Thursday, 20 March 2014

செய்திகள் - 20.03.14

செய்திகள் - 20.03.14
 ------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையின் கேள்வி - நான், எனது, எனக்கு, என்ற பொய் தெய்வங்களை படைத்து, ஆராதனை செய்கிறோமா

2. திருத்தந்தை பிரான்சிஸ் - மனித உழைப்பை வெறும் செல்வம் திரட்டும் ஒரு முயற்சியாக மட்டும் காண்பது தவறு

3. முதல் ஆண்டு நினைவு நாளன்று அமைதிக்காக திருத்தந்தை நட்ட கற்பனை ஒலிவ மரம்

4. திருத்தந்தையின் ஆசீருடன் பயணிக்கும் புனித பெனடிக்ட் அமைதி தீபம்

5. மக்களின் செபங்களே தன்னைப் பாதுகாக்கவேண்டும் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெளிவுபடுத்தினார் - கர்தினால் சாந்த்ரி

6. அக்கறையின்மை உலகமயமாக்கப்படுவது ஆபத்து - கர்தினால் பீட்டர் டர்க்சன்

7. நற்செய்தி கூறும் பரிவு, நம்பிக்கை ஆகிய உயர்ந்த பண்புகளை திருத்தந்தை பிரான்சிஸ் தன் வாழ்வில் வெளிப்படுத்தினார் - இந்தியக் கர்தினால் கிரேசியஸ்

8. மலைப்பாம்புகள் தங்கள் பிறப்பிடத்தைத் தேடி, மீண்டும் சென்றடையும் திறன் பெற்றவை

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையின் கேள்வி - நான், எனது, எனக்கு, என்ற பொய் தெய்வங்களை படைத்து, ஆராதனை செய்கிறோமா

மார்ச்,20,2014. தன்னையே நம்பும் மனிதர், பாலைநிலத்தில் வளர்ந்து, எவ்விதப் பயனும் தராமல் அழிந்துபோகும் புதரைப் போன்றவர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இவ்வியாழன் காலை, புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி ஆற்றியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவாக்கினர் எரேமியாவின் வார்த்தைகளையும் லூக்கா நற்செய்தியையும்  மையப்படுத்தி மறையுரை வழங்கினார்.
தன்னையும், தன் நண்பர்களையும் நம்புவதே நடைமுறை வாழ்வுக்கு ஏற்றது என்று கூறும் நாம், இறைவனை மிகச் சிறிய அளவே நம்புகிறோம் என்பதை எடுத்துரைத்தார் திருத்தந்தை.
இவ்விதம் தன்னிலேயே நம்பிக்கையும், நிறைவும் கண்டு, தன் வீட்டின் கதவு, சன்னல்கள் அனைத்தையும் மூடி வாழ்ந்த செல்வரை நற்செய்தியில் சந்திக்கிறோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
நான், எனது, எனக்கு, என்னுடன் என்ற பலவகை பொய் தெய்வங்களை படைத்து, அவற்றிற்கு ஆராதனை செய்கிறோமா அல்லது, உண்மைக் கடவுளை ஆராதிக்கிறோமா என்ற கேள்வியை தவக்காலத்தில் எழுப்புவது பயனுள்ள ஒரு முயற்சி என்று திருத்தந்தை வலியுறுத்தினார்.
தன் செல்வத்தையும் புகழையும் இழந்து, பாதாளத்தில் துன்புற்ற செல்வர் நமக்கு ஒரு நல்வழியைக் காட்டுகிறார் என்பதையும் தன் மறையுரையின் இறுதியில் கூறினார் திருத்தந்தை.
பாதாளத்தில் இருந்த செல்வர், கண்களை விண்ணோக்கி உயர்த்தி 'தந்தையே' என்று அழைத்தபோது, கடவுள் 'மகனே' என்று பதில் கூறும் வாய்ப்பு உண்டு என்பதை இச்செல்வர் நமக்கு உணர்த்துகிறார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விளக்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் - மனித உழைப்பை வெறும் செல்வம் திரட்டும் ஒரு முயற்சியாக மட்டும் காண்பது தவறு

