போலந்து நாட்டில் திருத்தூதுப் பயணம்
உலக இளையோர் நாள்
இறுதி நாள் – 31.07.2016
உலக இளையோர் நாள் நிகழ்வுகளின்
இறுதித் திருப்பலி நிறைவேற்றும்
திருத்தந்தை பிரான்சிஸ்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. கிரக்கோவில் திட்டமிடப்படாத இரு நிகழ்வுகளில் திருத்தந்தை
2. இரக்கத்தின் வளாகத்தில் இளையோரின் திருவிழிப்பு வழிபாடு
3. சோஃபாவுக்குப் பதிலாக, இளையோருக்கு காலணிகள் தேவை
4. இறுதி திருப்பலியும், மூவேளை செபஉரையும்
5. இறுதி திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை
6. பானமா நாட்டில், 2019ம் ஆண்டு, உலக இளையோர் நாள் சிறப்பிக்கப்படும்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. கிரக்கோவில் திட்டமிடப்படாத இரு நிகழ்வுகளில் திருத்தந்தை
ஜூலை,31,2016. ஜூலை 30, சனிக்கிழமை மதியம், கிரக்கோவ் பேராயர் இல்லத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 இளையோருடன் மதிய உணவருந்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிற்பகலில், இப்பயணத்தில் திட்டமிடப்படாத இரு நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.
முதல் நிகழ்வாக, போலந்து நாட்டில் பணியாற்றும் இயேசு சபை துறவியர் 30 பேரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பேராயர் இல்லத்தில் சந்தித்தார். 40 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்பில், கேள்வி பதில்கள் பரிமாற்றம் இடம் பெற்றன. இயேசு சபையினரின் ஒரு தனிப்பட்ட பண்பான தேர்ந்து தெளிதல் பற்றி திருத்தந்தை பேசினார். வந்திருந்த 30 பேரில், அண்மையில் அருள் பணியாளர்களாக திருநிலைப் பெற்ற இளையோர் உட்பட, அதிகம் பேர் இளையோராய் இருந்தது கண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த இளையோர் கொணரும் புத்துணர்வு, தனக்கு மகிழ்வைத் தருவதாகக் குறிப்பிட்டார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் அனைத்து நாடுகளிலும் இயேசு சபையினரைச் சந்திப்பதை ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது நிகழ்வாக, பேராயர் இல்லத்திற்கு எதிரே அமைந்திருந்த அசிசி நகர் புனித பிரான்சிஸ் பேராலயம் சென்றார், திருத்தந்தை. 1991ம் ஆண்டு பெரு நாட்டில் Shining Path எனப்படும் கொரில்லா குழுவால் கொல்லப்பட்ட அருளாளர்கள் Michal Tomaszek மற்றும் Zhigniew Strzalkowski என்ற இரு போலந்து அருள் பணியாளர்களின் புனிதப் பொருள்களை முத்தி செய்து செபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்விரு அருளாளர்களின் சகோதர, சகோதரிகளையும் சந்தித்து சிறிது நேரம் உரையாடினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. இரக்கத்தின் வளாகத்தில் இளையோரின் திருவிழிப்பு வழிபாடு
ஜூலை,31,2016. சனிக்கிழமை மாலை 7 மணிக்கு, திருத்தந்தையின் வாகனம், கிரக்கோவின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள இரக்கத்தின் வளாகத்தை அடைந்தபோது, அங்கு 16 இலட்சம் இளையோர் திருத்தந்தைக்காகக் காத்திருந்தனர். ஒருமுறை அந்த வளாகத்தை வாகனத்தில் வலம்வந்தத் திருத்தந்தை, பின்னர், இளையோர் பிரதிநிதிகள் ஆறுபேருடன், அந்த வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த புனித வாசல் வழியே நுழைந்தார். இதைத் தொடர்ந்து, உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் ஒரு முக்கிய நிகழ்வான, திருவிழிப்பு வழிபாடு துவங்கியது.
