Saturday, 23 May 2015

செய்திகள்-22.05.15

செய்திகள்-22.05.15
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை இயேசுவின் கூரிய பார்வை நம் இதயங்களை மாற்றுவதாக

2. பேராயர் ரொமேரோ, அருள்சகோதரி ஐரின் முத்திப்பேறு பட்டம்

3. தொழிற்சாலை உரிமையாளர்கள் பூர்வீக இனத்தவரின் வளர்ச்சிக்கு தடை

4. நேபாளத்தில், கத்தோலிக்கத் திருஅவையின் தொடர் பிறரன்புப் பணிகள்

5. தேர்தல் நடைமுறைகளை திருஅவை ஆதரிக்காது, புருண்டி ஆயர்கள்

6. சிறாரை அச்சுறுத்தும் ஆண்டு 2015, ஐ.நா. எச்சரிக்கை

7. உலகளாவிய கலாச்சாரப் பன்மைத்தன்மைக்கு அச்சுறுத்தல்

8. வளர்ந்த நாடுகளில் ஏழை-பணக்காரர் இடைவெளி அதிகரிப்பு 

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை இயேசுவின் கூரிய பார்வை நம் இதயங்களை மாற்றுவதாக

மே,22,2015. இயேசு நம்மை உற்று நோக்குமாறும், நம் பாவங்களுக்காக நாம் மனம் வருந்தவும், நம் இதயங்கள் மாற்றம் அடையவும் நாம் என்ன செய்ய வேண்டும் என்று இயேசு கூறுமாறு அவரிடம் கேட்கவும் வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
ஓர் அழைப்பால், மன்னிப்பால் அல்லது ஒரு பணியால் இயேசு நம்மை கூர்ந்து  பார்க்கிறாரா? என்று நாம் கவனிக்க வேண்டுமென்று, இவ்வெள்ளி காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை.
இந்நாளைய திருப்பலி வாசகங்களை மையப்படுத்தி மறையுரை வழங்கிய திருத்தந்தை, இயேசு, திருத்தூதர் பேதுருவை, தேர்வு, மன்னிப்பு, பணி ஆகிய மூன்று விதங்களில் உற்றுப் பார்த்தார் என்று சொல்லி, அவை பற்றி விளக்கினார்.
மெசியாவைக் கண்டோம் என திருத்தூதர் ஆண்ட்ரூ தனது சகோதரர் பேதுருவிடம் சொல்லி அவரை இயேசுவைப் பார்ப்பதற்கு அழைத்துச் சென்றார், அப்போது இயேசு பேதுருவை அழைத்தார், இது முதல் பார்வை என்றார் திருத்தந்தை.
இயேசு சிலுவைப்பாடுகள் அனுபவிப்பதற்கு முன்னர் பேதுரு, இயேசுவைத் தெரியாது என மூன்று முறை மறுதலித்தார், அப்போதைய இயேசுவின் பார்வை மன்னிப்பு என்ற திருத்தந்தை, இயேசு உயிர்த்த பின்னர், நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா என மூன்று முறை பேதுருவிடம் கேட்டு அவரிடம் பணியை ஒப்படைத்தார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
எத்தகைய பார்வையை இயேசு இன்று என்மீது செலுத்துகிறார், இயேசு என்னை எப்படி உற்று நோக்குகிறார், அழைப்போடா, மன்னிப்போடா அல்லது பணியோடா என்று நாமும் சிந்திப்போம் எனக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இயேசு உருவாக்கிய பாதையில் நாம் அனைவரும் இயேசுவால் கூர்ந்து பார்க்கப்படுகிறோம் என்றும் கூறினார்.
இயேசு நம்மிடம் எதையோ கேட்கிறார், ஏதோ ஒன்றிக்காக நம்மை மன்னிக்கிறார் மற்றும் நமக்குப் பணியையும் கொடுக்கிறார், இயேசு இத்திருப்பலிப் பீடத்தில் வருகிறார், ஆண்டவரே, நீர் இங்கே எம் மத்தியில் இருக்கிறீர், உமது பார்வையை என்மீது வையும், நான் என்ன செய்ய வேண்டுமென்று சொல்லும், நான் என் தவறுகளுக்காக எப்படி பிராயச்சித்தம் செய்ய வேண்டுமென்று கூறும் எனக் கேட்போம் என்று தனது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், "ஆண்டவரே, துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்கு உமது தூய ஆவியாரை அனுப்பி அவர்களுக்கு ஆறுதலையும் சக்தியையும் அளித்தருளும் எனச் செபிப்போம்" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Twitter செய்தியாக, ஒன்பது மொழிகளில் இவ்வெள்ளியன்று வெளியானது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. பேராயர் ரொமேரோ, அருள்சகோதரி ஐரின் முத்திப்பேறு பட்டம்

