செய்திகள் - 26.01.15
------------------------------------------------------------------------------------------------------
1. திருத்தந்தை - விசுவாசத்தை மற்றவர்களுக்கு வழங்குபவர்கள் முக்கியமாக பெண்கள்
2. திருத்தந்தை - கிறிஸ்தவர்கள் என்பதாலாயே துன்புறுத்தப்படுகின்றனர்
3. உக்ரேய்னில் தாக்குதல்கள் நிறுத்தப்பட திருத்தந்தை வேண்டுகோள்
4. கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆவல் கடவுள்மீதுள்ள தாகத்தின் ஓர் அங்கம்
5. இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும்
6. பாரசீக மொழியில் முதல் கத்தோலிக்க மறைக்கல்வி ஏடு
7. மோதல்களுக்கு மதத்தை ஒருபோதும் காரணமாகக் காட்டக் கூடாது
8. உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்
------------------------------------------------------------------------------------------------------
1. திருத்தந்தை - விசுவாசத்தை மற்றவர்களுக்கு வழங்குபவர்கள் முக்கியமாக பெண்கள்
சன.26,2015. விசுவாசம் தூய ஆவியாரின் கொடை, இவ்விசுவாசத்தை மற்றவர்களுக்கு வழங்குபவர்கள் முக்கியமாக பெண்கள் என்று, ஆயர்களான திமொத்தேயு, தீத்து ஆகிய புனிதர்கள் விழாவான இத்திங்களன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்நாளைய முதல் வாசகமான, புனித பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய திருமடலை (2 திமொ.1,1-8) மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தாய்மாரும், பாட்டிமாரும் அடுத்த தலைமுறைகளுக்கு விசுவாசத்தை வழங்குகின்றார்கள் என்றும் கூறினார்.
இத்திங்கள் காலை வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, திமொத்தேயு பெற்றுள்ள விசுவாசம், அவரது பாட்டி லோயி, தாய் யூனிக்கி ஆகியோரிடமிருந்து தூய ஆவியாரிடமிருந்து பெற்றார் என, பவுலடிகளார் திமொத்தேயு மற்றும். கூறினார் என்றார்.
விசுவாசத்தை மற்றவர்க்கு வழங்குதல் என்பது ஒன்று, அடுத்தது, விசுவாசம் பற்றிய காரியங்களைக் கற்பிப்பது என்று மறையுரையில் கூறிய திருத்தந்தை, விசுவாசம் ஒரு கொடையாகும், அதைப் படிப்பினால் பெற இயலாது, விசுவாசம் பற்றிப் படிப்பவர்கள் அதைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்வதற்காகப் படிக்கின்றனர் என்றும் கூறினார்.
விசுவாசம் தூய ஆவியாரின் கொடை, இது ஒரு குடும்பத்தில் பாட்டிமார் மற்றும் தாய்மாரின் நற்பணிகளால் பிறருக்கு வழங்கப்படுகிறது, இதைப் பெண்கள் உணர்ந்திருக்கிறார்களா என்று, இன்று சிந்திப்போம் எனவும் திருத்தந்தை கூறினார்.
நாம் விரும்புவது அனைத்தையும் நம்மால் செய்ய இயலாது என்பதை மெய்ஞானத்தின் தூய ஆவியார் அறிவார், எனவே உறுதியான விசுவாசத்தை, சூழலுக்கேற்ப
மாறக் கூடாத ஒரு விசுவாசத்தை நாம் பெறுவதற்கு ஆண்டவரிடம் வரம் கேட்போம்
என்று மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை - கிறிஸ்தவர்கள் என்பதாலாயே துன்புறுத்தப்படுகின்றனர்
சன.26,2015. இக்காலத்தில் கிறிஸ்தவர்கள் என்பதற்காகவே, எல்லா கிறிஸ்தவ சபைகளைச் சார்ந்தவர்களில் பலர் துன்புறுத்தப்பட்டு கொல்லப்படுகின்றனர், இதுவே இந்நாளில் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெளிப்படும் இரத்தக் கிறிஸ்தவ ஒன்றிப்பு என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இம்மாதம் 18ம் தேதி முதல் 25ம் தேதி வரை உலக கிறிஸ்தவ சபைகள் கடைப்பிடித்த கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் நிறைவாக, இஞ்ஞாயிறு
மாலை உரோம் புனித பவுல் பசிலிக்காவில் திருவழிபாட்டை தலைமையேற்று நடத்திய
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.
