Tuesday, 25 March 2014

செய்திகள் - 24.03.14

செய்திகள் - 24.03.14
 ------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : மீட்பை விரும்புவோர், தாழ்ச்சியின் பாதையைத் தேர்ந்துகொள்ளவேண்டும்

2. திருத்தந்தை பிரான்சிஸ் : துயர் துடைக்கும் பணியாளர்களுக்கு, இயேசுவின் பாடுகள் சிறந்ததொரு பள்ளிக்கூடம்

3. திருத்தந்தையின் அறிவிப்பு : மார்ச், 28, 29 ஆகிய தேதிகளில் உலகின் அனைத்துக் கத்தோலிக்கக் கோவில்களிலும் 24 மணி நேர 'மன்னிப்பு விழா'

4. சீரோ ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் இறைபதம் சேர்ந்ததையொட்டி திருத்தந்தை பிரான்சிஸின் இரங்கல் செய்தி

5. திருத்தந்தை தென் சூடானுக்கு அனுப்பியுள்ள செய்தி - 'அமைதியின்றி வளர்ச்சியைப் பெறமுடியாது'

6. தாட்டிபத்ரி ஞானம்மா இன்னய்யா அவர்களை, புனிதர் நிலைக்கு உயர்த்தும் முயற்சிகளுக்கு, திருப்பீடம் உத்தரவு

7. இந்தியாவின் பொதுத்தேர்தல்களுக்காக ஏப்ரல் 6ம் தேதி செப நாள் - இந்தியத் திருஅவை அறிவிப்பு

8. தாய்லாந்தில் முதல் பெனடிக்டன் துறவு இல்லம் துவக்கப்பட்டுள்ளது

9. இலங்கையில் மனித உரிமை மீறல்கள்  தொடர்ந்து இடம்பெறுவதாக பிரிட்டன் மனித உரிமை அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது

10. ஒவ்வோர் ஆண்டும் உலக அளவில் 10 இலட்சம் குழந்தைகள் காச நோயால் பாதிக்கப்படுகின்றனர்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : மீட்பை விரும்புவோர், தாழ்ச்சியின் பாதையைத் தேர்ந்துகொள்ளவேண்டும்

மார்ச்,24,2014. எவர் ஒருவர் மீட்கப்பட விரும்புகிறாரோ, அவர் தாழ்ச்சியின் பாதையைத் தேர்ந்துகொள்ளவேண்டும் என்பதை மையமாக வைத்து, இத்திங்கள் காலை திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தான் தங்கியிருக்கும் புனித மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி, மறையுரையாற்றியத் திருத்தந்தை அவர்கள், தாழ்ச்சியுடன் மேற்கொள்ளப்படும் செயலே நம்மைக் குணப்படுத்துதலுக்கு அழைத்துச்செல்லும் என்று கூறினார்.
பழைய ஏற்பாட்டில், தொழுநோயுற்ற நாமான் என்பவருக்கும், இறைவாக்கினர் எலிசாவுக்கும் இடையே இடம்பெற்ற உரையாடலை எடுத்துரைத்து, தாழ்ச்சி எனும் பண்பால் புதுமை நடந்ததையும் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னைமரியாவுக்கு எத்தனையோ நற்குணங்கள் இருந்தும், தாழ்ச்சி என்ற பண்பே அவரின் புகழ்பாடலில் உயர்ந்து நிற்கிறது என்று கூறினார்.
நாம் ஒரு பாவி என்று ஏற்றுக்கொள்வதே நம் முதல் பண்புக்கூறு என்று கூறியத் திருத்தந்தை, அந்த உண்மையை ஏற்பது நம் தாழ்ச்சியைக் காட்டுவதாகும் என்றும் எடுத்துரைத்தார்.
மேலும், இத்திங்களன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டிருந்த டுவிட்டர் செய்தியில், 'கடவுள் பாவிகளாம் நம்மிடமிருந்து தூரத்தில் இல்லை; எவ்வித கட்டுப்பாடுமின்றி, தன் இரக்கத்தை அளவின்றி அவர் பொழிய விரும்புகிறார்' என்று எழுதியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் : துயர் துடைக்கும் பணியாளர்களுக்கு, இயேசுவின் பாடுகள் சிறந்ததொரு பள்ளிக்கூடம்

