செய்திகள் - 25.03.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : மீட்பு ஒரு கொடை, இதனை மரியா போன்ற தாழ்மையான இதயத்தால் பெற முடியும்
2. நாம் வெதுவெதுப்பான சீடர்களாக இருக்கக் கூடாது, திருத்தந்தை பிரான்சிஸ்
3. 8வது உலகக் குடும்ப மாநாடு
4. அமெரிக்கப் பதிப்பகங்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் போதனைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன
5. உண்மைச் செய்திகள் வெளிவருவதற்குப் போராடும் ஆர்வலர்கள் பாதுகாக்கப்பட வேண்டும், ஐ.நா.
6. இனப்பாகுபாடுகளை விலக்கி நடப்பதற்கு, இக்கால மற்றும் வருங்காலத் தலைமுறைகளுக்குக் கற்றுக்கொடுப்பட வேண்டும், பான் கி மூன்
7. காற்று மாசடைதலே உலக நலவாழ்வுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல், உலக நலவாழ்வு நிறுவனம்
8. 300 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய “காற்று”
9. பல கோடி வாசனைகளை அறியும் திறன் கொண்டது மனித மூக்கு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : மீட்பு ஒரு கொடை, இதனை மரியா போன்ற தாழ்மையான இதயத்தால் பெற முடியும்
மார்ச்,25,2014. மீட்பை வாங்கவோ விற்கவோ முடியாது, ஆனால், இதனைப் பெறுவதற்கு மரியாவின் இதயம் போன்ற தாழ்மையான இதயம் அவசியம் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்து
பிறப்பின் அறிவிப்பு விழாவான இச்செவ்வாய் காலை புனித மார்த்தா இல்லச்
சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் மீட்புக்குத் தேவையான
குணநலன்கள் பற்றி விளக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாம் ஏவாளின் இறுமாப்பு இதயம் கடவுளுக்குப் பணிந்து நடக்கவில்லை, ஆனால் இந்தப் பணிவின்மை முடிச்சு, மரியாவின் பணிவுச் செயலால் தளர்த்தப்பட்டது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் ஆண்டவர் தம் மக்களின் இதயங்களை மென்மைப்படுத்துவதற்காக, அவர் தம் மக்களோடு மிகுந்த கனிவுடன் நடந்து செல்கிறார் என்றும் மறையுரையில் உரைத்தார்.
பணிவு மற்றும் சாந்தம் பற்றி இந்நாளைய திருவழிபாடு எவ்வாறு விளக்குகின்றது என்று கூறிய திருத்தந்தை, மீட்பை வாங்கவோ விற்கவோ முடியாது, அது முழுவதும் இலவசமாக நமக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு கொடை என்றும், நம்மால் நம்மை மீட்க முடியாது என்றும் கூறினார்.
எனினும், இந்த மீட்பைப் பெறுவதற்கு மரியா போன்று, தாழ்மையான, சாந்தமான, பணிவான இதயத்தை நாம் கொண்டிருக்க வேண்டும் என்பதை தனது மறையுரையில் வலியுறுத்திய திருத்தந்தை, நம்மை மீட்பதற்காக நம்மில் ஒருவர் போல் ஆன இறைவன் ஒவ்வொரு நாளும் நமக்காகக் காத்திருக்கிறார், நமக்கு மீட்பளித்ததாகச் சொல்லியுள்ள அவருக்கு நன்றி சொல்வோம் எனவும் கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. நாம் வெதுவெதுப்பான சீடர்களாக இருக்கக் கூடாது, திருத்தந்தை பிரான்சிஸ்
மார்ச்,25,2014.
நாம் வெதுவெதுப்பான சீடர்களாக இருக்கக் கூடாது. உண்மைக்குச் சாட்சி
சொல்லுவதற்கு நமது துணிச்சல் திருஅவைக்குத் தேவைப்படுகின்றது என்று தனது
இச்செவ்வாய் டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், உறுதியான குடும்ப மதிப்பீடுகளை ஊக்குவிப்பதும், சமூக
மற்றும் பொருளாதார உதவிகளைக் குடும்பங்களுக்குச் செய்வதும் குடும்ப
வன்முறையைக் குறைப்பதற்கு தேவைப்படுகின்றன என்ற பேராயர் தொமாசி அவர்களின்
கூற்றை, திருப்பீடச் செயலகம், @terzaloggia என்ற தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.
மேலும்,
வருகிற ஏப்ரல் 18ம் தேதி புனித வெள்ளி இரவில் உரோம் கொலேசேயத்தில்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் நடக்கும் சிலுவைப்பாதை பக்தி
முயற்சிகளுக்கான தியானச் சிந்தனைகளை, இத்தாலியின் Campobasso-Boiano பேராயர் Giancarlo Maria Bregantini, C.S.S., அவர்கள் தயாரிக்கவுள்ளார் என, திருப்பீட பத்திரிகை அலுவலகம் இச்செவ்வாயன்று அறிவித்தது.
