Friday 12 August 2016

வத்திக்கான் வானொலி – செய்திகள் / 11.08.16

வத்திக்கான் வானொலி செய்திகள் / 11.08.16
------------------------------------------------------------------------------------------------------

1. முன்னறிவிப்பின்றி துறவு இல்லங்களுக்குச் சென்று வந்த திருத்தந்தை

2. கிறிஸ்தவ தலித் மக்கள் கேட்பதெல்லாம், நீதியும் சமத்துவமுமே

3. கொலம்பியா நாட்டின் பொகோட்டாவில் இரக்கத்தின் மாநாடு

4. சாம்பியா நாட்டு தேர்தலுக்கு ஆயர்களின் வேண்டுகோள்

5. தென் சூடான் நெருக்கடி நிலையை சீராக்க ஆயரின் அழைப்பு

6. அருள்பணியாளர் Hamel நினைவாக, 1000 இளையோரின் பயிற்சி

7. தென் கொரியா சமய அடக்குமுறையின் 150ம் ஆண்டு நிறைவு

8. அமெரிக்க தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் நாகரீகம் அவசியம்

------------------------------------------------------------------------------------------------------

1. முன்னறிவிப்பின்றி துறவு இல்லங்களுக்குச் சென்று வந்த திருத்தந்தை

ஆக.11,2016. ஆகஸ்ட் 9, இச்செவ்வாயன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியில் உள்ள இரு துறவு இல்லங்களுக்குச் சென்று, அங்கு வாழும் அருள் சகோதரர்களைச் சந்தித்தார்.
லக்கீலா (L’Aquila) பகுதியில், கார்ஸோலி எனுமிடத்தில் அமைந்துள்ள புனித தோமினிக் துறவு சபை அருள் சகோதரிகளையும், ரியேத்தி (Rieti) பகுதியில் போர்கோ சான் பியெத்ரோ எனுமிடத்தில் புனித பிலிப்பா மடத்தில் வாழும் பிரான்சிஸ்கன் அருள் சகோதரிகளையும் சந்தித்தார்.
ரியேத்தியின் ஆயர் தோமெனிக்கோ பொம்பீலி (Domenico Pompili) அவர்கள், இச்சந்திப்பில் திருத்தந்தையுடன் கலந்துகொண்டார்.
இவ்வாண்டு சனவரி 4ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, ரியேத்தியின் கிரேச்சோ (Greccio) திருத்தலத்தில், புனித பிரான்சிஸ் அமைத்ததாகச் சொல்லப்படும் முதல் கிறிஸ்து பிறப்பு காட்சியை காணச் சென்றது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. கிறிஸ்தவ தலித் மக்கள் கேட்பதெல்லாம், நீதியும் சமத்துவமுமே

ஆக.11,2016. இந்தியாவில் வாழும் கிறிஸ்தவ தலித் மக்கள், சிறப்பு  சலுகைகளைக் கேட்கவில்லை, அவர்கள் கேட்பதெல்லாம், நீதியும் சமத்துவமுமே என்று மும்பை பேராயர், கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ் அவர்கள் கூறினார்.
இந்தியாவில் ஏனைய தலித் மக்கள்மீது காட்டப்படும் அனைத்து பாகுபாடுகளையும் துன்பங்களையும் கிறிஸ்தவ தலித் மக்களும் அனுபவிக்கின்றனர் என்று கூறிய கர்தினால் கிரேசியஸ் அவர்கள், கிறிஸ்தவ தலித் மக்களுக்கு எவ்வித பாதுகாப்பும் கிடைப்பதில்லை என்பது, அவர்கள் அனுபவிக்கும் கூடுதல் துன்பம் என்று சுட்டிக்காட்டினார்.
இந்து மதத்தைப் பின்பற்றுவோர் மட்டுமே தாழ்த்தப்பட்ட சாதி என்ற பிரிவில் இணைக்கப்படுவர், ஏனைய மதத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்ற ஒரு சட்டத்தை உருவாக்கி, 1950ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி, அதில் இந்தியக் குடியரசுத் தலைவர் கையொப்பமிட்டார்.
341ம் எண் கொண்ட இச்சட்டத்தில் 1956 மற்றும் 1990 ஆகிய இரு ஆண்டுகள், மாற்றங்களைப் புகுத்தி, புத்தர்கள், சீக்கியர்கள் ஆகியோரையும் தாழ்த்தப்பட்ட சாதி என்ற பிரிவில் இந்திய அரசு இணைத்தது; ஆனால், கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியரையும் இணைக்க மறுத்தது.
எனவே, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்த தலித் மக்களுக்கு, ஆகஸ்ட் 10ம் தேதி, இருள் நிறைந்த ஒரு நாள் என்று கூறி, ஆகஸ்ட் 10ம் தேதியை 'கருப்பு நாள்' என்று இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை, கடந்த சில ஆண்டுகள், கடைபிடித்து வருகின்றது.
ஆகஸ்ட் 10, இப்புதனன்று இந்தியாவின் பல்வேறு மறைமாவட்டங்களில் கருப்பு நாள் கடைபிடிக்கப்பட்டது என்று ஆசிய செய்தி கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

