செல்வந்தர்களின் முயற்சி என்ன? - திருத்தந்தை

4. இராணுவத்தில் அருள்பணியாற்றுவோருக்கு திருத்தந்தையின் செய்தி

5. உரோம் நகரில் பணியாற்றும் துறவியர் திருத்தந்தையுடன் சந்திப்பு

6. பேச்சு வார்த்தைகள் மட்டுமே அமைதியை உறுதி செய்யும் - கர்தினால் Boutros Rai

7. இளையோர் காணும் ஐரோப்பா கனவு நிஜமல்ல - கானா ஆயர்கள்

8. குடிபெயர்ந்தோர் சட்டங்கள் குறித்த மறு ஆய்வு - அமெரிக்க ஆயர்கள்
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையால் நியமனம் பெற்ற ஔரங்காபாத் புதிய ஆயர்

மே,13,2015. இந்தியாவின் ஔரங்காபாத் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அருள்பணி அம்புரோஸ் ரெபெல்லோ அவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதனன்று நியமனம் செய்தார்.
ஔரங்காபாத் மறைமாவட்டத்தின் ஆயராக இதுவரைப் பணியாற்றிவந்த 77 வயது நிறைந்த ஆயர் எட்வின் கோலாசோ அவர்கள் பணிஓய்வு பெற விரும்பி, சமர்ப்பித்த விண்ணப்பத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்றுக் கொண்டு, அம்மறைமாவட்டத்தின் குருகுல முதல்வராகப் பணியாற்றிய அருள்பணி ரெபெல்லோ அவர்களை, புதிய ஆயராக நியமனம் செய்துள்ளார்.
1949ம் ஆண்டு, பிறந்த அருள்பணி ரெபெல்லோ அவர்கள், நாக்பூர், குருமடத்தில் தன் பயிற்சிகளை முடித்து, 1979ம் ஆண்டு அருள் பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
1979ம் ஆண்டு முதல், 2011ம் ஆண்டு வரை பல்வேறு பங்குத்தளங்களில் பணியாற்றிய அருள்பணி ரெபெல்லோ அவர்கள், 2011ம் ஆண்டு முதல், ஔரங்காபாத் மறைமாவட்டத்தின் சமுதாயப் பணி மையத்தின் இயக்குனராகவும், அம்மறைமாவட்டத்தின் குருகுல முதல்வராகவும் பொறுப்பேற்றார்.
1977ம் ஆண்டு, நாக்பூர் உயர் மறைமாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட ஔரங்காபாத் மறைமாவட்டத்தின் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை, 15,750. 34 பங்குகளை உள்ளடக்கிய இம்மறை மாவட்டத்தில், 45 அருள் பணியாளர்களும், 218 இருபால் துறவியரும் பணியாற்றி வருகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தையின் ஆசீரோடு, "வறியோருடன், வறியோருக்கென இசை"

மே,13,2015. நம்மை இறைவனோடும், ஒருவர் ஒருவரோடும் இணைப்பதற்கு இசை பெரிதும் உதவுகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
வறியோருக்கென ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஓர் இசை நிகழ்ச்சியை முன்னின்று நடத்தும் உறுப்பினர்களை, இப்புதன் காலையில் சந்தித்தத் திருத்தந்தை, இசை நமக்குள் உருவாக்கும் உணர்வுகள், நம்மை எப்போதும் மேன்மையடையச் செய்கின்றன என்று கூறினார்.
மகிழ்வான இசையெனினும், சோகமான இசையெனினும் நமது உள்ளங்களில் இருக்கும் இறுக்கங்களைக் குறைத்து, மனதை இலேசாக மாற்றுகின்றது என்றும், அத்தகைய இசையை ஏற்பாடு செய்துள்ளோரை தான் பாராட்டுவதாகவும் திருத்தந்தை கூறினார். 
"வறியோருடன், வறியோருக்கென இசை" என்ற பெயரில், மே 14, இவ்வியாழனன்று, முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஓர் இசை நிகழ்ச்சியில், வறியோருக்கும், வீடற்றோருக்கும் முதல் இடங்கள் வழங்கப்படும் என்று திருப்பீடம் அறிவித்துள்ளது.
திருத்தந்தையின் தர்மப்பணிகளுக்குப் பொறுப்பாக இருக்கும் பேராயர் Konrad Krajewski அவர்களின் முயற்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த இசை நிகழ்ச்சிக்கு நுழைவுக் கட்டணம் ஏதுமில்லை என்றும், இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வோர், தாங்களாகவே மனமுவந்து அளிக்கும் நன்கொடைகள், திருத்தந்தையின் தர்மப்பணிகளுக்குப் பயன்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. இயற்கையைக் காக்க செல்வந்தர்களின் முயற்சி என்ன? – திருத்தந்தை

