Friday, 2 November 2012

Catholic News in Tamil 31/10/12

1. ஜான்சி மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனம்

2. திருத்தந்தை முதலாம் ஜான்பால் அவர்கள் பிறந்த நாளின் நூற்றாண்டு விழா

3. பிரச்சனைகள் தீர்வதற்கு உரையாடல் ஒரு முக்கிய கருவியாக உள்ளது - கர்தினால் John Tong

4. சிறைகளில் வாழும் மனிதர்களையும் சேர்த்து ஒவ்வொரு மனிதரும் மதிப்பிற்குரியவர்கள் - கர்தினால் Murphy-O’Connor

5. தசரா விழா, நம் தனிப்பட்ட வாழ்வில் காணப்படும் தீமைகளையும் களைந்திட ஒரு வாய்ப்பாக அமைகிறது - டில்லி பேராயர்

6. மும்பைச் சேரிகளில் 'புட்டி விளக்குகள்' என்ற புதிய திட்டம்

7. கணணி வழியில் நீத்தார் நினைவு நாள்: பிலிப்பின்ஸ் ஆயர் பேரவை முயற்சி
சுற்றுச்சூழல் குழு எதிர்ப்பு

8. குடிநீரைத் தனியார்மயமாக்குவதற்கு முயற்சிக்கும் இலங்கை அரசின் திட்டத்திற்குச் சுற்றுச்சூழல் குழு எதிர்ப்பு

------------------------------------------------------------------------------------------------------

1. ஜான்சி மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனம்

அக்.31,2012. இந்தியாவின் ஜான்சி மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருள்தந்தை Peter Parapullil அவர்களைத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இப்புதனன்று நியமனம் செய்தார்.
இம்மறைமாவட்டத்தின் ஆயராக 1977ம் ஆண்டு முதல் பணியாற்றிய ஆயர் Frederick D'Souza அவர்களின் பதவி விலகலை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை, இதுவரை அம்மறைமாவட்டத்தின் குருகுல முதல்வராக 2005ம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் அருள்தந்தை Peter Parapullil அவர்களை ஆயராக நியமனம் செய்துள்ளார்.
1949ம் ஆண்டு கேரளாவின் Perumanoorல் பிறந்த Peter, 1976ம் ஆண்டு ஜான்சி மறைமாவட்டத்தின் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
உரோமையில் உள்ள கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக் கழகத்தில் தன் உயர்கல்வியை முடித்த அருள்தந்தை Peter, ஜான்சி மறைமாவட்டத்தின் பல முக்கிய பொறுப்புக்களில் பணியாற்றியவர்.
1954ம் ஆண்டு மறைமாவட்டமாக உருவாக்கப்பட்ட ஜான்சியில், ஏறத்தாழ நாலாயிரம் கத்தோலிக்கர்கள் வாழ்கின்றனர். 22 பங்குத்தளங்களைக் கொண்ட இம்மறைமாவட்டத்தில், 54 குருக்களும், 236 இருபால் துறவியரும் பணி புரிகின்றனர்.


2. திருத்தந்தை முதலாம் ஜான்பால் அவர்கள் பிறந்த நாளின் நூற்றாண்டு விழா

அக்.31,2012. அக்டோபர் 30 இச்செவ்வாய் மாலை, இத்தாலியின் வெனிஸ் நகரில் திருத்தந்தை முதலாம் ஜான்பால் அவர்கள் பிறந்த நாளின் நூற்றாண்டு விழா ஓர் ஆடம்பரத் திருப்பலியுடன் கொண்டாடப்பட்டது.
திருத்தந்தை முதலாம் ஜான்பால் 1912ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி வட இத்தாலியின் Veneto எனும் பகுதியில் பிறந்தார். 1978ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி இவர் திருத்தந்தையாகப் பொறுப்பேற்று, 33 நாட்களுக்குப் பின், செப்டம்பர் மாதம் 28ம் தேதி இறையடி சேர்ந்தார்.
'புன்னகைத் தவழும் திருத்தந்தை' என்ற அடைமொழிக்கு உரிய இத்திருத்தந்தை 1969ம் ஆண்டு முதல் 1978ம் ஆண்டு வரை வெனிஸ் நகரின் பேராயராகப் பணியாற்றினார்.
Albino Luciani என்ற இயற்பெயர் கொண்ட இத்திருத்தந்தை பிறந்த நூற்றாண்டு விழாவின் நினைவாக, வெனிஸ் பேராயர் Francesco Moraglia தலைமையில் ஆடம்பரத் திருப்பலி இச்செவ்வாய் மாலை நிகழ்ந்தது. இத்திருப்பலியைத் தொடர்ந்து இன்னிசை நிகழ்ச்சியொன்றும் நடைபெற்றது.
திருத்தந்தை முதலாம் ஜான்பால் அவர்களை அருளாளராக உயர்த்தும் முயற்சிகள் 2003ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


3. பிரச்சனைகள் தீர்வதற்கு உரையாடல் ஒரு முக்கிய கருவியாக உள்ளது - கர்தினால் John Tong

அக்.31,2012. பல தவறான எண்ணங்களும், முற்சார்பு எண்ணங்களும் சீரமைக்கப்பட்டு, பிரச்சனைகள் தீர்வதற்கு உரையாடல் ஒரு முக்கிய கருவியாக உள்ளது என்று ஹாங்காங் பேராயர் கர்தினால் John Tong கூறினார்.
திருப்பீடத்திற்கும், சீன நாட்டுக்கும் இடையே உரையாடல்களை உருவாக்க ஒரு திருப்பீட அவை நிறுவப்படுவது நலம் என்று திருப்பீட விசுவாசப்பரப்புப் பேராயத்தின் தலைவரான கர்தினால் Fernando Filoni, அண்மையில் ஒரு பரிந்துரையைக் கூறியுள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் தலைவராகப் பணியாற்றிய கர்தினால் John Tong, இப்பரிந்துரைக்குத் தன் முழு ஆதரவு உண்டு என்று Fides செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
கர்தினால் Filoniயின் பரிந்துரை அடங்கிய கட்டுரையில், எந்த ஒரு கலாச்சாரத்திலும் மதச் சுதந்திரம் ஒரு முக்கிய பங்கு வகிக்கவேண்டும் என்று கூறியிருப்பதையும் சுட்டிக் காட்டிப் பேசிய கர்தினால் John Tong, சீனாவில் வாழும் கிறிஸ்தவர்கள் நாட்டுக்கும் திருஅவைக்கும் உகந்த குடிமக்களாக வாழ உரையாடல் வழிவகுக்கும் என்பதை வலியுறுத்திக் கூறினார்.


