Tuesday, 17 April 2012

கத்தோலிக்க செய்திகள்: 16 ஏப்ரல் 2012

1. திருத்தந்தையின் பிறந்த நாள் திருப்பலி மறையுரை

2. திருத்தந்தையின் அல்லேலூயா வாழ்த்தொலி உரை

3. இந்தியாவில் திருஅவையின் பிறரன்புப் பணிகள் மதமாற்ற முயற்சியாக தவறாக நோக்கப்படுகிறது.

4. கத்தோலிக்கச் சிறார் காப்பகம் வியட்நாம் அதிகாரிகளால் தாக்கப்பட்டுள்ளது

5. ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர்களின் உயிர்ப்புப் பெருவிழாச் செய்திகள்

6. பிலிப்பீன்ஸ் குருவுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு உயரிய விருது

7. கிரகோரியன் பல்கலைக்கழகப் பேராசியர் அருள்தந்தை Jacob Srampickal அவர்களின் எதிர்பாராத மரணம்

8. தமிழர்கள் பிரச்சினையில்  தீர்வினை வழங்க பெருபான்மை சிங்கள மக்களுக்குத் தடையில்லை
-------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையின் பிறந்த நாள் திருப்பலி மறையுரை

ஏப்ரல்,16,2012. தன் 85வது பிறந்த நாளையொட்டி, வத்திக்கான் மாளிகையில் திருப்பீட அதிகாரிகள், சில ஜெர்மன் ஆயர்கள் ஆகியோருடன் இணைந்து இத்திங்களன்று திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இந்நாள் குறிப்பிடும் மூன்று முக்கிய நிகழ்வுகள் குறித்து எடுத்துரைத்தார்.
லூர்து நகரில் அன்னைமரியை காட்சி கண்ட புனித Bernadette Soubirousன் விழா இத்திங்களன்று சிறப்பிக்கப்படுவதைப்பற்றி எடுத்துரைத்த பாப்பிறை, லூர்து நகரில் அனைமரியின் இருப்பை நினைவுறுத்தும் நீரூற்றையும் சுட்டிக்காட்டி, நம்மைச் சுத்திகரிக்கும் மற்றும் நமக்கு வாழ்வை வழங்கும் உயிருள்ள நீர் எங்கிருந்து வருகிறது என்பதன் அடையாளமாகத் தனக்கு புனித பெர்னதத்து விளங்குகிறார் என்று கூறினார்.
18ம் நூற்றாண்டில் இரந்து வாழ்ந்து, ஐரோப்பாவில் திருப்பயணியாக சுற்றிய புனித Benedict Joseph Labreன் திருவிழாவும் இத்திங்களன்று சிறப்பிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய பாப்பிறை, அவரின் எடுத்துக்காட்டான வாழ்வு ஓர் உண்மையான ஐரோப்பியப் புனிதரை நமக்குத் தந்துள்ளது என்றார்.
பாஸ்கா மறையுண்மை காலத்தில் தான் பிறந்தது மற்றும் புனித சனியன்றே திருமுழுக்குப் பெற்றது ஆகியவை பற்றியும் எடுத்துரைத்த திருத்தந்தை, தான் இறைவனின் பிரசன்னத்தை எப்போதும் உணர்ந்தே வருவதாகவும், அவரே தனக்கு எப்போதும் ஊக்க்கமளித்து வருவதாகவும் கூறி, இறைவனுக்குத் தன் நன்றியையும் வெளியிட்டார்.

