Tuesday, 3 April 2012

கத்தோலிக்க செய்திகள்: 02 ஏப்ரல் 2012

 
1. குருத்து ஞாயிறன்று திருத்தந்தை இளையோர்க்கு வழங்கிய மறையுரை

2. திருத்தந்தையின் விண்ணப்பத்தை ஏற்று, புனித வெள்ளிக்கிழமையை தேசிய விடுமுறையாக அறிவித்துள்ளது கியூபா அரசு.

3. இஸ்பானிய இளையோர்க்குத் திருத்தந்தையின் உரை

4. மியான்மார் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி இடம்பெறவிருப்பதே அந்நாட்டில் ஒரு பெரும் முன்னேற்றம் - ஆயர் Raymond Saw Po Ray

5. புனித வெள்ளிக் கொண்டாட்டங்களுக்கென மும்பை மைதானம் மறுக்கப்பட்டுள்ளது

6. மத சுதந்திரத்தை மீறும் நாடுகள் குறித்த அமெரிக்க ஐக்கிய நாட்டின் அறிக்கை

-------------------------------------------------------------------------------------------

1. குருத்து ஞாயிறன்று திருத்தந்தை இளையோர்க்கு வழங்கிய மறையுரை

ஏப்ரல்,02,2012. நாசரேத்தூர் இயேசு நமக்கு யார், மெசியாவைக் குறித்தும் கடவுளைக் குறித்தும் நம் எண்ணங்கள் என்ன என்ற கேள்விகளை விசுவாசிகளுக்கு முன்வைத்து குருத்து ஞாயிறின் மறையுரையை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
குருத்து ஞாயிறன்று திருஅவையில் சிறப்பிக்கப்படும் உலக இளையோர் தினத்தையொட்டி, உரோம் நகரின் தூய பேதுரு வளாகத்தில் அமர்ந்திருந்த பல ஆயிரக்கணக்கான இளையோர் உட்பட முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட விசுவாசிகளுக்குத் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை, இறைவனை வரவேற்பதற்கும் அவர் வழியை இறுதிவரை பின்பற்றுவதற்கும் தீர்மானம் எடுக்கும் நாளாக இக்குருத்து ஞாயிறை நாம் சிறப்பிப்போம் என்று கூறினார்.
சிலுவையை மணிமுடியாக ஏற்றுக்கொண்ட நம் மன்னரின் பாதையில் நடைபோட இப்புனிதவாரத்தில் அழைக்கப்படுகிறீர்கள் என இளையோரை நோக்கி உரைத்தத் திருத்தந்தை, நம்முடைய உண்மையான எதிர்பார்ப்புகள் என்ன, நம் ஆழமான விருப்பங்கள் என்ன என்பது குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் இது என்றார்.
இஸ்ரயேலின் அரசராக இயேசுவைக் கொண்டாடிய அதே மக்கள், பிலாத்தின் முன்னிலையில் இயேசுவைச் சிலுவையில் அறையும்படிக் கேட்டதைப் பற்றியும் சுட்டிக்காட்டிய பாப்பிறை, மெசியாவாகவும் இஸ்ரயேலின் மன்னராகவும் இயேசு தன்னை வெளிப்படுத்திய விதத்தால் ஏமாற்றமடைந்தவர்களே இவ்வாறு எதிர்மறையாக மாறினர் என்றார்.
இறைவனுக்கு ஆம் என்று சொல்வதற்கும் அவர் வழியைப் பின்பற்றுவதற்கும் உறுதியான தீர்மானத்தை எடுக்கும் நாளாக இக்குருத்து ஞாயிறை சிறப்பிப்போம் என இளையோர்க்கு மீண்டும் அழைப்பு விடுத்த திருத்தந்தை, இத்தகையத் தீர்மானமே உண்மையான மகிழ்வுக்கு இட்டுச் செல்லும் என்பதையும் எடுத்துரைத்து 'ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்' என்ற இவ்வாண்டின் இளையோர் தின மையக்கருத்தையும் சுட்டிக்காட்டினார்.

2. திருத்தந்தையின் விண்ணப்பத்தை ஏற்று, புனித வெள்ளிக்கிழமையை தேசிய விடுமுறையாக அறிவித்துள்ளது கியூபா அரசு.

