Thursday, 19 April 2012

கத்தோலிக்க செய்திகள்: 18 ஏப்ரல் 2012

1. இந்தியாவில் நற்செய்தியைப் பரப்புவதற்கு ஒவ்வொருவரும் அவரவர் வாழ்விலிருந்து இதை ஆரம்பிக்க வேண்டும் - கர்தினால் ஆச்வல்ட் கிரேசியஸ்

2. "பேரரசன் கான்ஸ்டன்டைன். ஐரோப்பாவின் வேர்கள்" - வத்திகானில் நடைபெறும் பன்னாட்டுக் கருத்தரங்கு

3. டைட்டானிக் கப்பலுடன் மூழ்கி இறந்தவர்களில் மூவர் கத்தோலிக்க அருள்பணியாளர்கள்

4. மதங்களுக்கிடையில் உரையாடல் என்ற கருத்து செயல்வடிவிலும் உறுதி செய்யப்பட வேண்டும் - பாகிஸ்தான் அரசு அதிகாரி

5. கராச்சியில், ஒரு கத்தோலிக்கப் பள்ளியின் நிலத்தை ஆக்ரமித்த வன்முறை கும்பல்

6. உலகின் மிகப் பெரும் அணை சரியும் ஆபத்து : இலட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

7. எயிட்ஸ் நோய்க்கு குருத்து உயிரணுக்கள் மருந்தாகும் வாய்ப்பு நம்பிக்கை தரும் ஆய்வு

------------------------------------------------------------------------------------------------------

1. இந்தியாவில் நற்செய்தியைப் பரப்புவதற்கு ஒவ்வொருவரும் அவரவர் வாழ்விலிருந்து இதை ஆரம்பிக்க வேண்டும் - கர்தினால் ஆச்வல்ட் கிரேசியஸ்

ஏப்ரல்,18,2012. இந்தியாவில் நற்செய்தியைப் பரப்புவதற்கு ஒவ்வொருவரும் அவரவர் வாழ்விலிருந்து இதை ஆரம்பிக்க வேண்டும் என்று இந்திய ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் ஆச்வல்ட் கிரேசியஸ் கூறினார்.
இச்செவ்வாய், புதன் ஆகிய இரு நாட்கள் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கைத் துவக்கி வைத்துப் பேசிய மும்பைப் பேராயர் கர்தினால் கிரேசியஸ், இந்தியாவின் கலாச்சாரம், அரசியல், பொதுவாழ்வு ஆகிய அனைத்து அம்சங்களும் நற்செய்தியின் விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தால் அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் என்று கூறினார்.
இந்தியாவில் கிறிஸ்தவம் அடியெடுத்து வைத்த காலத்தில் இருந்து இங்குள்ள இந்து மதத்தினர் பொதுவாக இம்மதத்தை காத்து வந்துள்ளனர் என்று சீரோ மலங்கரா ரீதி திருஅவையின் தலைவர் பேராயர் Baselios Mar Cleemis இக்கருத்தரங்கின் துவக்க அமர்வில் கூறினார்.
கத்தோலிக்கர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசுவாசம் இறைவன் வழங்கிய ஒரு கோடை என்பதால், அதனைப் பிறரோடு பகிர்வதற்கு எவ்விதமான கட்டுப்பாடும் தேவையில்லை என்று பேராயர் Cleemis எடுத்துரைத்தார்.
துவக்க அமர்வில் பங்கேற்ற பெங்களூரு பேராயர் Bernard Moras,  இந்தியாவில் உள்ள கிறிஸ்தவ நிறுவனங்கள் உலகப்போக்கில் மாறிவருவதால், கிறிஸ்தவ நன்னெறிகளையும் நற்செய்தி மதிப்பீடுகளையும் பறைசாற்றுவது கடினமாகி வருகிறது என்று சுட்டிக்காட்டினார்.


