Friday, 27 April 2012

Catholic News in Tamil - 26/04/12

1. சீனக் கத்தோலிக்க திருஅவைக்கான நிறையமர்வுக் கூட்ட அறிக்கை

2. சமுதாய முன்னேற்றம் நன்னெறிகளின் அடிப்படையில் திட்டமிடப்பட வேண்டும் என்பதை திருப்பீடம் ஐ.நா. அவையிடம் வலியுறுத்துகிறது - திருப்பீட அதிகாரி

3. வத்திக்கான் இரகசிய ஆவணங்கள் அனுமதியின்றி வெளியிடப்பட்டது குறித்து ஆராய கர்தினால்கள் குழு

4. செப்டம்பர் மாதம் திருத்தந்தை தங்கள் நாட்டுக்கு வருகை தருவதை லெபனான் நாட்டு மக்கள் ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர்

5. மனிதகுல நன்மைக்கு ஒன்றிணைந்து உழைக்க இந்தோனேசிய கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய குழுக்கள் ஒப்பந்தம்

6. அன்டார்டிக் பகுதியில் உருவாகும் வெப்ப நீரினால் பனி உருகி கடல் மட்டம் வேகமாக உயரும் ஆபத்து உள்ளது - ஆய்வறிக்கை

7. முல்லைப்பெரியாறு அணை வலுவாக உள்ளது:வல்லுநர் குழு

------------------------------------------------------------------------------------------------------

1. சீனக் கத்தோலிக்கத் திருஅவைக்கான நிறையமர்வுக் கூட்ட அறிக்கை

ஏப்ரல்,26,2012. சீனக் கத்தோலிக்கத் திருஅவைக்கானத் திருப்பீட அவை இவ்வாரம் மேற்கொண்ட நிறையமர்வுக் கூட்டத்தில் சீனக் கத்தோலிக்க விசுவாசிகளுக்கான பயிற்சிமுறைகள் குறித்து ஆய்வு செய்தது.
இவ்வாரம் திங்கள் முதல் புதன் வரை இடம்பெற்ற இந்தக்கூட்டத்தில், சீனக் கத்தோலிக்கர்கள், தாங்களும் திருஅவையின் ஓர் அங்கம் என்பதை உணர்ந்து செயல்பட தேவையான பயிற்சியை வழங்குதல் என்பது முதல் கருத்தாக விவாதிக்கப்பட்டது.
இரண்டாவதாக, சமூகக் குடிமக்கள் என்ற முறையில் சீனக் கத்தோலிக்கர்கள் வாழ்வையும் குடும்பத்தையும் அன்பு கூர்பவர்களாகவும், சீனக்கலாச்சார மதிப்பீடுகளை ஊக்குவிப்பவர்களாகவும், தங்கள் நாட்டை அன்புகூர்ந்து வாழ்பவர்களாகவும் செயல்பட ஊக்கமளித்தல் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.
மூன்றாவதாக, விசுவாசிகள் இறைவனின் கொடைகளைப் பெற்று, பங்குத்தள அளவில் உயிர்த் துடிப்புடைய உறுப்பினர்களாகச் செயல்பட உதவ வேண்டியது அவசியம் என்ற கருத்து எடுத்துரைக்கப்பட்டது.
இம்மூன்று முக்கிய கூறுகள் தவிர, வயது வந்தோர் திருமுழுக்கு பெறுவதற்குத் தயாரித்தல், தங்கள் மேய்ப்புப்பணிகளை ஆற்றமுடியாமல் சிறைத்தண்டனைகளையும் கட்டுப்பாடுகளையும் எதிர்கொள்ளும் ஆயர்கள் மற்றும் குருக்களுடன் ஒருமைப்பாடுதிருத்தந்தையின் அனுமதியின்றி ஆயர் மற்றும் குருத்துவ திருநிலைப்பாட்டைப் பெற்றுள்ளவர்கள் நிலை, அண்மைக்காலங்களில் தேவ அழைத்தல்களின் எண்ணிக்கைக் குறைந்து வருதல், வரும் மே 24ம் தேதி சீனத் திருஅவைக்கான செப நாள் சிறப்பிக்கப்படல் போன்றவை குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


2. சமுதாய முன்னேற்றம் நன்னெறிகளின் அடிப்படையில் திட்டமிடப்பட வேண்டும் என்பதை திருப்பீடம் ஐ.நா. அவையிடம் வலியுறுத்துகிறது - திருப்பீட அதிகாரி