3. கொலம்பியா நாட்டின் பொகோட்டாவில் இரக்கத்தின் மாநாடு

ஆக.11,2016. நடைபெறும் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் ஒரு முக்கிய நிகழ்வாக, ஆகஸ்ட் 27ம் தேதி முதல், 30ம் தேதி முடிய, கொலம்பியா நாட்டின் பொகோட்டாவில் இரக்கத்தின் மாநாடு ஒன்று நடைபெறும் என்று, இலத்தீன் அமெரிக்க திருப்பீட அவை அறிவித்துள்ளது.
இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவைகளின் உயர்மட்டக் குழுவும் (CELAM), இலத்தீன் அமெரிக்க திருப்பீட அவையும் இணைந்து நடத்தும் இந்த மாநாட்டில், வட, மத்திய, தென் அமெரிக்க நாடுகளிலிருந்தும், கரீபியன் தீவுகளிலிருந்தும் வருகைதரும் பிரதிநிதிகள் கலந்துகொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
15 கர்தினால்கள், மற்றும் 120 ஆயர்கள் தங்கள் பெயர்களை ஏற்கனவே பதிவு செய்துள்ளனர் என்றும், இவர்கள் அல்லாமல், இருபால் துறவு சபைகளின் தலைவர்கள், அருள்பணியாளர்களைப் பயிற்றுவிப்பவர்கள் என, 400க்கும் அதிகமானோர் இந்த மாநாட்டில் பங்கேற்பர் என்று இலத்தீன் அமெரிக்க திருப்பீட அவை அறிவித்துள்ளது.
பொகோட்டாவின் பேராயரும், CELAM குழுவின் தலைவருமான கர்தினால் Rubén Salazar மற்றும், இலத்தீன் அமெரிக்க திருப்பீட அவையின் தலைவர், Marc Ouellet ஆகியோரின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அளிக்கும் காணொளிச் செய்தி, இரக்கத்தை மையப்படுத்தி நிகழும் இந்த மாநாட்டினைத் துவக்கி வைக்கும் என்றும், வழிபாட்டு நிகழ்வுகள் மட்டுமல்லாமல், இரக்கச் செயல்பாடுகளும் இந்த மாநாட்டு நாட்களில் இடம்பெறும் என்றும் இலத்தீன் அமெரிக்க திருப்பீட அவை அறிவித்துள்ளது.

ஆதாரம் :  / வத்திக்கான் வானொலி

4. சாம்பியா நாட்டு தேர்தலுக்கு ஆயர்களின் வேண்டுகோள்

ஆக.11,2016. கத்தோலிக்கர்களுக்கும், நல்மனம் கொண்ட அனைவருக்கும், தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் கடமை உள்ள அதேவேளையில், தேர்தல் காலத்தில் அமைதியைக் காப்பதும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடமை என்று சாம்பியா ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆகஸ்ட் 11, இவ்வியாழனன்று சாம்பியாவின் அரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் சூழலில், ஆயர்கள் சார்பில், சாம்பியா ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் Telesphore Mpundu அவர்கள் இந்த விண்ணப்பத்தை விடுத்துள்ளார்.
அரசியல், பொருளாதார, சமுதாய திட்டங்களில் நல்ல அறிவுத் திறனும், உண்மையை எடுத்துரைக்கும் துணிவும், சமுதாய நீதியையும், பொதுநலனையும் முன்னிறுத்தும் கருத்தும் கொண்ட ஒருவரை தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்குமாறு பேராயர் Mpundu அவர்கள் இம்மடலில் கூறியுள்ளார்.
தேர்தலைக் கண்காணிக்கும் நிறுவனங்களும், ஊடகத் துறையினரும் பொறுப்புடன் செயல்பட்டு, தேர்தலை கண்ணியத்துடனும், அமைதியுடனும் நடத்த உதவ வேண்டும் என்று பேராயரின் மடல் வலியுறுத்துகிறது.
இலஞ்சம், ஏமாற்றுவேலை ஆகிய தவறான வழிகளில் செல்வதற்குப் பதில், மனசாட்சியைப் பின்பற்றி கத்தோலிக்கர்கள் வாக்களிக்கவேண்டும் என்று பேராயர் Mpundu அவர்கள் தன் மடலின் இறுதியில் விண்ணப்பித்துள்ளார்.

