Tuesday, 17 April 2012

கத்தோலிக்க செய்திகள்: 13 ஏப்ரல் 2012

1. HIV நோய்க் கிருமிகளிருந்து சிறாரைப் பாதுகாப்பது தொடர்பாக ஐ.நா.அதிகாரி, திருத்தந்தை சந்திப்பு

2. இலங்கை ஆயர்கள் : தலைவர்கள் ஒப்புரவுப் பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கு உயிர்த்த கிறிஸ்து வழி காட்டுவாராக

3. அமெரிக்கக் கத்தோலிக்கர்கள் நீதியற்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு ஆயர்கள் வலியுறுத்தல்

4. வாழ்வுக்கு ஆதரவான தவக்கால நடவடிக்கையில் 800க்கும் அதிகமான கருக்கலைப்புகள் தடுக்கப்பட்டன

5. வத்திக்கானில் திருப்பீட விவிலியக் ஆணைக்குழுவின் ஆண்டுக் கூட்டம்

6. பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு பாகிஸ்தான் கமிலியன் சபை அருள்தந்தை

7. சட்டத்துக்குப் புறம்பேயான ஆயுத வியாபாரம் நிறுத்தப்பட WCC வலியுறுத்தல்

8. மியான்மாரில் பிரித்தானிய பிரதமரின் வரலாற்று சிறப்புமிக்கச் சுற்றுப் பயணம்

9. இந்தியாவில் சீக்கியத் திருமணங்களுக்கெனத் தனிச்சட்டம்

-------------------------------------------------------------------------------------------

1. HIV நோய்க் கிருமிகளிருந்து சிறாரைப் பாதுகாப்பது தொடர்பாக ஐ.நா. அதிகாரி, திருத்தந்தை சந்திப்பு

ஏப்.13,2012. எய்ட்ஸ் நோய்க்குக் காரணமான HIV நோய்க் கிருமிகளின் பாதிப்பிலிருந்து சிறாரைப் பாதுகாப்பதற்கு 2015ம் ஆண்டுக்குள் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படுவதற்குத் திருத்தந்தை மற்றும் வத்திக்கான் அதிகாரிகளின் உதவியைக் கேட்டுள்ளார் UNAIDS என்ற ஐ.நா. எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத் தலைவர் Michel Sidibe.
HIVநோய்க் கிருமிகள், தாயிலிருந்து குழந்தைக்குப் பரவாமல் தடுப்பதும், இந்நோய்க் கிருமிகளின் பாதிப்பிலிருந்து சிறாரை முழுவதுமாகப் பாதுகாப்பதும் UNAIDS நிறுவனத்தின் இலக்காக இருக்கின்றது என்று, இவ்வாரத்தில் திருத்தந்தையைச் சந்தித்த போது தெரிவித்தார் Sidibe.
உலகிலுள்ள இலட்சக்கணக்கான எய்ட்ஸ் நோயாளிகளைக் கத்தோலிக்க நலவாழ்வு நிறுவனங்கள் பராமரித்து வருகின்றன, இந்நோய்க் கிருமிகள் புதிதாகச் சிறாரரைத் தாக்காமல் இருப்பதற்குக் கத்தோலிக்கத் திருஅவையின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது என்று Sidibe மேலும் திருத்தந்தையிடம் கூறினார்.
உலகெங்கும் வழங்கப்படும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கானச் சிகிச்சையில் ஏறக்குறைய 25 விழுக்காட்டைக் கத்தோலிக்க நலவாழ்வு நிறுவனங்கள் செய்து வருகின்றன என்ற வத்திக்கானின் புள்ளி விபரங்களை ஐ.நா. AIDS கட்டுப்பாட்டு நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது.
அண்மையில் எய்ட்ஸ் நோய்த் தடுப்பு குறித்து நடைபெற்ற ஐ.நா.உயர்மட்டக் கூட்டத்தில், 22 நாடுகளில் கர்ப்பிணித் தாய்மார்க்கு இந்நோய்க்கான சிகிச்சை அளிப்பதற்கு உறுதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2. இலங்கை ஆயர்கள் : தலைவர்கள் ஒப்புரவுப் பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கு உயிர்த்த கிறிஸ்து வழி காட்டுவாராக