மார்ச்,20,2014. எஃகுக் கம்பிகள் உற்பத்தியில் Terni தொழிற்சாலை காட்டியுள்ள திறமை இத்தாலிய நாட்டின் எல்லைகளைத் தாண்டி இந்நிறுவனத்தைப் புகழ்பெறச் செய்துள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
மத்திய இத்தாலியில் அமைந்துள்ள Umbria பகுதியில் நிறுவப்பட்டுள்ள Terni என்ற எஃகுத் தொழிற்சாலை, தன் 130வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் தருணத்தில், அத்தொழிற்சாலையின் உரிமையாளர்களையும், தொழிலாளர்களையும் இவ்வியாழன் காலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத்தில் சந்தித்தார்.
Terni தொழிற்சாலையுடன் தொடர்புடையவர்கள், மற்றும் Terni மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அடங்கிய 7000 பேரை இவ்வியாழன் காலை சந்தித்தத் திருத்தந்தை, அவர்களின் உழைப்பையும், தொழில் உலகில் அவர்கள் மேற்கொண்டுள்ள முனைப்பையும்  பாராட்டினார்.
மனித உழைப்பு என்பதை வெறும் செல்வம் திரட்டும் ஒரு முயற்சியாக மட்டும் காண்பது தவறு, அவ்வுழைப்பின் பயனாக மனிதர்கள் மாண்படைய வேண்டும் என்பதை திருத்தந்தை தன் உரையில் வலியுறுத்தினார்.
Terni தொழிற்சாலையை, முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் பார்வையிட்டதை குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொழிலாளர்களும், மறைமாவட்ட மக்களும் இணைந்து வந்திருப்பது, தொழில் உலகில் கிறிஸ்தவ கண்ணோட்டம் வளர வேண்டும் என்பதற்கு ஓர் உந்துசக்தியாக அமைகிறது என்று கூறினார்.
வேலையின்றி தவிக்கும் இளையத் தலைமுறையினரைக் குறித்து தன் கவலையை வெளியிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் வளமானதொரு எதிர்காலத்தை உருவாக்கும் முயற்சியில் நாம் என்றும் மனம் தளரக்கூடாது என்ற வேண்டுதலுடன் அரங்கத்தில் கூடியிருந்தோருக்குத் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. முதல் ஆண்டு நினைவு நாளன்று அமைதிக்காக திருத்தந்தை நட்ட கற்பனை ஒலிவ மரம்

மார்ச்,20,2014. இவ்வுலகில் அமைதி வளரவேண்டும் என்ற நோக்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 19, இப்புதனன்று, ஒரு கற்பனை (Virtual) ஒலிவ மரத்தை நட்டார்.
கடந்த ஆண்டு மார்ச் 19ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவையின் தலைமைப்பணியை ஏற்ற திருப்பலியை கொண்டாடியதன் முதல் ஆண்டு நினைவாக, இந்த முயற்சியை மேற்கொண்ட திருத்தந்தை அவர்கள், இதன் தொடர்ச்சியாக குழந்தைகளும் இளையோரும் கற்பனை ஒலிவ மரங்களை சமூக வலைத்தளங்களில் வளர்த்து, அமைதிக் காட்டை உருவாக்கவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.
"சந்திப்புக் காலாச்சார பள்ளிகள்" என்று பொருள்படும் Scholas Occurrantes (World School Network for Encounter) என்ற அமைப்பினரை இப்புதன் மாலை புனித மார்த்தா இல்லத்தில் சந்தித்தத் திருத்தந்தை, கற்பனை ஒலிவ மரத்தை சமூக வலைதளத்தில் நட்டார்.
குடும்பங்களில் தொடங்கும் அமைதி, பள்ளிகளிலும், விளையாட்டுத் திடல்களிலும் பரவி, அமைதிக் கலாச்சாரம் உலகெங்கும் பரவேண்டும் என்பதே திருத்தந்தையின் விருப்பம் என்று Scholas Occurrantes அமைப்பின் இயக்குனர் Enrique Palmeyro அவர்கள் Zenit செய்தியிடம் கூறினார்.
கடந்த ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அர்ஜென்டீனா, இத்தாலி ஆகிய நாடுகளின் கால்பந்தாட்ட வீரர்களைச் சந்தித்தபோது, சந்திப்புக் காலாச்சார பள்ளிகளின் உலக அமைப்பு ஒன்றை உருவாக்கினார் என்று Zenit செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இந்த முயற்சியில் அடங்கியுள்ள சவால்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நன்கு அறிந்துள்ளதாகவும், இருப்பினும் உலகில் சந்திப்புக் கலாச்சாரத்தை வளர்ப்பது தன் கனவு என்றும் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி / Zenit