2. திருத்தந்தையின் அல்லேலூயா வாழ்த்தொலி உரை

ஏப்ரல்,16,2012. ஒவ்வோர் ஆண்டும் நாம் கிறிஸ்து உயிர்ப்பு விழாவைக் கொண்டாடும்போது, உயிர்த்த கிறிஸ்துவைச் சந்தித்த அவரது முதல் சீடர்களின் அனுபவத்தை மீண்டும் வாழ்கிறோம் என இஞ்ஞாயிறு நண்பகல் அல்லேலூயா வாழ்த்தொலி உரையை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கிறிஸ்துவர்களின் வழிபாடு என்பது கடந்த கால நிகழ்வுகளின் நினைவோ, மறைபொருளோ அல்லது உள்மன அனுபவமோ அல்ல, மாறாக உயிர்த்த கிறிஸ்துவுடன் நாம் கொள்ளும் நேரடி சந்திப்பு என்றார் திருத்தந்தை.
உயிர்த்தபின் சீடர்களுக்குத் தோன்றிய இயேசு,  'உங்களுக்கு அமைதி உரித்தாகுக' என வாழ்த்தி வழங்கியது, தீமையின் மீது அவர் கண்ட வெற்றி எனும் கனியாகும் என்றார்.
உயிர்ப்புத் திருவிழாவுக்குப் பின்வரும் ஞாயிறை 'இறை இரக்கத்தின் ஞாயிறாக' முன்னாள் திருத்தந்தை அருளாளர் இரண்டாம் ஜான் பால் அறிவித்ததன் காரணங்களையும் இந்த அல்லேலூயா வாழ்த்தொலி உரையின்போது எடுத்துரைத்தார் பாப்பிறை.
இறை அன்பின் கனியாகிய அமைதியை இயேசு தன் சீடர்களுக்கு வழங்கினார் என்று கூறியத் திருத்தந்தை, உயிர்த்த கிறிஸ்துவை விசுவாசத்துடன் நெருங்குபவர்கள், முடிவற்ற வாழ்வெனும் கொடையைப் பெறுவார்கள் என மேலும் எடுத்துரைத்தார்.

3. இந்தியாவில் திருஅவையின் பிறரன்புப் பணிகள் மதமாற்ற முயற்சியாக தவறாக நோக்கப்படுகிறது.

ஏப்ரல்,16,2012. மதமாற்றத்திற்கான ஒரு முகமூடியாக இந்தியத் தலத்திருஅவையின் பிறரன்பு பணிகள் சந்தேகத்துடன் நோக்கப்படுவதால், அப்பிறரன்புப்பணிகளுக்கு இருக்கும் ஆபத்துக்கள் குறித்து தன் கவலையை வெளியிட்டுள்ளார் திருப்பீட அதிகாரி கர்தினால் இராபர்ட் சாரா.
பிறரன்புப் பணிகளின் நோக்கம் மதமாற்றமே என சிலர் தவறாகக் குற்றஞ்சாட்டுவதால் மக்களுக்கான அத்தியாவசியப்பணிகளை ஏற்று நடத்தமுடியாதச் சூழல் இருக்கிறது என இந்திய ஆயர்கள் தன்னிடம் கவலையை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்தார் திருஅவையின் பிறரன்புப் பணிகளுக்கான 'கோர் ஊனும்'  எனும் அவையின் தலைவர் கர்தினால் சாரா.
எவ்விதக் குற்றச்சாட்டுக்கும் உள்ளாகாமல் மக்கள் பணிகளை ஏற்று நடத்துவது சிரமமாக உள்ளது என மேலும் கூறினார் கர்தினால்.
இதற்கிடையே, இந்தியாவில் திருஅவையின் பிறரன்புப் பணிகள் பற்றிக் குறிப்பிட்ட அனைத்துலக காரித்தாஸ் அமைப்பின் பொதுச்செயலர் மைக்கல் ராய், கிறிஸ்தவ மதிப்பீடுகளைக் கண்டு இந்தியாவில் அதிகாரத்தில் உள்ளோர் அஞ்சுவதாகவும், பிறரன்புப் பணிகளின் உதவியுடன் சமூக அடிமட்ட மக்கள் முன்னேறி வருவதை உயர்மட்டத்தில் உள்ளோர் விரும்புவதில்லை என்பதாலேயே இக்குற்றச்சாட்டுகள் எழுகின்றன எனவும் கூறினார்.