மே,22,2015. இறையடியார்கள் பேராயர் ஆஸ்கர் ரொமேரோ, ஐரின் ஸ்தெஃபனி, ஆகிய இருவரும் மே 23, இச்சனிக்கிழமையன்று அவரவர் பணித்தளங்களில் அருளாளர்கள் நிலைக்கு உயர்த்தப்படவுள்ளனர்.
இத்தாலியரான அருள்சகோதரி Irene Stefani அவர்கள், தனது 20வது வயதில் தூரின் கொன்சலாத்தா மறைபோதக சபையில் சேர்ந்து Irene Stefani என்ற பெயரையும் ஏற்றார்.
1914ம் ஆண்டில் அச்சபையில் இறுதி வார்த்தைப்பாடுகளை எடுத்து, கென்யாவின் Mombasaவுக்குக் கப்பலில் புறப்பட்டார். ஈராண்டுகள் Nyeriல் தங்கி Kikuyu மொழியைக் கற்றார். அச்சமயத்தில் கென்யா, டான்சானியா ஆகிய இரு ஆப்ரிக்க நாடுகளிலும் முதல் உலகப் போரில் காயமடைந்தவர்கள் மற்றும் பலியானவர்களுக்கு உதவினார் அருள்சகோதரி Irene. இவர் தனது 39வது வயதில் கொள்ளை நோயால் தாக்கப்பட்டு இறந்தார்.
மறைசாட்சியான பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்கள் மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான எல் சால்வதோரின் Ciudad Barriosல் 1917ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி பிறந்தார். 
இவர் தனது 13வது வயதில் சான் சால்வதோர் குருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். 1977ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி சான் சால்வதோர் உயர்மறைமாவட்டத்தின் நான்காம் பேராயராக நியமிக்கப்பட்டார். எல் சால்வதோர் நாட்டில் 1980களில் உள்நாட்டுப் போர் நடைபெற்ற சமயத்தில் மனித உரிமை மீறல்களைக் கடுமையாய் இவர் கண்டித்தார். ஏழைகளுக்காகக் குரல் எழுப்பினார். இதனால் 1980ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது வலது சாரி மரணப் படைகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார் பேராயர் ரொமேரோ.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. தொழிற்சாலை உரிமையாளர்கள் பூர்வீக இனத்தவரின் வளர்ச்சிக்கு தடை

மே,22,2015. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் பூர்வீக இன மக்கள் வாழும் பகுதிகளில் இடம்பெறும் சுரங்க வேலைகளும், அதோடு தொடர்புடைய தொழிற்சாலைகளும் மக்கள் தொடர்ந்து புலம் பெயர்வதற்கும், அவர்களின் வறுமைக்கும் காரணமாகியுள்ளன என்று அம்மாநிலத்தின் திருஅவைத் தலைவர்கள் கூறினர்.
ஒடிசா தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் வளர்ச்சி ஆணையம் Jharsuguda வில் இவ்வாரத்தில் நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்ட திருஅவைத் தலைவர்கள் இவ்வாறு கூறினர்.
இக்கருத்தரங்கில் உரையாற்றிய சம்பல்பூர் ஆயர் Niranjan Sual Singh அவர்கள், சமுதாயத்தில் நீதி, அமைதி மற்றும் மாண்பைக் கொண்டுவர வேண்டுமெனில், சுரங்க வேலைகள் நடக்கும் சூழல்கள் குறித்து திருஅவை ஆய்வு நடத்துவது அவசியம் எனவும் கூறினார்.
வளர்ச்சி என்ற பெயரில் பூர்வீக இன மக்கள் புலம் பெயரும்போது, அவர்களின் கலாச்சாரம், வரலாறு மற்றும் தனித்துவம் அழிக்கப்படுகின்றன என்று இக்கருத்தரங்கில் சுட்டிக்காட்டிய, ஜார்க்கண்ட் மாநில சமூக ஆர்வலர் Dayamani Barla அவர்கள், இந்நிலையில் நம் சொந்தப் பூமியில் படைவீரர்கள் போன்று வாழ்கிறோம் என்று கூறினார்.
பூர்வீக இன மக்களின் மனித உரிமைகள், பூர்வீக இன உரிமைகள் மற்றும் நீதி கிடைப்பதற்குப் போராட வேண்டியது திருஅவையின் பொறுப்பும் கடமையும் எனவும் வலியுறுத்தினார் Barla.