4. சிறைகளில் வாழும் மனிதர்களையும் சேர்த்து ஒவ்வொரு மனிதரும் மதிப்பிற்குரியவர்கள் - கர்தினால் Murphy-O’Connor

அக்.31,2012. படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதரும் இறைசாயலில் படைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் அனைவருமே மதிப்பிற்குரியவர்கள், இங்கிலாந்திலும், Walesஇலும் உள்ள சிறைகளில் வாழும் 87,000 பேரையும் சேர்த்து ஒவ்வொரு மனிதரும் மதிப்பிற்குரியவர்கள் என்று கர்தினால் Cormac Murphy-O’Connor கூறினார்.
'நம்பிக்கையும் குற்றங்களுக்கு நீதி வழங்கும் முறையும்' என்ற தலைப்பில் இச்செவ்வாயன்று இலண்டன் மாநகரில் உள்ள Allen Hall குருத்துவப் பயிற்சி இல்லத்தில் உரையாற்றிய கர்தினால் O’Connor இவ்வாறு கூறினார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் ஏடுகள், பல்வேறு திருத்தந்தையர்களின் மடல்கள் ஆகியவற்றிலிருந்து மேற்கோள்கள் காட்டி, தன் உரையை வழங்கினார் கர்தினால் O’Connor.
சிறையில் கைதிகளாய் இருப்பவர்கள் நம்பிக்கையின் உதவியுடன் தங்கள் வாழ்வை மீண்டும் சீரமைக்க விழைகின்றனர் என்று அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் ஜுபிலி ஆண்டான 2000ம் ஆண்டில் எழுதிய 'சிறைகளில் ஜுபிலி' என்ற மடலைக் குறித்தும், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் Rebibbia சிறையில் உள்ளவர்களைச் சந்தித்தபோது வழங்கிய உரையைக் குறித்தும் கர்தினால் O’Connor தன் உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.


5. தசரா விழா, நம் தனிப்பட்ட வாழ்வில் காணப்படும் தீமைகளையும் களைந்திட ஒரு வாய்ப்பாக அமைகிறது - டில்லி பேராயர்

அக்.31,2012. தீமைக்கு எதிராக நன்மையே வெல்லும் என்ற கருத்துடன் அண்மையில் இந்தியாவில் கொண்டாடப்பட்ட தசரா விழா, நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்வில் காணப்படும் தீமைகளையும் களைந்திட ஒரு வாய்ப்பாக அமைகிறது என்று டில்லி பேராயர் Vincent Concessao கூறினார்.
இந்தியாவின் அரசியலில் காணப்படும் ஊழலை எதிர்த்து குரலெழுப்பி வரும் ஒன்றுபட்ட கிறிஸ்தவர்கள் தேசிய அமைப்பின் தலைவரான பேராயர் Concessao, அண்மைக் காலங்களில் இந்திய அரசியல் தலைவர்களின் ஊழல்கள் அம்பலமாகி வருவது நாட்டை இருளான பாதையில் தள்ளியுள்ளது என்று கூறினார்.
நேர்மையையும், உண்மையையும் உலகிற்குச் சொன்ன பல முக்கிய மதங்களின் ஊற்றாக விளங்கும் இந்தியா, தற்போது இந்த நன்னெறி விழுமியங்களிலிருந்து மிகவும் விலகியிருப்பது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது என்று பேராயர் தன் கவலையை வெளியிட்டார்.
இலஞ்சம் என்ற பெரும் நோயிலிருந்து இந்தியா மீள்வதற்கு, அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், முக்கியமாக, மக்கள் கடினமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இந்நோயை நாட்டிலிருந்து களைய இந்தியாவில் வாழும் அனைத்து கிறிஸ்தவர்களும் இணைந்து செபிக்கவேண்டும் என்றும் டில்லி பேராயர் Concessao அழைப்பு விடுத்தார்.


6. மும்பைச் சேரிகளில் 'புட்டி விளக்குகள்' என்ற புதிய திட்டம்

அக்.31,2012. மும்பையில் உள்ள ஒரு கல்லூரியின் மாணவர்களும், சுவிட்சர்லாந்திலிருந்து வந்துள்ள பல்கலைக் கழக மாணவர்களும் இணைந்து, மும்பையில் உள்ள சேரிகளில் 'புட்டி விளக்குகள்' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
மும்பையில் உள்ள புகழ்பெற்ற புனித சேவியர் கல்லூரி மாணவர்களும், சுவிட்சர்லாந்தின் புனித Gallen பல்கலைக் கழக மாணவர்களும் இணைந்து எளிமையான பிளாஸ்டிக் புட்டிகளைக் கொண்டு சேரிகளின் இருளடைந்த வீடுகளில் ஒளியேற்றும் புதிய வழியை மக்களுக்கு அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
இந்த முறையில் எளிய ஒரு லிட்டர் பிளாஸ்டிக் புட்டியில் நீர் நிரப்பி, அதன் மேல் பாதி கூரையில் செய்யப்பட்டுள்ள ஓட்டையின் வழியே, சூரிய ஒளியில் வைக்கப்பட்டால், கீழ் பாதி புட்டி மூலம் 55 வாட் மின் விளக்கு உருவாக்கும் அளவு ஒளி அறைக்குள் பரவும் என்று சொல்லப்படுகிறது.
2002ம் ஆண்டு பிரேசில் நாட்டின் Alfredo Moser என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட இம்முறை, பிலிப்பின்ஸ் நாட்டின் சேரிகளில் Illac Diaz என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது இம்முறையால் மும்பை சேரிகளில் வாழ்வோர் மத்தியில் ஒளி உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இந்த முறையை உலகெங்கும் வாழும் பல கோடி ஏழைகள் இல்லங்களில் பரப்புவதே சுவிட்சர்லாந்து புனித Gallen பல்கலைக் கழகத்தின் நோக்கம் என்றும் Geraldine Ludi என்ற மாணவர் கூறினார்.