3 பகுதிகளாக அமைந்திருந்த இந்த வழிபாட்டின் முதல் பகுதியில், போலந்து நாட்டைச் சேர்ந்த Natalia Wrzesien, சிரியாவின் அலெப்போ நகரைச் சேர்ந்த Rand Mittri ஆகிய இரு இளம் பெண்களும், பராகுவே நாட்டின் Miguel என்ற இளைஞரும் தங்கள் வாழ்வின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். இன்றைய உலகில், ஆன்மீக வழியைக் கண்டுகொள்ள இயலும் என்றும், வன்முறைகளையும், பயங்கரவாதத்தையும் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்றும், போதைப் பொருள் போன்ற தீமையையும், மன்னிப்பினால் வெல்லமுடியும் என்றும் இப்பகிர்வுகளில் சொல்லப்பட்டன. இதே கருத்துக்களை மையப்படுத்தி, குறு நாடகங்களும் இடம்பெற்றன. இவற்றைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையை வழங்கினார்.
திருத்தந்தையின் உரையைத் தொடர்ந்து, நற்கருணை ஆராதனையும், ஆசீரும் இடம்பெற்றன. ஏறத்தாழ 90 நிமிடங்கள் நீடித்த இந்த திருவிழிப்பு வழிபாட்டை முடித்து, திருத்தந்தை மீண்டும் பேராயர் இல்லம் திரும்பினார். இரக்கத்தின் வளாகத்தில் கூடியிருந்த இளையோருக்கு, இறை இரக்கத்தை மையப்படுத்தி, பல்வேறு கிறிஸ்தவ இசைக் குழுவினர் பாடல்களை வழங்கினர். இந்தியாவின் Rex Band என்ற இசைக்குழுவும் பாடல்களை வழங்கியது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. சோஃபாவுக்குப் பதிலாக, இளையோருக்கு காலணிகள் தேவை
ஜூலை,31,2016. இளையோர் திருவிழிப்பு வழிபாட்டில் திருத்தந்தையின் உரை:
அன்பு இளைய நண்பர்களே, மாலை வணக்கம்! இந்த மன்றாட்டு திருவிழிப்பில் உங்களோடு இருப்பதில் மகிழ்கிறேன்! இளம்பெண் Rand Mittri அவர்கள், தன் பகிர்வின் இறுதியில், "என் அன்புக்குரிய நாட்டிற்காக செபிக்குமாறு உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார். போர், துன்பம், இழப்பு என்று அவர் பகிர்ந்துகொண்ட அனுபவம், நம் செபத்திற்காக விண்ணப்பித்தது. இந்தத் திருவிழிப்பை செபத்துடன் துவங்குவதை விட சிறந்த வழி இருக்கமுடியுமா?
நாம் பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள் கொண்ட நாடுகளிலிருந்து வந்திருக்கிறோம். நம்மில் சிலர் வாழும் நாடுகள், ஒன்றுக்கொன்று மோதல்களில் ஈடுபட்டுள்ள நாடுகளாகவும் இருக்கலாம். வேறு சிலர், அமைதியில் இருக்கும் நாடுகளிலிருந்து வந்திருக்கலாம். ஆனால், நம் அனைவருக்கும் போர் என்பது வெறும் செய்தி அல்ல, மாறாக, நம் சொந்த அனுபவமாக மாறிவருகிறது. போரினால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களும் முகமும் முகவரியும் உடையவர்கள். இளம்பெண் Randன் அனுபவத்தைப் போல, சிரியா நாட்டின் போரினால் துன்பம் அடைந்துள்ளோர் பலர்.
நாம் காணும் போர், தொலைக்காட்சி அல்லது கைப்பேசி திரைகளில் மட்டும் தோன்றும் போர் அல்ல. அது, நம்மைச் சூழ்ந்துள்ளது. இளம்பெண் Rand பயன்படுத்திய வார்த்தைகளில் சொல்லவேண்டுமெனில், நமது சகோதர சகோதரிகள் சாவினாலும், கொலையாலும் சூழப்பட்டுள்ளனர்.