மார்ச்,24,2014. துன்புறுவோர் எவரும் தனியாக இல்லை, மனிதர்மீது இரக்கம் நிறைந்த அன்பு கொள்ளும் இறைவன், அவர்கள் அருகில் இருக்கிறார் என்பதை நினைவில் கொண்டு, துன்புறுவோருக்குப் பணியாற்றும் நலவாழ்வுப் பணியாளர்களுக்கு தன் நன்றியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நலவாழ்வுப் பணியாளர்களுக்கான திருப்பீட அவையின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டோரை இத்திங்கள் காலை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றியத் திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.
நோய்களையும், உடல் குறைபாடுகளையும், துன்பங்களையும் தாங்கிச் செல்லும் சகோதர, சகோதரிகள் மத்தியில் நல வாழ்வுப் பணியாளர்கள் ஆற்றும் தொண்டை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாராட்டினார்.
துன்புறுவோரின் துயர் துடைக்கும் பணிக்கெனத் தங்களை அர்ப்பணிக்க விரும்புவோருக்கு, இயேசுவின் பாடுகள் சிறந்ததொரு பள்ளிக்கூடம் என்றும், அங்கு கற்றுக்கொள்ள கூடிய உண்மைகள் நிறைய உள்ளன என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தையின் அறிவிப்பு : மார்ச், 28, 29 ஆகிய தேதிகளில் உலகின் அனைத்துக் கத்தோலிக்கக் கோவில்களிலும் 24 மணி நேர 'மன்னிப்பு விழா'

மார்ச்,24,2014. இம்மாதம் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் உரோம் நகரிலும், உலகம் முழுவதும் உள்ள அனைத்துக் கத்தோலிக்கக் கோவில்களிலும் 24 மணி நேர 'மன்னிப்பு விழா' சிறப்பிக்கப்படும் என்று அறிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது இதனை அறிவித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 28ம் தேதி வெள்ளியன்று பிற்பகல் துவங்கும் இக்கொண்டாட்டங்களின் மையமாக செபமும், பாவ அறிக்கையிடுதலும், ஒப்புரவு அருள் சாதனமும் இருக்கும் என்று கூறினார்.
மாலையிலும், இரவு முழுவதும் செபிப்பதற்கும், ஒப்புரவு அருள் சாதனத்தில் பங்கேற்பதற்கும் உரோம் நகரில் உள்ள அனைத்துக் கோவில்களும் திறந்திருக்கும் என்றும் திருத்தந்தை அறிவித்தார்.
காணாமற்போன மகனின் தந்தை, மகன் திரும்பிவந்தபோது, கடந்த நிகழ்வுகளை மறந்து, மன்னித்து, விழா கொண்டாடினார் என்றும், இறைவனின் ஒவ்வொரு சந்திப்பும் நம் வாழ்வில் மாற்றத்தைக் கொணரும், அவருடன் நாம் கொள்ளும் ஒவ்வொரு சந்திப்பும் நம்மை மகிழ்வில் நிரப்பும் என்றும் கூறிய திருத்தந்தை, இதற்கு, இயேசு சமாரியப் பெண்ணைச் சந்தித்ததை எடுத்துக்காட்டாகக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. சீரோ ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் இறைபதம் சேர்ந்ததையொட்டி திருத்தந்தை பிரான்சிஸின் இரங்கல் செய்தி

மார்ச்,24,2014. சீரோ ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை Ignatius Zakka Iwas  இறைபதம் சேர்ந்ததையொட்டி தன் இரங்கற்செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பல்வேறு துன்பகாலங்களில் தன் மக்களை மனவுறுதியுடனும் ஞானத்துடனும் சீரோ ஆர்த்தடாகஸ் முதுபெரும் தந்தை நடத்திச்சென்றுள்ளதாக தன் பாராட்டை வெளியிட்டுள்ள திருத்தந்தை, அவரை அமைதி மற்றும் உரையாடலின் மனிதர் என அழைத்துள்ளார்.
இரண்டாம் வத்திக்கான பொதுச்சங்கத்தில் முதுபெரும் தந்தை பார்வையாளராக பங்கேற்றதை நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை, சிரிய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை, திருஅவைக்கு ஆற்றியுள்ள பங்களிப்பையும் பாராட்டியுள்ளார்.
ஈராக்கில் பிறந்த முதுபெரும் தந்தை Ignatius Zakka Iwas, 1980ம் ஆண்டு முதல் சீரோ ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் முதுபெரும் தலைவராக பணியாற்றிவந்துள்ளார்.  இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஜெர்மனியில் தன் 80ம் வயதில் காலமானார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. திருத்தந்தை தென் சூடானுக்கு அனுப்பியுள்ள செய்தி - 'அமைதியின்றி வளர்ச்சியைப் பெறமுடியாது'

