Wednesday, 11 April 2012

கத்தோலிக்க செய்திகள்: 10 ஏப்ரல் 2012

1. நைஜீரியாவில் கிறிஸ்த‌வ‌ கோவில்க‌ள் மீது தாக்குதல்

2. ஒரே பாலினத் திருமணங்களைச் சட்டப்பூர்வமாக்க முயலும் இங்கிலாந்து அரசின் முயற்சிக்குக் கண்டனம்

3. பேராசையே வாழ்வுப்பாதையை முடிவுச் செய்கிறது - இந்தோனேசியப் பேராயர்

4. ஈரானின் வரலாற்றுச் சிறப்புமிக்க கிறிஸ்தவக் கல்லறைத் தோட்டம் அரசுத்துறையினரால் சேதமாக்கப்பட்டுள்ளது

5. இலங்கையில் ஆள்கடத்தல்கள் நிறுத்தப்பட 26 அமைப்புகளின் குரல்

6. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தோர் 1,20,000 பேர் இந்தியாவில்

7. Puerto Rico கர்தினால் Luis Aponte Martínez  இறைபதம் அடைந்தார்

------------------------------------------------------------------------------------------------------

1. நைஜீரியாவில் கிறிஸ்த‌வ‌ கோவில்க‌ள் மீது தாக்குதல்

ஏப்ரல்,10,2012. கிறிஸ்து உயிர்ப்புவிழாக் கொண்டாட்டங்களின்போது, நைஜீரியாவின் கிறிஸ்தவக் கட்டிடங்கள் மீது நடத்தப்பட்டத் தாக்குதல்களில் 38 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
நைஜீரியாவின் KADUNA என்ற நகரில் உள்ள கிறிஸ்தவக் கட்டிடம் ஒன்றினுள் தீவிரவாதி ஒருவர் நுழைய முயன்றதைப் பாதுகாப்புத் துறையினர் தடுத்தபோது, அவர் கொணர்ந்த வெடிகுண்டு இயக்கப்பட்டு பெரும் சேதம் நிகழ்ந்தது.
இத்தாக்குதல் குறித்து தன் ஆழந்த கவலையை வெளியிட்ட KADUNA பேராயர் Matthew Man-oso Ndagoso,  மக்களை அச்சத்துக்கு உள்ளாக்கும் இத்தகையத் தாக்குதல் முடிவுக்கு வரவேண்டுமெனில், மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடையே பேச்சுவார்த்தை இடம்பெறுவது ஒன்றே நைஜீரியாவுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை என்று கூறினார்.
38 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான இந்த வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்தியது Boko Haram என்ற இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கிறிஸ்தவக் கட்டிடங்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் சில வீடுகள்,  தங்கும் விடுதிகள் மற்றும் வாகனங்களும் சேதமடைந்துள்ளன.


2. ஒரே பாலினத் திருமணங்களைச் சட்டப்பூர்வமாக்க முயலும் இங்கிலாந்து அரசின் முயற்சிக்குக் கண்டனம்

ஏப்ரல்,10,2012. ஒரே பாலினத் திருமணங்களைச் சட்டப்பூர்வமாக்க முயலும் இங்கிலாந்து அரசின் முயற்சிகள் தேவையற்றவை என குற்றஞ்சாட்டியுள்ளார் இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் பேராயர் Vincent Nichols.
திருமணம் என்பதற்கு இன்றுவரை வழங்கப்பட்டு வந்துள்ள அர்த்தத்தை மாற்றியமைக்க வேண்டிய ஒரு தேவை இருப்பதாகத் தெரியவில்லை என்றார் அவர்.
ஒரே பாலினத் திருமணங்களைச் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கும் முயற்சிகளுக்கு இங்கிலாந்து பிரதமர்  David Cameron வழங்கும் விளக்கங்கள் மக்களுக்குப் புரியும்படியாக இல்லை எனவும் குற்றஞ்சாட்டினார் பேராயர் Nichols.
பல நூற்றாண்டுகளாக உலகம் முழுவதும் நன்மைகளை வழங்கி வந்த இருபால் திருமண உறவுக்குச் சட்டப்பூர்வமாகக் கொடுக்கப்பட்டு வந்த பாதுகாப்பை மாற்றியமைக்க வேண்டியதன் தேவை எவருக்கும் புரியவில்லை என மேலும் உரைத்தார் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் தலத் திருஅவையின் தலைவர் பேராயர் Nichols.