4. திருத்தந்தையின் ஆசீருடன் பயணிக்கும் புனித பெனடிக்ட் அமைதி தீபம்

மார்ச்,20,2014. புனித பெனடிக்ட் பெயரால் இத்தாலியின் பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படும் அமைதி தீபத்தை புனித பேதுரு வளாகத்திற்குச் சுமந்துவந்த குழுவினரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் புதன் பொது மறையுரையின் இறுதியில் ஆசீர்வதித்தார்.
Monte Cassino என்ற இடத்தில், 529ம் ஆண்டு Nursia நகரின் புனித பெனடிக்ட் உருவாக்கிய ஒரு தவ இல்லம், 1944ம் ஆண்டு நடைபெற்ற போரில் அழிக்கப்பட்டு, மீண்டும் எழுப்பப்பட்டது.
மீண்டும் எழுப்பப்பட்ட தவ இல்லத்தின் 70ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி புனித பெனடிக்ட் அமைதி தீபம் இத்தாலியின் பல நகரங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு, மார்ச் 21, இவ்வேள்ளியன்று Monte Cassino சென்றடைகிறது.
இவ்வெள்ளியன்று நடைபெறும் 70ம் ஆண்டு நிறைவு விழாவில் திருத்தந்தையின் சார்பில், திருப்பீட குடும்பங்கள் அவையின் முன்னாள் தலைவர் கர்தினால் Ennio Antonelli அவர்கள் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. மக்களின் செபங்களே தன்னைப் பாதுகாக்கவேண்டும் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெளிவுபடுத்தினார் - கர்தினால் சாந்த்ரி

மார்ச்,20,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி தனக்காக வேண்டிக்கொள்ளும்படி மக்களிடம் விண்ணப்பித்தபோது, மக்களின் செபங்களே தன்னைப் பாதுகாக்கவேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தினார் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
வடஇத்தாலியின் Trieste நகரில் அமைந்துள்ள புனித Justus பேராலயத்தில் மார்ச் 19, இப்புதன் மாலை, உரையாற்றிய கீழை வழிபாட்டு முறை பேராயத்தின் தலைவர் கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பணிவாழ்வின் முதல் ஆண்டைக் குறித்துப் பேசினார்.
கடந்த ஆண்டு, மார்ச் 19ம் தேதி தன் தலைமைப் பணியை ஏற்றத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித யோசேப்பு திருக்குடும்பத்தின் காவலராக இருந்ததுபோல், தன் பணியின் தலையாயக் கடமை திருஅவை என்ற குடும்பத்தைக் காப்பது என்று கூறியதை கர்தினால் சாந்த்ரி அவர்கள் நினைவுகூர்ந்தார்.
திருஅவை என்ற குடும்பத்தின் காவலர்கள் என்ற கருத்தை வாழ்ந்துகாட்டியவர்கள், புனிதர்களாக உயர்த்தப்படவிருக்கும் திருத்தந்தையர் 23ம் ஜான், மற்றும் 2ம் ஜான்பால் ஆகிய இருவரும் என்று கர்தினால் சாந்த்ரி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
"முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களின் வாழ்வும், அவரின் உருவமும்" என்ற தலைப்பில் கர்தினால் சாந்த்ரி அவர்கள் வழங்கிய இவ்வுரையில், திருத்தந்தை 2ம் ஜான்பால் தன் வாழ்வின் இறுதியில் பேச்சற்று இருந்தாலும், அவரது கனிவு மிகுந்த உருவம் பல பாடங்களைக் கூறியது என்று எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. அக்கறையின்மை உலகமயமாக்கப்படுவது ஆபத்து - கர்தினால் பீட்டர் டர்க்சன்

மார்ச்,20,2014. தென் சூடான் நாட்டில் அமைதி நிலைபெறவேண்டும் என்பது தன் செபம் என்றும், அக்கறையின்மை உலகமயமாக்கப்படுவது ஆபத்து என்றும் வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மார்ச் 18, இச்செவ்வாய் முதல், மார்ச் 23, வருகிற ஞாயிறு முடிய தென் சூடான் நாட்டில் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள, நீதி மற்றும் அமைதி திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், Juba நகரின் புனித யோசேப்பு ஆலயத்தில் இவ்வாறு கூறினார்.
அக்கறையின்மையை உலகெங்கும் வளர்ப்பதற்குப் பதிலாக, நிலையான அமைதியை உலகெங்கும் எடுத்துச் செல்வது கிறிஸ்தவர்களின் முக்கியப் பணி என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிவருவதை கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.
Ghana நாட்டைச் சேர்ந்த கர்தினால் டர்க்சன் அவர்கள், தங்கள் நாட்டுக்கு வந்திருப்பது திருத்தந்தையின் அருகாமையையும், ஆசீரையும் தங்களுக்குக் கொணர்ந்துள்ளது என்று தென் சூடான் திருப்பீடத் தூதர், பேராயர் Charles Daniel Balvo அவர்கள் கூறினார்.
இவ்வியாழனன்று கர்தினால் டர்க்சன் அவர்கள், தென் சூடான், சூடான் ஆகிய நாடுகளின் ஆயர்களைச் சந்தித்தபின், தென் சூடான் நாட்டுத் தலைவரையும் சந்திக்கிறார்.
மார்ச் 23, ஞாயிறன்று Kator நகரில் உள்ள புனித தெரேசா பேராலயத்தில் ஆற்றும் திருப்பலியுடன் கர்தினால் டர்க்சன் அவர்களின் தென் சூடான் பயணம் நிறைவு பெறுகிறது.