7. கணணி வழியில் நீத்தார் நினைவு நாள்: பிலிப்பின்ஸ் ஆயர் பேரவை முயற்சி

அக்.31,2012. நீத்தார் நினைவைக் கொண்டாடும் நவம்பர் 2ம் தேதியன்று கணணி வழியில் கல்லறைகளைக் கண்டு, அங்கு நிகழும் வழிபாடுகளில் பங்கேற்கும் வழிமுறையை பிலிப்பின்ஸ் ஆயர் பேரவையின் ஊடகத்துறை அலுவலகம் உருவாக்கியுள்ளது.
நீத்தார் நினைவு பிலிப்பின்ஸ் நாட்டில் ஒரு பெரும் விழாவாகக் கொண்டாடப்படுவது மரபு. பிலிப்பின்ஸ் நாட்டிலிருந்து வெளிநாடுகளில் பணி செய்து வரும் கத்தோலிக்கர்கள் இந்த மரபுவழி விழாவில் நேரடியாகக் கலந்துகொள்ள முடியாததால், அவர்கள் வசதிக்காக, இத்தொழிநுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது என்று பேரவையின் ஊடகத் துறை இயக்குனர் அருள்தந்தை Pedro Quitorio, Fides செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
80 இலட்சத்திற்கும் மேற்பட்ட பிலிப்பின்ஸ் நாட்டு மக்கள் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வருகின்றனர் என்றும், இவர்கள் அனைவருமே நீத்தார் நினைவு எனும் நாளை சிறப்பாகக் கொண்டாட விழையும் கத்தோலிக்கர்கள் என்றும் அருள்தந்தை Quitorio விளக்கினார்.


8. குடிநீரைத் தனியார்மயமாக்குவதற்கு முயற்சிக்கும் இலங்கை அரசின் திட்டத்திற்குச் சுற்றுச்சூழல் குழு எதிர்ப்பு

அக்.31,2012. இலங்கை அரசு குடிநீர் விநியோகத்தைத் தனியார்மயமாக்குவதற்கு முயற்சித்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
இலங்கை அரசு குடிநீர் விநியோகத்தைத் தனியார்மயமாக்குவதற்கு விரும்புகிறது என்று, தண்ணீருக்கான மக்கள் உரிமை இயக்கம் என்ற சுற்றுச்சூழல் குழு குற்றம் சாட்டுவதற்கு அரசு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து வந்தாலும், குடிநீருக்கு வரி வசூலிப்பதற்கு அரசு முயற்சித்து வருவதாக அக்குழு கூறுகிறது.
தூய்மையான பொருள்கள்மீது வரி வசூலிப்பதைப் புகுத்துவதன் மூலம், 1964ம் ஆண்டின் நீர்வள அமைப்புச் சட்ட எண்ணில் மாற்றம் கொண்டுவருவதற்கு அரசு திட்டமிட்டு வருகின்றது என்று இந்தச்  சுற்றுச்சூழல் குழு கூறியுள்ளது. 
இதற்கிடையே, குடிநீருக்கும் வேளாண்மைக்குமென கிணறு அல்லது குழாய்க் கிணறு தோண்டும்போது 7,500 ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கும் திட்டத்தை நீர்வள அமைப்பு அண்மையில் பரிந்துரைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

robert john kennedy: Catholic News in Tamil 30/10/12

robert john kennedy: Catholic News in Tamil 30/10/12: 1. இந்தியாவில் கிறிஸ்தவம் தளைக்க இந்துக்களின் நல்மனதே காரணம் : சீரோ மலங்கரா ரீதி தலைவர் 2. சாந்தோ தொமிங்கோவில் பெண்களுக்கு எதிரான வன்...

Catholic News in Tamil 30/10/12


1. இந்தியாவில் கிறிஸ்தவம் தளைக்க இந்துக்களின் நல்மனதே காரணம் : சீரோ மலங்கரா ரீதி தலைவர்

2. சாந்தோ தொமிங்கோவில் பெண்களுக்கு எதிரான வன்செயல்கள் நிறுத்தப்படுவதற்கு கர்தினால் லோப்பெஸ் ரொட்ரிக்கெஸ் அழைப்பு

3. நைஜீரியாவில் ஆலயத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு காட்டுமிராண்டித்தனமானது, கடுனா பேராயர் கண்டனம்

4. திருகோணமலையில் அன்னைமரி திருவுருவம் சேதம்

5. இந்தோனேசியாவில் சிறுபான்மை மதத்தவரின் உரிமைகள் மதிக்கப்ப்ட அழைப்பு

6. பள்ளிக் குழந்தைகளுக்கு எதிரான அத்துமீறல்கள் மிசோரமில் அதிகரிப்பு : ஆய்வில் அதிர்ச்சி தகவல்

