செய்திகள் - 30.09.13
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தையர்கள் 23ம் ஜான் அவர்களும், 2ம் ஜான் பால் அவர்களும் 2014 ஏப்ரல் 27ல் புனிதர்களாக அறிவிக்கப்படவுள்ளனர்
2. திருத்தந்தை : மனிதகுல வருங்காலம், முதியோரிலும் குழந்தைகளிலும் உள்ளது
3. எந்த ஒரு மதத்தின் விழுமியங்கள் வழியாகவும் வன்முறைக்கு நியாயம் கற்பிக்கமுடியாது - திருத்தந்தை
4. 2014ம் ஆண்டின் சமூகத்தொடர்பு நாளுக்கான கருப்பொருள்
5. திருத்தந்தை : சமூகத்திற்கு மேலும் மனிதம் நிறைந்த முகத்தை வழங்குவோம்
6. திருத்தந்தையின் ஞாயிறு மறையுரையும், மூவேளை செப உரையும்
7. மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி மேம்பாட்டிற்காக உழைக்க ஆயர் வேண்டுகோள்
8. இலங்கையில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடத்தப்படக்கூடாது : ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தையர்கள் 23ம் ஜான் அவர்களும், 2ம் ஜான் பால் அவர்களும் 2014 ஏப்ரல் 27ல் புனிதர்களாக அறிவிக்கப்படவுள்ளனர்
செப்.30,2013. முத்திப்பெற்ற திருத்தந்தையர்கள் 23ம் ஜான் அவர்களும், 2ம் ஜான் பால் அவர்களும் வருகிற ஆண்டு ஏப்ரல் மாதம் 27ம் தேதி, ஞாயிறன்று, திருஅவையில் புனிதர்களாக அறிவிக்கப்படவுள்ளதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திங்களன்று அறிவித்தார்.
2014ம் ஆண்டு கிறிஸ்து உயிர்ப்பு ஞாயிறுக்குப்பின் வரும் முதல் ஞாயிறன்று, அதாவது இறை இரக்கத்தின் ஞாயிறன்று, வத்திக்கானில் இடம்பெறும் திருப்பலிக்கொண்டாட்டத்தின்போது இவ்விருவரும் புனிதர்களாக அறிவிக்கப்படுவர்.
உயிர்ப்புக்குப்பின்வரும்
முதல் ஞாயிறை இறை இரக்கத்தின் ஞாயிறாக அறிவித்த திருத்தந்தை
இரண்டாம் ஜான் பால் அவர்களின் முத்திப்பேறு பெற்ற அறிவிப்பு விழா, 2011ம் ஆண்டு, மே முதல் தேதி, அதே இறை இரக்கத்தின் ஞாயிறன்று இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை : மனிதகுல வருங்காலம், முதியோரிலும் குழந்தைகளிலும் உள்ளது
செப்.30,2013. மக்களின் வருங்காலம் இங்கேதான் உள்ளது, அதாவது
முதியோரிலும் குழந்தைகளிலும் அது உள்ளது என இத்திங்களன்று புனித மார்த்தா
சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை
பிரான்சிஸ்.
குழந்தைகளையும் முதியோரையும் குறித்து அக்கறைகொள்ளாத சமூகத்திற்கு வருங்காலம் என்று ஒன்று இல்லை, ஏனெனில் அங்கு பழைய நினைவுகளும் இல்லை, வாக்குறுதிகளும் இல்லை என்ற திருத்தந்தை, இவ்விருவரையும் சார்ந்தே
வருங்காலம் உள்ளது எனவும் எடுத்துரைத்தார்.
இத்தகைய பின்னணியில் திருஅவை குறித்தும் எடுத்துரைத்த திருத்தந்தை, திருஅவையில் பழைய நினைவுகளும் வாக்குறுதிகளும் மறக்கப்படும்போது, அத்திருஅவை, அதிகாரத்திற்கான போராட்டத்தைக் கொண்டதாகவும், பொறாமைக்குணம் நிறைந்ததாகவும் மாறும் எனவும் எடுத்துரைத்தார்.