2. "பேரரசன் கான்ஸ்டன்டைன். ஐரோப்பாவின் வேர்கள்" - வத்திகானில் நடைபெறும் பன்னாட்டுக் கருத்தரங்கு

ஏப்ரல்,18,2012. வரலாற்றியல் பாப்பிறைக் கழகம் ஏற்பாடு செய்துள்ள ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கு இப்புதன் முதல் சனிக்கிழமை வரை வத்திகானில் நடைபெறுகிறது.
பேரரசன் கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதன் 17வது நூற்றாண்டு நிறைவடைவதைச் சிறப்பிக்கும் வண்ணம் "பேரரசன் கான்ஸ்டன்டைன். ஐரோப்பாவின் வேர்கள்" என்ற தலைப்பில் இக்கருத்தரங்கு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வத்திக்கான் இரகசிய ஆவணங்கள் காப்பகம், வத்திக்கான் நூலகம், மிலான் நகரில் உள்ள திரு இருதய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு நிறுவனங்கள் இணைந்து நடத்தும் இந்த கருத்தரங்கின் இரண்டாம் பகுதி வருகிற 2013ம் ஆண்டு மிலான் நகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
312 மற்றும் 313 ஆண்டுகளில் Maxentius என்ற எதிராளியை கான்ஸ்டன்டைன் மன்னன் வென்றதையும், கிறிஸ்தவ மதத்தை அவர் தழுவியதையும் நினைவுகூரும் பல்வேறு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்தக் கருத்தரங்குகள் நடைபெறுகின்றன என்று வரலாற்றியல் பாப்பிறைக் கழகத்தின் தலைவர் அருள்தந்தை Bernard Ardura இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


3. டைட்டானிக் கப்பலுடன் மூழ்கி இறந்தவர்களில் மூவர் கத்தோலிக்க அருள்பணியாளர்கள்

ஏப்ரல்,18,2012. 1912ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி அதிகாலையில் அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலுடன் மூழ்கி இறந்தவர்களில் மூவர் கத்தோலிக்க அருள்பணியாளர்கள் என்ற தகவலை இயேசு சபையினரால் நடத்தப்படும் “America” இதழ் வெளியிட்டுள்ளது.
'டைட்டானிக்' கப்பல் மூழ்கிய நிகழ்வின் நூறாம் ஆண்டு நினைவு, ஏப்ரல் 14, 15 கடந்த சனிக்கிழமை, ஞாயிறு ஆகிய இருநாட்கள் ஊடகங்களால் பேசப்பட்டு வந்தது.
1500க்கும் அதிகமான மக்கள் இறக்கக் காரணமான இந்த விபத்தில், அருள்பணியாளர்கள்  Juozas Montvila, Josef Peruschitz, Father மற்றும் Thomas Byles ஆகிய மூவரும் இறுதிவரை மக்களுக்கு ஒப்புரவு அருள்சாதனம் வழங்கியும், அவர்களைச் செபங்களில் வழிநடத்தியும் வந்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அங்கிருந்த உயிர் காக்கும் படகுகளில் தப்பிப்பதற்கு இம்மூன்று அருள்பணியாளர்களுக்கும் வாய்ப்பு கிடைத்தபோதிலும், இம்மூவரும் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டு, மரண பயத்தில் சூழப்பட்டிருந்த மக்களுடன் தங்கினர் என்று கூறப்படுகிறது.
இம்மூவரில், ஆங்கலிக்கன் சபையில் இருந்து கத்தோலிக்கத் திருமறைக்கு மாறி, அருள்பணியாளராக திருநிலைப் படுத்தப்பட்ட அருள்தந்தை Thomas Bylesன் மரணம் குறித்து பேசிய திருத்தந்தை புனித பத்தாம் பத்திநாதர், இவரது மரணம் ஒரு மறைசாட்சியின் மரணம் என்று கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது.