மார்ச்,24,2014. தென் சூடானில் வன்முறைகள் நிறுத்தப்பட்டு, அமைதி ஊக்குவிக்கப்படலும், மனிதாபிமான உதவிகள் தொடரப்படலும் அவசியம் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அந்நாட்டிற்கு அனுப்பியுள்ள செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் எழுதியுள்ள இச்செய்தியை, திருப்பீட நீதி, அமைதி பணிக்குழுவின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் அந்நாட்டிற்கு எடுத்துச் சென்றார்.
தென் சூடானின் ஜூபா மறைமாவட்டத்திற்கு, கர்தினால் டர்க்சன் அவர்கள் கொண்டு சென்ற இச்செய்தியில், 'அமைதியின்றி வளர்ச்சியைப் பெறமுடியாது' என்ற கருத்து அழுத்தமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
அப்பாவி மக்களின் உயிர்களைப் பலிவாங்குவதுடன், பகைமையையும், பிரிவினைகளையும் உருவாக்கும் போர்கள் குறித்து திருஅவை பாராமுகமாய் இருக்க முடியாது என்று திருத்தந்தையின் பெயரால் அனுப்பப்பட்டுள்ள இச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இஞ்ஞாயிறன்று ஜூபா மறைமாவட்டத்தின் புனித தெரேசா பேராலயத்தில் கர்தினால் டர்க்சன் அவர்களால் இச்செய்தி வாசிக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. தாட்டிபத்ரி ஞானம்மா இன்னய்யா அவர்களை, புனிதர் நிலைக்கு உயர்த்தும் முயற்சிகளுக்கு, திருப்பீடம் உத்தரவு

மார்ச்,24,2014. இறைவனின் அழைப்பு, அதிகாரத்தில் உள்ள சக்தி படைத்தவர்களுக்கு வழங்கப்படுவதைவிட, எளிய மக்களுக்கே அதிகம் வழங்கப்படுகிறது என்று சென்னை மயிலைப் பேராயர் ஜார்ஜ் அன்டனிசாமி அவர்கள் கூறினார்.
புனித அன்னம்மாளின் பெயரைத் தாங்கிய இரு அருள் சகோதரிகளின் துறவறச் சபைகளுக்கு மூலகாரணமாக அமைந்த தாட்டிபத்ரி ஞானம்மா இன்னய்யா அவர்களை, புனிதர் நிலைக்கு உயர்த்தும் முயற்சிகளை, சென்னை மயிலை உயர் மறைமாவட்டம் துவக்கலாம் என்ற உத்தரவை, திருப்பீடம் அண்மையில் அளித்துள்ளது.
இந்த உத்தரவின் அடிப்படையில், ஞானம்மா அவர்களை 'இறைவனின் ஊழியர்' என்று அறிவித்து, அவர் வாழ்ந்த கீழச்சேரி என்ற ஊரில், நன்றித் திருப்பலியாற்றிய சென்னை மயிலைப் பேராயர் அன்டனிசாமி அவர்கள், புனிதர்கள் பின்பற்றியச் சாட்சிய வாழ்வை, அருள் பணியாளர்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் பின்பற்றவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
1822ம் ஆண்டு பிறந்த ஞானம்மா அவர்கள், வேதியர் ஒருவரை மணந்து, 5 மகன்களைப் பெற்றார். 37வது வயதில் கணவனை இழந்து, கைம்பெண் ஆன ஞானம்மா அவர்களின் மகன்களில் நால்வர் அருள் பணியாளர்களாக திருநிலை பெற்றனர்.
தன் குடும்பத்திற்குரியக் கடமைகளை நிறைவேற்றியபின், இறைவனுக்கு இன்னும் அதிகமாகப் பணியாற்ற விரும்பிய ஞானம்மா அவர்கள், "புனித அன்னம்மாள் அருள் சகோதரிகள்" என்ற பெயரில் துறவு சபையொன்றை நிறுவக் காரணமானார்.
1874ம் ஆண்டு தன் 52ம் வயதில் இறைவனடி சேர்ந்த ஞானம்மா அவர்கள் உருவாக்கிய இத்துறவு சபை, தற்போது, "சென்னை புனித அன்னம்மாள் அருள் சகோதரிகள்" மற்றும் "பிரங்கிபுரம் புனித அன்னம்மாள் அருள் சகோதரிகள்" என்ற இரு துறவு சபைகளாக இயங்கி வருகிறது.
இறையடியார் ஞானம்மா அவர்களின் புனிதத்துவ வாழ்வை வத்திக்கான் அங்கீகரிக்கும் தருணத்தில், இவரே, இந்தியாவில் பொதுநிலையைச் சேர்ந்தவர்களில் புனிதர் நிலை அடையும் முதல் பெண்ணாக இருப்பார் என்று "சென்னை புனித அன்னம்மாள் அருள் சகோதரிகள்" சபையின் தலைவர், அருள் சகோதரி லீமா ரோஸ் அவர்கள் வத்திக்கான் வானொலி தமிழ் குழுவிடம் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. இந்தியாவின் பொதுத்தேர்தல்களுக்காக ஏப்ரல் 6ம் தேதி செப நாள் - இந்தியத் திருஅவை அறிவிப்பு

