Wednesday, 20 May 2015

செய்திகள்-20.05.15

செய்திகள்-20.05.15
------------------------------------------------------------------------------------------------------

1. நல்லாயன் கிறிஸ்துவைப்போல வாழ்ந்த பேராயர் ரொமேரோ

2. ரொமேரோ விழாவில் பங்கேற்கும் 12 நாடுகளின் அரசுத் தலைவர்கள்

3. 'புதியக் காலநிலை பொருளாதாரம்' கருத்தரங்கிற்கு கர்தினால் பரோலின் செய்தி

4. பேராசையின் அடிப்படையில் உருவாகும் பொருளாதாரம், ஆபத்து

5. 'புதியக் காலநிலை பொருளாதாரம்' கருத்தரங்கில் கர்தினால் வேர்ல்

6. உலக அரசுகளிடையே வெளிப்படையான கூட்டுறவு முயற்சிகள் தேவை

7. புலம்பெயர்ந்தோர் பிரச்சனைக்கு அடித்தளம், வறுமையும், போரும்

8. ரொஹிங்கியா மக்களில் 3000 பேருக்கு, பிலிப்பின்ஸ் புகலிடம்

9. 'பாலஸ்தீன அரசு', வத்திக்கான் ஒப்பந்தம் குறித்து அரேபிய அவை
------------------------------------------------------------------------------------------------------

1. நல்லாயன் கிறிஸ்துவைப்போல வாழ்ந்த பேராயர் ரொமேரோ

மே,20,2015. நல்லாயனாம் கிறிஸ்துவைப்போல பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்களும் மென்மையான இதயம் கொண்டவராய், மக்களின் உண்மையான ஆயராகவும், மறைசாட்சியாகவும் வாழ்ந்தார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய வார்த்தைகள் மிகவும் பொருத்தமானவை என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மே 23, வருகிற சனிக்கிழமையன்று எல் சால்வதோர் நாட்டின் இறையடியார், பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்கள் முத்திப்பேறு பெற்றவராக உயர்த்தப்படும் நிகழ்வையொட்டி, வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த, புனிதர்படி நிலைகள் திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ அவர்கள் இவ்வாறு கூறினார்.
பேராயர் ரொமேரோ அவர்களின் நண்பராகவும், பல்கழைக்கழகப் பேராசியராகவும் இருந்த இயேசு சபை அருள் பணியாளர் ருத்திலியோ கிராந்தே (Rutilio Grande) அவர்கள், தன் பேராசியர் பணியைத் துறந்து, Campesinos என்றழைக்கப்பட்ட விவசாயக் கூலிகள் மத்தியில் உழைக்கச் சென்றதும், அவர் மேற்கொண்ட அப்பணியின் காரணமாக அவர் 1977ம் ஆண்டு கொல்லப்பட்டதும், இறையடியார் ரொமேரோ அவர்கள் வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது என்று கர்தினால் அமாத்தோ அவர்கள் தன் பேட்டியில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.
வறியோரை மையப்படுத்தி, பேராயர் ரொமேரோ அவர்கள் உருவாக்கிய எண்ணங்கள், அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் உருவானவை அல்ல, மாறாக, அவை நற்செய்தியின் அடிப்படையில் உருவானவை என்று கர்தினால் அமாத்தோ அவர்கள் தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. ரொமேரோ விழாவில் பங்கேற்கும் 12 நாடுகளின் அரசுத் தலைவர்கள்

