Thursday, 19 April 2012

கத்தோலிக்க செய்திகள்: 19 ஏப்ரல் 2012

 
1. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் திருஅவையின் தலைவராக ஏழு ஆண்டுகள் நிறைவு

2. இவ்வியாழன் முதல் வத்திக்கான் இணையதளத்தில் Widget என்ற கூடுதலான மென்பொருள் பயன்பாடு

3. திருத்தந்தையின் சார்பில் கிறிஸ்தவ ஆர்த்தடாக்ஸ் மற்றும் கீழைரீதி சபைகளுக்கு அனுப்பப்பட்ட உயிர்ப்புத் திருநாள் செய்தி

4. வத்திக்கான் இரகசிய ஆவணங்கள் காப்பகத்தின் 400வது ஆண்டு நிறைவு

5. சூடானுக்கும், தென் சூடானுக்கும் இடையே போர் மூழும் சூழல் அதிகரித்துள்ளது - தென் சூடான் தலத் திருஅவை கவலை

6. தென் கொரியாவில் கத்தோலிக்கர்கள் எண்ணிக்கை கூடியதற்குப் பொது நிலையினரே முக்கிய காரணம் - வத்திக்கான் அதிகாரி

7. இறைவனின் செய்தியை மக்களிடம் எடுத்துச்செல்ல Social media எண்ணற்ற வாய்ப்புக்களைத் தருகின்றன

8. 24 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாடு செல்கிறார் ஆங் சான் சூச்சி

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் திருஅவையின் தலைவராக ஏழு ஆண்டுகள் நிறைவு 

ஏப்ரல்,19,2012. கத்தோலிக்கத் திருஅவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஏப்ரல் 19 இவ்வியாழனன்று ஏழு ஆண்டுகள் நிறைவு காணும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு இத்தாலி, அமெரிக்க ஐக்கிய நாடு உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்களும் பிற அரசியல் தலைவர்களும் தங்களது நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் செய்திகளை அனுப்பியுள்ளனர்.
அமெரிக்க அரசுத்தலைவர் பாரக் ஒபாமாவின் வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ள அரசுச் செயலர் ஹில்லரி கிளின்டன், மனிதம் மற்றும் அமைதியின் வழியில் பல்வேறு மதத்தவரை ஒன்றிணைப்பதற்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அயராது உழைத்து வருவதை அதில் குறிப்பிட்டுள்ளார்.
இத்தாலியப் பிரதமர் மாரியோ மோந்தி வத்திக்கான் சென்று நேரிடையாகத் திருத்தந்தைக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
ஏறக்குறைய 23 ஆண்டுகள் திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுப் பேராயத்தின் தலைவராகப் பணியாற்றிய ஜெர்மானியக் கர்தினால் ஜோசப் ராட்சிங்கர், 2005ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி மாலை 6 மணிக்குத் திருஅவையின் 256 வது பாப்பிறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெனடிக்ட் என்ற பெயரைத் தெரிந்தெடுத்து, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஆக திருஅவையை வழிநடத்தி வரும் அவர், இந்த ஏப்ரல் 16ம் தேதி 85 வயதையும் எட்டியுள்ளார். ஆண்டவரின் திராட்சைத் தோட்டத்தில் எளிமையும் பணிவும் கொண்ட வேலையாள் என்று தன்னைப் பற்றித் தனது முதல் உரையில் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.


2. இவ்வியாழன் முதல் வத்திக்கான் இணையதளத்தில் Widget என்ற கூடுதலான மென்பொருள் பயன்பாடு

ஏப்ரல்,19,2012. வத்திக்கான் இணையதளத்தில் இவ்வியாழன் முதல் Widget என்ற கூடுதலான மென்பொருள் பயன்பாடு துவக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்ற ஏழாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக www.vatican.va என்ற வத்திக்கான் இணையதளத்தில் இவ்வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வசதியின் உதவியுடன் வத்திக்கான் இணையதளத்தை பயன்படுத்துவோர் இன்னும் எளிதாக இவ்விணையதளத்தின் பல்வேறு பகுதிகளைக் காணவும், தங்கள் பதில்களைப் பதிவு செய்யவும் முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தை ஒவ்வொரு வாரமும் வழங்கும் மூவேளை செப உரைகள், புதன் பொது மறைபோதகங்கள், வத்திக்கான் செய்தி அலுவலகத்தின் அறிவிப்புக்கள் அனைத்தையும் இந்தப் புதிய வசதியின் உதவியுடன் எளிதாகக் காணமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