அன்பு நண்பர்களே, போரினால் துன்புறும் அனைவருக்காகவும் செபிக்க நாம் இணைவோம். உடன்பிறந்தோரின் இரத்தத்தைச் சிந்துவதை எவ்வகையிலும் நாம் நியாயப்படுத்த முடியாது என்பதை புரிந்துகொள்வோம். வெளி உலகில் நடைபெறும் போரினால் துன்புறுவோருக்கு செபிக்கும் இதே வேளையில், Natalia, Miguel ஆகியோர் பகிர்ந்துகொண்ட உள்மனப் போர்களைக் குறித்தும் செபிப்போம். Natalia, Miguel, நீங்கள் இருவரும், இறைவனின் இரக்கம் ஒருவர் வாழ்வில் என்ன செய்யமுடியும் என்பதற்கு சான்றுகளாக வாழ்கிறீர்கள்.
வெறுப்பை வெறுப்பினாலும், வன்முறையை, வன்முறையாலும் வெல்வதற்கு நாம் விரும்பவில்லை. வெளியிலும், உள்ளும் நம்மைச் சூழ்ந்துள்ள போருக்கு நாம் தரும் ஒரே பதில், உடன்பிறந்த உணர்வு, குடும்பம் என்ற உணர்வு. "குடும்பம் என்பது அர்த்தமற்றது, நம் இல்லங்கள் உண்பதற்கும், உறங்குவதற்கும் தரப்பட்டுள்ள ஓர் இடம் மட்டுமே" என்று சொல்பவர்களுக்கு, இதோ, இவ்விடத்தில், உலகெங்கிலிருமிருந்து வந்து, ஒரே குடும்பமாக செபிப்பது ஒன்றே, நாம் தரும் பதில். எனவே, ஒரு குடும்பமாக நாம் இப்போது எழுந்துநின்று, ஒருவர் கரத்தை ஒருவர் பிடித்து, அனைவரும் இணைந்து, அமைதியில் செபிப்போம்.
இவ்வாறு திருத்தந்தை கூறியதும், வளாகத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கரங்களை இணைத்து, அமைதியில் சில மணித்துளிகள் செபித்தனர். பின்னர், திருத்தந்தை தன் உரையைத் தொடர்ந்தார்.
நாம் இணைந்து செபித்த இவ்வேளையில், 'பெந்தக்கோஸ்து' நாளன்று கூடியிருந்த திருத்தூதர்களை எண்ணிப் பார்த்தேன். அச்சத்தால், கதவுகளை மூடி ஒளிந்துகொண்டிருந்த அவர்கள் நடுவே, அற்புதம் ஒன்று நிகழ்ந்தது. நெருப்பு போன்ற பிளவுற்ற நாவுகள் வடிவில், தூய ஆவியார் அவர்கள் மீது வந்ததும், அங்கு ஒரு முழுமையான மாற்றம் நிகழ்ந்தது!
நாம் மூன்று சாட்சியங்களைக் கேட்டோம். அவர்கள் கூறிய வாழ்வு அனுபவங்கள் நம் உள்ளங்களைத் தொட்டன. இயேசுவின் சீடர்கள் உணர்ந்ததுபோலவே, இவர்களும் தங்கள் வாழ்வில் அனைத்தையும் இழந்துவிட்டதைப் போல் உணர்ந்தனர். சீடர்களைப் போல் இவர்களும் அச்சத்தால் சூழப்பட்டனர்.
அச்சம் நம்மில் என்ன செய்கிறது? கதவுகளை மூடச் சொல்கிறது. அச்சத்தின் இரட்டைப் பிறவியான, 'செயலற்ற நிலை' நம்மை ஆட்கொள்கிறது. செயலற்று போகும்போது, பிறரைச் சந்திப்பது, நட்பு கொள்வது, கனவுகளைப் பகிர்வது, பிறரோடு நடந்துசெல்வது போன்ற விடயங்கள் நம் வாழ்வில் தொலைந்து போகின்றன. நம்மை நாமே ஒரு சிறு கண்ணாடி அறைக்குள் பூட்டிக்கொள்கிறோம்.