ஏப்ரல்,02,2012. திருத்தந்தை தன் திருப்பயணத்தினபோது விடுத்திருந்த விண்ணப்பத்தை ஏற்று, இவ்வாரத்தின் புனித வெள்ளிக்கிழமையைத் தேசிய விடுமுறையாக அறிவித்துள்ளது கியூபா அரசு.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கியூபா நாட்டில் திருப்பயணம் மேற்கொண்ட போது, இந்த மார்ச் மாதம் 27ம் தேதி, கடந்த செவ்வாயன்று அந்நாட்டு அரசுத்தலைவர் Raúl Castroவை, அவரது மாளிகையில் 40 நிமிடங்களுக்கு மேலாகத் தனியாகச் சந்தித்துப் பேசினார். அப்போது, திருத்தந்தை புனித வெள்ளிக்கிழமையை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, இம்முடிவை தற்போது அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு. இயேசுவின் பாடுகளையும், சிலுவை மரணத்தையும் சிறப்பாகத் தியானிக்கும் புனித வெள்ளியன்று, கிறிஸ்தவர்கள் ஆலயங்களுக்குச் செல்வதற்கு வசதியாக இந்தச் சலுகையைக் கேட்பதாகத் திருத்தந்தை தெரிவித்திருந்தார்.
இவ்வாண்டின் புனித வெள்ளி தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், புனித வெள்ளியை நிரந்தரமாகத் தேசிய விடுமுறையாக்குவது குறித்து அதிகாரிகள் தீர்மானிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கியூபாவில் 1959ம் ஆண்டில் கம்யூனிச ஆட்சி தொடங்கிய பின்னர், அந்நாட்டுப் புரட்சியாளர்கள் அனைத்துச் சமய விடுமுறைகளையும் இரத்து செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கியூபா அரசு, இவ்வாண்டு புனித வெள்ளிக்கிழமையை தேசிய விடுமுறையாக அறிவித்திருப்பது குறித்து திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தியும் மிகுந்த மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார். கியூபா அதிகாரிகள், திருத்தந்தை 16ம் பெனடிக்டின் வேண்டுகோளை இவ்வளவு விரைவாக நிறைவேற்றியிருப்பது நிச்சயமாக, நல்ல நேர்மறையான அடையாளம் என்றும் அவர் கூறினார்.

3. இஸ்பானிய இளையோர்க்குத் திருத்தந்தையின் உரை

ஏப்ரல்,02,2012. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகரில் இடம்பெற்ற உலக இளையோர் தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட திருத்தந்தைக்கு நன்றி கூறும் நோக்கில் உரோம் நகர் வந்திருந்த இஸ்பெயின் இளைஞர்களை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இளையோர் தினக்கொண்டாட்டங்களைத் திரு அவையில் ஊக்குவித்த முன்னாள் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இறந்ததன் எழாம் ஆண்டு இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்ட‌தையும் நினைவுகூர்ந்த பாப்பிறை, மத்ரித்தில் சிறப்பிக்கப்பட்ட 26வது இளைஞர் தினக்கொட்டாட்டங்களை எண்ணும்போதெல்லாம் தன் இதயம் மகிழ்வாலும் நன்றியாலும் நிறைவதாகவும் கூறினார்.
இயேசு கொணர்ந்த அன்பின் அரசைக் கட்டியெழுப்ப இளையோரின் கரங்கள் தேவைப்படுவதால் எவ்வித முன்நிபந்தனையுமின்றி திருஅவைக்கு தங்கள் ஒத்துழைப்பை இளைஞர்கள் வழங்கவேண்டும் எனவும் தன்னைச் சந்தித்த இஸ்பானிய இளைஞர்களிடம் விண்ணப்பித்தார் திருத்தந்தை.
நம் முன்னோர்களைப்போல் நாம் ஒவ்வொருவரும் நம் உறவினர்கள், நண்பர்கள், உடன் பயில்வோர், பணிபுரிவோர், ஏழைகள் மற்றும் நோயாளிகளிடையே மறைப்போதகர்களாகச் செயல்படவேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

4. மியான்மார் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி இடம்பெறவிருப்பதே அந்நாட்டில் ஒரு பெரும் முன்னேற்றம் - ஆயர் Raymond Saw Po Ray