ஏப்.13,2012. இலங்கையில் கடந்தகாலக் காயங்கள் குணப்படுத்தப்படவும், வறுமையால் பாதிக்கப்பட்டோரின் துன்பங்கள் நினைவுக்கூரப்படவும் வேண்டுமென கொழும்புப் பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் கேட்டுக் கொண்டார்.  
உயிர்ப்புப் பெருவிழாச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ள கர்தினால் இரஞ்சித், ஒப்புரவு, நல்லிணக்கம் மற்றும் ஒன்றிப்பின் பாதையில் இலங்கையை வழிநடத்திச் செல்ல அரசியல் தலைவர்களுக்காக, உயிர்த்த கிறிஸ்துவின் கொடையாம் தூய ஆவியிடம் செபிக்குமாறு கேட்டுள்ளார்.
இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக அண்மையில் ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து நாட்டில் பதட்ட நிலைகள் ஏற்பட்டதை நாம் ஏற்க வேண்டும் என்றும் கர்தினால் இரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.
ஒப்புரவு விவகாரம், இலங்கையின் மிகப்பெரும் சவாலாக இருக்கின்றது எனவும், எதிர்காலத்துக்கானப் பயணத்தில் கடந்த காலம் குறித்த விழிப்புணர்வு அவசியம் எனவும் கொழும்புப் பேராயரின் செய்தி கூறுகிறது.

3. அமெரிக்கக் கத்தோலிக்கர்கள் நீதியற்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு ஆயர்கள் வலியுறுத்தல்

ஏப்.13,2012. அமெரிக்க ஐக்கிய நாட்டுக் கத்தோலிக்கர்கள் தங்களது குடியுரிமைக் கடமை மற்றும் விசுவாசப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் விதமாக, அந்நாட்டின் நீதியற்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு, சமய சுதந்திரம் குறித்த தங்களது புதிய அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளனர் ஆயர்கள்.
நமது முதலும் முக்கியமுமான மதிப்புமிக்க சுதந்திரம் என்ற தலைப்பில் 12 பக்க அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் சமய சுதந்திரம் குறித்தப் பணிக்குழு, இந்தச் சுதந்திரத்திற்காக இரண்டு வாரங்கள் செபிக்குமாறும் கேட்டுள்ளது.
புனிதர்கள் John Fisher, Thomas More ஆகியோரின் திருவிழாத் திருவிழிப்புத் தொடங்கும் ஜூன் 21ம் தேதியிலிருந்து, அமெரிக்க ஐக்கிய நாட்டுச் சுதந்திர தினமான ஜூலை 4ம் தேதி வரை இக்கருத்துக்காகச் சிறப்பாகச் செபிக்குமாறு கேட்டுள்ளது அப்பணிக்குழு.
அத்துடன், இவ்வாண்டு நவம்பர் 25ம் தேதி சிறப்பிக்கப்படும் கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று, சமய சுதந்திரம் குறித்து ஆயர்களும் அருட்பணியாளர்களும் மறையுரையாற்றுமாறும்  இவ்வறிக்கை வலியுறுத்தியுள்ளது.


4. வாழ்வுக்கு ஆதரவான தவக்கால நடவடிக்கையில் 800க்கும் அதிகமான கருக்கலைப்புகள் தடுக்கப்பட்டன

ஏப்.13,2012. அமெரிக்க ஐக்கிய நாட்டில், இத்தவக்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட, வாழ்வுக்கு ஆதரவான நாற்பது நாள்என்ற நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான குழந்தைகளைக் கருக்கலைப்பிலிருந்து காப்பாற்ற முடிந்தது என்று அந்நடவடிக்கையின் இயக்குனர் Shawn Carney கூறினார்.
2007ம் ஆண்டிலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்தத் தவக்கால நடவடிக்கையில், இவ்வாண்டில்தான் அதிகமான  கருக்கலைப்புக்களைத் தடுக்க முடிந்தது என்றும் Carney கூறினார்.
இந்த வாழ்வுக்கு ஆதரவான நாற்பது நாள் நடவடிக்கையில், தன்னார்வப் பணியாளர்கள், 250 நகரங்களில் செபம், நோன்பு உட்பட பல்வேறு முயற்சிகளைத் மேற்கொண்டதாகவும், கருக்கலைப்பு செய்வதிலிருந்து 804 கர்ப்பிணிப் பெண்களைத் தடுத்த முடிந்தது எனவும் Carney கூறினார்.

5. வத்திக்கானில் திருப்பீட விவிலியக் ஆணைக்குழுவின் ஆண்டுக் கூட்டம்

ஏப்.13,2012. திருப்பீட விவிலியக் ஆணைக்குழுவின் ஆண்டுக் கூட்டம் இம்மாதம் 16 முதல் 20 வரை வத்திக்கானிலுள்ள Domus Santae Marthae இல்லத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பீட விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத் தலைவர் கர்தினால் வில்லியம் ஜோசப் லெவாடா முன்னிலையில், இவ்விவிலியக் குழுவின் பொதுச் செயலர் இயேசு சபை அருள்தந்தை Klemens Stock  தலைமையில் இக்கூட்டம் நடைபெறும்.
விவிலியத்தில் உள்தூண்டுதல் மற்றும் உண்மை என்ற தலைப்பில் இக்கூட்டம் நடைபெறும்.

6. பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு பாகிஸ்தான் கமிலியன் சபை அருள்தந்தை

ஏப்.13,2012. பாகிஸ்தானில் அதிகரித்து வரும் கவுரவக் கொலைகள் உட்பட அந்நாட்டில் பெண்களுக்கு எதிரான உரிமை மீறல்கள் அதிகம் இடம் பெறுவதாக Camillian சபை அருள்தந்தை Mushtaq Anjum கூறினார்.
உலகில் பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான நாடுகளுள் ஒன்றாக பாகிஸ்தான் உள்ளது என்று ஃபீதெஸ் செய்தி நிறுவனத்திடம் உரைத்த அருள்தந்தை Anjum, அந்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்படுவதற்கு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
தங்கள் குடும்பங்களுக்கு அவமதிப்பைக் கொண்டு வந்தார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுக் கொல்லப்பட்ட பெண்கள் 2011ம் ஆண்டில் மட்டும் குறைந்தது 943 பேர் என்று அக்குரு கூறினார்.
சில விவகாரங்களில் பெண்கள் இவ்வாறு கொல்லப்படுவதற்கு முன்னர், அவர்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர் எனவும் அவர் கூறினார்.
மேலும், இந்தியாவில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் 7,563 பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்று ஃபீதெஸ் அறிவித்துள்ளது.

