Tuesday, 17 April 2012

கத்தோலிக்க செய்திகள்: 17 ஏப்ரல் 2012

1. சிரியாவில் துன்புறும் மக்களுக்குத் திருத்தந்தை அனுப்பிய நிதி உதவி அம்மக்கள் மீது அவர் கொண்டுள்ள ஆழ்ந்த அக்கறையைக் காட்டுகிறது - வத்திக்கான் அதிகாரி

2. இந்திய திருஅவையின் மனித உரிமை பயிற்சி முகாம்

3. அர‌சிய‌ல் வ‌ன்முறைக‌ளிலிருந்து ம‌க்க‌ளைக் காப்பாற்ற‌ பாகிஸ்தான் த‌லத்திரு அவை குழுக்க‌ள்

4. இந்தோனேசியாவில் சமயச் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டி அமைதி போராட்டம்

5. சூடான் மற்றும் தென் சூடான் கிறிஸ்தவர்கள் அச்சத்தில் வாழ்கின்றனர்

6. இன்றும் உலகில் 40 கோடி சிறார் அடிமைகள்

7. காபுலில் நடைபெற்ற திட்டமிட்டத் தாக்குதல்களுக்கு ஐ.நா. பொதுச்செயலரின்  வன்மையான கண்டனம்

------------------------------------------------------------------------------------------------------
1. சிரியாவில் துன்புறும் மக்களுக்குத் திருத்தந்தை அனுப்பிய நிதி உதவி அம்மக்கள் மீது அவர் கொண்டுள்ள ஆழ்ந்த அக்கறையைக் காட்டுகிறது - வத்திக்கான் அதிகாரி

ஏப்ரல்,17,2012. சிரியாவில் துன்புறும் மக்களுக்குத் திருத்தந்தை அனுப்பிய நிதி உதவி அம்மக்கள் மீது அவர் கொண்டுள்ள ஆழ்ந்த அக்கறையைக் காட்டுகிறது என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
சிரியாவில் துன்புறும் கத்தோலிக்கர்களின் இடர் களையும் பணிகளுக்கென Cor Unum என்ற பிறரன்பு அவையின் வழியாக திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஒரு இலட்சம் டாலர்கள் நிதி உதவி அனுப்பியிருந்தார்.
இத்தொகையை அப்பகுதிகளில் பணிபுரியும் காரித்தாஸ் அமைப்புக்களுக்கு நேரடியாகச் சென்று வழங்கிய Cor Unum அவையின் செயலர் அருள்தந்தை Giampetro dal Toso, CNA என்ற கத்தோலிக்க செய்தி நிறுவனத்திற்கு அண்மையில் அளித்த  பேட்டி ஒன்றில் திருத்தந்தை சிரியா மக்கள் மீது காட்டிவரும் தனிப்பட்ட அக்கறையைச் சுட்டிக்காட்டினார்.
சிரியாவிலும் லெபனானிலும் இடர் துடைக்கும் பணிகள் செய்துவரும் காரித்தாஸ் அமைப்பின் சேவைகளைப் பாராட்டிய அருள்தந்தை Dal Toso, அப்பகுதிகளில் அமைதி நிலவ அனைவரையும் செபிக்கும்படி அழைப்பு விடுத்தார்.
சிரியாவில் உருவாகியுள்ள நிலையற்றச் சூழலில் கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, இஸ்லாமியரும் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகி வருவதால், அவர்கள் அனைவருக்காகவும் செபிக்கும் கடமை உள்ளதென்று Cor Unum அவையின் செயலர் அருள்தந்தை Dal Toso வலியுறுத்திக் கூறினார்.


2. இந்திய திருஅவையின் மனித உரிமை பயிற்சி முகாம்

ஏப்ரல்,17,2012. மனிதஉரிமை நடவடிக்கைகளில் ஊக்கம் மற்றும் பாதுகாப்பு குறித்த விடயங்களில் கத்தோலிக்கரின் ஈடுபாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் இரு நாள் மனித உரிமை பயிற்சி பாசறையை பெங்களூருவில் நடத்தியது இந்திய தலத் திருஅவை.
நீதியும் அமைதியும் நிறைந்த ஒரு புதிய சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் மனித உரிமை பாதுகாப்பு இன்றியமையாத ஒரு கூறு என்பதை மனதிற்கொண்டு இத்தகைய பயிற்சி முகாம்களை 2004ம் ஆண்டிலிருந்து நடத்தி வருகிறது இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் வளர்ச்சி அவை.
மனிதஉரிமை மேம்பாட்டு முயற்சிகள், பங்குதளங்களில் இத்தகையை பயிற்சி முகாம்களை நடத்துதல், பசி, நில ஆக்ரமிப்பு, குடிபெயர்தல் போன்ற பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தல், மனித உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறைகள், அரசுசாரா அமைப்புகளுடன் இணைந்து உழைத்து மனித உரிமைகளை முன்னேற்றல் என பல்வேறு தலைப்புகளில் பெங்களூருவில் நடைபெற்ற இரண்டு நாள் கூட்டத்தில் ஏறத்தாழ 25 பேருக்கு பயிற்சி வழங்கியது தலத்திருஅவையின் நீதி, அமைதி மற்றும் வளர்ச்சி அவை.