7. வரலாற்றில் இல்லாத அளவுக்கு நீதித்துறைக்கும், அரசுக்கும் இடையில் முரண்பாடுகள் நிலவுகின்றன : மனித உரிமைகள் கண்காணிப்பகம்

8. ஜெர்மனியில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

------------------------------------------------------------------------------------------------------

1. இந்தியாவில் கிறிஸ்தவம் தளைக்க இந்துக்களின் நல்மனதே காரணம் : சீரோ மலங்கரா ரீதி தலைவர்

அக்.30, 2012.  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் அறிவிக்கப்பட்ட கிறிஸ்தவம் இன்றும் உயிரூட்டமுடையதாக இருக்கின்றது என்றால், அதற்கு இந்திய இந்து சகோதரர்கள் வழங்கிய ஆதரவும் பாதுகாப்புமே காரணம் என்றார் சீரோ மலங்கரா ரீதி பேராயர் பசிலியோஸ் கிளீமிஸ் தொட்டுங்கல்.
இந்துக்களின் நல்மனதாலேயே இந்தியாவில் கிறிஸ்தவம் இவ்வளவு காலமும் நன்முறையில் வாழ‌ முடிந்தது என்ற பேராயர், மதத் தீவிரவாதம் என்பது ஒரு மதத்திற்கு மட்டுமே உரியது என நாம் குறை கூறக்கூடாது, ஏனெனில் இது எல்லா மதங்களிலும் காணக்கிடக்கிறது என்றார்.
உரிமை மீறல்கள் இடம்பெறும் சூழல்களிலும், நாம் அனைவரும் பேச்சுவார்த்தைகள் மற்றும் செபம் மூலம் அமைதி வழிகளைக் கண்டுகொண்டு அனைத்து மதத்தினருடன் ஒன்றிணைந்து வாழ முடியும் என்றார், கர்தினாலாக திருத்தந்தையால் அறிவிக்கப்பட்டுள்ள சீரோ மலங்கரா பேராயர் பசிலியோஸ்.
ஒரு மத நம்பிக்கையாளரின் மத உரிமைகள் மதிக்கப்படாதபோது அவரின் மனித மாண்பு மீறப்படுகிறது என்பதையும் எடுத்துரைத்தார் அவர்.
புதிய கர்தினாலாகத் திருத்தந்தையால் அறிவிக்கப்பட்டுள்ள பேராயர் கிளீமிஸ், நவம்பர் மாதம் 24ம் தேதி அந்நிலைக்கு உயர்த்தப்படவுள்ளார்.

2. சாந்தோ தொமிங்கோவில் பெண்களுக்கு எதிரான வன்செயல்கள் நிறுத்தப்படுவதற்கு கர்தினால் லோப்பெஸ் ரொட்ரிக்கெஸ் அழைப்பு

அக்.30,2012. கரீபியன் பகுதி நாடான சாந்தோ தொமிங்கோவில் பெண்களுக்கு எதிராக ஆண்கள் செய்யும் வன்செயல்கள் நிறுத்தப்படுவதற்கு அழைப்பு விடுத்தார் சாந்தோ தொமிங்கோ பேராயர் கர்தினால் நிக்கொலாஸ் தெ ஹேசுஸ் லோப்பெஸ் ரொட்ரிக்கெஸ்.
கடந்த ஞாயிறன்று நம்பிக்கை ஆண்டை தொடங்கி வைத்த திருப்பலி மறையுரையில் இவ்வாறு கேட்டுக் கொண்ட கர்தினால் லோப்பெஸ் ரொட்ரிக்கெஸ், அந்நாடு தற்போது எதிர்கொள்ளும் நெருக்கடியான சூழலிலிருந்து வெளிவருவதற்கு அனைவரும் செபிக்குமாறு கூறினார்.
கரீபியன் பகுதியை அதிகம் தாக்கிய சாண்டிப் புயலால் பாதிக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கானக் குடும்பங்களுக்கு உதவிகள் செய்யப்படுமாறு அரசை வலியுறுத்தினார் கர்தினால் லோப்பெஸ் ரொட்ரிக்கெஸ்.
500 ஆண்டு கிறிஸ்தவ விசுவாசத்தின் மரபைக் கொண்டுள்ள சாந்தோ தொமிங்கோவில், இன்று அவ்விசுவாசம் வாழப்படவில்லை என்றும் கூறினார் கர்தினால் லோப்பெஸ் ரொட்ரிக்கெஸ்.

3. நைஜீரியாவில் ஆலயத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு காட்டுமிராண்டித்தனமானது, கடுனா பேராயர் கண்டனம்

அக்.30,2012. நைஜீரியாவில் ஞாயிறு திருப்பலி நடந்து கொண்டிருந்த போது சக்தி மிக்க வெடிகுண்டை வெடிக்கச் செய்த செயல்,  கோழைத்தனமான, காட்டுமிராண்டித்தனமான மற்றும் பயங்கரவாதச் செயல் என்று சொல்லி, அதற்குத் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் கடுனா பேராயர் Matthew M. Ndagoso.
நைஜீரியாவின் வடபகுதியிலுள்ள கடுனா நகரின் கத்தோலிக்க ஆலயத்தில் இஞ்ஞாயிறு காலை 9 மணியளவில் திருப்பலி நடந்து கொண்டிருந்தபோது, குண்டு நிரப்பிய வாகனத்தை ஓட்டி வந்தவர் நேரடியாக ஆலயச் சுவரில் மோதியதில் குறைந்தது 7 பேர் இறந்துள்ளனர் மற்றும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இது குறித்து பிதெஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய பேராயர் Ndagoso, யாராவது இத்தகைய செயலைச் செய்வார்களா என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை, ஆயினும் செய்துள்ளார்கள் என்று கூறினார்.
மேலும், உள்ளூர் கிறிஸ்தவர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட வேண்டாமென அரசும் திருஅவையும் கேட்டுக் கொண்டன என்று ஊடகங்கள் கூறுகின்றன.  
Boko Haram என்ற இசுலாமியத் தீவிரவாதக் குழு, இத்தாக்குதலை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
2009ம் ஆண்டில் Boko Haram குழு வன்முறையில் இறங்கியதிலிருந்து இதுவரை குறைந்தது 2,800 பேர் இறந்துள்ளனர்  என மனித உரிமை குழுக்கள் கூறுகின்றன.
நைஜீரியாவின் வடபகுதியில் பெரும்பாலும் முஸ்லீம்களும், தென்பகுதியில் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள் மற்றும் பூர்வீக மதத்தை வழிபடுகிறவர்களும் உள்ளனர். கடுனா உயர்மறைமாவட்டத்தில் 2011ம் ஆண்டில் 9.2 விழுக்காட்டினர் கத்தோலிக்கராக இருந்தனர். 