4. மதங்களுக்கிடையில் உரையாடல் என்ற கருத்து செயல்வடிவிலும் உறுதி செய்யப்பட வேண்டும் - பாகிஸ்தான் அரசு அதிகாரி

ஏப்ரல்,18,2012. மதங்களுக்கிடையில் உரையாடல் என்ற கருத்து வெறும் எண்ணங்களாக இருப்பதில் பயனில்லை, அவை செயல்வடிவிலும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.
இப்புதனன்று பாகிஸ்தானில் ஆரம்பமாகியுள்ள ஒரு பல்சமய கருத்தரங்கைக் குறித்து, பாகிஸ்தானில் சிறுபான்மையினர் விவகாரங்களில் அரசுத் தலைவரின் ஆலோசகராகப் பணியாற்றும் Paul Bhatti  பேசியபோது இவ்வாறு கூறினார்.
பாகிஸ்தானில் நிலவி வரும் தேவநிந்தனை சட்டம் மக்கள் மனங்களில் பெரும் தாக்கங்களை உருவாக்கி வருகிறது என்று கூறிய Paul Bhatti, இது போன்றதொரு சட்டத்தை அரசு நீக்கினால் மட்டுமே மக்களுக்கு பிற மதங்களின் மீது நல்லெண்ணங்கள் உருவாகும் என்று வலியுறுத்தினார்.
பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் இருந்தும், உலகின் ஒரு சில நாடுகளில் இருந்தும் 500க்கும் அதிகமான அறிஞர்கள் கலந்து கொள்ளும் இந்த கருத்தரங்கை Lahore Badshahi என்ற மசூதியின் தலைவர் ஏற்பாடு செய்துள்ளார்.
ஒரு சில இஸ்லாமிய மதத் தலைவர்கள் கூறும் தவறான கருத்துக்களால் இளைய தலைமுறையினர் பிற மதங்கள் மீது வெறுப்பை வளர்த்து வருகின்றனர் என்றும், பாகிஸ்தானில் அனைத்து இளையோரும் பல மதங்களின் கல்வியைப் பெறுவது அவசியம் என்றும் அரசுத் தலைவரின் ஆலோசகர் Paul Bhatti எடுத்துரைத்தார்.


5. கராச்சியில், ஒரு கத்தோலிக்கப் பள்ளியின் நிலத்தை ஆக்ரமித்த வன்முறை கும்பல்

ஏப்ரல்,18,2012. இத்திங்களன்று, பாகிஸ்தான் கராச்சியில், நிலங்களை அபகரிக்கும் வன்முறை கும்பல் ஒன்று, ஒரு கத்தோலிக்கப் பள்ளியின் நிலத்தை ஆக்ரமிக்க முயன்றதைத் தொடர்ந்து, தலத் திருஅவை அரசின் உதவியை நாடியுள்ளது.
கராச்சியில் பேராயராகப் பணிபுரிந்த கர்தினால் Joseph Cordeiro நினைவாக அங்கு நடத்தப்பட்டு வரும் Cardinal Cordeiro உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் இத்திங்களன்று நுழைந்த 70 பேர் கொண்ட வன்முறை கும்பல், பள்ளிக்குச் சொந்தமான 2000 சதுர மீட்டர் அளவு நிலத்தின் மீது உரிமை கொண்டாடி, பள்ளியின் சுற்றுச் சுவரை இடித்தனர்.
பள்ளியின் நிர்வாகி அருள்தந்தை Pervez Khalidஐயும், வேறு ஆறு பள்ளிப் பணியாளர்களையும் இந்த வன்முறை கும்பல் தாக்கியுள்ளதாக UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
24 ஆண்டுகளுக்கு முன் கராச்சி நகர மேம்பாட்டுத் துறையிடமிருந்து வாங்கப்பட்ட இந்த நிலத்திற்கு உரிமை கொண்டாடும் இந்த கும்பலின் ஆக்கிரமிப்பைக் குறித்து கராச்சி நகர அதிகாரிகளிடம் முறையிடப்பட்டுள்ளது.