மே,20,2015. மே 23, வருகிற சனிக்கிழமையன்று எல் சால்வதோர் நாட்டின் இறையடியார், பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்கள் முத்திப்பேறு பெற்றவராக உயர்த்தப்படும் நிகழ்வுக்கு அந்நாட்டின் தலைநகர் சான் சால்வதோர் முழுவீச்சில் தயாராகி வருகிறது என்று அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
இந்த முக்கிய நிகழ்வையொட்டி, சான் சால்வதோரில் 2,50,000த்திற்கும் அதிகமான மக்கள் கூடிவருவர் என்றும், 12 நாடுகளின் அரசுத் தலைவர்கள் பங்கேற்கவிருக்கும் இந்நிகழ்ச்சிக்கு பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
எல் சால்வதோர் நாட்டின் அனைத்து பங்குகளும், பல்வேறு உலக கத்தோலிக்க அமைப்புக்களும் இணைந்து, மே 22ம் தேதி, வெள்ளியன்று சான் சால்வதோர் பேராலயத்திற்கு திருப்பயணம் மேற்கொள்வர் என்றும் கூறப்பட்டுள்ளது.
பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்கள் முத்திப்பேறு பெற்றவராக உயர்த்தப்படும் நிகழ்வையொட்டி, எல் சால்வதோர் பள்ளிகளில் அவரைப் பற்றிய கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன என்று, சான் சால்வதோர் பேராயர் ஹோசே லூயிஸ் எஸ்கோபார் (José Luis Escobar) அவர்கள் கூறினார்.
பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்கள் உயிரோடு இருந்தபோது தன் கருத்துக்களை Y.S.A.X. என்ற வானொலி வழியே பரப்பி வந்தார். பேராயரின் கருத்துக்களை விரும்பாத சக்திகள், இந்த வானொலி மீது குண்டுத் தாக்குதல் நடத்தின. அரசின் அடக்குமுறையால் தடைப்பட்டுப் போன Y.S.A.X.. என்ற வானொலியை, எல் சால்வதோர் தலத்திருவை, மீண்டும் துவக்கும் திட்டங்களை வகுத்துவருகிறது என்று, Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

3. 'புதியக் காலநிலை பொருளாதாரம்' கருத்தரங்கிற்கு கர்தினால் பரோலின் செய்தி

மே,20,2015. இன்றைய, மற்றும், நாளைய தலைமுறையினரைக் காப்பதற்கு, பொருளாதார முன்னேற்றமும், இருப்பதைக் கொண்டு மேற்கொள்ளப்படும் வளர்ச்சியும் இணைந்து செல்லக்கூடிய இரு கூறுகளாக இருக்கவேண்டும் வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மே 20, இப்புதனன்று, உரோம் நகரின் திருச்சிலுவை பாப்பிறைப் பல்கழைக் கழகத்தில் 'புதியக் காலநிலை பொருளாதாரம்' என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கிற்கு, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில், இவ்வாறு கூறியுள்ளார்.
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் வெளியிட்ட காரித்தாஸ் இன் வெரித்தாத்தே (Caritas in Veritate) என்ற சுற்றுமடலில், குறுகிய காலத்தில் இலாபம் திரட்டும் வழிமுறைகளை மறு ஆய்வு செய்யவேண்டும் என்றும், இன்றைய உலகின் முன்னேற்றக் கொள்கைகள், மனித குலத்தின் நிலையான நன்மைக்கு ஆபத்தானவை என்றும் கூறியுள்ள வார்த்தைகளை, கர்தினால் பரோலின் அவர்கள் தன் செய்தியில் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பெருநாட்டின் தலைநகர் லீமாவில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கிற்கு, சுற்றுச்சூழலைப் பற்றி சரியான முடிவுகள் எடுப்பதற்கு இனி காலதாமதம் செய்வது ஆபத்து என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பிய செய்தியின் வார்த்தைகளையும் கர்தினால் பரோலின் அவர்கள் தன் செய்தியில் மேற்கோளாகப் பயன்படுத்தியுள்ளார்.
நடைபெறும் கருத்தரங்கு சிறப்பாக அமைய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செபம் நிறைந்த வாழ்த்துக்களையும் தான் அனுப்புவதாக, கர்தினால் பரோலின் அவர்கள் தன் செய்தியின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி

4. பேராசையின் அடிப்படையில் உருவாகும் பொருளாதாரம், ஆபத்து

மே,20,2015. உலகில் பல விடயங்கள் மிகத் துரிதமாக மாறிவருகின்றன; ஆயினும், மனித மனதில் எழும் வியப்பு, நன்றி போன்ற உணர்வுகள் மாறுவது இல்லை என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
'புதியக் காலநிலை பொருளாதாரம்' என்ற தலைப்பில், மே 20, இப்புதனன்று உரோம் நகரின் திருச்சிலுவை பாப்பிறை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் துவக்க உரையாற்றிய திருப்பீட நீதி அமைதி அவைத் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், இறைவனின் படைப்பை வியந்து போற்றும் அதே வேளையில், அதனைப் பேணிக் காப்பதும் மனிதர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஒரு முக்கியப் பொறுப்பு என்று கூறினார்.
நன்றி உணர்வும், கடமை உணர்வும் மனிதர்களிடம் இருக்கவேண்டிய பண்புகள் என்பதை கத்தோலிக்கத் திருஅவை தன் சமுதாயப் படிப்பினைகளில் வலியுறுத்தியுள்ளன என்று கூறிய கர்தினால் டர்க்சன் அவர்கள், நல்ல உற்பத்திப் பொருள்கள், நல்ல வேலை, நல்ல செல்வம் என்ற மூன்று எண்ணங்களில், தன் உரையை வழங்கினார்.
ஒரு கொடையாக நமக்கு வழங்கப்பட்டுள்ள இந்தப் பூமிக் கோளத்தின் இயற்கை வளங்களை தேவைக்கு அதிகமாக உறுஞ்சி, நமது உற்பத்திப் பொருள்களைப் பெருக்கும்போது, இறைவனின் படைப்பை நாம் சீரழிக்கிறோம் என்ற எச்சரிக்கையை கர்தினால் டர்க்சன் அவர்கள் முன்வைத்தார்.
சுயநலம், பேராசை என்ற அடிப்படையில் உருவாக்கப்படும் பொருளாதாரம், சமுதாயச் சமன்பாட்டை சீர்குலைத்து, நாம் வளர்க்க விரும்பும் 'பசுமைப் பொருளாதாரத்தை'யும் அழிக்கிறது என்று கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.
ஒரு சில பன்னாட்டு நிறுவனங்கள், மறுசுழற்சி செய்யப்படக் கூடிய சக்தியை தங்கள் அலுவலகங்களில் பயன்படுத்துவதற்கு தன் மகிழ்வை வெளியிட்ட கர்தினால் டர்க்சன் அவர்கள், இத்தகையப் பாதையை அனைத்து உலக நிறுவனங்களும் தேர்ந்தால், வளமையான எதிர்காலம் அனைத்து மக்களுக்கும், படைப்பு அனைத்திற்கும் உறுதி செய்யப்படும் என்று தன் உரையின் இறுதியில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. 'புதியக் காலநிலை பொருளாதாரம்' கருத்தரங்கில் கர்தினால் வேர்ல்

மே,20,2015. படைப்பு அனைத்தையும் மனிதர்கள் ஆளட்டும் என்று இறைவன் தொடக்க நூலில் கூறியதை நாம் சரிவரப் புரிதுகொள்ளவேண்டும் என்று, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் கூறிவருகின்றனர் என்று வாஷிங்டன் பேராயர், கர்தினால் டோனல்ட் வேர்ல் (Donald Wuerl) அவர்கள் கூறினார்.
'புதியக் காலநிலை பொருளாதாரம்' என்ற தலைப்பில், மே 20, இப்புதனன்று உரோம் நகரில் நடைபெற்ற கருத்தரங்கின் ஒரு பகுதியாக நடைபெற்ற வட்டமேசை விவாதத்தில் கலந்துகொண்ட கர்தினால் வேர்ல் அவர்கள், படைப்பின் மீது மனிதர்கள் காட்டவேண்டிய பொறுப்புணர்வைக் குறித்துப் பேசினார்.
உலக வரலாற்றில் நிகழும் மாற்றங்களை மனதில் கொண்டு, திருஅவையின் படிப்பினைகளும், திருத்தந்தையரின் சுற்றுமடல்களும் வெளிவந்தவண்ணம் உள்ளன என்று கூறிய கர்தினால் வேர்ல் அவர்கள், தன் கருத்தை வலியுறுத்த, திருத்தந்தை புனித 23ம் யோவான், திருத்தந்தை முத்திப்பேறு பெற்ற 6ம் பவுல், திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் ஆகியோர் விடுத்த மடல்களையும் மேற்கோளாகக் காட்டினார்.
உலகப் பொருளாதாரம், அறிவியல், அரசியல் என்ற துறைகளில் திருஅவை காட்டிவரும் ஈடுபாடு, தனிமனிதரின் மாண்பு, இயற்கை பாதுகாப்பு, என்ற இரு முக்கிய விழுமியங்களின் அடிப்படையில் வெளிப்படுகிறது என்று கர்தினால் வேர்ல் அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. உலக அரசுகளிடையே வெளிப்படையான கூட்டுறவு முயற்சிகள் தேவை