வாழ்வில் மற்றொரு 'செயலற்ற நிலை' உண்டு. இது மிகவும் ஆபத்தான நிலை. நமது சுகம் 'சோஃபா'வில் உள்ளது என்று நம்பி வாழ்வதே இந்நிலை. இன்று உள்ள சில சோஃபாக்கள், நமக்கு 'மசாஜ்' செய்து உறங்க வைக்கும் சக்தி பெற்றவை.
வீடியோ விளையாட்டுக்கள், கணணி திரைகள் என்று, நம்மைக் கட்டிப்போடும் சோஃபாக்களாக பல கருவிகள் உள்ளன. வீட்டை விட்டு வெளியேறாமல், எவ்வித பயமோ, துயரோ இன்றி வாழும் வாழ்க்கை - இவை அனைத்தும், 'சோஃபா சுகங்கள்'!
இவை மிக ஆபத்தானது. நம்மையும் அறியாமல் இவை நம்மை உறங்கச் செய்துவிடுகின்றன. 20 வயதில் பணிஓய்வு பெறும் இளையோரைப் பற்றி முன்பு கூறினேன். இன்று, உறங்கச் செல்லும் இளையோரைப் பற்றி பேசுகிறேன். இவர்களது வாழ்வின் முடிவுகளை மற்றவர்கள் கரங்களில் கொடுத்துவிட்டு, இவர்கள் உறங்குகின்றனர். இந்த முடிவுகள் நல்லவை என்று சொல்வதற்கில்லை.
நான் உங்களைக் கேட்கிறேன். நீங்கள் உறங்க விரும்புகிறீர்களா? ('இல்லை' என்று இளையோர் பதில் சொல்கின்றனர்) உங்கள் வாழ்வை மற்றவர்கள் தீர்மானிக்க விட்டு விடப்போகிறீர்களா? (இல்லை). உங்கள் எதிர்காலத்தை நீங்களே கவனமாகத் தீர்மானித்து, அதற்காக அயராமல் உழைக்கப் போகிறீர்களா? (ஆம்)
இவ்வுலகில் எவ்வித தாக்கமும் ஏற்படுத்தாமல், வாழ்வைக் கடத்துவது, சோஃபாவில் படுத்துறங்கும் வாழ்க்கை. நம்மைச் சுற்றியுள்ள பலர், நாம் சுதந்திரமாக, உறுதியுடன் முடிவெடுப்பதை விரும்புவதில்லை. நம்மைத் தூக்கத்தில் ஆழ்த்துவதில் குறியாய் இருக்கின்றனர்.
மகிழ்வு என்பதை சுகம் என்று தவறாக எண்ணி, நம்முடைய சுகங்களைக் கூட்டிக் கொள்வது, ஒருவகை 'செயலற்ற நிலை'யே! இத்தகைய சுகத்தை, போதைப் பொருள்களில் தேடி, வாழ்வை வீணாக்குவோர் உண்டு. வேறு பலர், சுயநல பாதுகாப்பில் சுகம் காண்பது உண்டு.
இயேசு சவால்களின் ஆண்டவர். 'இன்னும் சிறந்த' என்ற, நிரந்தரமான உணர்வுக்கு, அவர் ஆண்டவர். அவரைத் தொடர்வதற்கு, துணிவு தேவை, சோஃபாவுக்குப் பதிலாக, இரு காலணிகள் தேவை. அவரைத் தொடர்ந்து, 'மதியிழந்த' வண்ணம் புதிய பாதைகளில், செல்லத் துணிவு வேண்டும். பசித்தோர், தாகமாயிருப்போர், ஆடையின்றி இருப்போர், நோயுற்றோர், சிறையில் இருப்போர், நாடுவிட்டு நாடு துரத்தப்படுவோர் இவர்களை இந்தப் பாதையில் சிந்திப்போம்.
இத்தகைய வாழ்வு எல்லாருக்கும் உரிய வாழ்வு அல்ல, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலருக்கே இது உரியது என்று நீங்கள் சொல்லக்கூடும். ஆம், தங்கள் வாழ்வைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளும் ஒரு சிலருக்கே இந்த வாழ்வு அமையும்.