கிறிஸ்தவ ஒன்றிப்பு என்பது, இது
குறித்த கலந்துரையாடலில் ஈடுபடும் ஒவ்வொரு குழுவும் தனது கருத்து
ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முயற்சிக்கும் நுட்பமான கொள்கைமுறை உரையாடல்களின்
பலன்களால் வருவது அல்ல, மாறாக, நம்மை ஒன்றிணைப்பது எது என்பதை அதிகமாகவும் முழுமையாகவும் புரிந்து கொள்வதற்கு வழிகளைத் தேடுவதாகும் என்று கூறினார் திருத்தந்தை.
வானகத்தந்தையாம் கடவுளின் அன்பு, தமது மகன் மூலம் தூய ஆவியார் வழியாக, வெளிப்படுத்தப்பட்டதைப் பகிர்ந்துகொள்வதற்கு கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்பதைக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, கிறிஸ்தவர்களாகிய
நாம் நம்மிடையே காணப்படும் பிரிவினைகளைக் களைவதற்கு முயற்சிக்க வேண்டும்
என்பதற்கு அழுத்தம் கொடுத்து உரையாற்றினார்.
இந்த மாலை திருவழிபாட்டில், கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தையின் பிரதிநிதி பேராயர் Gennadios, கான்டர்பரி ஆங்கிலக்கன் பேராயரின் பிரதிநிதியான உரோமையிலுள்ள ஆயர் David Moxon உட்பட பிற கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. உக்ரேய்னில் தாக்குதல்கள் நிறுத்தப்பட திருத்தந்தை வேண்டுகோள்
சன.26,2015. உக்ரேய்னில் இடம்பெறும் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு, உரையாடல்மூலம்
பிரச்சனைக்குத் தீர்வு காணப்படுமாறு மிகவும் உருக்கத்துடன் அழைப்பு
விடுப்பதாக இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் கூறினார் திருத்தந்தை
பிரான்சிஸ்.
உக்ரேய்ன்
நாட்டின் கிழக்கில் இரஷ்ய ஆதரவுப் புரட்சியாளர்கள் இச்சனிக்கிழமையன்று
நடத்திய தாக்குதலில் குறைந்தது முப்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
இன்னும், தொழுநோயால்
துன்புறுவோருடன் ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் உலக தினம் இஞ்ஞாயிறன்று
கடைப்பிடிக்கப்பட்டதை நினைவுபடுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தத் தொழுநோயாளர்களுடன் நம் ஒருமைப்பாட்டைப் புதுப்பிப்போம் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்நோயாளர்கள் மத்தியில் பணிசெய்பவர்கள், இந்நோயை ஒழிப்பதற்கு முயற்சிப்பவர்கள் என எல்லாரையும் ஊக்கப்படுத்திய திருத்தந்தை, உலகில் அமைதி நிலவ வேண்டுமென இத்தாலிய கத்தோலிக்க கழகத்தின் சிறார் நடத்திய பேரணியில் கலந்துகொண்டவர்களைப் பாராட்டினார்.
தான் அண்மையில் பிலிப்பீன்ஸ் நாட்டுக்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தை நினைவுகூர்ந்து, வத்திக்கான்
வாளாகத்தில் தேசியக் கொடிகளுடன் நின்றுகொண்டிருந்த பிலிப்பீன்ஸ் மக்களை
வாழ்த்தினார் திருத்தந்தை. இம்மக்களின் விசுவாச வாழ்வுக்கு நன்றியும்
தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆவல் கடவுள்மீதுள்ள தாகத்தின் ஓர் அங்கம்
சன.26,2015. இயேசுவின் சீடர்களில் ஏற்படும் கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான ஆவல், தீமை
மற்றும் மரணத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறும் முழுமையான
வாழ்வுக்குரிய தாகமாகும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த ஏறக்குறைய நாற்பதாயிரம் மக்களுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இவ்வாண்டின் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் மையப்பொருளான, "எனக்குக் குடிப்பதற்குக் கொஞ்சம் தண்ணீர் கொடு" என்று இயேசு சமாரியப் பெண்ணிடம் கேட்ட இறைச்சொற்களை மையமாக வைத்து சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.
கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் நிறைவாக, இஞ்ஞாயிறு
மாலை உரோம் புனித பவுல் பசிலிக்காவில் நடைபெற்ற திருவழிபாட்டில்
கலந்துகொள்வதற்கும் விசுவாசிகளுக்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.