இன்னும், வருகிற வியாழனன்று அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் பராக் ஒபாமா அவர்களையும், வருகிற வெள்ளிக்கிழமையன்று கிரீஸ் நாட்டு அரசுத்தலைவர் Karolos Papoulias அவர்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. 8வது உலகக் குடும்ப மாநாடு
மார்ச்,25,2014. அடுத்த ஆண்டு செப்டம்பரில் பிலடெஃபியாவில் நடக்கவிருக்கும் கத்தோலிக்கத் திருஅவையின் 8வது உலகக் குடும்ப மாநாட்டின் நிகழ்ச்சித் திட்டங்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வழிகாட்டுதலின்படி இடம்பெறும் என்று திருப்பீட குடும்ப அவைத் தலைவர் பேராயர் Vincenzo Paglia அறிவித்தார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் பிலடெஃபியாவில் 2015ம் ஆண்டு செப்டம்பர் 22 முதல் 27 வரை நடக்கவிருக்கும் 8வது உலகக் குடும்ப மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள், குடும்பம் பற்றிய இறையியலை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்வார்கள் என்று கூறினார் பேராயர் Paglia.
இம்மாநாடு குறித்து இச்செவ்வாயன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறிய பேராயர் Paglia, இன்றைய உலகில் திருஅவை, குடும்பங்களுக்கு ஆற்றும் மேய்ப்புப்பணிகள் பற்றிய விரிவான விளக்கங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மிலானில் 7வது உலகக் குடும்ப மாநாடு நடைபெற்றபோது, பிலடெஃபியாவில் 8வது உலகக் குடும்ப மாநாடு நடைபெறும் என்பதை முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் அறிவித்தார். இவ்வாண்டு பிப்ரவரியில் குடும்பங்களுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட கடிதத்தில் இதனை உறுதிசெய்துள்ளார் என்றும் பேராயர் Paglia நிருபர்களிடம் கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. அமெரிக்கப் பதிப்பகங்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் போதனைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன
மார்ச்,25,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் போதனைகள் அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பதிப்பகங்களிலும், அந்நாட்டு ஆயர் பேரவையின் தொடர்புத்துறை அலுவலகத்திலும் முக்கியத்துவம் பெற்றுள்ளன என்று வத்திக்கான் பதிப்பகம் அறிவித்துள்ளது.
திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களின் உரைகளுக்குக் காப்புரிமை வாங்குவதில் அமெரிக்காவில்
மிகுந்த ஆர்வம் எழுந்துள்ளதைக் காண முடிகின்றது என்று வத்திக்கான் பதிப்பக
இயக்குனர் அருள்பணி ஜூசப்பே கோஸ்தா CNA செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
அமெரிக்க
ஐக்கிய நாட்டின் பால்ட்டிமோரில் அண்மையில் நடைபெற்ற மிட் அட்லாண்டிக்
கத்தோலிக்கத் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட அருள்பணி கோஸ்தா, இந்த மாநாட்டில் பல கத்தோலிக்கப் பதிப்பகத்தார் கலந்து கொண்டனர் எனவும், ஏறக்குறைய இருபது பதிப்பகத்தார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் போதனைகளில் மிகுந்த ஆர்வம் காட்டினர் எனவும் தெரிவித்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பற்றிய ஒவ்வொரு நூலும், உலகில் ஏறக்குறைய 5 இலட்சம் முதல் 2 கோடிப் பிரதிகள் வரை விற்பனையாகின்றன எனவும் அருள்பணி ஜூசப்பே கோஸ்தா கூறினார்.
ஆதாரம் : CNA
5. உண்மைச் செய்திகள் வெளிவருவதற்குப் போராடும் ஆர்வலர்கள் பாதுகாக்கப்பட வேண்டும், ஐ.நா.
மார்ச்,25,2014. உண்மையான தகவல்களை வெளிக்கொணருவதற்குப் போராடும் ஆர்வலர்களைப் பாதுகாப்பதற்கும், அந்நடவடிக்கையின்போது பாதிக்கப்படுவோருக்கு உதவுவதற்கும் அனைத்துலக சமுதாயம் உதவ வேண்டும் என, ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கேட்டுள்ளார்.
மனித உரிமை மீறல்கள் அதிகமாக இடம்பெற்றுவரும் உலகில், அனைத்துலக நீதியையும் சட்டத்தையும் ஊக்குவிப்பதற்கு தனியாள்களுக்கும், குழுக்களுக்கும் இருக்கின்ற உரிமைகளையும் சுட்டிக் காட்டியுள்ளார் பான் கி மூன்.