இத்தகைய வாழ்வில் பங்கேற்க நாம் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளோம். இறைவன் உங்கள் ஒவ்வொருவரையும் அழைக்கிறார். உங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் எதிர்பார்க்கிறார், உங்கள் ஒவ்வொருவர் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார். நம் வாழ்வில் மூடப்பட்டுள்ள கதவுகளைத் திறக்க அவர் வருகிறார். கனவு காண நம்மைத் தூண்டுகிறார். இவ்வுலகம் மாறும் என்பதைப் பார்ப்பதற்கு நம்மைத் தூண்டுகிறார். நம்முடைய மிகச் சிறந்தவற்றை அவருக்குக் கொடுத்தாலன்றி, இவ்வுலகம் மாறாது. இதுவே நமக்கு முன் உள்ள சவால்.
சோஃபாக்களில் அமர்ந்து உறங்கும் இளையோர் தேவையில்லை, காலணிகள் அணிந்து புறப்பட தயாராக உள்ள இளையோர் இவ்வுலகிற்குத் தேவை. விளையாட்டில் முன்னணி வீரர்களாக களம் இறங்குவோர் தேவை, விளையாட்டுத் திடலின் ஓரத்தில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பவர்கள் தேவையில்லை. உங்கள் கரங்கள், என் கரங்கள் அனைத்தும் ஒப்புரவில் இணைந்து உருவாக்கும் உலகம் நமக்குத் தேவை. இத்தகைய உலகை உருவாக்க தயாரா? (தயார் என்று இளையோர் பதில் சொல்கின்றனர்).
இன்றைய உலகம் நம்மிடமுள்ள பிரிவுகளை, வேறுபாடுகளை வெளிச்சமிட்டுக் காட்டுவதில் முனைப்பாக உள்ளது. வயதில் முதிர்ந்த எங்களுக்கு இளையோராகிய நீங்கள் சொல்லித் தரவேண்டியது, வேற்றுமையிலும் ஒற்றுமையாக வாழமுடியும் என்ற பாடம். சுவர்களை எழுப்புவதற்குப் பதில், பாலங்களை கட்டுவது எளிது என்பதை, இளையோர் இன்றைய உலகிற்குச் சொல்லித் தரவேண்டும்.
நாம் கட்டவேண்டிய முதல் பாலம் என்னவென்று தெரியுமா? இந்த பாலத்தை இப்போதே, இங்கேயே நம்மால் கட்ட முடியும். அதுதான், நம் அருகில் இருப்பவரை நோக்கி கரங்களை நீட்டி, அவர் கரங்களைப் பற்றுவது. நாம் இந்தப் பாலத்தை இப்போது கட்டுவோம். உங்கள் அருகில் இருப்பவர் கரங்களைப் பற்றுங்கள்.
இவ்வாறு திருத்தந்தை கூறியதும், அச்சத்துக்கத்தில் இருந்த அனைவரும் ஒரு சங்கிலித் தொடர்போல கரங்களைக் கோர்த்து நின்றது மிக அழகாக இருந்தது. திருத்தந்தை தொடர்ந்து பேசினார்.
இப்போது நாம் உருவாக்கியிருக்கும் இந்த மனிதப் பாலம், இன்னும் பல பாலங்களை உருவாக்க ஓர் ஆரம்பமாக அமையட்டும். வழியாக, வாழ்வாக, உண்மையாக விளங்கும் இயேசு, நம் ஒவ்வொருவரையும் அழைக்கிறார். இவ்வுலக வாழ்வில் தனிப்பட்டத் தடங்களைப் பதிக்க நம்மை அழைக்கிறார். பிரிவுகள், வெறுப்பு, வெறுமை என்ற பாதைகளை விட்டு விலகி, உண்மைப் பாதையில் நடக்கச் சொல்லி நம்மை அழைக்கிறார். நம் பதில் என்ன? இவ்விதம் செய்யத் தயாரா?