3. பேராசையே வாழ்வுப்பாதையை முடிவுச் செய்கிறது - இந்தோனேசியப் பேராயர்

ஏப்ரல்,10,2012. இன்றைய உலகில் நாம் உணர்ந்தாலும் உணரவில்லையெனினும் ஒருவரின் வாழ்வுப் பாதையை பேராசையே நிர்ணயிக்கிறது என்று இந்தோனேசியப் பேராயர் Ignatius Suharyo கூறினார்.
கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவையொட்டி தலைநகர் Jakarta  உயர்மறைமாவட்ட விசுவாசிகளுக்குச் செய்தி வழங்கியப் பேராயர்,  பேராசை என்பது மக்களின் இணக்க வாழ்வைப் பாதிப்பதோடு, ஒழுக்கரீதி மதிப்பீடுகளையும் அழித்து, ஓர் அபாயகரமான அழிவுக்கு இட்டுச்செல்லும் என்றார்.
சிலுவையை நாம் துன்பமாக நோக்கினாலும் அது இறை ஒருமைப்பாட்டின் தோற்றம் எனவும் கூறினார் பேராயர் Suharyo.
ஆகவே, ஒருமைப்பாட்டின் துணைகோண்டு பேராசையை வெற்றி கண்டு,  ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்களாக வாழ இந்தோனேசிய மக்களனைவருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் கூறினார் பேராயர்.


4. ஈரானின் வரலாற்றுச் சிறப்புமிக்க கிறிஸ்தவக் கல்லறைத் தோட்டம் அரசுத்துறையினரால் சேதமாக்கப்பட்டுள்ளது

ஏப்ரல்,10,2012. ஈரானின் Kerman  மாநிலத்திலுள்ள 200 ஆண்டுகள் தொன்மையுடைய வரலாற்றுச் சிறப்புமிக்க கிறிஸ்தவக் கல்லறைத் தோட்டத்தை அரசுத்துறையினர் முற்றிலுமாக சேதப்படுத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானிய கிறிஸ்தவ செய்தி நிறுவனமான Mohabatன் கூற்றுப்படி, Kermanன் வரலாற்றுச் சிறப்புமிக்க கிறிஸ்தவக் கட்டிடம் ஒன்றை ஏற்கனவே சேதப்படுத்தியுள்ள அரசுத்துறையினர், தற்போது கல்லறைத் தோட்டத்தையும் முற்றிலுமாக சேதப்படுத்தியுள்ளனர் என்று தெரிகிறது.
க‌ல்ல‌றைத் தோட்ட‌ம் அழிவுக்குள்ளாக்க‌ப்ப‌ட்ட‌து குறித்த‌ செய்திக‌ள் ப‌த்திரிகைக‌ளில் வ‌ர‌த்துவ‌ங்கியுள்ள‌தைத் தொடர்ந்து, இது குறித்த‌ ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டுமென ஈரானின் க‌லாச்சார‌ பார‌ம்ப‌ரிய‌ அலுவ‌ல‌க‌ம் அழைப்பு விடுத்துள்ள‌து.
Kerman நகரில் அரசுத்துருப்புகளால் அழிவுக்குள்ளாக்கப்பட்டுள்ள கிறிஸ்தவக்கட்டிடம் 2009ம் ஆண்டிலேயே தேசிய நினைவுச்சின்னமாக பதிவுச்செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