ஏப்ரல்,26,2012. உண்மையான பொருளாதார முன்னேற்றமும், சமுதாய முன்னேற்றமும் வெறும் பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படையில் மட்டும் உருவாக்கப்படுவதில் பொருள் இல்லை என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
அண்மையில் கத்தார் தலைநகர் Dohaவில் நடைபெற்ற வர்த்தகம் மற்றும் முன்னேற்றம் குறித்த ஐ.நா. கருத்தரங்கில், திருப்பீடத்தின் சார்பில் ஜெனீவாவில் உள்ள ஐ.நா. அமைப்பின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி  உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
2000மாம் ஆண்டுகளின் துவக்கத்தில் இருந்தே சரிவை நோக்கிச் சென்ற உலகப் பொருளாதாரம், 2008ம் ஆண்டு நெருக்கடியான நிலையைச் சந்தித்தது என்று சுட்டிக்காட்டிய பேராயர் தொமாசி, இந்த நெருக்கடியால் 3 கோடி மக்கள் வேலைகளை முற்றிலும் இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதும், பல நாடுகளின் அரசியல், கலாச்சார நிலைகள் மாறியதும் நமக்கு பல உண்மைகளை உணர்த்தியது என்று கூறினார்.
இப்பொருளாதாரச் சரிவுக்கு அடிப்படை காரணம் வெறும் பொருளாதாரம் மட்டுமல்ல, மாறாக, இது ஒரு நன்னெறி கோட்பாடுகளின் நெருக்கடி என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் எழுதிய Caritas in Veritate என்ற சுற்று மடலில் எழுதியுள்ளதை தன் உரையில் சுட்டிக்காட்டிப் பேசினார் பேராயர் தொமாசி.
சமுதாயத்தின் கீழ் மட்டத்தில் உள்ள மக்களை முன்னேற்றும் வழிகளைத் தீர ஆய்வு செய்வதன் மூலம், நிலையான நீடித்த முன்னேற்றத்தை மனித சமுதாயம் காணமுடியும் என்பதையும், இந்த முன்னேற்றம் நன்னெறிகளின் அடிப்படையில் திட்டமிடப்பட வேண்டும் என்பதையும் திருப்பீடம் ஐ.நா. அவையிடம் வலியுறுத்துகிறது என்று திருப்பீட அதிகாரி தன் உரையில் எடுத்துரைத்தார்.


3. வத்திக்கான் இரகசிய ஆவணங்கள் அனுமதியின்றி வெளியிடப்பட்டது குறித்து ஆராய கர்தினால்கள் குழு

ஏப்ரல்,26,2012. திருப்பீடத்தின் சில இரகசிய ஆவணங்கள் அண்மைக்காலத்தில் அதிகாரப்பூர்வ அனுமதியின்றி வெளியிடப்பட்டு சமூகத்தொடர்புச் சாதனங்களில்  விவாதிக்கப்பட்டது குறித்து ஆராய கர்தினால்களைக் கொண்ட ஆய்வுக்குழு ஒன்றை உருவாக்கியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இரகசிய ஆவணங்கள் வெளியாகியுள்ளது குறித்து விசாரித்து, அதனால் எழுந்துள்ள தப்பெண்ணங்களை மாற்றுவதற்கு உதவ உருவாக்கப்பட்டுள்ள இக்குழுவின் தலைவராக கர்தினால் Julián Herranzம் அக்குழுவின் உறுப்பினர்களாக கர்தினால்கள் Jozef Tomko மற்றும் Salvatore De Giorgiம்  செயல்படுவர்.
திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள இக்குழு இவ்வாரம் செவ்வாயன்று கூடி, தங்கள் ஆய்வுப்பணிகளுக்கான கால அட்டவணை மற்றும் வழிமுறைகள் குறித்து ஆராய்ந்தது.
வத்திக்கான் நிதிநிலை குறித்து பேராயர் Carlo Maria Vigano தன் கருத்துக்களை வெளியிட்டு எழுதிய கடிதம், திருப்பீடச்செயலருக்கும் மிலான் கர்தினாலுக்கும் இடையே கத்தோலிக்க மருத்துவமனை குறித்து இடம்பெற்ற கடிதப் பரிமாற்றம்  போன்ற சில இரகசிய ஆவணங்கள் எவ்வாறு பத்திரிகையாளர் கைகளுக்குச் சென்றன என்பது குறித்தும், இதற்கான பதில்மொழிகள் குறித்தும் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள புதிய குழு ஆய்வு செய்யும்.