இவ்வாறு திருத்தந்தை கேட்க, அனைவரும் 'ஆம்' என்று ஒரே குரலில் சொன்னார்கள். இறுதியில், "உங்கள் கனவுகளை இறைவன் ஆசீர்வதிப்பாராக!" என்று தன் உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. இறுதி திருப்பலியும், மூவேளை செபஉரையும்
ஜூலை,31,2016. ஜூலை 31, ஞாயிற்றுக்கிழமை காலை, அதாவது, திருத்தந்தையின் திருத்தூதுப் பயணத்தின் இறுதி நாள் காலை, கிரக்கோவ் பேராயர் இல்லத்திலிருந்து 12 கி.மீ. தூரத்தத்திலுள்ள இரக்கத்தின் வளாகத்திற்கு வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு, காரித்தாஸ் பிறரன்பு அமைப்பால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இரு இல்லங்களை ஆசீர்வதித்தார். இவ்வில்லங்களில் ஒன்று, முதியோருக்கு உதவி வழங்கவும், மற்றொன்று, வறியோருக்கு உணவு வழங்கவும் கட்டப்பட்டவையாகும்.
போலந்து நாட்டின் பாரம்பரிய உடையணிந்த பெண்கள், தாங்கள் தயாரித்திருந்த ஒரு பெரிய ரொட்டியை திருத்தந்தையின் முன் நீட்ட, அதிலிருந்து ஒரு சிறு துண்டை அவர் சுவைத்தார். இரு காரித்தாஸ் இல்லங்களையும் ஆசீர்வதித்தபின், இரக்கத்தின் வளாகத்தில் இளையோர் நடுவே காரில் வலம் வந்தார். உள்ளூர் நேரம் காலை 10 மணிக்கு திருப்பலி ஆரம்பமானது.
போலந்து அரசுத் தலைவர், Andrzej Duda, அவரது துணைவியார், Agata Kornhauser Duda, பிரதமர், Beata Szydło, பானமா நாட்டு அரசுத் தலைவர், Juan Carlos Varela Rodriguez என பல முக்கிய பிரமுகர்கள், உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் இறுதித் திருப்பலியில் கலந்துகொண்டனர்.
திருப்பலி நிகழ்ந்த மேடையருகே, நடமாடும் மருத்துவமனை ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. லெபனான் நாட்டின் புலம் பெயர்ந்தோர் தங்கியுள்ள முகாமில் பயன்படுத்துவதற்கென்று, கிரக்கோவ் காரித்தாஸ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த மருத்துவமனை, லெபனான் நாட்டிற்கு அனுப்பப்பட உள்ளது.
திருப்பலியின் இறுதியில், திருத்தந்தை வழங்கிய நண்பகல் மூவேளை செப உரையில், 34வது உலக இளையோர் நாள் நிகழ்வுகள், 2019ம் ஆண்டு, பானமா நாட்டில் நடைபெறும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பானமா அரசுத் தலைவரை, போலந்து அரசுத் தலைவர் வாழ்த்தினார். பானமா நாட்டு இளையோர், கொடிகளை அசைத்து ஆரவாரம் செய்தனர். உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் அடையாளமாக இருக்கும் சிலுவையை, போலந்து நாட்டு இளையோர், பானமா நாட்டு இளையோர் பிரதிநிதிகள் குழுவிடம் ஒப்படைத்தனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. இறுதி திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை
ஜூலை,31,2016. அன்பு இளம் நண்பர்களே, நீங்கள் இயேசுவைச் சந்திக்க கிரக்கோவ் நகருக்கு வந்துள்ளீர்கள். இயேசு சக்கேயுவைச் சந்தித்த நிகழ்வை (லூக்கா 19: 1-10) இன்றைய நற்செய்தியில் கேட்டோம்.
உரோமையர்களுக்காக வரி வசூலித்த சக்கேயு, தன் சொந்த மக்களை வதைத்துவந்தார். இயேசுவுடன் அவர் மேற்கொண்ட சந்திப்பினால், அவர் வாழ்வு அடியோடு மாறியது.