5. இலங்கையில் ஆள்கடத்தல்கள் நிறுத்தப்பட 26 அமைப்புகளின் குரல்

ஏப்ரல்,10,2012. இலங்கையில் அரசு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி கடத்தல், காணாமல் போதல் பொன்றவை பெருமளவில் அதிகரித்துள்ளதாகவும், இதற்கு அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்து, கடத்திச் செல்லப்பட்டோரை 24 மணிநேரத்திற்குள் விடுவிக்க வேண்டும் என்று 26 அமைப்புக்கள் அரசாங்கத்திற்குக் காலக்கெடு விதித்துள்ளன.
கால்களை முறித்தல், தாடியை வெட்டி வாய்க்குள் திணித்தல் போன்ற செயற்பாடுகளுக்கு இடமளித்து அரசு செயற்பட்டால், நாட்டில் சடலங்களே மிஞ்சும் என்று அவ்வமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தொழிற்சங்க முக்கிய தலைவர்கள், இடதுசாரி அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள், சட்ட அறிஞர்கள் உள்ளிட்ட பொதுநல அமைப்புக்களைச் சேர்ந்தோர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த ஐக்கிய சோஸலிச கட்சியின் பிரதிநிதி சிறிதுங்க ஜெயசூரிய, இலங்கை அரசு இவ்வாறான செயற்பாடுகளுக்கு இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதால், கடத்தல்கள், காணாமல் போதல்கள் அதிகரித்து, அது உச்சநிலைக்கு வந்துள்ளது எனத் தெரிவித்தார்.
அரசியல் பேதங்களைக் கைவிட்டுவிட்டு மனிதாபிமானம் குறித்து கலந்துரையாட வேண்டிய நேரம் வந்துள்ளது என்றும், ஒன்றரை மாதத்திற்குள் 54 கடத்தல் சம்பவங்கள் இலங்கையில் இடம்பெற்றுள்ளன என்றும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டோர் கருத்து தெரிவித்தனர்.


6. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தோர் 1,20,000 பேர் இந்தியாவில்

ஏப்ரல்,10,2012. போர் இடம்பெற்ற காலத்தில் இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்தோராக சென்ற 1,20,000 பேர் தொடர்ந்து இந்தியாவில், முகாம்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தங்கியிருப்பதாக அண்மை அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
வடக்கு, கிழக்கு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது இந்த புள்ளி விவரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
புலம்பெயர்ந்தோராகத் தங்கியிருக்கும் இந்த 1,20,000 பேரில் 23,000 பேர் மட்டும் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அவர்களும், நிரந்தரமான வீடுகள் அமைக்கப்பட்டால் மட்டுமே நாடு திரும்ப முடியும் என நிபந்தனை விதித்துள்ளனர்.


7. Puerto Rico கர்தினால் Luis Aponte Martínez  இறைபதம் அடைந்தார்

ஏப்ரல்,10,2012. Puerto Rico நாட்டின் தலைநகர் San Juanன் முன்னாள் பேராயர் கர்தினால் Luis Aponte Martínez இறைபதம் அடைந்தார்.
1922ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி பிறந்த கர்தினால், 1950ம் ஆண்டு குருவாகவும் 1960ம் ஆண்டு ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார்.
1973ம் ஆண்டு திருஅவையில் கர்தினாலாக உயர்த்தப்பட்ட இவர்,  1999ம் ஆண்டு San Juan உயர்மறைமாவட்டப் பணிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.
இச்செவ்வாயன்று, அதாவது ஏப்ரல் 10ம் தேதி அவரின் 62வது குருத்துவ விழாவைச் சிறப்பிக்க உயர்மறைமாவட்ட குருக்களும் அவரின் நண்பர்களும் தயாரித்துவந்த வேளையில் கர்தினால் Aponte Martínezன் மரணம் இடம்பெற்றுள்ளது.
கர்தினால் Aponte Martínezன் மரணத்துடன் திருஅவையில் கர்தினால்களின் எண்ணிக்கை 210ஆகக் குறைந்துள்ளது. இதில் 123 பேரே திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதிற்குட்பட்டவர்கள்.
மூன்று நாட்களுக்கு முன்னர், அதாவது இம்மாதம் 7ம்தேதி, புனித சனிக்கிழமையன்று சிரியாவின் கர்தினால் முதலாம் Moussa Daoud அவர்களும் இறைபதம் அடைந்தார்.

 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...