கச்சத்தீவில் கடற்படை முகாமை விரிவுபடுத்துகிறது இலங்கை
கச்சத்தீவில் நேற்று நடந்த அந்தோணியார் கோயில் திருவிழாவில் இலங்கையின் கடற்படை தளபதி ஜெயந்த் கொலம்பகே, ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் ஜெயரத்னா ஆகியோர் திடீரென கலந்து கொண்டனர்.
வழக்கமாக வடகிழக்கு பிராந்திய அதிகாரிகள் மட்டுமே கச்சத்தீவுக்கு வந்து சென்ற நிலையில் முதல் முறையாக கச்சத்தீவுக்கு அதிகாரிகள் வந்ததால், நூற்றுக்கும் மேற்பட்ட கடற்படை மற்றும் ராணுவ அதிகாரிகள் கச்சத்தீவில் நேற்று முகாமிட்டு இருந்தனர்.கச்சத்தீவில் இலங்கை கடற்படை தளத்தை விரிவு படுத்தும் வகையில் முகாம் அமைப்பது, கண்காணிப்பு ரேடார்களை நிறுவுவது உள்ளிட்ட பணிகளில் ஏற்கெனவே இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கச்சத்தீவில் கடற்படை முகாமும் விரிவுபடுத்தப்பட்டிருந்தது. கட்டிடங்களும் கூடுதலாக கட்டப்பட்டுள்ளது. இலங்கை அரசு கச்சத்தீவின் மீது கூடுதல் கவனம் செலுத்தி வருவது தெரிகிறது. தமிழக அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதை சர்வதே அளவில் ஊர்ஜிதப்படுத்தும் வகையில், இலங்கை பாதுகாப்பு துறையின் தலைமை அதிகாரிகளின் கச்சத்தீவு வருகை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்தோணியார் திருவிழாவில் பங்கேற்ற இவர்கள் தீவில் அமைக்கப்பட்டுள்ள கடற்படை முகாமையும் பார்வையிட்டு மேம்பாட்டு பணிகள் குறித்து ஆலோசனை செய்தனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது.அப்போது, தமிழக மீனவர்களை நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் தாக்குவது குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு, இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர். மீனவர்களை கடற்படையினர் தாக்குவதில்லை என்று இலங்கை கடற்படை தளபதி ஜெயந்த் கொலம்பகே கூறினார்.
No comments:
Post a Comment