ஆனால், சக்கேயு இயேசுவைச் சந்திக்க பல தடைகள் இருந்தன. முதல் தடை, அவர் குள்ளமாக இருந்தார். நாம் பலமுறை மிகச் சிறியவர்கள் என்று உணர்வதால், இறைவனைச் சந்திக்க தகுயில்லை என்று கருதுகிறோம். இவ்வாறு கருதுவது, நம் மனநிலையை மட்டுமல்ல, இறை நம்பிக்கையையும் பாதிக்கிறது. இறைவன் நம் ஒவ்வொருவரையும் அவர் சாயலாகப் படைத்து, அவருடன் எப்போதும் மகிழ்ந்திருக்க அழைத்துள்ளார்.
நாம் எந்நிலையில் இருக்கிறோமோ, அந்நிலையிலேயே இறைவன் நம்மீது அன்பு கொள்கிறார். நாம் எவ்விதம் உடுத்தியுள்ளோம், நாம் என்ன வைத்திருக்கிறோம் என்பதைவிட, நாம் யார் என்பதே, இறைவனுக்கு முக்கியம். நாம் ஒவ்வொருவரும் அவரது பார்வையில் விலையேறப் பெற்றவர்கள்!
சிலவேளைகளில் நம்மை நாமே குறைத்து மதிப்பிடுகிறோம். நமது இலக்குகளைத் தாழ்த்தி விடுகிறோம். நாம் நம்மீது கொள்ளும் அன்பைவிட, இறைவன் நம்மீது கொள்ளும் அன்பு உயர்ந்தது. நாம் இறைவனால் அன்பு கூரப்பட்டவர்கள் என்பதை ஒவ்வொரு நாளின் விடியலிலும் நாம் உணரவேண்டும். "இறைவா, நீர் என்மீது அன்பு கொண்டிருப்பதற்கு நன்றி! இதேபோல், நானும் என் வாழ்வின் மீது அன்புகொள்ள உதவியருளும்!" என்ற செபத்தை ஒவ்வொரு நாளும் எழுந்தவுடன் சொல்வது, பயனளிக்கும்.
சக்கேயு சந்தித்த இரண்டாவது தடை, வெட்கத்தால் செயலற்றுப்போன நிலை. தன் மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டவர் என்பதை ஏற்கனவே உணர்ந்தவர், சக்கேயு. இப்போது, மரத்தின் மீது ஏறி, மீண்டும் மற்றவரது கேலிக்கு உள்ளாக வேண்டுமா என்ற தயக்கம் அவருக்குள் எழுந்தது. ஆயினும், துணிந்து ஏறினார். காரணம், இயேசுவைக் காணவேண்டும் என்ற ஆவல்.
சிலவேளைகளில், நாம் மிகவும் அன்புகொள்ளும் ஒருவருக்காக எதையும் செய்யத் துணிகிறோமே, அத்தகையத் துணிச்சல் அது. இயேசுவைக் காணவேண்டுமெனில், கரங்களைக் கட்டிக்கொண்டு, அல்லது, ஒரு சில குறுஞ்செய்திகளை அனுப்பிக்கொண்டு சும்மா இருக்க முடியாது. இயேசுவைக் காண்பதற்கு துணிகரச் செயல்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
சக்கேயுவைச் சுற்றியிருந்தோரின் முணுமுணுப்பு, அவர் சந்தித்த மூன்றாவது தடை. பாவியின் இல்லத்தில் இயேசு நுழைந்தார் என்ற முணுமுணுப்பு பலமாக எழுந்தது. கடவுளின் அளவற்ற இரக்கத்தை மறக்கச் செய்வதற்கு பல முணுமுணுப்புக்கள் எழும். அந்த இரக்கத்தில் நம்பிக்கை கொள்ளும் நம்மைப் பார்த்து பலர் ஏளனம் செய்வர். இருந்தாலும், மனம் தளராமல், இந்த உண்மையை நாம் நம்பவேண்டும்.
அன்று, சக்கேயுவைச் சுற்றியிருந்த கூட்டம் அவரைப் பார்த்த பார்வை, கீழ் நோக்கிய வெறுப்புப் பார்வை. ஆனால், இயேசு சக்கேயுவை 'அண்ணாந்து பார்த்தார்' (லூக்கா 19: 5). வெளிப்புறத்தை, மேலோட்டமாகப் பார்க்கும் கண்ணோட்டத்தை விடுத்து, உள்ளார்ந்த வகையில் மற்றவர்களைப் பார்க்க இயேசு அழைக்கிறார்.
இறுதியாக, இயேசு கூறும் வார்த்தைகளுக்குச் செவிமடுப்போம். இன்றும் இந்த வார்த்தைகள் நம் ஒவ்வொருவரிடமும் சொல்லப்படுகின்றன. சக்கேயுவே, விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்கவேண்டும்" (லூக்கா 19:5)
ஒருவகையில் சொல்லப்போனால், உலக இளையோர் நாள் இன்றுமுதல் ஆரம்பமாகிறது; அது, இனிவரும் நாட்களில், நமது வீடுகளில் தொடரப்போகின்றது. இயேசு இந்த அழகிய நகரிலேயே தங்கப் போவதில்லை; அல்லது, நமது நினைவுகளில் மட்டும் தங்களைப் போவதில்லை. அவர் நம் வீடுகளிலும், தினசரி வாழ்விலும் தங்க விழைகிறார்.
சக்கேயுவை பெயர் சொல்லி அழைத்ததுபோல், நம் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்கிறார். 'சக்கேயு' என்ற பெயருக்கு, 'கடவுளின் நினைவு' என்று பொருள். கடவுளின் நினைவுத் திறன், கணணியின் நினைவுத் திறன் போன்றதன்று. தேவைப்பட்டால், பயன்படுத்தி, தேவையில்லையெனில் அழித்துவிடும் நினைவுத் திறன் அல்ல, இது. இது, உயிருள்ள இறைவனின் நித்திய நினைவுத் திறன், வாழும் நினைவுத் திறன்.
இத்தகைய நினைவுத் திறன் கொண்ட இறைவன் நம்மைப் பெயர் சொல்லி அழைத்ததற்காக, அவருக்கு நம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து மெளனமாக நன்றி கூறுவோம்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. பானமா நாட்டில், 2019ம் ஆண்டு, உலக இளையோர் நாள் சிறப்பிக்கப்படும்
ஜூலை,31,2016. உலக இளையோர் நாள் நிகழ்வுகள் இறுதித் திருப்பலியில் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய நண்பகல் மூவேளை செப உரை:
உலக இளையோர் நாள் நிகழ்வுகளை, திறம்பட ஏற்பாடு செய்திருந்த கர்தினால் Stanisław Dziwisz அவர்களுக்கும், உடன் உழைத்த அனைவருக்கும் நெஞ்சார நன்றி கூறுகிறேன். இந்நாட்களில், கிரக்கோவ் நகரில் நிலவிய உற்சாகத்தை, புனித 2ம் ஜான்பால், விண்ணகத்திலிருந்து கண்டு மகிழ்ந்திருப்பார்.
உலகினர் அனைவரும் உடன்பிறப்புக்களே என்ற உணர்வை இந்நாட்களில் நாம் இங்கு உணர்ந்தோம். செபத்தின் வல்லமையை நாம் உணர்வதற்கு இறைவன் துணை செய்தார். இந்நாட்களில் நீங்கள் பெற்றுக்கொண்ட கொடைகளை இழந்துவிட வேண்டாம் என்று, அன்னை மரியா உங்களுக்கு நினைவுறுத்துகிறார்.
1985ம் ஆண்டு, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் உருவாக்கிய இந்த அற்புத முயற்சி, அடுத்த இரு ஆண்டுகள், மறை மாவட்ட அளவில் உலகெங்கும் தொடர்ந்து நடைபெறும். 2019ம் ஆண்டு, உலக இளையோர் நாள் நிகழ்வுகள், பானமா நாட்டில் நடைபெறும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மரியன்னையின் பரிந்துரையோடு, தூய ஆவியாரின் வழி நடத்துதலுக்காக நாம் மன்றாடுவோம். நம் அனைவரையும் அவர் இறைவனின் இரக்கத்தைப் பறைசாற்றும் தூதர்களாக மாற்றுவாராக!
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
No comments:
Post a Comment