4. திருகோணமலையில் அன்னைமரி திருவுருவம் சேதம்

அக்.30, 2012.  இலங்கையின் திருகோணமலை பாலையூற்று பூங்கா சந்தியில் இருந்த லூர்து அன்னைமரி திருவுருவம் ஒன்று அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
பல ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த அன்னைமரி திருவுருவம் சனிக்கிழமை காலையில் சேதமாக்கப்பட்டிருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக திருகோணமலை காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
மூன்று தினங்களுக்கு முன்னதாக ஹஜ் பெருநாள் தினத்தன்று அநுராதபுர மாவட்டத்தில் உள்ள ஒரு முஸ்லிம் வழிபாட்டிடம் தீ வைத்து எரிக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

5. இந்தோனேசியாவில் சிறுபான்மை மதத்தவரின் உரிமைகள் மதிக்கப்ப்ட அழைப்பு

அக்.30, 2012.  இந்தோனேசியாவில் சிறுபான்மை மதத்தவரின் உரிமைகள் மதிக்கப்பட்டு நிலைநாட்டப்பட அந்நாட்டு அரசுத்தலைவரை வலியுறுத்துமாறு இங்கிலாந்து பிரதமருக்கும் வெளியுறவு அமைச்சருக்கும் கடிதங்களை அனுப்பியுள்ளது அனைத்துலக கிறிஸ்தவ ஒருமைப்பாடு என்ற உரிமைகள் அமைப்பு.
மேற்கு பாப்புவா பகுதியில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களும் மத சகிப்பற்ற தன்மைகளும் இந்தோனேசியாவின் மக்களாட்சி வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக உள்ளன என, கடிதங்களில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து இந்தோனேசிய அரசு அதிகாரிகளால் கோவில்கள் வலுக்கட்டாயமாக மூடப்பட்டுவருவது குறித்தும் அனைத்துலக கிறிஸ்தவ ஒருமைப்பாட்டு அமைப்பு தன் கவலையை வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்திற்கான இந்தோனேசிய அரசுத்தலைவர் Susilo Bambang Yudhoyonoவின் அரசுப்பயணத்தின்போது அந்நாட்டின் மத உரிமைகள் குறித்து பிரித்தானியப் பிரதமரும் வெளியுறவு அமைச்சரும் வலியுறுத்த வேண்டும் என இந்த உரிமை அமைப்பு விண்ணப்பித்துள்ளது.

6. பள்ளிக் குழந்தைகளுக்கு எதிரான அத்துமீறல்கள் மிசோரமில் அதிகரிப்பு : ஆய்வில் அதிர்ச்சி தகவல்

அக்.30, 2012.  வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்து மீறல்கள் அதிகரித்து வருவதாக, அதாவது, பள்ளிகளிலும், வீடுகளிலும், குழந்தைகள், பாலியல்  கொடுமைக்கு உட்படுத்தப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வடகிழக்கு இந்திய மாநிலங்களில் ஒன்றான, மிசோரமில், பள்ளிக் குழந்தைகளுக்கு எதிரான, " பாலியல் ' கொடுமைகள், அதிகரித்து வருவதாக, புகார்கள் வந்ததைத்தொடர்ந்து, மிசோரம் மாநில சமூக நலத்துறை, தன்னார்வ நிறுவனம் மற்றும் மனித உரிமை சட்ட அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் இவ்வுண்மைகள் வெளிவந்துள்ளன.
இதில் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன. குழந்தைகளுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் அனைத்தும், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலமே நடந்துள்ளன எனவும், 2003 முதல் 2009ம் ஆண்டு வரையில், மிசோரமில், குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் குறித்த வழக்குகள், 630 பதிவாகிஉள்ளன எனவும் தெரியவந்துள்ளது.
மிசோரம் மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த ஆய்வு முடிவுகள், செக்ஸ் தொல்லை கொடுப்பவர்களிடம் இருந்து, தங்களைக் காத்துக் கொள்வது குறித்து, குழந்தைகளுக்கு பாலியல் கல்வி அவசியம் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளது.

7. வரலாற்றில் இல்லாத அளவுக்கு நீதித்துறைக்கும், அரசுக்கும் இடையில் முரண்பாடுகள் நிலவுகின்றன : மனித உரிமைகள் கண்காணிப்பகம்

அக்.30, 2012. இலங்கையின் வரலாற்றில் எந்த ஓர் அரசும் மேற்கொள்ளாத அளவில் நீதித்துறைக்கு எதிரான வன்முறைகளைத் தற்போதைய அரசு மேற்கொண்டு வருவதாக, ஆசிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.
நீதித்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக நேரடியான மற்றும் மறைமுகமான தாக்குதல்களை நடத்தி,  தொடர்ந்தும் நீதித்துறையை தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள அரசு முயற்சிக்கிறது எனக்கூறும் ஆசிய மனித உரிமைகள் கண்காணிப்பகம், இவ்வாறான வன்முறைகள் விரைவில் நீக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளது.
அரசின் தொலைக்காட்சிகளைப் பயன்படுத்தி, நீதித்துறைக்கு எதிரான அவதூறுகளையும் அரசு தொடர்ச்சியாக முன்வைத்து வருவதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