6. உலகின் மிகப் பெரும் அணை சரியும் ஆபத்து : இலட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

ஏப்ரல்,18,2012. சீனாவில், உலகின் மிகப் பெரும் அணை என்று சொல்லப்படும் Three Gorges அணையில் மண்சரிவு ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளதால், அருகில் உள்ள ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் அவர்கள் வாழும் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட வேண்டியுள்ளதாக சீன அரசின் ஊடகச் செய்திகள் கூறியுள்ளன.
Three Gorges அணைக்கட்டில் ஏற்பட்டுள்ள மண் சரிவினால் அணைக்கட்டு உடையலாம் என்ற அச்சம் காரணமாகவே இந்த மக்கள் வெளியேற்றப்பட வேண்டியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
4000 கோடி டாலர்கள் செலவு செய்து, Yangtze ஆற்றின் குறுக்காகக் கட்டப்பட்டுள்ள இவ்வணை, உலகின் மிகப்பெரிய நீர் மின் உற்பத்தி வசதியைக் கொண்டுள்ளதென சொல்லப்படுகிறது. இம்மாபெரும் அணைக்கு அருகில் இருந்து ஏற்கனவே பத்து இலட்சம் மக்கள் வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
2010ம் ஆண்டில் இந்த அணைக்கட்டில் தேங்கக்கூடிய நீர், அதன் உச்ச அளவை எட்டியது முதல், தொடர்ச்சியாக பல மண்சரிவுகளை இந்த அணைக்கட்டு எதிர்கொண்டு வருகிறது.
மண்சரிவு ஆபத்துக்களைத் தொடர்ந்து, கட்டாயமாக இடம்பெயரச் செய்யப்பட்ட மக்களுக்குப் போதுமான மாற்று வசதிகளைச் செய்ய முடியவில்லை என்று சீன அரசு ஒப்புக்கொண்டுள்ளது.


7. எயிட்ஸ் நோய்க்கு குருத்து உயிரணுக்கள் மருந்தாகும் வாய்ப்பு நம்பிக்கை தரும் ஆய்வு

ஏப்ரல்,18,2012. ஸ்டெம்செல்கள்எனப்படும் குருத்து உயிரணுக்களை மாற்றியமைத்து, அவற்றை எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத்தில் செலுத்தி, அதன்மூலம் எயிட்ஸ் நோயைக் குணப்படுத்த வாய்ப்பிருப்பதாக கலிபோர்னிய பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
ஆய்வுக்கூடத்தில் எலிகள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இந்த முயற்சி நம்பிக்கையளிக்கக்கூடிய பலன்களைத் தந்திருப்பதாகவும், எயிட்ஸ் நோய்க்கு எதிரான மருத்துவ உலகின் போராட்டத்தில் இது முக்கிய முன்னேற்றம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
மனிதர்களைத் தாக்கும் எச்.ஐ.வி. கிருமியானது, மனித உடலில் புகுந்ததும் குறிப்பிட்ட திசுக்களை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. பின்பு அங்கிருந்தபடி பலுகிப்பெருகி இரத்தத்தில் இருக்கும் நோய் எதிர்ப்புச்செல்களைத் தாக்கி அழிப்பதன் மூலம் எயிட்ஸ் நோயை உருவாக்குகின்றன.
இந்த எச்.ஐ.வி. கிருமிகள் தங்கியிருக்கும் திசுக்களை குறிவைத்துச் செல்லக்கூடிய வகையில் குருத்து உயிரணுக்களை ஆய்வாளர்கள் முதலில் மாற்றியமைத்தனர். இப்படி மாற்றியமைக்கப்பட்ட குருத்து உயிரணுக்களை எயிட்ஸ் தாக்கிய எலிகளின் உடலில் செலுத்திய சில நாட்களில் அந்த எலிகளின் இரத்தத்தில் இருந்த எச்.ஐ.வி. தொற்றின் அளவு குறைந்திருப்பதையும், நோய் எதிர்ப்புச்செல்கள் அதிகரித்திருப்பதையும் இவர்கள் கண்டுபிடித்தனர். இதன்மூலம் குருத்து உயிரணுக்களைப் பயன்படுத்தி எயிட்ஸ் நோயை குணப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்திருப்பதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
எயிட்ஸ் நோய்க்கு எதிரான மருத்துவ உலகின் தொடர்போராட்டத்தில் இந்த கண்டுபிடிப்பு ஒரு முக்கிய மைல்கல் என்கிறார் சென்னையிலுள்ள எயிட்ஸ் ஆய்வு மையத்தைச்சேர்ந்த மருத்துவர் சுந்தரராமன்.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...