4. கத்தோலிக்கச் சிறார் காப்பகம் வியட்நாம் அதிகாரிகளால் தாக்கப்பட்டுள்ளது

ஏப்ரல்,16,2012. வியட்நாம் தலைநகரில் உள்ள அநாதைச் சிறார் இல்லத்திற்குள் அந்நாட்டு காவல்துறையின் உதவியுடன் நுழைந்த குண்டர்கள் குழு ஒன்று, சிறார்களை நையப்புடைத்துக் காயப்படுத்தியதுடன், அச்சிறார்களுக்காக பரிந்து பேசிய குரு ஒருவரை தாக்கி, அவரைச் சுயநினவற்ற நிலைக்கு ஆளாக்கியுள்ளது.
கம்யூனிச அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் காவல்துறையின் உதவியுடன் சிறார் காப்பகத்தில் நுழைந்த குற்றக்கும்பல், தங்கள் தாக்குதல்களை நடத்தியபின் எவ்வித காயமுமின்றி காவல்துறையின் பாதுகாப்புடன் வெளியேறியுள்ளது.
கத்தோலிக்கச் சுயவிருப்பப் பணியாளர்கள் மற்றும் குரு Nguyen Van Binhன் உதவியுடன் நடத்தப்பட்டு வந்த இந்தச் சிறார் இல்லம் தாக்கப்பட்டதை அறிந்த குரு Van Binh, சிறார்களைக் காக்கும் நோக்குடன் அவ்வில்லத்திற்குள் நுழைய முயன்றபோது, காவல் துறையால் தாக்கப்பட்டு சுயநினைவிழந்தார்.
சுயநினைவை இழந்துள்ள குருவுக்குத் தனியொரு இடத்தில் வைத்து தீவிரச் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர்களின் உயிர்ப்புப் பெருவிழாச் செய்திகள்

ஏப்ரல்,16,2012. மனிதர்கள் தங்கள் மரண பயத்தை மேற்கொள்வதற்காக உலகப் பொருட்களைத் திரட்டுவதில் கவனம் செலுத்துகின்றனர் என்றும், மரணத்தை வென்ற கிறிஸ்துவே முடிவற்ற வாழ்வின் ஊற்று என்றும் Constantinople ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் முதலாம் Bartholomew கூறினார்.
இஞ்ஞாயிறன்று ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைகள் இயேசுவின் உயிர்ப்பைக் கொண்டாடியபோது, அவர்களுக்கு உயிர்ப்புப் பெருவிழாச் செய்தியை வெளியிட்ட முதுபெரும் தலைவர் Bartholomew இவ்வாறு கூறினார்.
இவ்வுலகச் செல்வங்களையும் வசதிகளையும் வளர்த்துக் கொள்வதால், தங்கள் மரணத்தைத் தவிர்க்க முடியும் என்று நம்பி வரும் உலகில், இந்தப் பேராசையால் மென்மேலும் மரணங்களே பெருகி வருகின்றன என்பதைத் தன் செய்தியில் குறிப்பிட்டார் முதலாம் Bartholomew. 
இதற்கிடையே, ஆர்த்தடாக்ஸ் சபைகள் கொண்டாடும் உயிர்ப்புத் திருவிழாவையொட்டி மாஸ்கோ முதுபெரும்தலைவர் Kirill வழங்கிய செய்தியில், உலகப் போக்கிற்கு மாற்று சாட்சிகளாக வாழ கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
ஆர்த்தடாக்ஸ் உயிர்ப்புப் பெருவிழா வழிபாட்டில் இரஷ்யாவின் அரசுத்தலைவர் பதவியில் இருந்து விலக இருக்கும் Dmitri Medvedev அவர்களும், வருங்காலத் தலைவர் Vladimir Putin அவர்களும் கலந்து கொண்டனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.