3. அர‌சிய‌ல் வ‌ன்முறைக‌ளிலிருந்து ம‌க்க‌ளைக் காப்பாற்ற‌ பாகிஸ்தான் த‌லத்திரு அவை குழுக்க‌ள்

ஏப்ரல்,17,2012. அண்மை வாரங்களில் பாகிஸ்தானில் அரசியல் வன்முறைகளால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதைத் தொடர்ந்து, சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் நோக்கில் சமூகப் பாதுகாப்பு குழுக்களை கராச்சியில் உருவாக்கியுள்ளது அந்நாட்டின் கத்தோலிக்க திருஅவை.
பல்வேறு கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் வல்லுனர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இக்குழுக்களுக்கு கராச்சியின் ஃபிரான்சிஸ்கன் துறவு இல்லத்தில் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.
கராச்சியில் வன்முறைகள் தொடர்வதைக் கருத்தில் கொண்டு, பல்வேறு நிலைகளில் சிறுபான்மையினராக இருக்கும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டியதன் தேவையை உணர்ந்து இக்குழுக்களை பாகிஸ்தான் கிறிஸ்தவ சபைகள் உருவாக்கியுள்ளதாக அறிவித்தார் இக்குழுக்களின் ஒருங்கமைப்பாளர் Rasheed Gill.
மனித உரிமை மீறல்கள் பதிவுச்செய்யப்பட்டு, உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கப்பட்டோருக்கு, குறிப்பாக பெண்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு சட்ட உதவிகள் வழங்கப்படும் என மேலும் கூறினார் அவர்.


4. இந்தோனேசியாவில் சமயச் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டி அமைதி போராட்டம்

ஏப்ரல்,17,2012. இந்தோனேசியாவில் சமயச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் சட்டங்கள் அமல்படுத்தப்படவேண்டும் என்ற விண்ணப்பத்துடன் தலைநகரிலுள்ள அரசுத்தலைவர் மாளிகை முன் அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர் அந்நாட்டு கிறிஸ்தவர்கள்.
சில இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும், அதற்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காப்பதையும் வன்மையாகக் கண்டித்துள்ள இந்தக் கிறிஸ்தவ குழுக்கள், அரசின் உடனடி நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளன.
மதச் சுதந்திரம் இந்தோனேசியாவில் மதிக்கப்படவேண்டும் என கிறிஸ்தவக் குழுக்கள் நடத்திவரும் போராட்டங்களுக்கு பல மனிதஉரிமை குழுக்களும் அந்நாட்டின் அரசு சாரா அமைப்புகளும் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.


5. சூடான் மற்றும் தென் சூடான் கிறிஸ்தவர்கள் அச்சத்தில் வாழ்கின்றனர்

ஏப்ரல்,17,2012. சூடானுக்கும் தென் சூடானுக்கும் இடையே போர் நிலவும் சூழல் உருவாகியுள்ள நிலையில், இரு நாடுகளின் கிறிஸ்தவர்களும் பெரும் அச்சத்தில் வாழ்வதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
20 இலட்சத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள், குறிப்பாக தென்சூடான் கிறிஸ்தவர்கள் உயிரிழப்பதற்குக் காரணமான மோதல்கள் மீண்டும் உருவாவதற்கான அச்சம் இருக்கும் சூழல்களை விவரிக்கும் செய்தி நிறுவனங்கள், கடந்த ஆண்டு ஜூலை மாதம் தென் சூடான் அரசு சுதந்திரம் அடைந்த பின்னரும் அந்நாட்டின் மீது சூடானின் தாக்குதல்கள் தொடர்வதாக எடுத்துரைக்கின்றன.
எல்லைகள் குறித்த கருத்து வேறுபாடுகள், எரிசக்தி எண்ணெய் வருமானம், குடியுரிமை வழங்கல் போன்றவைகளில் இரு நாடுகளுக்கிடையே மோதல்கள் தொடர்ந்து வருகின்றன.


