Tuesday, 29 October 2013

சென்னையின் கலங்கரை விளக்கம் உருவான வரலாறு

சென்னையின் கலங்கரை விளக்கம் உருவான வரலாறு

மெட்ராஸ் வெறும் மணல் வெளியாக இருந்த காலத்தில் இங்கிருந்த மீனவர்கள் சிறிய கட்டுமரங்களைத்தான் பயன்படுத்தினார்கள். அவர்கள் கடலில் மீன் பிடித்துவிட்டு திரும்பும்போது, இருள் நேரத்தில் கரையில் அவர்கள் வீட்டுப் பெண்கள் பெரிய தீப்பந்தங்களை ஏந்தியபடி காத்திருப்பார்கள். அதுதான் அவர்களுக்கு கரையைக் காட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தது. பின்னர் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் இங்கு கோட்டை கட்டி வாழத் தொடங்கியதும், அவர்களுக்கான சரக்குகளை ஏற்றியபடி பெரிய கப்பல்கள் இங்கிலாந்தில் இருந்து இந்தப் பகுதிக்கு வரத்தொடங்கின. 1796ல் தான் முதன்முறையாக ஜார்ஜ் கோட்டையில் இன்று கோட்டை அருங்காட்சியகம் இருக்கும் கட்டடத்தின் உச்சியில் ஒரு எச்சரிக்கை விளக்கு பொருத்தப்பட்டது. இதுதான் சென்னையின் முதல் கலங்கரை விளக்கம். இந்த கட்டடத்தின் மேல்தளத்தில் ஒரு பெரிய எண்ணெய் விளக்கு எரிந்துகொண்டிருக்கும். கோட்டை இருக்கும் இடத்தை அறிந்து கப்பலை செலுத்த இது உதவியாக இருந்தது. ஏறக்குறைய 50 ஆண்டுகள் (1841) வரை இங்கிலாந்திலிருந்து வந்த கிழக்கிந்திய கப்பல்கள் இந்த விளக்கைத்தான் நம்பி இருந்தன. 1841ம் ஆண்டு 161 அடி உயர கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. இதில் பொருத்துவதற்காக இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் நகரிலிருந்து வரவேண்டிய விளக்கு  உரிய நேரத்தில் கிடைக்காததால், கோட்டையில் இருந்த பெரிய லாந்தர் விளக்கையே இதன் உச்சியில் வைத்துவிட்டனர். ஏறக்குறைய 3 ஆண்டுகள்வரை இந்த லாந்தர்தான் கலங்கரை விளக்கமாக செயல்பட்டது. பின்னர் 1844ம் ஆண்டு அந்த நவீன விளக்கு கலங்கரை விளக்கத்தின் உச்சியில் வைக்கப்பட்டது. இது சாதாரண விளக்கைப் போல தொடர்ந்து எரியாமல், விட்டுவிட்டு ஃபிளாஷ் அடிக்கும். எனவே மற்ற விளக்குகளில் இருந்து இதனை எளிதாகப் பிரித்தறிய முடியும், வெளிச்சமும் கூடுதலாக இருக்கும். இந்தக் கலங்கரை விளக்கம் 50 ஆண்டுகளுக்குப் பின்னர், உயர்நீதிமன்றத்தின் 175 அடி உயரமான மாடம் ஒன்றிற்கு மாற்றப்பட்டது. 1894ம் ஆண்டு இந்த மாடத்தில் ஏறிய கலங்கரை விளக்கம் 1977ம் ஆண்டு வரை அங்குதான் இருந்தது. பின்னர் இது, மெரினா கடற்கரையில் சாந்தோமிற்கு அருகில் இப்போது இருக்கும் இடத்தை வந்தடைந்தது. இந்தக் கலங்கரை விளக்கம்தான் இந்தியாவிலேயே லிப்ஃட் வசதி கொண்ட ஒரே கலங்ரை விளக்கமாகும்.

ஆதாரம் : இன்று ஒரு தகவல்


 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...