6. பிலிப்பீன்ஸ் குருவுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு உயரிய விருது

ஏப்ரல்,16,2012. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதுகளுள் ஒன்றைப் பெற்றுள்ளார் பிலிப்பீன்ஸ் கத்தோலிக்க குரு Edu Gariguez.
இவ்விருதை அமெரிக்க ஐக்கிய நாட்டின் சான்ஃபிரான்சிஸ்கோவில் இத்திங்களன்றுப் பெற்ற அவர், தன் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பணிகளுக்குத் தூண்டுதலாக இருந்த பிலிப்பீன்ஸ் மிண்டோரோ மாநில மங்கியான் பழங்குடி மக்களுக்கு இவ்விருதை அர்ப்பணிப்பதாகத் தெரிவித்தார்.
ஒரு சிலரின் குறுகிய கால இலாப நோக்கிற்காக மக்களோ, சுற்றுச்சூழலோ தியாகம் செய்யப்படக்கூடாது என்ற அறைகூவலுடன் சுரங்கத் தொழிலுக்கு எதிராக குரல் எழுப்பி வரும் குரு Gariguez, இலாப நோக்கைவிட சுற்றுச்சூழல் பாதுகாப்பு முக்கியத்துவம் நிறைந்தது என்பதை வலியுறுத்தினார்.
பிலிப்பீன்ஸ் ஆயர்களின் சமூக நடவடிக்கைகளுக்கான தேசிய செயலகத்தின் உயர் செயலர் குரு Gariguez பெற்றுள்ள இவ்விருது, ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் டாலர் பரிசுத்தொகையை உள்ளடக்கியது.

7. கிரகோரியன் பல்கலைக்கழகப் பேராசியர் அருள்தந்தை Jacob Srampickal அவர்களின் எதிர்பாராத மரணம்

ஏப்ரல்,16,2012. இயேசு சபை அருள்தந்தை Jacob Srampickal அவர்களின் எதிர்பாராத மரணம் இந்தியாவில் தொடர்புத் துறைப் பணிகளுக்கு ஒரு பெரும் இழப்பு என்று இந்திய ஆயர் பேரவையின் சமூகத் தொடர்புப் பணிக்குழுவின் செயலர் அருள்தந்தை George Plathottam, கூறினார்.
உரோம் நகரில் இயேசு சபையினர் நடத்திவரும் கிரகோரியன் பல்கலைக் கழகத்தில் பேராசியராகப் பணிபுரிந்து வந்த அருள்தந்தை Srampickal, இச்சனிக்கிழமையன்று ஆஸ்திரியாவில் உள்ள வியென்னா நகரில் இறையடி சேர்ந்தார்.
வியென்னா நகருக்கு பத்து நாட்களுக்கு முன் சென்றிருந்த அருள்தந்தை Srampickal, அங்கு நோயுற்று மருத்துவமனையில் பத்து நாட்கள் கோமா நிலையில் இருந்தார். இச்சனிக்கிழமை காலையில் இறையடி சேர்ந்தார். அவருக்கு வயது 62.
இந்திய ஆயர் பேரவையின் கண்காணிப்பில் புது டில்லியில் இயஙகிவரும் NISCORT என்ற தொடர்பு சாதனப் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனராக வருகிற ஜூன் மாதம் பொறுப்பேற்கவிருந்த அருள்தந்தை Srampickalன் மறைவு பெரும் இழப்பு என்று கூறினார் அருள்தந்தை Plathottam.
தொடர்பு சாதனத் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள அருள்தந்தை Srampickal, பல நூறு குருக்களையும், துறவியரையும் தொடர்பு சாதனத் துறையில் பயிற்றுவித்தவர் என்றும், பல நூல்களை எழுதியவர் என்றும் கத்தோலிக்க ஊடகங்கள் கூறுகின்றன.

8. தமிழர்கள் பிரச்சினையில்  தீர்வினை வழங்க பெருபான்மை சிங்கள மக்களுக்குத் தடையில்லை

ஏப்ரல்,16,2012. தமிழர்கள் பிரச்சனையில் தீர்வு வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளுக்குப் பெரும்பான்மையான சிங்கள மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை சிங்கள மக்கள் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் மிகவும் பிழையானவை எனவும், அரசியல் இலாப நோக்கங்களுக்காக இனப்பிரச்சனையை அரசியல்வாதிகள் தூண்டி விடுவதாகவும்அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
போர் நிறைவடைந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அரசு வடக்கு மக்களுக்கு போதியளவு சேவைகளை ஆற்றவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழ் மக்கள் அமைதியானவர்கள், அனைத்து தமிழர்களையும் பயங்கரவாதிகளாக கருத முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...