3. திருத்தந்தையின் சார்பில் கிறிஸ்தவ ஆர்த்தடாக்ஸ் மற்றும் கீழைரீதி சபைகளுக்கு அனுப்பப்பட்ட உயிர்ப்புத் திருநாள் செய்தி

ஏப்ரல்,19,2012. உலகில் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் நம்பிக்கையின் சாட்சிகளாய் விளங்குவதே உயிர்ப்புத் திருநாளின் மையப்பொருள் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஏப்ரல் 15, கடந்த ஞாயிறன்று கிறிஸ்தவ ஆர்த்தடாக்ஸ் மற்றும் கீழைரீதி சபைகள் உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடியதையொட்டி, கிறிஸ்தவ ஒற்றுமையை வளர்க்கும் பாப்பிறைக் கழகம், திருத்தந்தையின் சார்பில் அனுப்பியச் செய்தியில் இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
அனைத்து கிறிஸ்தவர்களும் கிறிஸ்துவின் உயிர்ப்புக்கு சாட்சிகளாய் வாழும்போது, அது உலகின் பல பகுதிகளில் வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள பல மக்களின் மனதில் நம்பிக்கையை வளர்க்கும் ஓர் சாட்சியாக விளங்கும் என்று திருத்தந்தையின் செய்தி எடுத்துரைக்கிறது.
மனித வாழ்வின் இறுதி உண்மை சாவும் அழிவுமல்ல, மாறாக வாழ்வு என்பதையும், இறைவனின் அன்பு என்றும் அழியாத நிறைவுடையது என்பதையும் உயிர்ப்பு விழா உலகிற்கு சொல்கிறது என்று திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்தவர்கள் உலகிற்கு நம்பிக்கை தரும் நற்செய்தியாளர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளனர் என்று கூறிய திருத்தந்தை, இந்த நம்பிக்கையை வழங்க, கிறிஸ்தவர்களிடையே இன்னும் ஆழமான ஒற்றுமை உருவாகவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


4. வத்திக்கான் இரகசிய ஆவணங்கள் காப்பகத்தின் 400வது ஆண்டு நிறைவு

ஏப்ரல்,19,2012. பல நூற்றாண்டுகளாக திருத்தந்தையர்கள் எழுதிய மடல்கள், மற்றும் பிறரிடமிருந்து திருத்தந்தையர்கள் பெற்ற கடிதங்கள், வெவ்வேறு நூற்றாண்டுகளில் திருஅவையில் நடந்த பொதுச் சங்கங்களின் ஏடுகள் ஆகிய அனைத்தும் தன்னிகரற்ற கருவூலமாய் வத்திக்கானில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்று வத்திக்கான் இரகசிய ஆவணங்கள் காப்பகத்தின் காவலர் ஆயர் Sergio Pagano, கூறினார்.
வத்திக்கான் இரகசிய ஆவணங்கள் காப்பகம் இவ்வாண்டு தன் 400வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதையொட்டி, வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் ஆயர் Pagano இவ்வாறு கூறினார்.
1611ம் ஆண்டு திருத்தந்தை ஐந்தாம் பால் அவர்களால் வத்திக்கான் இரகசிய ஆவணங்கள் காப்பகம் துவக்கப்பட்டது. 1073ம் ஆண்டு முதல் 1085ம் ஆண்டுவரை திருஅவையை வழிநடத்திய திருத்தந்தை ஏழாம் கிரகோரி அவர்கள் எழுதிய மடல்கள் இக்காப்பகத்தில் முதல் முதலாக வைக்கப்பட்டன.
1881ம் ஆண்டு முதல் திருத்தந்தை 13ம் லியோ அவர்களால் இந்த ஆவண காப்பகம் ஆய்வாளர்களின் பார்வைக்குத் திறந்து விடப்பட்டது என்று கூறிய ஆயர் Pagano, இந்த காப்பகத்தின் பெயரில் உள்ள 'இரகசிய' என்ற வார்த்தைக்கு இலத்தீன் மொழியில் 'தனிப்பட்ட' என்று பொருள். எனவே, வத்திக்கானில் உள்ள ஆவணங்கள் இரகசியமாய் வைக்கப்பட்டுள்ளன என்று தவறான கருத்து நிலவுகிறது விளக்கினார்.
இந்தக் காப்பகம் துவக்கப்பட்டபோது அங்கிருந்த ஏடுகள் 400 மீட்டர் நீளமுள்ள அலமாரிகளில் வைக்கப்பட்டிருந்தன என்று கூறிய ஆயர் Pagano, தற்போது இந்த ஏடுகள் வைக்கப்பட்டுள்ள அலமாரிகள் 85 கிலோமீட்டர்கள் அளவு நீண்டுள்ளன என்று கூறினார்.