8. ஜெர்மனியில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

அக்.30, 2012.  ஜெர்மனியில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதாக தற்போதைய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
ஜெர்மனியில் உள்ள முதியவர்கள் குறித்து மத்திய கூட்டுப் புள்ளியியல் துறை ஆய்வு நடத்தியதில்,  ஜெர்மனியில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதாகவும், இந்நிலை தொடர்ந்தால் வருகிற 2050ஆம் ஆண்டில் தற்போதைய நிலையைவிட இரண்டு மடங்காகி விடும் எனவும் தெரிய வந்துள்ளது.
2050ஆம் ஆண்டில் ஜெர்மனியில் 15 பேரில் ஒருவர் முதியவராக இருப்பர், அதாவது 47 இலட்சம் முதியவர்கள் இருப்பார்கள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜெர்மனியில் முதியவர்கள் நல மையங்களில் கட்டணங்கள் அதிகம் என்பதால், இவர்கள் இஸ்பெயின், தாய்லாந்து மற்றும் அண்மை ஐரோப்பிய நாடுகளுக்கு இடம்பெயர்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

robert john kennedy: Catholic News in Tamil 29/10/12

robert john kennedy: Catholic News in Tamil 29/10/12: 1. திருத்தந்தை ,   குரோவேஷியப் பிரதமர் சந்திப்பு 2. திருத்தந்தை : குடியேற்றம் , நம்பிக்கை மற்றும் எதிர்நோக்கின் பயணம் 3. திருத்தந...

Catholic News in Tamil 29/10/12

1. திருத்தந்தை,  குரோவேஷியப் பிரதமர் சந்திப்பு

2. திருத்தந்தை : குடியேற்றம், நம்பிக்கை மற்றும் எதிர்நோக்கின் பயணம்

3. திருத்தந்தையின் செபங்களுக்கு பஹாமாஸ் ஆயர் நன்றி

4. கத்தோலிக்க ஆயர்கள் : சிரியாவில் கொல்லப்பட்டுள்ள அருள்பணி Fady Haddad ஒரு மறைசாட்சி

5. இந்தியத் துறவு சபைகள் : துறவுற வார்த்தைப்பாடுகள் சீர்தூக்கிப் பார்க்கப்பட வேண்டும்
6. இந்தோனேசியாவில் முதல் தேசிய இளையோர் தினம்

7. நைஜீரியக் கத்தோலிக்க ஆலயம் மீது தற்கொலை தாக்குதல்

8. மியான்மாரில் தொடர் வன்முறை, 22 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் புலம் பெயர்வு

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை,  குரோவேஷியப் பிரதமர் சந்திப்பு

அக்.29,2012. குரோவேஷியப் பிரதமர் Zoran Milanović ஐ இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருத்தந்தையை தனியாகச் சந்தித்துப் பேசிய பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே, நாடுகளுடனான உறவுகளுக்கானத் திருப்பீடச் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் குரோவேஷியப் பிரதமர் Milanović.
இச்சந்திப்புகள் குறித்து செய்தி வெளியிட்ட திருப்பீட பத்திரிகை அலுவலகம், தற்போதைய பொருளாதார நெருக்கடிகளில் குரோவேஷியா எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும், இன்னும், இவ்விரு நாடுகள் சார்ந்த பொது விவகாரங்கள் குறித்தும் இச்சந்திப்புகளில் பேசப்பட்டதாகத் தெரிவித்தது.
ஐரோப்பாவோடு முழுவதும் ஒன்றிணைவதற்கு குரோவேஷியாவுக்கு இருக்கும் நியாயமான ஆவலுக்குத் திருப்பீடம் ஆதரவு தருவதாகவும், Dajla விவகாரம் குறித்து இவ்விரு தரப்பும் விரைவில் ஒரு தீர்வு காணும் எனவும், அப்பகுதியின், சிறப்பாக, போஸ்னியா-எர்செகொவினாவிலுள்ள குரோவேஷியர்களின் பொருளாதாரம் குறித்தும் இச்சந்திப்புகளில் பேசப்பட்டதாகவும் திருப்பீட பத்திரிகை அலுவலகம் கூறியது.


2. திருத்தந்தை : குடியேற்றம், நம்பிக்கை மற்றும் எதிர்நோக்கின் பயணம்

அக்.29,2012. ஒவ்வொரு குடியேற்றதாரரும் மனிதர் என்பதால், அவர் கொண்டுள்ள அடிப்படையான மற்றும் தவிர்க்கமுடியாத உரிமைகள் ஒவ்வொருவராலும் அனைத்துச் சூழல்களிலும் மதிக்கப்பட வேண்டுமென்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுள்ளார்.
இக்காரணத்துக்காகவே, “குடியேற்றதாரர்கள் : நம்பிக்கை மற்றும் எதிர்நோக்கின் பயணம்” என்பது, 2013ம் ஆண்டின் உலக குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் தினத்திற்குத் தலைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்று திருத்தந்தை கூறியுள்ளார்.
2013ம் ஆண்டு சனவரி 13ம் தேதி கடைப்பிடிக்கப்படும் 99வது உலக குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் தினத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை, குடியேற்றதாரர் பலரின் இதயங்களில்   நம்பிக்கையும் எதிர்நோக்கும் பிரிக்கமுடியாதவைகளாக இருக்கின்றன என்றும் கூறியுள்ளார்.
இந்தக் குடியேற்றதாரர்கள், தங்களது நிச்சயமற்ற வருங்காலத்தின் மீதான நம்பிக்கையின்மையைப் பின்னுக்குத் தள்ளி, கடவுள்மீது நம்பிக்கை வைத்து தங்களின் பயணத்தை மேற்கொள்கின்றனர் என்றும் திருத்தந்தை அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
திருஅவை இந்தக் குடியேற்றதாரர்களின் ஒருங்கிணைந்த ஆளுமை வளர்ச்சியில் அக்கறை காட்டுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, ஒவ்வொரு நாடும் இம்மக்கள் குறித்த கொள்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கு உரிமையைக் கொண்டுள்ளது என்பதையும் வலியுறுத்தியுள்ளார். 
குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர்க்கானத் திருப்பீட மேய்ப்புப்பணி அவையின் தலைவர் கர்தினால் Antonio Maria Vegliò, அவ்வவையின் செயலர் ஆயர் Joseph Kalathiparambil ஆகியோர் இத்திங்களன்று நிருபர் கூட்டத்தில் திருத்தந்தையின் இச்செய்தியை வெளியிட்டனர்.