மே,20,2015. நடைபெறும் 2015ம் ஆண்டு, உலகச் சமுதாயம் அடைந்துள்ள மில்லேன்னிய இலக்குகளை தொடர்ந்து பாதுகாக்க, உலக அரசுகளிடையே இன்னும், வெளிப்படையான, தெளிவான கூட்டுறவு முயற்சிகள் தேவை என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
"2015ம் ஆண்டையும் தாண்டி, உலக அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள்" என்ற தலைப்பில், மே 19, இச்செவ்வாயன்று நியூ யார்க் நகரில் ஐ.நா. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், ஐ.நா. அவை கூட்டங்களில் திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்கும் பேராயர் பெர்னதித்தோ அவுசா (Bernardito Auza) அவர்கள் உரையாற்றியபோது, இவ்வாறு கூறினார்.
உலக அரசுகளிடையே கூட்டுறவு முயற்சிகள் இடம்பெறுவதற்கு முக்கியத் தேவை, இந்த முயற்சிகளை அரசுகள், எவ்வித கட்டாயமும் இன்றி, முன்வந்து மேற்கொள்ளவேண்டும் என்று பேராயர் அவுசா அவர்கள் எடுத்துரைத்தார்.
இந்தக் கூட்டுறவு முயற்சியில், வளரும் நாடுகளின் அவசரத் தேவைகளும், அடிப்படைத் தேவைகளும் முன்னிலை வகிக்கவேண்டும் என்ற வேண்டுகோளையும் பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் முன்வைத்தார்.
இந்த முயற்சிகளின் முடிவுகளை அளக்கும்போது, மனிதர்களின், குறிப்பாக வறியோரின் ஒட்டுமொத்த நன்மை, என்ற அளவுகோல் பயன்படுத்தப்படவேண்டும் என்றும் பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் பரிந்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. புலம்பெயர்ந்தோர் பிரச்சனைக்கு அடித்தளம், வறுமையும், போரும்

மே,20,2015. வறுமை, குடிபெயர்ந்தொரை உருவாக்குகிறது; போர், புலம்பெயர்ந்தோரை உருவாக்குகிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
குடிபெயர்ந்தோர் மற்றும் பயணிகள் மேய்ப்புப்பணி திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் அந்தோனியோ மரிய வேலியோ அவர்கள் ஆசிய செய்திக்கு அளித்தப் பேட்டியொன்றில், புலம்பெயர்ந்தோர் பிரச்சனையை ஐரோப்பிய ஒன்றியம் எவ்விதம் அணுகுகிறது என்பது குறித்து தன் கருத்துக்களை வெளியிட்டார்.
அண்மைய மாதங்களில் மத்தியத் தரைக்கடல் பகுதியில் பெருகிவரும் புலம்பெயர்ந்தோர் பிரச்சனைக்கு ஐரோப்பிய ஒன்றியம் மூன்று நாட்களுக்கு முன் வழங்கிய ஒரு தீர்வு, பல ஐரோப்பிய நாடுகளால் முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று கர்தினால் வேலியோ அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.
கத்தோலிக்கத் தன்னார்வத் தொண்டர்கள் உட்பட உலக அமைப்புக்கள் பல புலம்பெயர்ந்தோரின் பிரச்சனைகளைத் தீர்க்க முயன்றுவந்தாலும், அரசுகள் எடுக்கும் முடிவே, இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வைக் கொணர முடியும் என்று கர்தினால் வேலியோ அவர்கள் வலியுறுத்தினார்.
புலம்பெயர்ந்தோர் பிரச்சனைக்கு அடித்தளமாக விளங்குவது, பல நாடுகளில் காணப்படும் வறுமையும், போர்ச்சூழலும் என்று சுட்டிக்காட்டிய கர்தினால் வேலியோ அவர்கள், செல்வம் மிகுந்த நாடுகள், வளரும் நாடுகளில் இன்னும் அதிக முதலீடுகளைச் செய்து, மதிப்புள்ள வேலைகளை அங்கு உருவாக்கும்போதுபுலம்பெயர்ந்தோர் பிரச்சனை ஓரளவாகிலும் தீரும் என்று கர்தினால் வேலியோ அவர்கள் கருத்து வெளியிட்டார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