கடவுள் மனிதராய்ப் பிறந்ததன்மூலம் நம் தாகத்தைச் சுவைத்தார், அதில், தண்ணீருக்கான நம் உடல் தாகத்தை மட்டுமல்ல, எல்லாவற்றுக்கும் மேலாக, தீமை
மற்றும் மரணத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறும் முழுமையான
வாழ்வுக்குரிய தாகத்தையும் சுவைத்தார் என்று கூறினார் திருத்தந்தை
பிரான்சிஸ்.
இயேசு, கடவுளின் வாக்குறுதிகளின் நிறைவாக இருக்கிறார், ஏனெனில் இவர், தூய ஆவியாருக்கு உயிருள்ள தண்ணீரை அளிப்பவர், அலைந்துதிரியும் இதயங்களின் தாகத்தையும், வாழ்வு, அன்பு, சுதந்திரம், அமைதி ஆகியவற்றுக்கான பசியையும், இறைவனுக்காக ஏங்கும் தாகத்தையும் இத்தண்ணீர் தீர்த்து வைக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.
நாம் நம் இதயங்களில் இந்தத் தாகத்தை எவ்வளவு அடிக்கடி பெற்றுள்ளோம் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவர்களாகிய நாம் ஒன்றாய் இருக்க வேண்டுமென இயேசு விரும்புகிறார், ஆனால் நாம் பிளவுபட்டுள்ளோம், நம் பாவங்களும் வரலாறும் நம்மைப் பிரித்துள்ளன, நாம் ஒன்றிணைந்து வருவதற்குத் தூய ஆவியாரிடம் செபிப்போம் என்றும் கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும்
சன.26,2015. இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை,
நூறு நாள் வேலைத்திட்டத்தின்கீழ் விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கைகளை
அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசு முயற்சிக்க
வேண்டும் என்று யாழ் மறைமாவட்ட ஆயர் தாமஸ் சவுந்தரநாயகம் அவர்கள்
வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு, இந்த வேண்டுகோளை முன்வைத்து கடிதம் அனுப்பியுள்ள ஆயர் தாமஸ், ஆயிரக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளை வேன் கடத்தல் மற்றும் இறுதிப் போரின்போது சரணடைந்தவர்கள் தொடர்பாக உடன் விசாரணை நடத்தப்படல் வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
இதற்கிடையே, திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களின் இலங்கை திருத்தூதுப் பயணத்தை முன்னிட்டு
சிறைக்கைதிகள் சிலர் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்
என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : ஆதவன்/வத்திக்கான் வானொலி
6. பாரசீக மொழியில் முதல் கத்தோலிக்க மறைக்கல்வி ஏடு
சன.26,2015. ஈரான், ஆப்கானிஸ்தான், தசகிஸ்தான் போன்ற நாடுகளில் பேசப்படும் மொழி பாரசீக மொழியில் (Persian) முதல் கத்தோலிக்க மறைக்கல்வி ஏடு வெளியிடப்பட்டுள்ளது.
ஈரானின் Qom நகரிலுள்ள மதங்கள் பல்கலைக்கழகத்தின் முயற்சியால் தயாரிக்கப்பட்டுள்ள இக்கத்தோலிக்க மறைக்கல்வி ஏடு, இம்மாதம் 12ம் தேதி உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டது.
இது குறித்துப் பேசிய கிரகோரியன் பல்கலைக்கழக இறையியல் துறைத் தலைவர் அருள்பணி Dariusz Kowalczyk, ஈரானிலுள்ள வல்லுனர்கள் கிறிஸ்தவம் பற்றி வாசிக்கவும், கற்றுக்கொள்ளவும் இவ்வேடு உதவும் என்ற நம்பிக்கையத் தெரிவித்தார்.
இஸ்லாம் மதத்தின் புனித மையங்களில் ஒன்றாகிய Qom நகரில், நூற்றுக்கும்
மேற்பட்ட ஆய்வு மையங்கள் உள்ளன. இஸ்லாம் மற்றும் குரானில் சிறந்த
ஏறக்குறைய அறுபதாயிரம் வல்லுனர்கள் இங்கு உள்ளனர். இவர்களில் ஏறக்குறைய
இரண்டாயிரம் பேர் இந்து, புத்தம், யூதம், கிறிஸ்தவம் உட்பட பல்வேறு மதங்கள் பற்றி படிக்கின்றனர். இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பாரசீக மொழி, பிரித்தானியக் காலனி ஆதிக்கத்துக்கு முன்னர் இந்திய துணைகண்டத்தில் இரண்டாம் மொழியாக இருந்தது. இதனால் இந்தி, சிந்தி, வங்காள மொழி, உருது ஆகிய மொழிகளில் இதன் தாக்கத்தைக் காணலாம். மேலும், பாரசீக மொழி, இன்றைய ஈரான், ஆப்கானிஸ்தான், தாஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் பரவலாகவும், ஆர்மீனியா, ஈராக், பஹ்ரைன், ஓமான் ஆகிய நாடுகளில் ஓரளவிலும் பேசப்படுகிறது.