3. திருத்தந்தையின் செபங்களுக்கு பஹாமாஸ் ஆயர் நன்றி

அக்.29,2012. பஹாமாஸ், கியூபா, ஹெய்ட்டி, ஜமெய்க்கா ஆகிய கரீபியன் நாடுகளில் சாண்டி புயலால் கடுமையாய்த் தாக்கப்பட்டுள்ள மக்களுக்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தெரிவித்த ஆறுதலுக்கும் செபத்துக்கும் நன்றி தெரிவித்துள்ளார் பஹாமாஸ் ஆயர் Patrick Christopher Pinder .
கடும் புயலாலும் வெள்ளத்தாலும் கடுமையாய்த் தாக்கப்பட்டுள்ள இந்நாடுகளின் மக்களுக்கு இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் தனது செபங்களையும், ஆறுதலையும், ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்த திருத்தந்தைக்குத் தான் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார் பஹாமாஸின் Nassau ஆயர் Pinder .
கரீபியன் நாடுகளில் சாண்டி புயலால் அறுபதுக்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும், அப்புயல், ஐந்து கோடிக்கு மேற்பட்டோர் வாழும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் கிழக்குக் கரையைத் தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


4. கத்தோலிக்க ஆயர்கள் : சிரியாவில் கொல்லப்பட்டுள்ள அருள்பணி Fady Haddad ஒரு மறைசாட்சி

அக்.29,2012. சிரியாவில் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை அருள்பணியாளர் ஒருவர் கொடூரமாய்க் கொல்லப்பட்டதற்குத் தங்களது அனுதாபங்களைத் தெரிவித்துள்ள தமஸ்கு  கத்தோலிக்க ஆயர்கள், அந்நாட்டில் வெளிநாட்டுச் சதிவேலைகள் தீமையைப் பரப்பி அழிவை ஏற்படுத்துகின்றன என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
சிரியாவில் போரிடும் குழுக்களுக்கிடையே ஒப்புரவு ஏற்படவேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ள ஆயர்கள், அதிகரித்துவரும் ஆயுதப்புழக்கங்களும் இரத்தம் சிந்துதலும் வன்முறையும் நிறுத்தப்படுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.
சிரியாவின் தலைநகர் தமஸ்கு நகருக்குப் புறநகர்ப் பகுதியிலுள்ள Qatana என்ற சிறிய நகரத்தின் St. Elias ஆலயத்தில் பங்குக் குருவாகப் பணியாற்றிய அருள்பணி Fady Haddad, இம்மாதம் 18ம் தேதி ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்டார். ஆறுநாள்களுக்குப் பின்னர் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
அருள்பணியாளர் Fady கொலை செய்யப்பட்டதையொட்டி, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை முதுபெரும் தலைவர் 4ம் இக்னேஷியுசுக்கு இரங்கல் செய்தியும் அனுப்பியுள்ள தமஸ்கு கத்தோலிக்க ஆயர்கள், சிரியாவின் அனைத்து மறைசாட்சிகளுடன் இந்த அருள்பணியாளர் மறைசாட்சியையும் இறைவன் தமது வான்வீட்டில் சேர்த்தருள செபிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
அப்பாவி குடிமக்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்களுக்கு எதிரானத் தாக்குதல்களைக் கண்டித்துள்ள ஆயர்கள், முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் சமய உணர்வு உள்ள ஒவ்வொருவரும் மனிதாபிமான மற்றும் ஆன்மீகப் பணிகளுக்குத் தங்களை அர்ப்பணித்துள்ளனர் எனவும் ஆயர்களின் செய்தி கூறுகிறது.


5. இந்தியத் துறவு சபைகள் : துறவுற வார்த்தைப்பாடுகள் சீர்தூக்கிப் பார்க்கப்பட வேண்டும்

அக்.29,2012. இந்தியத் துறவு சபைகளின் அதிபர்கள், தங்களது துறவற அழைப்புக்குப் பிரமாணிக்கமாய் இருக்க வேண்டுமானால், தீர்மானம் எடுப்பது, வாழ்க்கைமுறை மற்றும் மறைப்பணிகளில் புது மாறுதல்களை அவர்கள் ஏற்படுத்த வேணடுமென்று, இந்தியத் துறவு சபைகளின் அதிபர்கள் மாநாட்டில் கூறப்பட்டது.
ஆந்திர மாநிலத்தின் ஹைதராபாத்தில் இஞ்ஞாயிறன்று தொடங்கியுள்ள மூன்று நாள் மாநாட்டில் பேசிய Montfort சபையின் அருள்சகோதரர் Varghese Thechanath, துறவற வாழ்வை மறைப்பணிகள் வடிவமைக்க வேண்டும் என்று கூறினார்.
“அர்ப்பண வாழ்க்கையை அதிகப் பயனுள்ள விதத்தில் வாழ்வதற்குப் புது வழிமுறைகள்” என்ற தலைப்பில் நடைபெற்றுவரும் இம்மாநாட்டில் துறவு சபைகளின் அதிபர்கள், மாநிலத் தலைவியர் என 550 பேர் கலந்து கொள்கின்றனர்.
CRI எனப்படும் இந்தியத் துறவு சபைகளின் அதிபர்கள் அவை, 334 துறவு சபைகளையும், அதிபர்கள், மாநிலத் தலைவியர் என 822 தலைவர்களையும் கொண்டுள்ளது.
இந்தியாவில் அருள் சகோதரர்கள், அருள்தந்தையர், அருள் சகோதரிகள் என ஒரு இலட்சத்து 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மறைப்பணியாற்றுகின்றனர்.