ஆதாரம் : CBCI / வத்திக்கான் வானொலி

4. நேபாளத்தில், கத்தோலிக்கத் திருஅவையின் தொடர் பிறரன்புப் பணிகள்

மே,22,2015. கடும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்தில், குறிப்பாக, உள்நாட்டுப் பகுதிகளில் கத்தோலிக்கத் திருஅவையின் பிறரன்புப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
இப்பணிகள் குறித்து பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய நேபாள அப்போஸ்தலிக்க முதன்மை குரு Silas Bogati அவர்கள், இப்பணிகளில் ஈடுபட்டுள்ள திருஅவைப் பணியாளர்கள் அனைவருடன் இணைந்து, அண்மையில் கூட்டம் நடத்தி, இப்பணிகளை மேலும் சிறப்பாக ஒருங்கிணைத்து ஆற்றுவது குறித்து கலந்துரையாடியதாகத் தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து பலர் வந்து உதவுகின்றனர் என்றுரைத்த அருள்பணியாளர் Bogati அவர்கள், பன்னாட்டு உதவிகளைக் கொண்டு காரித்தாஸ் நிறுவனம் பல கிராமங்களுக்கு உதவி வருகின்றது என்று தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 25ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8,631 பேர் இறந்துள்ளனர் மற்றும் 21,838 பேர் காயமடைந்துள்ளனர். 4,62,646 வீடுகள் சேதமடைந்துள்ளன. 106 வெளிநாட்டவர் உட்பட காணாமல்போயுள்ள 346 பேரைத் தேடும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருவதாக நேபாள உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

5. தேர்தல் நடைமுறைகளை திருஅவை ஆதரிக்காது, புருண்டி ஆயர்கள்

மே,22,2015. புருண்டி நாட்டுத் தலைநகர் புஜூம்புராவில் பதட்டநிலைகள் உச்சகட்டத்தில் உள்ள இவ்வேளையில், அந்நாட்டில் பொதுத்தேர்தல் நடந்தால், அது நியாயமாக, ஒளிவுமறைவில்லாமல், அமைதியான முறையில் நடைபெற வாய்ப்பில்லை என அந்நாட்டு ஆயர்கள் கூறியுள்ளனர்.
ஆப்ரிக்க நாடாகிய புருண்டியின் தற்போதைய நிலவரம் குறித்து பீதெஸ் செய்தி நிறுவனத்திற்குத் தகவல் அனுப்பியுள்ள ஆயர்கள், நாட்டில் பாதுகாப்பும், சுதந்திரமும் உறுதி செய்யப்படுமாறு அரசை வலுறுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
இம்மாதம் 26ம் தேதி நடைபெறவிருந்த சட்டமன்ற மற்றும் பஞ்சாயத்துத் தேர்தல்கள் வருகிற ஜூன் 5ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. அதோடு அரசுத்தலைவர் தேர்தல் ஜூன் 26ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசுத்தலைவர் Pierre Nkurunziza அவர்கள் மூன்றாவது முறையாக பதவியில் அமருவதற்காக நடைபெறவுள்ள தேர்தலை எதிர்த்து அந்நாட்டில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

6. சிறாரை அச்சுறுத்தும் ஆண்டு 2015, ஐ.நா. எச்சரிக்கை

மே,22,2015. அவசரகால நெருக்கடிச் சூழல்களில் வாழும் சிறாரின் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டும் அளவில் உள்ளதால், அச்சூழல்களில் வாழ்கின்ற இலட்சக்கணக்கான சிறாருக்கு மனிதாபிமான நிதி உதவிகள் தேவைப்படுகின்றன என்று, உலகக் கல்வி குறித்த ஐ.நா. சிறப்புத் தூதர் அறிவித்தார்.
2015ம் ஆண்டு சிறாருக்கு அச்சத்தையூட்டும் ஆண்டாக இருக்கின்றது என்றும், 1945ம் ஆண்டுக்குப் பின்னர், புலம்பெயர்ந்துள்ள சிறாரின் எண்ணிக்கை, இந்த 2015ம் ஆண்டில்  மிக அதிகமாக உள்ளது என்றும் உரைத்த ஐ.நா. சிறப்புத் தூதர் Gordon Brown அவர்கள், பிரச்சனைகளை எதிர்நோக்கும் பகுதிகளுக்கு பள்ளிகள் உதவுமாறு கேட்டுள்ளார்.
போர்கள் இடம்பெறும் சிரியா, துருக்கி, லெபனான், ஜோர்டன், ஈராக், புருண்டி, தென் சூடான், வட நைஜீரியா மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளம் ஆகிய இடங்களில் பாதிக்கப்படும் சிறாரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்றும் செய்தியாளர்களிடம் கூறினார் Gordon Brown.
உலகில் நாட்டுக்குள்ளே புலம்பெயர்ந்துள்ள 3 கோடியே 80 இலட்சம் பேரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சிறார். அதேபோல், உலகின் 1 கோடியே 67 இலட்சம் புலம்பெயர்ந்துள்ள மக்களில் சிறாரும் உள்ளனர் என்ற புள்ளி விபரங்களையும் குறிப்பிட்டார் Gordon Brown.
அதோடு ஆண்டுதோறும், 8 இலட்சத்து 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறார் மனித வர்த்தகத்துக்கு பலியாகின்றனர். 86 இலட்சம் சிறார் அடிமைமுறைக்கு உட்படுத்தப்படுகின்றனர். 50 இலட்சம் சிறுமிகள் 15 வயதை எட்டும் முன்னரே திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர். ஏறக்குறைய 16 கோடியே 80 இலட்சம் சிறார் தொழிலாளர் உள்ளனர் போன்ற விபரங்களையும் அறிவித்தார் ஐ.நா. சிறப்புத் தூதர் Gordon Brown.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி

7. உலகளாவிய கலாச்சாரப் பன்மைத்தன்மைக்கு அச்சுறுத்தல்

மே,22,2015. இப்பூமிக் கோளத்தின் கலாச்சார வளங்கள் தீவிரவாதக் குழுக்களால் தொடர்ந்து தாக்கப்பட்டுவரும்வேளை, உலகின் எண்ணற்ற பாரம்பரிய வளங்களைக் காப்பதற்கு உலகம் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளது ஐ.நா.வின் கலாச்சார நிறுவனம்.
யுனெஸ்கோ இயக்குனர் இரினோ பொக்கோவா அவர்கள், உலக கலாச்சாரப் பன்மைத்தன்மை நாளையொட்டி இவ்வியாழனன்று வெளியிட்ட அறிக்கையில், கலாச்சாரப் பன்மைத்தன்மையின் முக்கியத்துவத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
சிரியாவிலும், ஈராக்கிலும் இடம்பெறும் சண்டையில் ஐ.எஸ். இஸ்லாமிய அரசின் தீவிரவாதிகள், சிரியாவில் வரலாற்றுப் புகழ் வாய்ந்த பழம்பெருமைகொண்ட Palmyra நகரைக் கொள்ளையடித்துள்ளனர், இது, மத்திய கிழக்கில் மிக முக்கியமான பாரம்பரிய வளங்களையும், மக்களையும் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது என்றும் பொக்கோவா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
2002ம் ஆண்டு டிசம்பரில் ஐ.நா. பொது அவையால் அங்கீகரிக்கப்பட்ட உலக கலாச்சாரப் பன்மைத்தன்மை நாள், ஒவ்வோர் ஆண்டும் மே 21ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமை மிக்க Palmyra நகரம், உலக அதிசயங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது மற்றும் இது பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக வரலாற்று முக்கியத்துவமும் பெற்றுள்ளது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி

8. வளர்ந்த நாடுகளில் ஏழை-பணக்காரர் இடைவெளி அதிகரிப்பு

மே,22,2015. பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் ஏழை மற்றும் செல்வந்தர்களுக்கு இடையேயான இடைவெளி கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, பெரிய அளவில் அதிகரித்துள்ளது என்று ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது.
வளர்ந்த நாடுகளின் மக்களில் ஐந்தில் இரண்டு பகுதியினர் கடந்த பத்து ஆண்டுகளில் மிகச் சிறிய அளவே இலாபம் ஈட்டியுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.
பொருளாதார ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கான பன்னாட்டு அமைப்பான OECD வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், அதிகரித்து வரும் இந்த சமத்துவமின்மை பொருளாதார வளர்ச்சியை பாதிக்கிறது என்று கூறியுள்ளது.
அதுமட்டுமன்றி அந்த இடைவெளியானது சமூகச் சூழலுக்கு ஊறு விளைவித்து, நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை குறைத்து மதிப்பிட வழி வகுத்துவிடும் எனவும் அந்த ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.
OECDயில் உறுப்பினர்களாக உள்ள 34 நாடுகளில் இருக்கும் 10 விழுக்காட்டுச் செல்வந்தர்களின் வருமானம், அங்கு ஏழ்மை நிலையில் இருக்கும் 10 விழுக்காட்டு மக்களின் வருமானத்தைவிட பத்து மடங்கு அதிகமாக உள்ளது என்றும் அந்த ஆய்வறிக்கை கண்டறிந்துள்ளது.
தனது உறுப்பு நாடுகளில் கல்வி, பயிற்சி ஆகியவற்றில் அதிக முதலீடுகள் தேவை என்று கோரிக்கை விடுத்துள்ள அந்த அமைப்பு, வேலை வாய்ப்புகளை ஊக்குவிக்கும் வகையில், அதிலும் குறிப்பாக, பெண்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என OECD வலியுறுத்தியுள்ளது.

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment