Wednesday, 11 April 2012

கத்தோலிக்க செய்திகள்: 11 ஏப்ரல் 2012

1. கர்தினால் Luis Aponte Martinez இறைபதம் அடைந்ததைத் தொடர்ந்து, திருத்தந்தை அனுப்பிய இரங்கல் தந்தி

2. டப்ளின் நகரில் நடைபெற உள்ள அகில உலக திருநற்கருணை மாநாட்டிற்குத் திருத்தந்தையின் பிரதிநிதியாக கர்தினால் Marc Ouellet

3. கருத்தடை தொடர்பான நலகாப்பீட்டுத் திட்டத்திற்கு ஆதரவு தரும் முதலாளிகள் அக்குற்றத்திற்குத் துணைபோகின்றனர் - வத்திக்கான் அதிகாரி

4. புனித வாரத்தின்போது லெபனான் நாட்டிலிருந்து ஈராக் நாட்டிற்கு அமைதிக் குழுவின் பயணம்

5. பாகிஸ்தான் தலத் திருஅவையில் புனித வாரத் திருச்சடங்குகளின் மையப் பொருள் - குடும்பங்கள்

6. மலாவியின் புதிய அரசுத்தலைவருடன் அந்நாட்டு ஆயர்கள் சந்திப்பு

7. இறையடியார் Mascarenhasன் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் தொலைக்காட்சித் திரைப்படம் வெளியீடு

8. புது டில்லியில் இந்திய ஒலிம்பிக் கழக அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம்

------------------------------------------------------------------------------------------------------

1. கர்தினால் Luis Aponte Martinez இறைபதம் அடைந்ததைத் தொடர்ந்து, திருத்தந்தை அனுப்பிய இரங்கல் தந்தி

ஏப்ரல்,11,2012. Puerto Rico நாட்டின் கர்தினால் Luis Aponte Martinez இறைபதம் அடைந்ததைத் தொடர்ந்து, தன் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கல் தந்தியை அந்நாட்டுத் தலத் திருஅவைக்கு அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
மறைந்த கர்தினால் Martinez அவர்களின் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கும் திருத்தந்தையின் தந்திச்செய்தி, கர்தினாலின் ஆன்ம இளைப்பற்றிக்கான செபத்திற்கும் உறுதி அளிக்கிறது.
கர்தினால் Martinez தான் வாழ்ந்த காலத்தில் பிறரன்புடனும், ஆன்மீகத் தாகத்துடனும் செயலாற்றினார் எனவும் தன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
இச்செவ்வாயன்று இறைபதம் அடைந்த கர்தயால் Luis Aponte Martinez 89 வயது நிரம்பியவர்.


2. டப்ளின் நகரில் நடைபெற உள்ள அகில உலக திருநற்கருணை மாநாட்டிற்குத் திருத்தந்தையின் பிரதிநிதியாக கர்தினால் Marc Ouellet

ஏப்ரல்,11,2012. அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் நடைபெற உள்ள அகில உலக திருநற்கருணை மாநாட்டிற்குத் திருத்தந்தையின் பிரதிநிதியாக கர்தினால் Marc Ouellet செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்செவ்வாயன்று வெளியான இவ்வறிக்கையைக் கேள்வியுற்ற அயர்லாந்து தலத் திருஅவையின் தலைவர் கர்தினால் Seán Brady, தன் மகிழ்வை வெளியிட்டவேளையில், அயர்லாந்தின் மட்டில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கொண்டுள்ள அக்கறை பல வழிகளில் வெளியாகிறது என்று கூறினார்.
ஆயர்களுக்கானத் திருப்பீடத் திருப்பேராயத்தின் தலைவராக உள்ள கர்தினால் Ouellet, ஜூன் மாதம் 10ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடைபெறும் திருநற்கருணை மாநாட்டில் முழுமையாகக் கலந்து கொள்வார் என்றும், இம்மாநாட்டின் துவக்கத் திருப்பலியையும், நிறைவுத்  திருப்பலியையும் தலைமையேற்று நடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2008ம் ஆண்டு அகில உலக திருநற்கருணை மாநாடு கனடாவின் Quebec நகரில் நடைபெற்றபோது, கர்தினால் Ouellet, Quebec உயர்மறைமாவட்டத்தின் பேராயராக இருந்து, மாநாட்டினை மிகச் சிறப்பாக நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


3. கருத்தடை தொடர்பான நலகாப்பீட்டுத் திட்டத்திற்கு ஆதரவு தரும் முதலாளிகள் அக்குற்றத்திற்குத் துணைபோகின்றனர் - வத்திக்கான் அதிகாரி

ஏப்ரல்,11,2012. பணியாளர்களை நியமனம் செய்யும் முதலாளிகள், அவர்கள் சார்பில், கருத்தடை தொடர்பான நலகாப்பீட்டுத் தொகையை வழங்குவது அக்குற்றத்திற்கு துணைபோவதை ஒத்தது என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
வத்திக்கான் சட்டம் மற்றும் நீதித் துறையில் பொறுப்பாளராக இருக்கும் கர்தினால் Raymond Burke, கத்தோலிக்கச் செயல்பாடு (Catholic Action) என்ற அமெரிக்கப் பொதுநிலையினர் கழகத்தின் தலைவர் Thomas McKennaவுக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.
ஒபாமா தலைமையில் செயல்படும் அமெரிக்க அரசு எடுத்துள்ள தவறான முடிவுகளை அமெரிக்க ஆயர்கள் வன்மையாக எதிர்த்து வருவதைக் குறித்து தன் மகிழ்வையும், ஆதரவையும் தெரிவித்த கர்தினால் Burke, அமெரிக்க அரசு எடுத்துவரும் தவறான முயற்சிகளுக்குத் துணை போகும் முதலாளிகளும் கருத்தடை என்ற பாவத்திற்கு உடந்தையாகின்றனர் என்று சுட்டிக் காட்டினார்.
ஒபாமா அரசு வெளியிட்டு வரும் பல்வேறு தவறான படிப்பினைகளால் கத்தோலிக்கர்கள் பொய்யான வழிகளைப் பின்பற்றுவதற்குப் பதில் மனசாட்சிக்கும், கத்தோலிக்கப் படிப்பினைகளுக்கும் செவி மடுக்கவேண்டும் என்று கர்தினால் Burke வேண்டுகோள் விடுத்தார்.
கர்தினால் Burke அளித்துள்ள் இந்த பேட்டியானது இப்புதனன்று மாலை அமெரிக்காவில் ஒளிப்பரப்பபடுகிறது.


4. புனித வாரத்தின்போது லெபனான் நாட்டிலிருந்து ஈராக் நாட்டிற்கு அமைதிக் குழுவின் பயணம்

ஏப்ரல்,11,2012. போரினாலும் வன்முறைகளாலும் மனம் தளர்ந்துள்ள மக்கள் மத்தியில் கவிதைகள் வாசிக்கும் கூட்டங்கள் நடத்துவது பொருத்தமற்றதாய் தெரிந்தாலும், மக்கள் இந்தக் கூட்டங்களில் கலந்து கொண்டது நிறைவான ஓர் ஆச்சரியம் என்று Kirkuk உயர்மறைமாவட்டத்தின் கல்தேய ரீதிப் பேராயர் லூயிஸ் சாக்கோ கூறினார்.
கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் இடையே நல்லுறவை வளர்க்கும் ஒரு முயற்சியாக லெபனான் நாட்டிலிருந்து ஈராக் நாட்டிற்கு புனித வாரத்தின்போது அமைதிக் குழு ஒன்று பயணத்தை மேற்கொண்டது.
லெபனான் நாட்டைச் சேர்ந்த 84 வயதான அருள்தந்தை Maroun Atallah தலைமையில் ஈராக் சென்றிருந்த அமைதிக் குழுவின் ஒரு முயற்சியாக, கடவுள் அன்பு, சகோதர அன்பு, ஒற்றுமை ஆகியவற்றை மையப்பொருளாகக் கொண்ட கவிதைகள் வாசிக்கப்பட்டன.
இக்கவிதைக் கூட்டங்களில் கிறிஸ்தவ, இஸ்லாமியத் தலைவர்கள், இராணுவ அதிகாரிகள் என பல்வேறு துறையைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈராக் நாட்டில் முழுமையான அமைதி உருவாக கல்வி ஒன்றே சிறந்த வழி என்று கூறிய அருள்தந்தை Atallah, அமைதி வழிகளைக் கற்பிக்கும் ஒரு முயற்சியாகவே இப்புனித வார கவிதைக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன என்று எடுத்துரைத்தார்.


5. பாகிஸ்தான் தலத் திருஅவையில் புனித வாரத் திருச்சடங்குகளின் மையப் பொருள் - குடும்பங்கள்

ஏப்ரல்,11,2012. கிறிஸ்துவ வாழ்வைப் பேணிவளர்க்கும் தொட்டிலாக விளங்குவது குடும்பங்கள் என்பதால், புனித வாரத் திருச்சடங்குகளின் மையப் பொருளாகக் குடும்பங்கள் என்ற கருத்தையே பாகிஸ்தான் தலத் திருஅவை வலியுறுத்தியது என்று லாகூர் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Sebastian Shaw, கூறினார்.
குடும்பங்கள் விசுவாசத்தின் தொட்டில் என்பதாலும், இவ்வாண்டு அக்டோபர் மாதம் முதல் நாம் விசுவாச ஆண்டைக் கொண்டாட உள்ளதாலும் குடும்பங்களை மையப்பொருளாக எடுத்துக் கொண்டோம் என்று ஆயர் Shaw, Fides செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
விசுவாச ஆண்டைச் சிறப்பிக்கும் ஒரு முயற்சியாக, கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வியை உருது மொழியில் வெளியிட உள்ளதாகவும் ஆயர் Shaw தெரிவித்தார்.
பாகிஸ்தானில் சிறுபான்மையினராய் வாழும் கிறிஸ்தவர்கள் வன்முறைகளைச் சந்தித்து வந்தாலும், உரையாடல், சமஉரிமைகள், அமைதி ஆகியப் பண்புகளை வளர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது உற்சாகம் தரும் ஒரு விடயம் என்றும் லாகூர் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Sebastian Shaw கூறினார்.


6. மலாவியின் புதிய அரசுத்தலைவருடன் அந்நாட்டு ஆயர்கள் சந்திப்பு

ஏப்ரல்,11,2012. ஆப்ரிக்காவின் மலாவியில் புதிய அரசுத்தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் Joyce Banda ஏழைகளின் நண்பர் என்றும், நாட்டில் முக்கியமான மாற்றங்களைக் கொணரும் திறமை பெற்றவர் என்றும் மலாவி ஆயர் பேரவையின் உதவித் தலைவரான ஆயர் Thomas Msusa கூறினார்.
மலாவி நாட்டின் அரசுத் தலைவரும், கத்தோலிக்கருமான Bingu wa Mutharika அவர்கள் அண்மையில் திடீர் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள Joyce Banda அவர்களை இப்புதனன்று அந்நாட்டு ஆயர்கள் சந்தித்துள்ளனர்.
அரசுத் தலைவர் Mutharikaன் திடீர் மரணத்தால், நாட்டில் நிலையற்ற தன்மை உருவாகாமல், அமைதியான முறையில் அரசு பொறுப்பு மாறியிருப்பதற்கு ஆயர்கள் தங்கள் மகிழ்வைத் தெரிவித்துள்ளனர்.
62 வயதான புதியத் தலைவர் Joyce Banda ஏழைகள், ஆதரவற்றக் குழந்தைகள் மட்டில் தனி அன்பு காட்டுபவர் என்று கூறிய ஆயர் Msusa, நாட்டில் நிலவும் பல்வேறு கருத்து வேறுபாடுகளைக் களைவது புதியத் தலைவரின் முக்கியப் பணியாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
புதியத் தலைவர் Joyce Banda ஆப்ரிக்காவின் தெற்குப் பகுதியில் பொறுப்பேற்கும் முதல் பெண் அரசுத் தலைவர் என்பது குறிப்பிடத் தக்கது.


7. இறையடியார் Mascarenhasன் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் தொலைக்காட்சித் திரைப்படம் வெளியீடு

ஏப்ரல்,11,2012. இறையடியார் அருள்தந்தை Raymond Mascarenhas அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ஒரு தொலைக்காட்சித் திரைப்படம் இத்திங்களன்று வெளியிடப்பட்டது.
மங்களூரு பகுதியில் இறையடியாராக உயர்த்தப்பட்டுள்ள முதல் மனிதர் என்ற புகழ்பெற்ற அருள்தந்தை Mascarenhasஐப் பற்றிய இத்திரைப்படத்தை மங்களூரு ஆயர் Aloysius Paul D’Souza வெளியிட்டார். இத்துடன் இறையடியார் Mascarenhas தொடர்பான ஓர் இணையதளத்தையும் ஆயர் Paul D’Souza துவக்கி வைத்தார்.
இறையடியார் Mascarenhas வாழ்வை விளக்கும் இத்திரைப்படத்தில் Kinnigoliயில் உள்ள சிறுமலர் பள்ளியில் பயிலும் 100 மாணவரும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியரும் நடித்துள்ளனர் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


8. புது டில்லியில் இந்திய ஒலிம்பிக் கழக அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம்

ஏப்ரல்,11,2012. இந்தியாவின் போபால் நகரில் 1984ம் ஆண்டு நிகழ்ந்த கொடூர நச்சுவாயு விபத்தில் உயிர் தப்பிய 100க்கும் அதிகமானோர் இச்செவ்வாயன்று புது டில்லியில் இந்திய ஒலிம்பிக் கழக அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்வாண்டு ஜூலை மாதம் இலண்டன் மாநகரில் துவங்க உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு நிதி உதவி செய்து வரும் Dow Chemical என்ற பன்னாட்டு நிறுவனம், போபால் நச்சு வாயு விபத்துக்குக் காரணமான Union Carbide நிறுவனத்தைத் தன்னோடு இணைத்துக் கொண்ட ஒரு நிறுவனம். அந்நிறுவனத்தின் பெயரால் நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று போராட்டம் நடத்தினர், இவ்விபத்திலிருந்து உயிர்தப்பியவர்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டோரைச் சந்தித்த இந்திய ஒலிம்பிக் கழகத்தின் தற்காலிக தலைவர் V K Malhotra, ஒலிம்பிக் போட்டிகளை ஆதரிக்கும் தொகையை Dow Chemical இடமிருந்து பெறக்கூடாது என அகில உலக ஒலிம்பிக் கழகத்தைத் தாங்கள் வலியுறுத்தப்போவதாகத் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் இந்திய அரசு இதே விண்ணப்பத்தை அகில உலக ஒலிம்பிக் போட்டிகள் குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளது. Union Carbide நடத்தி வந்த ஆலையிலிருந்து ஏற்பட்ட நச்சு வாயு கசிவுக்குத் தாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று Dow Chemical நிறுவனம் கூறிவருகிறது.


No comments:

Post a Comment