6. இன்றும் உலகில் 40 கோடி சிறார் அடிமைகள்

ஏப்ரல்,17,2012. இன்றும் உலகில் 40 கோடி சிறார்கள் அடிமைகள் போல் பணியாற்றி வருவதாக திரு அவை அமைப்புகளும் அரசு சாரா நிறுவனங்களும் இணைந்து வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது.
பெரும்பான்மையான சிறார்கள் பொருட்கள் உற்பத்தித் துறையில் பணியாற்றுவதாகவும்அத்தகைய பொருட்களே மேற்கத்திய நாடுகளில் விற்பனைக்கு வருவதாகவும் இவ்வறிக்கை மேலும் கூறுகிறது.
தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா ஆகிய பகுதிகளின் காஃபி, வாழைப்பழம், பாகிஸ்தானின் தரைவிரிப்புகள், இந்தியாவிலிருந்து வரும் ஆபரணங்கள், சட்டைகள் ஆகியவைகளில் சிறார்களின் உழைப்பு உள்ளது எனக் கூறும் இஸ்பானிய துறவு சபைகளின் கூட்டமைப்பு, குழந்தைகளுக்கு எதிரான உரிமை மீறல்களை எதிர்த்துப் போராட வேண்டிய அரசின் கடமைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என அழைப்பு விடுக்கிறது.
ஏப்ரல் 16, இத்திங்க‌ள‌ன்று உலக‌ம் முழுவ‌தும் சிறுவ‌ர் அடிமைத்தொழில் குறித்த‌ விழிப்புண‌ர்வு தின‌ம் க‌டைபிடிக்க‌ப்ப‌ட்ட‌து.
பாகிஸ்தானில் நான்கு வ‌யதிலிருந்தே அடிமைத் தொழிலாளியாக‌ப் ப‌ணியாற்றிய கிறிஸ்த‌வ‌ சிறுவ‌ன் Iqbal Masih, உரிமை மீற‌ல்க‌ள் குறித்து கேள்வி எழுப்பிய‌த‌ற்காக‌ த‌ன் 12ம் வ‌ய‌தில், 1995ம் ஆண்டு ஏப்ர‌ல் மாத‌ம் 16ம் தேதி பாகிஸ்தானில் துணிநெய்தல் துறையின் முதலாளி கும்பலால் கொல்ல‌ப்ப‌ட்டான்.
சிறுவ‌ன் Iqbal Masihன் நினைவாக, ஒவ்வோர் ஆண்டும் ஏப்ர‌ல் மாத‌ம் 16ம் தேதி சிறுவ‌ர் அடிமைத்தொழில் குறித்த‌ விழிப்புண‌ர்வு தின‌ம் சிறப்பிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


7. காபுலில் நடைபெற்ற திட்டமிட்டத் தாக்குதல்களுக்கு ஐ.நா. பொதுச்செயலரின்  வன்மையான கண்டனம்

ஏப்ரல்,17,2012. ஆப்கானிஸ்தானில் நடைபெறும் ஒவ்வொரு தாக்குதலிலும் அப்பாவி மக்களே பாதிக்கப்படுகின்றனர் என்றும், அந்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பினரும் மக்களைப் பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார்.
இஞ்ஞாயிறன்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நடைபெற்ற பல்வேறு திட்டமிட்டத் தாக்குதல்களில், அரசுக் கட்டிடங்களும், பன்னாட்டு அமைப்புகளுக்குச் சொந்தமான கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. இத்தாக்குதல்களை வன்மையாகக் கண்டனம் செய்த ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன், ஆப்கானிஸ்தான் இராணுவம் திறமைமிக்க வகையில் செயலாற்றியதையும் பாராட்டினார்.
அடிப்படைவாதக் குழுவினரான தாலிபான் மேற்கொள்ளும் பல்வேறு தீவிரவாதத் தாக்குதல்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கினாலும், தாலிபான் அமைப்பின் சக்தி குறைந்து வருவதையும், இராணுவம் திறமையோடு செயல்படுவதையும் காணும் மக்களிடம் நம்பிக்கையும் வளர்ந்து வருகிறது என்று ACSF எனப்படும் ஆப்கானிஸ்தான் கலாச்சார சமுதாயக் கழகத்தின் இயக்குனர் Aziz Rafiee, Fides செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
தாலிபான் ஆதிக்கம் பெரிதும் வலுவிழந்துள்ளது என்பது புரிந்தாலும், ஆப்கானிஸ்தானில் இயல்பு நிலை உருவாக இன்னும் பத்தாண்டுகள் ஆகலாம் என்றும், அதுவரை மக்கள் நம்பிக்கை இழக்காமல் எதிர்காலத்தை உருவாக்க முன்வர வேண்டும் என்றும் Aziz Rafiee வேண்டுகோள் விடுத்தார்.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...