மார்ச்,24,2014. இந்தியாவின் பொதுத்தேர்தல்களில் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு, சிறந்த வாக்காளர்களைத் தேர்ந்தெடுக்க, ஏப்ரல் 6ம் தேதி, ஞாயிற்றுக் கிழமையை, செப நாளென்று ஒதுக்கியுள்ளது இந்தியத் திருஅவை.
பொதுத்தேர்தல், அமைதியான முறையில் இடம்பெறவும், நல்ல தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படவும் இந்திய விசுவாசிகள் அனைவரும் ஏப்ரல் 6ம் தேதியன்று சிறப்பான வகையில் செபிக்கவேண்டும் என்று இந்திய ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் பசிலியோஸ் க்ளீமிஸ் அவர்கள், ஆயர்கள் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் விண்ணப்பித்துள்ளார்.
அரசின் மதச்சார்பற்ற கொள்கையை ஆதரிப்பவர்கள்மதங்களிடையே பேச்சுவார்த்தையை ஊக்குவிப்பவர்கள், சிறுபான்மையினரின் நலனில் அக்கறை கொண்டோர், ஏழைகளின் உரிமைகளை மேம்படுத்துவோர் ஆகியோரைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று கர்தினால் க்ளீமிஸ் அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

ஆதாரம் : UCAN

8. தாய்லாந்தில் முதல் பெனடிக்டன் துறவு இல்லம் துவக்கப்பட்டுள்ளது

மார்ச்,24,2014. தாய்லாந்தின் முதல் பெனடிக்ட் துறவு இல்லம் அந்நாட்டின் Chiang Mai நகரில் துவக்கப்பட்டுள்ளது
அரசின் கட்டுப்பாடுகளால் வியட்நாமிலிருந்து வெளியேறிய துறவிகளைக்கொண்டு தாய்லாந்தில் முதல் பெனடிக்ட் துறவு இல்லம் திறக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் ஏற்கனவே ஏழு பெண் துறவு இல்லங்கள் உள்ள நிலையில், முதன்முறையாக ஆண் துறவிகளின் இல்லம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இவ்வில்லத்தின் திறப்புவிழா நிகழ்ச்சியில் தாய்லாந்தின் Chiang Mai மறைமாவட்ட ஆயர் Francis Xavier Vira Arpondratana  கலந்துகொண்டார்.

ஆதாரம் : Asianews

9. இலங்கையில் மனித உரிமை மீறல்கள்  தொடர்ந்து இடம்பெறுவதாக பிரிட்டன் மனித உரிமை அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது

மார்ச்,24,2014. இலங்கையில் போர் முடிவடைந்து 5 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் மனித உரிமை மீறல்களும், சித்ரவதைகளும், பாலியல் தாக்குதல்களும் தொடர்ந்து இடம்பெறுவதாக பிரிட்டனில் இருந்து இயங்கும் மனித உரிமை அமைப்பொன்று குற்றஞ்சாட்டியுள்ளது.
9 சட்டவல்லுனர்கள் இணைந்து, பாதிக்கப்பட்ட 40 பேரிடம் பெற்ற வாக்குமூலங்களின் துணையுடன் அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளதாக Foundation for  Human Rights என்ற அமைப்பு தெரிவிக்கிறது.
இலங்கையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட பின்னர் பிரிட்டனுக்குள் நுழைந்த தமிழ் மக்களிடம் விசாரணைகளை மேற்கொண்டபோது இந்த உண்மைகள் தெரியவந்ததாக, இலங்கை மனித உரிமைகள் தொடர்பாக ஐ.நா.வால் நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர் யாஸ்மின் சூக்கா தெரிவித்தார்.
வாக்குமூலங்கள்வழி தெரியவந்த விடயங்கள் நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்களே என தாங்கள் உணர்வதாகவும் இவர் மேலும் கூறினார்.

ஆதாரம் : BBC

10. ஒவ்வோர் ஆண்டும் உலக அளவில் 10 இலட்சம் குழந்தைகள் காச நோயால் பாதிக்கப்படுகின்றனர்

மார்ச்,24,2014. ஒவ்வோர் ஆண்டும் உலக அளவில் 10 இலட்சம் குழந்தைகள் காச நோயால் பாதிக்கப்பட்டுவருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஒவ்வோர் ஆண்டும் 10 இலட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும், மூன்றில் ஒரு குழந்தைக்கு மட்டுமே மருத்துவ சிகிச்சைகள் கிட்டுவதால், குழந்தை இறப்புகள் அதிகமாக இருப்பதாகவும் இவ்வாய்வில் கூறப்பட்டுள்ளது.
2012ம் ஆண்டில் உலகில் ஏறத்தாழ 13 இலட்சம் மக்கள் காச நோயால் உயிரிழந்ததாக WHO எனும் உலக நலவாழ்வு அமைப்பு தெரிவிக்கிறது.
உலக காச நோயாளர் தினம் மார்ச் 24 இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்டது.

ஆதாரம் : தினமணி

No comments:

Post a Comment