6. இந்தோனேசியாவில் முதல் தேசிய இளையோர் தினம்

அக்.29,2012. "நூறு விழுக்காடு கத்தோலிக்கர், நூறு விழுக்காடு இந்தோனேசியர்" என்ற விருதுவாக்குடன், இந்தோனேசியாவில் கடந்த வாரத்தில் நடைபெற்ற முதல் இந்தோனேசிய இளையோர் தினத்தில் ஆயிரக்கணக்கான இளையோர் கலந்து கொண்டனர்.
இம்மாதம் 20 முதல் 26 வரை Borneo தீவின்  மேற்கு  Kalimantan மாநிலத்தில் Sanggau மறைமாவட்டத்தில் நடைபெற்ற இந்த இளையோர் தினத்தில், அந்நாட்டின் 35 மறைமாவட்டங்களைச் சேர்ந்த சுமார் இரண்டாயிரம் பேர் கலந்து கொண்டனர்.
பல கலாச்சார, பல இன, பல மொழிகளைக் கொண்ட இந்தோனேசியாவில், அன்றாட வாழ்வில் கத்தோலிக்க விசுவாசத்தை வாழும் முறையை இளையோர் அறிந்து கொண்டனர் என்று, முதல் தேசிய இளையோர் தின இயக்குனர் அருள்பணி Yohanes Dwi Harsanto  கூறினார்.
அனைத்துலக கத்தோலிக்க இளையோர் தினம், 2013ம் ஆண்டு ஜூலையில் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவுள்ளது.


7. நைஜீரியக் கத்தோலிக்க ஆலயம் மீது தற்கொலை தாக்குதல்

அக்.29,2012. நைஜீரியாவின் வடபகுதியில் Kadona நகரின் கத்தோலிக்க ஆலயம் ஒன்றில் ஞாயிறு திருப்பலி நடந்து கொண்டிருந்த நேரத்தில் சக்தி மிக்க வெடிகுண்டு ஒன்று வெடித்ததில் குறைந்தது 7 பேர் இறந்துள்ளனர் மற்றும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இஞ்ஞாயிறு காலை 9 மணியளவில் திருப்பலி நடந்து கொண்டிருந்த போது, ஆலயச் சுவரில் ஒரு தற்கொலையாளி குண்டு நிரப்பிய வாகனத்தை  மோதியதாக பிபிசி நிருபர் ஒருவர் கூறியுள்ளார்.
ஆலயத்தின் உட்புறத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், அருகில் இருந்த கடைகள் மற்றும் வீடுகளின் கூரைகள் வெடித்துச் சிதறியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தத் தாக்குதலால் கோபமடைந்த கிறிஸ்தவ இளைஞர்கள், அங்குத் தாக்குதலில் அகப்பட்டவர்களை மீட்கச் சென்ற அரசு வாகனம் ஒன்றை தாக்கியதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
இசுலாமியரின் Eid al-Adha விழாவையொட்டி நைஜீரியாவில் தேசிய விடுமுறை கடைப்பிடிக்கப்பட்டு வரும் இச்சமயத்தில் Boko Haram என்ற இசுலாமியத் தீவிரவாதக் குழு, இத்தாக்குதலை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
2009ம் ஆண்டில் Boko Haram குழு வன்முறையில் இறங்கியதிலிருந்து இதுவரை குறைந்தது 2,800 பேர் இறந்துள்ளனர்  என மனித உரிமை குழுக்கள் கூறுகின்றன.


8. மியான்மாரில் தொடர் வன்முறை, 22 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் புலம் பெயர்வு

அக்.29,2012. மியான்மார் நாட்டில், ரகின் மாநிலத்தில் புத்தமதத்தினருக்கும் Rohingya சிறுபான்மை முஸ்லீம்களுக்கும் இடையே தொடர்ந்து இடம்பெற்றுவரும் மோதல்களில் ஒரு வராத்தில் மட்டும் குறைந்தது இருபதாயிரம் பேர் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர் என்று ஐ.நா. கூறியுள்ளது.
இஞ்ஞாயிறன்று வெளியான செய்தியின்படி, 22,500 பேர் புலம் பெயர்ந்துள்ளனர் மற்றும் ஆறாயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன எனத் தெரிகிறது.  
பங்களாதேஷிலிருந்து குடிபெயர்ந்து மியான்மாரின் ரகின் மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் வாழும் ஏறக்குறைய எட்டு இலட்சம் முஸ்லீம்களில் 22 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர் என்றும் ஐ.நா. கூறியுள்ளது.
இந்த முஸ்லீம்கள், மியான்மாரில் குடியுரிமை கேட்டுப் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரகின் மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் இவ்விரு மதத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட இனக் கலவரத்தில், இரு தரப்பிலும் குறைந்தது 90 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 3,000க்கும் அதிகமான வீடுகள் நாசப்படுத்தப்பட்டன.

 

Cardinal Koovakad: Nonviolence is courageous commitment to justice

  Cardinal Koovakad: Nonviolence is courageous commitment to justice Speaking at an Ahimsa Day celebration at the British Parliament, Cardin...