ஏப்ரல்,02,2012. மியான்மாரில் நடைபெற்ற இடைத்தேர்தலின் பயனாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி இடம்பெறும் என்பதே அந்நாட்டில் ஒரு பெரும் முன்னேற்றம் என்று மியான்மார் ஆயர் ஒருவர் கூறினார்.
மியான்மார் எதிர்கட்சித் தலைவர் Aung San Suu Kyiயின் கட்சி அனைத்துத் தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கும் நிலையிலேயே Fides செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த மியான்மார் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதிப் பணிக்குழுவின் தலைவர், ஆயர்  Raymond Saw Po Ray இவ்வாறு கூறினார்.
எதிர்கட்சித் தலைவர் Suu Kyi மக்களின் நலனுக்காக உழைப்பார் என்பதில் ஐயமில்லை என்று கூறிய ஆயர் Po Ray, அடுத்து வரும் ஆண்டுகளில் நாட்டில் ஒப்புரைவையும் அமைதியையும் கொணர்வதே Suu Kyiயின் முக்கியமான பணியாக அமைய வேண்டும் என்ற தன் ஆவலையும் வெளியிட்டார்.
NLD (National League for Democracy) எனப்படும் தேசிய குடியரசு கட்சி போட்டியிட்ட 44 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளது என்ற செய்தியைக் கேட்ட அக்கட்சியின் தலைவர் Suu Kyi, இந்த வெற்றி மக்கள் அடைந்த வெற்றி என்றும் மியான்மார் நாட்டில் இது புதியதொரு வரலாற்றை உருவாக்கும் வாய்ப்பு என்றும் கூறினார்.
இந்த வெற்றிக்காகப் பல ஆண்டுகள் காத்திருந்த மக்கள் அத்துமீறியச் சொற்களாலும், செயல்களாலும் பிற கட்சியினரைப் புண்படுத்தும் வாய்ப்புக்கள் உள்ளன என்ற ஆபத்தைச் சுட்டிக்காட்டிய அரசியல் தலைவர் Suu Kyi, இது வெற்றியைக் கொண்டாடும் நேரமல்ல, மாறாக, ஒப்புரவை நோக்கி இந்த நாட்டை அழைத்துச் செல்லும் நேரம் என்று வலியுறுத்திக் கூறினார்.
மியான்மார் தேர்தல் முடிவுகளைப் பல நாடுகள் மகிழ்வுடன் வரவேற்றுள்ளன. சீர்திருத்தங்களை நோக்கிச் செல்லும் ஒரு பாதையைத் தேர்ந்துள்ள மியான்மார் அரசையும், மக்களையும் வாழ்த்திப் பேசினார் அமெரிக்க அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் Hillary Clinton. மியான்மார் நாட்டின் மீது விதிக்கப்பட்டிருக்கும் பல பொருளாதாரத் தடைகளை நீக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன என்று ஐரோப்பிய ஒன்றியமும் அறிவித்துள்ளது.
மேலும், தற்போதைய வெற்றி மூலம் எதிர்கட்சித் தலைவர் Aung San Suu Kyiயின் கட்சி பாராளு மன்றத்தில் இடம் பெறும் என்றாலும், 2015ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தல்கள் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்று ஆசிய செய்தி  நிறுவனம் கூறியது.

5. புனித வெள்ளிக் கொண்டாட்டங்களுக்கென மும்பை மைதானம் மறுக்கப்பட்டுள்ளது

ஏப்ரல்,02,2012. கடந்த 55 ஆண்டுகளாக புனித வெள்ளிக் கொண்டாட்டங்களுக்கென பயன்படுத்தப்பட்டு வந்த மும்பையின் August Kranti திறந்தவெளி அரங்கில், இவ்வார புனித வெள்ளிக்கொண்டாட்டங்கள் நடைபெற அனுமதி மறுத்துள்ளது மகராஷ்டிர அரசு.
இன்னும் நான்கு நாட்களே எஞ்சியுள்ள நிலையில் இவ்வரங்கைத் தர அரசு மறுத்துள்ளது Cumballa Hill புனித ஸ்டீபன் கோவில் மக்களுக்கு ஆழ்ந்த கவலையை அளித்துள்ளது.
ம‌த‌க்கொண்டாட்ட‌ங்க‌ளுக்கென‌ அர‌சு மைதான‌ங்க‌ளை ஒதுக்க‌க்கூடாது என்ற‌ மும்பை நீதி ம‌ன்ற‌த்தின் 2006ம் ஆண்டு க‌ட்ட‌ளையை மேற்கோள்காட்டி இம்மைதான‌ம் த‌ற்போது ம‌றுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.
2006ம் ஆண்டில் நீதிமன்றம் வழங்கிய தடையை அப்போதே செயல்படுத்தாமல், தற்போது புனித வெள்ளி கொண்டாட்டங்களின் சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் புனித ஸ்டீபன் கோவில் அருட்தந்தை Ernest Fernandes.
இக்கேள்வி குறித்து ப‌தில‌ளிக்க‌ ம‌றுத்துள்ளார் ம‌க‌ராஷ்டிரா மாநில‌ சுற்றுலா ம‌ற்றும் க‌ல‌ச்சார‌த்துறை செய‌ல‌ர் ஆனந்த் குல்க‌ர்னி.

6. மத சுதந்திரத்தை மீறும் நாடுகள் குறித்த அமெரிக்க ஐக்கிய நாட்டின் அறிக்கை

ஏப்ரல்,02,2012. மத சுதந்திரத்தை மறுக்கும் நாடுகள் பற்றிய 2012ம் ஆண்டு பட்டியலை வெளியிட்டுள்ளது அனைத்துலக மத சுதந்திரம் குறித்த அமெரிக்க ஐக்கிய நாட்டு அவை.
மியான்மார், சீனா, எகிப்து, எரிட்ரியா, ஈராக், ஈரான், நைஜீரியா, வடகொரியா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, சூடான், தஜிக்கிஸ்தான், துருக்கி, துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான்வியட்நாம் ஆகிய நாடுகள் மத சுதந்திரம் உட்பட மனிதனின் அடிப்படை உரிமைகளை மறுக்கும் நாடுகள் என இவ்வவை குறிப்பிட்டுள்ளது.
மத உரிமைகள் உட்பட மக்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கும் நாடுகள், ஏழ்மை, பாதுகாப்பற்ற நிலை, போர், அச்சுறுத்தல், வன்முறை போன்றவைகள் முளைவிட காரணமாகும் நாடுகளாக மாறுகின்றன எனக் குற்றஞ்சாட்டியுள்ளார் இவ்வவையின் தலைவர் லியோனார்த் லியோ. 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...