முதியோர்கள் நமக்கு அமைதியை நினைவூட்டுபவர்களாக உள்ளார்கள் என்ற திருத்தந்தை, அமைதியும் மகிழ்வுமே திருஅவையின் சூழல் எனவும் தெரிவித்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. எந்த ஒரு மதத்தின் விழுமியங்கள் வழியாகவும் வன்முறைக்கு நியாயம் கற்பிக்கமுடியாது - திருத்தந்தை
செப்.30,2013. மதத் தலைவர்கள் அனைவரும் அமைதிக்காக செபிக்க முன்வரவேண்டும், அதில் ஒருவருக்கு எதிராக மற்றவர்கள் இருப்பதாக அல்லாமல், ஒருவர்
அருகில் மற்றவர் நின்று ஒத்துழைக்கும் உழைப்பாளர்களாக இருக்கவேண்டும்
என்று அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
San Edigio என்ற கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பின் அங்கத்தினர்களை இத்திங்களன்று காலை திருப்பீடத்தில் சந்தித்து, உரைவழங்கியத் திருத்தந்தை, ஒரு சிலரின் மனங்களை சிறைப்படுத்தியிருக்கும் வன்முறை, பலரின் வாழ்வை அழிக்க நாம் அனுமதிக்கக் கூடாது என்றும் கூறினார்.
வன்முறை எவ்வழிகளில் வெளிப்படுத்தப்பட்டாலும், அதற்கு எந்நாளும் எந்த ஒரு மதத்தின் விழுமியங்கள் வழியாகவும், நியாயம் கற்பிக்கமுடியாது என்பதையும் எடுத்துரைத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதிக்காக உழைப்பதும், செபிப்பதும் ஒவ்வொருவரின் கடமை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. 2014ம் ஆண்டின் சமூகத்தொடர்பு நாளுக்கான கருப்பொருள்
செப்.,30,2013. “சமூகத்தொடர்பு சாதனங்கள், உண்மையான கலாச்சாரச் சந்திப்பின் பணியில்” என்ற தலைப்பை 2014ம் ஆண்டின் அனைத்துலக சமூகத்தொடர்பு நாளுக்கான கருப்பொருளாகத் தேர்ந்தெடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கலாச்சாரங்கள் வழியாகவே மற்ற மக்களை மிகவும் அர்த்தமுள்ள வழியில் நாம் சந்திக்கின்றோம் என்பதை இத்தலைப்பு வலியுறுத்துகின்றது.
உலக
ஆயர்களின் வேண்டுகோளின்பேரில் பல நாடுகளில் பெந்தெகோஸ்தே விழாவுக்கு
முன்வரும் ஞாயிறன்று சமூகத்தொடர்பு நாள் திருஅவையில்
சிறப்பிக்கப்படுகின்றது.
48வது அனைத்துலக சமூகத்தொடர்பு நாள் 2014ம் ஆண்டு ஜூன் முதல் தேதியன்று சிறப்பிக்கப்படவுள்ளது.
இந்நாளுக்கான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செய்தி, 2014ம் ஆண்டு சனவரி 24, புனித பிரான்சிஸ் தெ சேல்ஸ் விழாவன்று வெளியிடப்படும். இப்புனிதர் ஊடகவியலாளரின் பாதுகாவலர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. திருத்தந்தை : சமூகத்திற்கு மேலும் மனிதம் நிறைந்த முகத்தை வழங்குவோம்
செப்.30,2013. பகைமையையும் இருளையும் காணுமிடத்தில், சமூகத்திற்கு
மேலும் மனிதம் நிறைந்த முகத்தை வழங்கும் நோக்கில் அன்பையும்
நம்பிக்கையையும் கொணர்வோமாக என்று இத்திங்களன்று தனது டுவிட்டர்
பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இதே நாளில் திருப்பீடச்செயலகமும் தன் டுவிட்டர் பக்கத்தில் 'ஏழ்மையும் சமூக புறந்தள்ளல்களும், ஆயுதம் தாங்கி போரிடுவதற்கு குழந்தைகளைக் காட்டாயப்படுத்தும் நிலைக்கு உதவுவதாக உள்ளது' என எழுதியுள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. திருத்தந்தையின் ஞாயிறு மறையுரையும், மூவேளை செப உரையும்
செப்.30,2013. கடவுளைப்பற்றிய நினைவுகள் இல்லையெனில் அனைத்தும் சுயநலமுடையதாகவும், தன் சுகங்கள் பற்றியே சிந்திக்கும் மனதுடையதாகவும் மாறிவிடும் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
விசுவாச
ஆண்டையொட்டி வத்திக்கான் நகரில் இடம்பெற்ற கருத்தரங்கில் பங்குபெற
உலகமனைத்திலிருந்தும் வந்திருந்த வேதியர்களுக்கு இஞ்ஞாயிறன்று உரோம் நகர்
தூய பேதுரு பேராலய வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவன் குறித்த நினைவுகளை மற்றவர்களில் தூண்டவேண்டியது வேதியர்களின் கடமை என்றார்.
திருஅவைக் கோட்பாடுகளை அதன் முழுமைத்தனமையோடு, அதிலிருந்து எதுவும் குறைக்காமலும், அதனோடு எதையும் இணைக்காமலும் அறிவிக்கவேண்டிய கடமைகளையும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
இறைவனைக்குறித்த நினைவுகள் இல்லா நிலையில், வாழ்வும், உலகும், அதன் மக்களும் செயற்கையானதுபோல் மாறி, சுயநலம் ஒன்றே அங்கு தேங்கி நிற்பதாக தோற்றமளிக்கும் எனவும் உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடியிருந்த திருப்பலியில், இறைவனைக் குறித்த நினைவுகளை போற்றி பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
திருப்பலியின்
இறுதியில் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த விசுவாசிகளோடு இணைந்து
நண்பகல் மூவேளை செபத்தைச் செபித்தத் திருத்தந்தை வழங்கிய உரையில், அத்திருப்பலியில் பங்குபெற்ற அந்தியோக்கியாவின் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை பத்தாம் Youhanna அவர்களை வாழ்த்தியதோடு, சிரியா மற்றும் மத்திய கிழக்குப்பகுதியின் அமைதிக்காக செபிக்கவேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தினார்.
1947ம் ஆண்டு திருமறைக்காகக் கொல்லப்பட்ட குரோவேசிய மறைமாவட்ட குரு Miroslav Bulešić, கடந்த
சனிக்கிழமையன்று முத்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்பட்டது பற்றியும் தன்
மூவேளை செப உரையில் குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பலவீனமானவர்களும் உறுதியான சாட்சிகளாக விளங்க பலத்தை வழங்கும் இறவனைப் புகழ்வோம் என மேலும் கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
7. மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி மேம்பாட்டிற்காக உழைக்க ஆயர் வேண்டுகோள்
செப்.30,2013. மட்டக்களப்பு மாவட்டத்தில் 42 விழுக்காட்டு மாணவர்கள் 6ம் வகுப்போடு கல்வியை நிறுத்திவருவது, அதிர்ச்சியைத் தரும் செய்தியாக உள்ளது என தன் கவலையை வெளியிட்டுள்ளார் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா.
மட்டக்களப்பு
மாவட்ட கல்வி மேம்பாடு தொடர்பாக சனிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில்
உரையாற்றும்போது இவ்வாறு குறிப்பிட்ட ஆயர் பொன்னையா அவர்கள், அதே
போன்று 20 வயதுக்கும் குறைந்த இளம்பெண்கள் கர்ப்பமடைவதும் மட்டக்களப்பு
மாவட்டத்தில் அதிகரித்துள்ளது என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்தார்.
தேசிய அளவில் 20 வயதுக்கும் குறைந்த இளம்பெண்கள் 6.5 விழுக்காட்டினர் வீதம் கர்ப்பமடையும் நிலையில், இது மட்டக்களப்பு மாவட்டத்தில் 10.6 விழுக்காடாக அதிகரித்துள்ளது, அவர்களின் கல்வியினையும் பாதிக்கின்றது என்றார் ஆயர்.
பல்லின, பலமத, பலமொழி
கலாசாரங்களைக் கொண்டச் சூழலில் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் தழைத்தோங்க
கல்வி அடிப்படை காரணமாகும் என்பதை வலியுறுத்திய மட்டக்களப்பு ஆயர் பொன்னையா
அவர்கள், மாவட்டத்தின் கல்விநிலையை மேம்படுத்தவும் கல்வியை ஊக்கவிக்கவும் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
ஆதாரம் : நெருப்பு
8. இலங்கையில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடத்தப்படக்கூடாது : ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்
செப்.30,2013. இலங்கையின்
மனித உரிமை நிலைமைகள் குறித்து திருப்தி அடைய முடியாத காரணத்தினால் அங்கு
காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடத்தப்படக் கூடாது என ஆம்னஸ்டி
இன்டர்நேஷனல் எனும் அனைத்துலக மனித உரிமைகள் அமைப்புக் கோரியுள்ளது.
மேலும், இலங்கையில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் அமர்வு நடத்தப்படுவதனை தடைசெய்ய வேண்டுமெனவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து, காமன்வெல்த் நாடுகள் அமைப்பு வெட்கப்படக்கூடிய வகையில் மௌனம் காத்து வருவதாகவும் அவ்வமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
No comments:
Post a Comment