இத்திங்களன்று கடைப்பிடிக்கப்பட்ட “அனைத்துலக உண்மைக்கான உரிமை” தினத்தை முன்னிட்டு வெளியிட்ட செய்தியில் இவ்வாறு கூறினார் ஐ.நா. பொதுச்செயலர்.
மனித உரிமைகளுக்காகப் போராடிய எல் சால்வதோர் கத்தோலிக்க பேராயர் Óscar Arnulfo Romero அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட மார்ச் 24ம் தேதியை, “அனைத்துலக உண்மைக்கான உரிமை” தினமாக அறிவித்து சிறப்பித்து வருகிறது ஐ.நா. நிறுவனம்.
எல் சால்வதோரில் உள்நாட்டுச் சண்டை இடம்பெற்ற சமயத்தில் சமூகநீதி, அடக்குமுறை, கொலைகள், சித்ரவதைகள், ஏழ்மை ஆகியவற்றுக்கு எதிராக உரக்கக் குரல்கொடுத்த சான் சாலவ்தோர் பேராயர் ரொமெரோ அவர்கள், 1980ம் ஆண்டு மார்ச் 24ம் தேதியன்று திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார்.
மத்திய அமெரிக்க நாடான எல் சால்வதோரில் 1980ம் ஆண்டு முதல் 1992ம் ஆண்டுவரை நடந்த உள்நாட்டுச் சண்டையில் 75 ஆயிரம் பேர் இறந்தனர், எட்டாயிரம் பேர் காணாமற்போயினர் மற்றும் 12 ஆயிரம் பேர் மாற்றுத்திறனாளிகளாகியுள்ளனர்.
ஆதாரம் : UN
6. இனப்பாகுபாடுகளை விலக்கி நடப்பதற்கு, இக்கால மற்றும் வருங்காலத் தலைமுறைகளுக்குக் கற்றுக்கொடுப்பட வேண்டும், பான் கி மூன்
மார்ச்,25,2014. “அட்லாண்டிக் பெருங்கடல் வழியே இடம்பெற்ற அடிமை வணிகத்துக்குப் பலியானவர்களை நினைவுகூரும்” அனைத்துலக தினத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன், இனப்பாகுபாடு மற்றும் முற்சார்பு எண்ணங்களின் ஆபத்துக்களைத் விலக்கி நடப்பதற்கு, இக்கால மற்றும் வருங்காலத் தலைமுறைகளுக்குக் கற்றுக்கொடுப்பதற்கு உலகினர் தங்களை அர்ப்பணிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
கடந்தகால அடிமை வணிகத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை நினைவுக்குக்கொணருமாறு அழைப்புவிடுத்த அதேவேளை, மனித வணிகம், கொத்தடிமை, பாலியல்அடிமை, வீடுகளில்
அடிமைவேலை போன்ற கடும் மனித உரிமை மீறல்களால் இன்றும் இலட்சக்கணக்கான
மக்கள் பாதிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ளார் ஐ.நா. பொதுச்செயலர்.
அட்லாண்டிக்
பெருங்கடல் வழியே 400 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த மனித அடிமை வணிகத்துக்கு
ஒரு கோடியே 50 இலட்சத்துக்கு மேற்பட்ட மனிதர்கள் பலியாகினர். மனித
வரலாற்றில் இடம்பெற்ற இருளான அத்தியாயங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் உரிமைப் போராட்டத்தின் பயனாக, 1804ம் ஆண்டு ஹெய்ட்டி நாடு முதன்முதலாக விடுதலை அடைந்தது. இந்த 2014ம் ஆண்டு அதன் 210ம் ஆண்டு நிறைவு நினைவுகூரப்படுகின்றது.
ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 25ம் தேதி இந்த அனைத்துலக தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது. “அடிமைத்தனத்தின்மீது வெற்றி : ஹெய்ட்டியும் அதற்கப்பாலும்” என்ற தலைப்பில் இவ்வாண்டின் இவ்வுலக தினம் இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்டது.
ஆதாரம் : UN
7. காற்று மாசடைதலே உலக நலவாழ்வுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல், உலக நலவாழ்வு நிறுவனம்
மார்ச்,25,2014. காற்று மாசடைவதே உலகின் நலவாழ்வுக்கு ஒரே பெரிய அச்சுறுத்தல் என்று WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.
உலகில் 2012ம் ஆண்டில் இடம்பெற்ற இறப்புகளுள் எட்டுப் பேருக்கு ஒருவர், காற்று மாசுகேடு தொடர்புடைய நோயால் இறந்துள்ளனர் என்று, WHO நிறுவனத்தின் புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதய நோய், நுரையீரல் நோய், நுரையீரல் புற்றுநோய், ஸ்ட்ரோக் போன்ற நோய்களால் பலர் இறந்துள்ளதற்கு, காற்று மாசுபாடே காரணம் என்றும், இந்தியா, இந்தோனேசியா, மேற்கு பசிபிக் உட்பட தென்கிழக்கு ஆசியப் பகுதி, காற்று மாசுகேடால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அவ்வாய்வு கூறுகின்றது.