5. சூடானுக்கும், தென் சூடானுக்கும் இடையே போர் மூழும் சூழல் அதிகரித்துள்ளது - தென் சூடான் தலத் திருஅவை கவலை

ஏப்ரல்,19,2012. சூடானுக்கும், தென் சூடானுக்கும் இடையே போர் மூழும் சூழல் அதிகரித்துள்ளது என்றும், ஐ.நா.வின் பாதுகாப்பு அவை முயற்சிகள் எடுக்கவில்லை எனில் எந்நேரமும் போர் துவங்கும் என்றும் தென் சூடான் தலத் திருஅவை தன் கவலையை வெளியிட்டுள்ளது.
2011ம் ஆண்டு ஜூலை மாதம் சூடானிலிருந்து தென் சூடான் தனி நாடாகப் பிரிந்தது. இவ்விரு நாடுகளிடையே எல்லையைப் பிரிப்பதிலும், எண்ணெய் கிணறுகளைக் கைப்பற்றுவதிலும் தொடர்ந்து நிலவிவரும் பிரச்சனைகள் தற்போது ஒரு முழு வடிவ போராக மாறக்கூடும் என்று ஊடகங்கள் கூறி வருகின்றன.
எண்ணெய் வளம் மிக்க Heglig என்ற பகுதிக்கென இரு நாடுகளும் போராடி வருவது நீடித்து வரும் வேளையில், ஐ.நா. அமைப்பு, மற்றும் பிற நாடுகளின் தலையீட்டால் மட்டுமே இந்தப் பிரச்சனையைப் போரின்றி தீர்க்க முடியும் என்று தலத் திருஅவை Fides செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளது.
இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்காக, அமெரிக்க ஐக்கிய நாடு ஒரு பிரதிநிதிகள் குழுவை அனுப்பியுள்ளதென்றும், ஆப்ரிக்க ஒன்றியம் இரு நாடுகளுக்கும் வேண்டுகோள்களை அனுப்பியுள்ளதென்றும் Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


6. தென் கொரியாவில் கத்தோலிக்கர்கள் எண்ணிக்கை கூடியதற்குப் பொது நிலையினரே முக்கிய காரணம் - வத்திக்கான் அதிகாரி

ஏப்ரல்,19,2012. தென் கொரியாவில் கத்தோலிக்கர்கள் எண்ணிக்கை கூடியதற்குப் பொது நிலையினரே முக்கிய காரணம் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
1960ம் ஆண்டில் 2 விழுக்காடு கிறிஸ்தவர்களே வாழ்ந்து வந்த தென் கொரியாவில் தற்போது 30 விழுக்காடு கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர் என்றும், 60களில் 250 பேராக இருந்த இறைபணியாளர்களின் எண்ணிக்கை, தற்போது 5000மாக உயர்ந்துள்ளது என்றும் அயல்நாட்டு மறைபரப்புப் பணிக்கென உருவாக்கப்பட்டுள்ள பாப்பிறை நிறுவனத்தின் தலைவர் அருள்தந்தை Piero Gheddo, கூறினார்.
இத்தாலிய ஆயர் பேரவை வெளியிடும் "Avvenire" என்ற செய்தித்தாளில் உயிர்ப்புத் திருநாளையொட்டி, வெளியான அறிக்கையில் அருள்தந்தை Gheddo இந்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.
ஐரோப்பாவில் உள்ள கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், ஆசியா, ஆப்ரிக்கா கண்டங்களில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதென்று இவ்வறிக்கை கூறுகிறது.
20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆப்ரிக்காவின் சகாரப் பகுதிகளில் 20 இலட்சமாக இருந்த கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 21ம் நூற்றாண்டின் துவக்கத்தில் 13 கோடியாக உயர்ந்துள்ளது என்று இவ்வறிக்கை கூறுகிறது.