மே,13,2015. அனைவருக்கும் தேவையான அளவு உணவு இவ்வுலகில் இருந்தாலும், அதை, அனைவரோடும்  பகிர்ந்துகொள்ளும் ஆவல் நம்மிடையே இல்லை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
மே 12, இச்செவ்வாய் முதல், 17, ஞாயிறு முடிய உரோம் நகரில் நடைபெறும் அனைத்துலகக் காரித்தாஸ் மாநாட்டின் துவக்க நிகழ்வாக, இச்செவ்வாய் மாலை வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் நடைபெற்றத் திருப்பலியில், திருத்தந்தை இவ்வாறு மறையுரை வழங்கினார்.
'ஒரே மனிதக் குடும்பம், படைப்பைப் பேணிக்காப்பது' என்ற தலைப்பில் துவங்கியுள்ள 20வது அனைத்துலகக் காரித்தாஸ் மாநாட்டின் துவக்கப்பலியை தலைமையேற்று நடத்தியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகின் அனைத்து மக்களும் உண்பதற்கு வழி வகைகள் செய்வது நம் அனைவரின் கடமை என்று கூறினார்.
காரித்தாஸ் அமைப்பில் பணியாற்றும் ஒவ்வொருவரும் சமூகப் பணியாற்றுவோர் மட்டுமல்ல, மாறாக, கிறிஸ்துவை உலகிற்கு வெளிப்படுத்தும் அடையாளங்கள் என்று பாராட்டியத் திருத்தந்தை, கிறிஸ்து என்ற அடித்தளத்தை மறந்து கட்டப்படும் பிறரன்புப் பணி அமைப்புக்கள், உண்மையில் அடித்தளமின்றி கட்டப்படும் கட்டங்களைப் போல் இருக்கும் என்று கூறினார்.
பசித்தோருக்கு உணவளிக்கும்போது அது இறைவனுக்கே உணவளிப்பதாகும் என்பதை செல்வந்தர்களுக்கு நாம் நினைவுபடுத்த வேண்டும் என்று கூறியத் திருத்தந்தை, உணவை உருவாக்கும் இயற்கையைக் காப்பாற்ற செல்வந்தர்கள் என்ன முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர் என்ற கேள்வியையும் அவர்களிடம் எழுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பகிர்வு என்ற அடிப்படையில் பீடத்தைச் சுற்றி கூடியிருக்கும் நாம், பகிர்வு இவ்வுலகில் குறைந்து வருவதால், உடலளவிலும், மனதளவிலும் பசித்திருக்கும் மனிதர்களை நினைத்துப் பார்க்கவேண்டும் என்று திருத்தந்தை தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. இராணுவத்தில் அருள்பணியாற்றுவோருக்கு திருத்தந்தையின் செய்தி

மே,13,2015. அமைதியை உறுதி செய்தல், வறியோரை, வலுவற்றோரைக் காத்தல், போன்ற நன்மை விளைவிக்கும் காரணங்களுக்காக இராணுவம் பணியாற்றும்போது, அது உன்னத பணியாக மாறுகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இராணுவத்தில் அருள்பணியாற்றுவோர் இணைந்து, "அமைதி நோக்கி, இராணுவ அருள் பணியாளர்களின் அடையாளமும், பணியும்" என்ற தலைப்பில், மே 11, இத்திங்கள் முதல், மே 15, இவ்வெள்ளி முடிய பாரிஸ் மாநகரில், நடத்திவரும் நான்காவது மாநாட்டிற்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
திருத்தந்தை வழங்கிய இச்செய்தியை, இந்த மாநாட்டைத் தலைமையேற்று நடத்தும், திருப்பீட ஆயர்கள் பேராயத்தின் தலைவர் கர்தினால் Marc Ouellet அவர்களுக்கு, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ளார்.
ஆபத்து நிறைந்த சூழலில் இரவும் பகலும் பணியாற்றிவரும் வீரர்களுக்கு, மன அமைதியையும், நம்பிக்கையையும் தரும் முக்கியப் பணியில், இராணுவ அருள் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று திருத்தந்தை தன் செய்தியில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய உலகில் அமைதியைக் கொணர்வதற்கு திருஅவை மேற்கொண்டு வரும் முயற்சிகள் பலவற்றின் முக்கியதோர் அடையாளமாக இராணுவ அருள் பணியாளர்களின் பணி அமைத்துள்ளது என்று இம்மாநாட்டின் துவக்க உரையை வழங்கிய கர்தினால் Ouelett அவர்கள் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. உரோம் நகரில் பணியாற்றும் துறவியர் திருத்தந்தையுடன் சந்திப்பு

மே,13,2015. நடைபெற்றுவரும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு உலக ஆண்டின் ஒரு முக்கிய நிகழ்வாக, உரோம் நகரில், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வை மேற்கொண்டோரை, மே 16, வருகிற சனிக்கிழமையன்று  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வத்திக்கானில் சந்திப்பார் என்று உரோம் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.
சனிக்கிழமை காலை 11 மணியளவில், முத்திப்பேறு பெற்ற ஆறாம் பவுல் அரங்கத்தில் நடைபெறும் இந்தச் சந்திப்பு இருபகுதிகளாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் பகுதியில், உலகின் பல நாடுகளிலிருந்தும், உரோம் நகர் வந்து பயிலும், அல்லது பணியாற்றும் துறவியர் தங்கள் வாழ்வு குறித்து சாட்சியங்கள் வழங்குவர் என்றும், முதல் பகுதியில் இசை நிகழ்ச்சிகள் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது பகுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அரங்கத்தில் கூடியிருப்போரைச் சந்தித்து, அவர்களில் சிலர் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உரோம் நகரில் வாழும் அர்ப்பணிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,000த்திற்கும் அதிகம் என்றும், இவர்களில் பலர், சமுதாயத்தின் விளிம்புகளில் வாழ்வோருடன் பணிகள் செய்து வருகின்றனர் என்றும் உரோம் மறைமாவட்ட செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. பேச்சு வார்த்தைகள் மட்டுமே அமைதியை உறுதி செய்யும் - கர்தினால் Boutros Rai

மே,13,2015. மத்தியக் கிழக்குப் பகுதியில், பேச்சு வார்த்தைகள் வழி ஒன்றுதான் அமைதியை உறுதி செய்யுமே தவிர, இராணுவ முயற்சிகள் அனைத்தும், ஒன்றுக்குப் பின் ஒன்றாக, போரை வளர்க்கும் என்று மாரனைட் வழிபாட்டுமுறை கத்தோலிக்க முதுபெரும் தந்தை கர்தினால் Bechara Boutros Rai அவர்கள் கூறினார்.
மத்தியக் கிழக்குப் பகுதியில் அமைதிவேண்டி, கர்தினால் Boutros Rai அவர்கள் ஆற்றிய திருப்பலியில், மிக அதிக அளவு வன்முறையை அனுபவித்து வாழும், பாலஸ்தீனம், ஈராக், சிரியா, ஏமன் ஆகிய நாட்டின் மக்கள் அனைவரும் நீடித்த அமைதிக்காக ஒவ்வொரு நாளும் ஏங்கிக் காத்திருக்கின்றனர் என்று தன் மறையுரையில் கூறினார்.
லெபனான் நாடு, மே மாதம் 25ம் தேதிக்குள் புதிய அரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளது என்பதைக் குறிப்பிட்டுப் பேசிய கர்தினால் Boutros Rai அவர்கள், லெபனான் நாட்டின் துயரங்கள் நீங்க ஒரே வழி, அமைதியின் அரசர் கிறிஸ்து தங்கள் உள்ளங்களில் ஆட்சி செய்வதே என்று வலியுறுத்தினார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