சமையல் நெருப்புடன் வேலை செய்யும் பெண்களும் அவர்களின் குழந்தைகளும் அளவுக்கு மீறி பாதிக்கப்படுவதாகவும், இந்தியா, சீனா
போன்ற அதிவேகத் தொழில் வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் இந்த வெளிப்புற
காற்று மாசுகேடு ஒரு முக்கிய பிரச்சனை என்றும் உலக நலவாழ்வு நிறுவனம்
எச்சரித்துள்ளது.
அதேநேரம், வெளிப்புற காற்று மாசுகேட்டைக் கட்டுப்படுத்தும் கொள்கைகளை அரசுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் WHO நிறுவனம் கேட்டுள்ளது.
2012ம் ஆண்டில் ஏறக்குறைய 70 இலட்சம் பேர் காற்று மாசுகேடால் இறந்துள்ளனர். .
ஆதாரம் : AFP
8. 300 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய “காற்று”
மார்ச்,25,2014.
பூமியில் உள்ள உயிர்கள் வாழ்வதற்குத் தேவையான பிராணவாயு 300 கோடி
ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
Cyanobacteria என்ற
பச்சை கடல்பாசி மூலம் கடந்த 250 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிராணவாயு
நிகழ்ந்துள்ளதாக கருதப்பட்டு வந்தது. ஆனால் புதிய ஆய்வுமூலம் மூன்று கோடி
ஆண்டுகளுக்கு முன்பே உயிரினங்கள் வாழ்ந்துள்ளதாக கிரேட் ஆக்சைடு நிகழ்வு
கூறுவதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தென்னாப்ரிக்காவிலுள்ள ஏறக்குறைய 295 கோடி ஆண்டுகள் வயதான Pongola பாறைகளைக் கண்டுபிடித்து ஆராய்ந்த போதுதான் இத்தகவல்கள் தெரியவந்துள்ளன.
மேலும் ஆப்ரிக்காவில்தான் முதன்முதலில் உயிரினங்கள் தோன்றி உள்ளதாக அமெரிக்காவில் உள்ள நோவாவின் Planavsky பல்கலைக்கழகத்தினர் தெரிவிக்கின்றனர்.
ஆதாரம் : IANS
9. பல கோடி வாசனைகளை அறியும் திறன் கொண்டது மனித மூக்கு
மார்ச்,25,2014. மனிதர்களால், 10 ஆயிரம் கோடி வாசனைகளை அறிய முடியும் என்பதை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
1920ம் ஆண்டில் 10 ஆயிரம் வாசனைக் கலவைகளை, மனிதர்களால் உணர முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர் தற்போது அமெரிக்காவில் உள்ள, 'ஹாவர்டு ஹக்ஸ்' மருத்துவ நிறுவனத்தின் ஆய்வாளர், லெஸ்லி வாச்சல், ராக்பெல்லர் பல்கலைக்கழக, ஆய்வுக்கூடத்தின் மூத்த அறிவியலாளர் ஆண்டிரியாஸ் கெல்லர் உள்ளிட்ட நிபுணர்கள், மனிதர்களின் மோப்ப சக்தி குறித்த ஆய்வில் ஈடுபட்டு இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.
மனிதரின் மூக்கில், 400 மோப்பச் சக்திக்கான பகுத்தறியும் பகுதிகள் உள்ளன. வெவ்வேறு வகையான, 128 வேறுபட்ட வாசனைகளின் மூலக்கூறுகளைத் தனித்தனியாக பிரித்தெடுத்து, புதிய கலவை உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுப்பில், புற்கள், சிட்ரஸ் மற்றும் ரசாயனங்களின் பல்வேறு மூலக்கூறுகள் சேர்க்கப்பட்டது. இவ்வாறு பிரிக்கப்பட்ட மூலக்கூறுகளை, 10:20:30 என்ற வீதத்தில் கலந்தபோது, மோசமான மற்றும் வித்தியாசமான வாசனைகள் கிடைத்தன. ஆய்வுக்கு அழைக்கப்பட்ட நபர்கள் ஒவ்வொருவரிடமும், இரண்டு திரவியங்கள் ஒரே மாதிரியாகவும், மற்றொன்று வேறுபட்ட வாசனையுடனும் உள்ள மூன்று வாசனை திரவியங்கள் வழங்கப்பட்டன. இப்பரிசோதனை மூலம், மனிதர்களால், 10 ஆயிரம் கோடி வாசனைகளை அறிய முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆதாரம் : தமிழ்வின்
No comments:
Post a Comment