ஆதாரம் : Zenit

7. நற்செய்தி கூறும் பரிவு, நம்பிக்கை ஆகிய உயர்ந்த பண்புகளை திருத்தந்தை பிரான்சிஸ் தன் வாழ்வில் வெளிப்படுத்தினார் - இந்தியக் கர்தினால் கிரேசியஸ்

மார்ச்,20,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் முதலாம் ஆண்டு பணிவாழ்வில் மக்களை எளிதில் கவர்ந்தார் என்றும், நற்செய்தி கூறும் பரிவு, நம்பிக்கை ஆகிய உயர்ந்த பண்புகளை தன் வாழ்வில் வெளிப்படுத்தினார் என்றும் இந்தியக் கர்தினால் ஒருவர் கூறினார்.
மார்ச் 19, இப்புதனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் தலைமைப் பணியேற்பு நாளின் முதலாம் ஆண்டை நிறைவு செய்ததற்காக நன்றித் திருப்பலியாற்றிய மும்பைப் பேராயர், கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ் அவர்கள், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
தன் எளிமையாலும், பணிவாலும் உலகினர் கவனத்தை ஈர்த்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அகில உலகத் திருஅவைக்கு நம்பிக்கை ஆண்டில் அளவற்ற வரங்களைக் கொணர்ந்தார் என்று கர்தினால் கிரேசியஸ் அவர்கள் கூறினார்.
வறுமையில் வாடும் சகோதர சகோதரிகளுடன் நம்மையே அனுபவப்பூர்வமாக இணைப்பது ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் தவக்காலச் செய்தியில் கூறியுள்ளதை, கர்தினால் கிரேசியஸ் அவர்கள் தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
தன் தலைமைப் பணியைத் துறந்த முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் நாம விழா, இப்புதனன்று நாம் கொண்டாடிய புனித யோசேப்பின் திருவிழா என்பதையும் கர்தினால் கிரேசியஸ் அவர்கள் நன்றியோடு நினைவு கூர்ந்தார்.

ஆதாரம் : AsiaNews

8. மலைப்பாம்புகள் தங்கள் பிறப்பிடத்தைத் தேடி, மீண்டும் சென்றடையும் திறன் பெற்றவை

மார்ச்,20,2014. மலைப்பாம்புகள் தங்கள் பிறப்பிடத்தைத் தேடி, மீண்டும் சென்றடையும் திறன் பெற்றவை என்று Royal Society - Bilogy Letters என்ற அறிவியல் இதழ் ஒன்று கூறியுள்ளது.
Florida மாநிலத்தில் Everglades பகுதியில் பிடிக்கப்பட்டு 23 மைல்களுக்கு அப்பால் கொண்டுசெல்லப்பட்ட மலைப்பாம்புகள், விடுவிக்கப்பட்டதும், அவை தன் பிறப்பிடத்திற்குத் திரும்பியுள்ளன என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வானொலி அலைக் கருவிகள் பொருத்தப்பட்ட இந்தப் பாம்புகள், விரைவாகத் தங்கள் பிறப்பிடத்திற்குத் திரும்பியதைப் பதிவு செய்த அறிவியலாளர்கள், பிறப்பிடம் திரும்ப பாம்புகள் காட்டிய வேகம் தங்களை வியப்பில் ஆழ்த்தியது என்றும் கூறியுள்ளனர்.
கடல் ஆமைகள் தங்கள் பிறப்பிடத்தைக் கண்டுபிடித்து மீண்டும் செல்வது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ள அறிவியல் உண்மை என்று கூறும் ஆய்வாளர்கள், அதேபோல், மலைப்பாம்புகளுக்கும் திசையறியும் உணர்வுகள் உள்ளன என்று கூறினர்.
கடல் ஆமைகள் விண்மீன்களின் இடத்தைக் கணித்து தங்கள் திசையை அறிவதுபோல, மலைப்பாம்புகள், சூரிய ஒளிகொண்டும், பூமியில் உள்ள வேறுபட்ட மணங்களின் துணைகொண்டும் தங்கள் வழியைக் கண்டுபிடிக்கின்றன என்று அறிவியலாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

ஆதாரம் : BBC

No comments:

Post a Comment