8. ரொஹிங்கியா மக்களில் 3000 பேருக்கு, பிலிப்பின்ஸ் புகலிடம்

மே,20,2015. மியான்மார், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்துள்ள ரொஹிங்கியா (Rohingya) இன மக்களில் 3000 பேருக்கு, பிலிப்பின்ஸ் அரசும், அந்நாட்டுத் தலத்திருஅவையும் புகலிடம் கொடுக்கத் தீர்மானித்துள்ளன.
உள்நாட்டு மோதல்கள் காரணமாக, தங்கள் நிலங்களையும், குடியிருப்புக்களையும் விட்டுத் துரத்தப்பட்டுள்ள ரொஹிங்கியா இன மக்களை வரவேற்பது பிலிப்பின்ஸ் நாட்டின் கடமை என்று, அந்நாட்டு தொடர்புத் துறை அமைச்சர், ஹெர்மினியொ கொலோமா (Herminio Coloma) அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
துரத்தப்பட்டுள்ள இம்மக்களில் பலர் இஸ்லாமியர் என்ற எதார்த்தம், இவர்களுக்குப் புகலிடம் தரும் எண்ணத்தை எவ்வகையிலும் பாதிக்கவில்லை என்று கூறிய, பிலிப்பின்ஸ் பாப்பிறை மறைபரப்புப் பணி கழகத்தின் இயக்குனர் அருள்பணி சாக்ரடீஸ் மேசியோனா (Socrates Mesiona) அவர்கள், பிலிப்பின்ஸ் அரசு எடுத்துள்ள இந்த மனிதாபிமான முடிவுக்குப் பாராட்டு தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக கடலில் தத்தளித்து வரும் இம்மக்களை, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகள் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால், பிலிப்பின்ஸ் நாடு இந்த அவசரகால முடிவை எடுத்துள்ளது என்று Zenit கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.
1970களில் வியட்நாம் போர் நிகழ்ந்த வேளையில், "படகு மக்கள்" என்று அழைக்கப்பட்ட வியட்நாம் அகதிகளை, பிலிப்பின்ஸ் நாடு வரவேற்று புகலிடம் தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : ZENIT / வத்திக்கான் வானொலி

9. 'பாலஸ்தீன அரசு', வத்திக்கான் ஒப்பந்தம் குறித்து அரேபிய அவை

மே,20,2015. பாலஸ்தீனாவை ஒரு நாடு என்று வத்திக்கான் ஏற்றுக் கொண்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒரு முடிவு என்று, அரேபிய நாடுகள் ஒன்றிய அவையின் பொதுச் செயலர், நபில் எலராபி (Nabil Elaraby) அவர்கள் கூறியுள்ளார்.
வத்திக்கான் அறிவித்துள்ள இந்த முடிவினால், பாலஸ்தீனிய மக்கள் இதுவரைப் பெறாமல் தவித்த உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்படும் என்று தான் நம்புவதாக எலராபி அவர்கள் Fides செய்திக்கு அளித்த குறிப்பில் கூறியுள்ளார்.
வத்திக்கான் காட்டியுள்ள இந்த வழியை இன்னும் பல நாடுகள் பின்பற்றி, பாலஸ்தீன நாட்டை உலக அரங்கில் உரிமைகளும், மதிப்பும் பெற்ற ஒரு நாடாக மாற்றும் என்ற தன் நம்பிக்கையை, அரேபிய நாடுகள் ஒன்றிய அவையின் பொதுச் செயலர், எலராபி அவர்கள் வெளியிட்டார்.
பாலஸ்தீனாவை ஒரு நாடு என்று அறிவித்து, 2012ம் ஆண்டு, ஐ.நா. பொது அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து 'பாலஸ்தீன அரசு' என்ற வார்த்தைகளை வத்திக்கான் பயன்படுத்தி வந்துள்ளது என்று Fides செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...