7. இளையோர் காணும் ஐரோப்பா கனவு நிஜமல்ல - கானா ஆயர்கள்

மே,13,2015. ஐரோப்பாவில் அடியெடுத்து வைப்பதால் தங்கள் வாழ்வு தானாகவே சுகமாக மாறிவிடும் என்று ஆப்ரிக்க இளையோர் கனவு காண்பதை நிறுத்தவேண்டும் என்று ஆப்ரிக்காவின் கானா நாட்டு ஆயர்கள் கூறியுள்ளனர்.
பல நூறு ஆப்ரிக்க இளையோர், மத்தியத் தரைப் பகுதி பாலைவனங்களிலும், மத்தியத்தரைக் கடலிலும் உயிரிழந்துவரும் அவலத்தை தடுக்க, ஆப்ரிக்க அரசுகள் தீவிர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று காண நாட்டு ஆயர்கள் பேரவையின் அறிக்கை கூறுகிறது.
ஆப்ரிக்க நாடுகள் பலவற்றில் இளையோரின் எண்ணிக்கை கூடிவரும் இவ்வேளையில், அவர்களுக்கு ஏற்ற கல்வி வசதி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை உருவாக்கும் வகையில், ஆப்ரிக்க நாடுகளின் அரசியல் மற்றும் சமுதாய சூழல் மாற்றங்கள் பெறவேண்டும் என்று ஆயர்கள் தங்கள் அறிக்கையில் வலியிறுத்தியுள்ளனர்.
கானா நாடு ஒவ்வோர் ஆண்டும் கடனில் மூழ்கிவருகிறது என்பதைக் குறிப்பிடும் ஆயர்களின் அறிக்கை, ஆப்ரிக்க அரசுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து, அக்கண்டத்தின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்று விண்ணப்பித்துள்ளது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

8. குடிபெயர்ந்தோர் சட்டங்கள் குறித்த மறு ஆய்வு - அமெரிக்க ஆயர்கள்

மே,13,2015. அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் தகுந்த அனுமதியின்றி நுழையும் மனிதர்களை, குறிப்பாக, வலுவிழந்த குழுவினரை, குற்றவாளிகளைப் போல நடத்தும் போக்கினை அரசு கைவிடவேண்டும் என்று அமெரிக்க ஆயர்கள் பேரவை கூறியுள்ளது.
சரியான அனுமதியின்றி நாட்டிற்குள் நுழைவோர் மீது அமெரிக்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஆய்வு செய்து, அமெரிக்க ஆயர்கள் பேரவையின் குடிபெயர்ந்தோர் பிரிவு, மே 11, இத்திங்களன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அனுமதியின்றி நாட்டிற்குள் நுழைவோரை உடனடியாகக் கைது செய்வது, சரியான வழக்கு விசாரணை ஏதுமின்றி அவர்களைச் சிறையில் அடைப்பது போன்ற நடவடிக்கைகளை அரசு மறு பரிசீலனை செய்யவேண்டும் என்று அமெரிக்க ஆயர்கள் பேரவையின் குடிபெயர்ந்தோர் பிரிவின் தலைவர், ஆயர்  Eusebio Elizondo அவர்கள் கூறினார்.
"மனித மாண்பை விடுதலைச் செய்வது: அமெரிக்க அரசின் குடிபெயர்ந்தோர் சட்டங்கள் குறித்த மறு ஆய்வு" என்ற தலைப்பில் அமெரிக்க ஆயர்கள் இத்திங்களன்று வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் நுழைவோர் அனைவரும் மனித மாண்புடன் நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...