தற்போது உலகில் 7 கோடியே 50 இலட்சம் பேர் பாரசீக மொழியைப் பேசுகின்றனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
7. மோதல்களுக்கு மதத்தை ஒருபோதும் காரணமாகக் காட்டக் கூடாது
சன.26,2015. மதம், மோதல்களுக்கு ஒருபோதும் காரணமாகக் காட்டப்படக் கூடாது என்றும், மக்களின்
இதயங்களை வேதனைப்படுத்தும் அரசியல் உரை இந்தியாவின் பாரம்பரிய உயரிய
நன்னெறிகளைப் புண்படுத்துவதாக உள்ளது என்றும் கூறினார் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.
இந்தியாவின் 66வது குடியரசு தின விழாவை முன்னிட்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள், இஞ்ஞாயிறன்று நாட்டு மக்களுக்காக தொலைக்காட்சியில் உரையாற்றியபோது, நாவின் வன்முறை மக்களின் இதயங்களை வேதனைப்படுத்துகின்றது என்று கூறினார்.
மதம், ஒற்றுமையின் சக்தி, அதனை, மோதல்களுக்கு காரணமாக ஒருபோதும் வைக்கக் கூடாது என்று மகாத்மா காந்தி அவர்கள் கூறியதை, தனது உரையில் குறிப்பிட்டுப் பேசிய பிரணாப் முகர்ஜி அவர்கள், விவாதங்கள் இன்றி அரசு சட்டங்களை இயற்ற முயற்சிப்பதற்கு மீண்டும் தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.
இந்நிலை, சட்டம் இயற்றும் மக்களவையின் பங்கில் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, மக்களவைமீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும் உடைத்தெறிகிறது என்றும், சட்டம் இயற்றுவதில் மக்களவையின் பங்கையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தீவிரவாதத்துக்கு
எதிராக இந்தியா நடத்தி வரும் போரில் உலக நாடுகள் அனைத்தும் கைகோர்க்க
வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார் பிரணாப் முகர்ஜி.
இதற்கிடையே, இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியில் 3 இடங்களில் இந்திய இராணுவத்தினர், பாகிஸ்தான் இராணுவப் படையினருடன் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்
ஆதாரம் : IANS/வத்திக்கான் வானொலி
8. உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்
சன.26,2015. இந்தியாவில் உடல் உறுப்பு தானத்தில், தமிழகம், முதல் இடத்தில் உள்ளது என்றும், தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில், உடல் உறுப்பு தானத்தால், 2,178 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில், உடல் உறுப்பு தானம் குறித்து, மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வால் தமிழகம் இதில் முதலிடத்தில் உள்ளது என்றும் செய்திகள் கூறுகின்றன.
கடந்த 2008ம் ஆண்டில், விபத்தில் உயிரிழந்த, காஞ்சிபுரம் இதயேந்திரன் என்ற ஒரே மகனின் உடல் உறுப்புகளை, பெற்றோர் தானம் அளித்ததன் மூலம், தமிழகத்தில், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது.
இதன் அவசியத்தை உணர்ந்த தமிழக அரசு, உறுப்பு தானத்தை முறைப்படுத்த, உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணையத்தை துவக்கியது. பதிவு செய்து காத்திருப்போருக்கு முன்னுரிமை அடிப்படையில், மூளைச்சாவு அடைந்தோரின் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு, தரப்பட்டு வருகின்றன.
சென்னை அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட, ஐந்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஐம்பதுக்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடக்கின்றன.
தமிழகத்தில் இதுவரை, 571 பேரின் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு உள்ளன. இதயம் - 110; நுரையீரல் - 48; கல்லீரல் - 527; சிறுநீரகம் - 1,024; கணையம் - 4; இதய வால்வுகள் - 552, கண் - 854; தோல் - 13 என, 3,133 உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு உள்ளன. இதுவரை, 3,063 பேர் பயன்பெற்று உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், 2,178 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
மாநில அளவில் உடல் உறுப்பு மற்றும் திசு மாற்று மையமும், மண்டல அளவில் அதுபோன்று மையங்களும் ஏற்படுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன' என, நலவாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
ஆதாரம் : தினமலர்/வத்திக்கான் வானொலி