4. செப்டம்பர் மாதம் திருத்தந்தை தங்கள் நாட்டுக்கு வருகை தருவதை லெபனான் நாட்டு மக்கள் ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர்

ஏப்ரல்,26,2012. லெபனான் நாட்டு மக்கள் திருத்தந்தையின் மீது ஆழ்ந்த அன்பு கொண்டவர்கள் என்றும் செப்டம்பர் மாதம் திருத்தந்தை தங்கள் நாட்டுக்கு வருகை தருவதை அவர்கள் மிக ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர் என்றும் இத்திருப்பயணத்தை ஏற்பாடு செய்து வரும் அருள்தந்தை Marwan Tabet கூறினார்.
வருகிற செப்டம்பர் மாதம் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெறும் இத்திருப்பயணத்தை வத்திக்கான் அதிகாரிகளுடன் இணைந்து திட்டமிட்டு வரும் அருள்தந்தை Tabet, வத்திக்கான் வானொலிக்கு அண்மையில் அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.
கடந்த சில மாதங்களாகவே திருத்தந்தையின் பயணம் குறித்து லெபனான் நாட்டில் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் எதிர்பார்த்து வந்தாலும், உயிர்ப்புத் திருநாளன்று திருத்தந்தையின் திருப்பயணத்திற்கான திட்டவட்டமான தேதிகள் வெளியானதும், அனைவரும் இச்செய்தியினை ஆர்வமாய் வரவேற்றனர் என்று அருள்தந்தை Tabet எடுத்துரைத்தார்.
லெபனான் நாட்டுத் தலைவர்கள் மட்டுமல்லாமல், மத்திய கிழக்குப் பகுதியின் பல நாடுகளிலிருந்தும், வட ஆப்ரிக்க நாடுகளிலிருந்தும் முக்கியமான தலைவர்கள் திருத்தந்தையின் பயணத்தின்போது லெபனான் நாட்டுக்கு வருகை தர உள்ளனர் என்று அருள்தந்தை Tabet கூறினார்.
மத்திய கிழக்குப் பகுதியில், முக்கியமாக சிரியாவில் நடைபெற்று வரும் வன்முறைகளைப் பற்றி தொடர்ந்து அறிந்து வரும் திருத்தந்தை, இப்பகுதியில் அமைதி திரும்புவதற்கு செபிக்குமாறு அடிக்கடி வேண்டுகோள் விடுத்து வருவது, இப்பகுதியின் மீது திருத்தந்தை கொண்டுள்ள அக்கறையைக் காட்டுகிறது என்று அருள்தந்தை Tabet தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.


5. மனித குல நன்மைக்கு ஒன்றிணைந்து உழைக்க இந்தோனேசிய கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய குழுக்கள் ஒப்பந்தம்

ஏப்ரல்,26,2012. மனிதகுலத்தின் நன்மைக்காக ஒன்றிணைந்து உழைப்பது குறித்த புரிதல் ஒப்பந்தத்தில் இந்தோனேசியாவின் இரண்டாவது மிகப்பெரிய இஸ்லாமியக் குழுவும் இத்தாலியின் கத்தோலிக்கப் பிறரன்புக் குழு சான் எஜிதியோவும் கையெழுத்திட்டுள்ளன.
அறியாமை மற்றும் ஏழ்மை எனும் சுமைகளிலிருந்து மக்களை விடுவிப்பதற்கான அர்ப்பணத்தைக் கொண்டிருக்கும் இவ்விரு குழுக்களும் ஒன்றிணைந்து உழைக்க முன்வந்திருப்பது நல்லதொரு முன்மாதிரிகை என்றார்  Muhammadiyah  என்ற இந்த இஸ்லாமிய குழுவின் தலைவர்  Din Syamsuddin.
இத்தகைய ஒத்துழைப்பு என்பது சமூகப்பணிகளை மட்டுமல்ல, மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதியை ஊக்குவிப்பதையும் தன்னுள் கொண்டுள்ளது என்றார் அவர்.
வன்முறையற்ற ஓர் உலகைக் கட்டியெழுப்புவதை நோக்கம் கொண்டதாக, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மதங்களின் ஒன்றிணைந்த பணி இருக்கும் என மேலும் கூறினார் Din Syamsuddin.
பல்வேறு மதப்பின்னணியைக் கொண்ட மக்கள் ஒற்றுமையுடன் வாழும் இந்தோனேசியாவில், ஏழ்மையை அகற்றவும் அமைதியை ஊக்குவிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்ய உள்ளதாக அறிவித்தார் சான் எஜிதியோ கத்தோலிக்க அமைப்பின் அதிகாரி Marco Impagliazzo.


6. அன்டார்டிக் பகுதியில் உருவாகும் வெப்ப நீரினால் பனி உருகி கடல் மட்டம் வேகமாக உயரும் ஆபத்து உள்ளது - ஆய்வறிக்கை

ஏப்ரல்,26,2012. உலகின் தென் துருவத்தில் அண்டார்டிக் பகுதியில் உறைபனி பகுதிகளுக்குக் கீழ் உருவாகும் வெப்ப நீரினால் பனி உருகி உலகின் பல கடல் மட்டங்கள் வேகமாக உயரும் ஆபத்து உள்ளதென்று அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அண்டார்டிக்கின் மேற்குப் பகுதியில் ஒவ்வோர் ஆண்டும் கடலில் மிதக்கும் பனிப் பாறைகள் 23 அடி அளவு கரைந்து வருவதாக இப்புதனன்று வெளியிடப்பட்ட இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
NASA செயற்கைக் கோள் படங்களை ஆய்வு செய்து வரும் பிரித்தானிய அண்டார்டிக் ஆய்வுக் கழகம், பனிப் பாறைகள் உருகுவதற்கு வெப்பமான காற்று மண்டலம் மட்டும் பொறுப்பல்ல, மாறாக, வெப்பமான நீரும் காரணம் என்று கூறியுள்ளது.
அண்டார்டிக் மேற்குப் பகுதியில் உள்ள பனிமலைகள் அனைத்தும் உருகினால், உலகின் அனைத்து கடல்களிலும் நீர்மட்டம் 16 அடி வரை உயரும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.


7. முல்லைப்பெரியாறு அணை வலுவாக உள்ளது:வல்லுநர் குழு

ஏப்ரல்,26,2012. முல்லைப்பெரியாறு அணை வலுவாகவே இருக்கிறது என்றும், அங்கு புதிய அணை வேண்டாம் என்றும் உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு ஒருமனதாக பரிந்துரைத்துள்ளது.
அந்த அணை வலுவாக உள்ளதா, அப்பகுதியில் புதிய அணை ஒன்று கட்டப்பட வேண்டுமா என்று இந்திய உச்சநீதிமன்றம் இரு கேள்விகளை எழுப்பி, அது தொடர்பாக ஓர் அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு வல்லுநர் குழுவொன்றைப் பணித்தது.
தமிழகத்தின் சார்பில் நீதிபதி ஏ ஆர் லக்ஷ்மணனும், கேரளா சார்பில் நீதிபதி கே டி தாமஸும் அந்த வல்லுநர் குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர்.
உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அந்தக் குழு பல ஆய்வுகளை மேற்கொண்டு தமது அறிக்கையை இப்புதனன்று (25.4.12) உச்சநீதிமன்றத்தில் ஒரு மூடிய உறையில் சமர்ப்பித்துள்ளது.
அக்குழுவில், தமிழகத்தின் சார்பில் உறுப்பினராக இருந்த ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லக்ஷ்மணன் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்களை தற்போது கூற முடியாது என்று பி.பி.சி.க்கு அளித்த பேட்டியொன்றில் தெரிவித்தார்.
தற்போதைய அணை உறுதியாக உள்ளது என்பதிலும் அங்கு புதிய அணை தேவையில்லை என்பதிலும் ஒத்த கருத்துக்கள் இருந்தாலும், வேறு சில அம்சங்களில் மாற்றுக் கருத்துக்களும் இருந்தன என்றும் அவர் மேலும் கூறினார்.
முல்லைப்பெரியாறு அணை தொடர்பிலான வழக்கு வரும் மே மாதம் நான்காம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது என்றும், அப்போது இந்த வல்லுநர் குழுவின் அறிக்கை இரு மாநிலங்களுக்கும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
 

No comments:

Post a Comment