7. இறைவனின் செய்தியை மக்களிடம் எடுத்துச்செல்ல Social media எண்ணற்ற வாய்ப்புக்களைத் தருகின்றன

ஏப்ரல்,19,2012. இணையதளமும், Social media எனப்படும் புதியத் தொடர்பு முறைகளும் இறைவனின் செய்தியை மக்களிடம் எடுத்துச் செல்ல எண்ணற்ற வாய்ப்புக்களைத் தருகின்றன என்று புதியத் தொடர்பு முறைகளில் வல்லுனரான Brent Dusing, கூறினார்.
Facebook எனப்படும் புதியத் தொடர்பு முறை வழியாக 'மோசேயின் பயணம்' என்ற புதியதொரு கணணி விளையாட்டை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தியவர் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த Brent Dusing.
இவர் அறிமுகப்படுத்திய 'மோசேயின் பயணம்' என்ற இந்த விளையாட்டைக் கடந்த ஒன்பது மாதங்களில் 217000 பேர் விரும்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இறைவார்த்தையை இன்னும் அதிகமாகவும், ஆழமாகவும் அறிந்து கொள்ள  இந்த விளையாட்டு இளையோரைத் தூண்டி வருவதைக் காண முடிகிறது என்று Brent Dusing கூறினார்.
விவிலியத்தின் அடிப்படையில் மற்றுமொரு விளையாட்டைத் தங்கள் நிறுவனம் திட்டமிட்டு வருவதாகவும், விரைவில் இந்த விளையாட்டு அறிமுகப்படுத்தப்படும் என்றும் Brent Dusing கூறினார்.


8. 24 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாடு செல்கிறார் ஆங் சான் சூச்சி

ஏப்ரல்,19,2012. மியான்மர் நாட்டின் எதிர்கட்சித் தலைவர் ஆங் சான் சூச்சி, நார்வே நாட்டுக்கு வருகிற சூன் மாதம் பயணம் மேற்கொள்ள உள்ளார். பிரித்தானிய ஆட்சியாளர்களிடமிருந்து மியான்மர் நாட்டுக்குச் சுதந்திரம் பெற்று தந்தவர் ஆங் சான். இவரின் மகள் ஆங் சான் சூச்சி.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் படித்த இவர், 1988ம் ஆண்டு தன்னுடைய தாயைப் பார்ப்பதற்காக தாயகம் திரும்பியவேளையில், நாட்டின் குடியரசு போராட்டத்தில் இறங்கினார். 90ம் ஆண்டு நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றபோதும், அவரை ஆட்சி அமைக்கவிடாமல், இராணுவ ஆட்சி ஆங் சான் சூச்சியை வீட்டுக்காவலில் வைத்தது.
1991ம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசுக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டபோதும், 1999ம் ஆண்டு இவர் கணவர் புற்றுநோயால், இலண்டனில் இறந்தபோதும் இவர் தாயகத்தை விட்டு செல்லவில்லை.
வெளிநாடு சென்றால் இராணுவ அரசு தன்னைத் தாயகம் திரும்ப அனுமதிக்காது என கருதிய சூச்சி, இராணுவ ஆட்சியாளர்களால் பல ஆண்டு காலம் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு கிடந்தார். தற்போது, அவர் அங்கு நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராகியுள்ளார்.
குடியரசு நடைமுறைகள் மியான்மரில் தலையெடுத்துள்ளதால், அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடையைத் தளர்த்த உலக நாடுகள் முன்வந்துள்ளன. சமீபத்தில், மியான்மர் வந்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், சூச்சியை இலண்டன் வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், வரும் ஜூன் மாதம் சூச்சி, நார்வே நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதை, அவரது தேசிய குடியரசு லீக் கட்சியும் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், அவர் நார்வே செல்லும் தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இதற்கிடையே, ஜப்பானில் ஆறு நாடுகள் பங்கேற்கும், ஆசிய மாநாட்டில் மியான்மர் அதிபர் தீன் சீன், பங்கேற்கிறார். ஜப்பானில் இவ்வியாழன் முதல் 24ம் தேதி வரை தாய்லாந்து, கம்போடியா, லவோஸ், வியட்நாம், மியான்மர் ஆகிய நாடுகள் பங்கேற்கும் மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க, மியான்மர் நாட்டை சேர்ந்த அதிபர், 28 ஆண்டுக்கு பிறகு ஜப்பானுக்கு செல்வது, இதுவே முதன் முறை.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...