7. சட்டத்துக்குப் புறம்பேயான ஆயுத வியாபாரம் நிறுத்தப்பட WCC வலியுறுத்தல்

ஏப்.13,2012. உலகில் சட்டத்துக்குப் புறம்பே நடைபெறும் ஆயுத வியாபாரத்தை முற்றிலும் ஒழிப்பதற்கு கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசுகளை  வலியுறுத்தியுள்ளது WCC என்ற உலக கிறிஸ்தவ சபைகள் மன்றம்.
வருகிற ஜூலையில் ஐ.நா.வில் கூட்டம் நடத்த வரும் போது, ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டுள்ள அனைத்துலக ஆயுத வியாபார ஒப்பந்தத்திற்கு இசைவு தெரிவிக்குமாறு சுமார் 200 நாடுகளின் தூதர்களைக் கேட்டுள்ளது WCC.
கடுமையான குற்றங்களும் வன்முறைகளும் இடம் பெறுவதற்குப் பயன்படுத்தப்படும் ஆயுதங்களைக் கொள்முதல் செய்யும் கண்டிப்பான வழிமுறைகளைச் செயல்படுத்துமாறு கேட்டுள்ள WCC, இந்த ஒப்பந்தம் குறித்த விபரங்களைப் பெற விரும்புவதாகவும் கூறியுள்ளது.
30 நாடுகளைச் சேர்ந்த உலக கிறிஸ்தவ சபைகள் மன்றத்தின் பிரதிநிதிகள், ஆப்ரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் 20 அரசுகளை ஏற்கனவே சந்தித்து இவ்வொப்பந்தம் குறித்து விவாதித்துள்ளனர்.
கிறிஸ்தவ, இசுலாம், யூத மற்றும் பிற மதங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தலைவர்கள், அனைத்துலக ஆயுத வியாபார ஒப்பந்தத்திற்கு ஆதரவான பல்சமய அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

8. மியான்மாரில் பிரித்தானிய பிரதமரின் வரலாற்று சிறப்புமிக்கச் சுற்றுப் பயணம்

ஏப்.13,2012. அறுபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பின்னர் பிரித்தானிய பிரதமர் ஒருவர் முதன் முறையாக மியான்மாருக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
மியான்மாரின் Nay Pyi Tawக்கு இவ்வெள்ளியன்று சென்ற பிரித்தானிய பிரதமர் David Cameron, மியான்மார் அரசுத்தலைவர்  Thein Seinயும், மக்களாட்சி ஆதரவு எதிர்க்கட்சித் தலைவர் Aung San Suu சி யையும் சந்தித்து கலந்துரையாடல் நடத்தினார்.
ஏறக்குறைய 50 ஆண்டுகளாக இராணுவ ஆட்சி நடைபெற்ற மியான்மாருக்கு எதிராக ஐரோப்பிய சமுதாய அவை, அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் பிற நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தன.
1948ம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து மியான்மார் சுதந்திரம் அடைந்த பின்னர் தற்போது அந்நாடு சென்றுள்ள முதல் பிரித்தானிய பிரதமராக டேவிட் காமரூன் இருக்கின்றார். 

9. இந்தியாவில் சீக்கியத் திருமணங்களுக்கெனத் தனிச்சட்டம்

ஏப்.13,2012. சீக்கியத் திருமணங்களைப் பதிவு செய்வதற்கென தனிச்சட்டம் ஒன்றைக் கொண்டுவர இந்திய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சீக்கிய அரசியல் கட்சிகளால் பல்லாண்டு காலமாக வலியுறுத்தப்பட்டு வந்த ஆனந்த் திருமணச் சட்டம் 1909”, வரும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே கொண்டு வரப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய அமைச்சர் கபில் சிபல் நிருபர்களிடம் கூறுகையில், சீக்கியத் திருமணங்களை ஆனந்த் திருமணச் சட்டம் 1909 என்ற சட்டத்தின் கீழ் பதிவு செய்யும் வகையில், மசோதா ஒன்றை பட்ஜெட் தொடரில் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனந்த் திருமணச் சட்டம் 1909 என்பது, பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டதாகும். இந்திய பிரிவினைக்குப் பிறகு இந்தச் சட்டம் கிடப்பில் போடப்பட்டது. அதன் பின்னர், சீக்கியத் திருமணங்கள் இந்து திருமணச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு வந்தன. சீக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் தனி திருமணச்சட்டத்தை பல்லாண்டு காலமாக கோரி வந்தன.
மத்திய அரசின் இந்த முடிவிற்கு பஞ்சாபில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இச்சட்டம் மூலம் வெளிநாடுகளில் திருமணம் செய்யப்படும் சீக்கியப் பெண்கள் ஏமாற்றப்படுவது தடுக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...