ஆதாரம் : ZCCB / வத்திக்கான் வானொலி

5. தென் சூடான் நெருக்கடி நிலையை சீராக்க ஆயரின் அழைப்பு

ஆக.11,2016. தென் சூடான் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள இடைக்கால அரசு, பன்னாட்டு அமைப்புக்களின் உதவியுடன் நாட்டின் நெருக்கடி நிலையை சீராக்க வேண்டும் என்று, தென் சூடான் ஆயர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.
தென் சூடான் நாட்டைச் சேர்ந்த ஏய் (Yei) மறைமாவட்ட ஆயர், Erkolano Lodu Tombe அவர்கள், தங்கள் நாடு, பல மாதங்களாக அனுபவித்துவரும் மோதல் சூழல் விரைவில் முடிவுக்கு வர அனைத்து தரப்பினரும் திறந்த மனதுடன் முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
நாட்டில் அமைதியைக் கொணர்வதற்கு முன்வந்துள்ள பிற நாட்டு நிறுவனங்கள், தென் சூடானில் அமைதியைத் திணிக்கும் முயற்சிகளை மேற்கொள்ளாமல், தங்கள் நாடு இப்பிரச்சனையைத் தானே தீர்ப்பதற்கு உதவ வேண்டும் என்று ஆயர் Tombe அவர்கள் கேட்டுக்கொண்டார்.
2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்ட அமைதி ஒப்பந்தம், இவ்வாண்டு ஜூலை மாதம் மீறப்பட்டது என்றும், தற்போது, தென் சூடான் நாட்டில் ஐ.நா.வின் அமைதிப்படையைச் சேர்ந்த 12,000 வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் தென் சூடான் கத்தோலிக்க வானொலி CRN கூறியுள்ளது.

ஆதாரம் : CANAA / வத்திக்கான் வானொலி

6. அருள்பணியாளர் Hamel நினைவாக, 1000 இளையோரின் பயிற்சி

ஆக.11,2016. ஜூலை மாத இறுதியில் பிரான்ஸ் நாட்டில் கொலை செய்யப்பட கத்தோலிக்க அருள் பணியாளரின் நினைவாக, Aid to the Church in Need என்ற பிறரன்பின் இத்தாலிய கிளை, புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
ஜூலை 26ம் தேதி, திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருந்த வேளையில், கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்ட 84 வயது நிறைந்த அருள்பணியாளர் Jacques Hamel அவர்களின் நினைவாக, 1000 இளையோரின் அருள் பணியாளர் பயிற்சிக்கு Aid to the Church in Need அமைப்பு நிதி உதவி செய்ய முன்வந்துள்ளது.
அச்சுறுத்தும் முறையில் உலகில் பரவி வரும் அடிப்படைவாத போக்கிற்கு ஒரு மாற்றாக, அன்பைப் பறைசாற்றும் அருள் பணியாளர்களை உருவாக்கும் முயற்சியில் தங்கள் அமைப்பு ஈடுபட்டுள்ளதாக இவ்வமைப்பின் இத்தாலியக் கிளை ஒருங்கிணைப்பாளர், Alessandro Monteduro அவர்கள், CNA கத்தோலிக்க செய்தியிடம் தெரிவித்தார்.
ஆப்ரிக்கா, கிழக்கு ஐரோப்பா, இலத்தீன் அமேரிக்கா மற்றும் ஆசியா என, உலகின் பல பகுதிகளிலும் உள்ள 21 மறைமாவட்டங்களைச் சேர்ந்த இளையோருக்கு, Aid to the Church in Need அமைப்பினர் திரட்டும் நிதி உதவி சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அடிப்படை வாதம் பரவுவதைத் தடுக்க, பலசமய உரையாடலை வளர்க்கும் முயற்சிகளிலும் Aid to the Church in Need அமைப்பினர் ஈடுபட திட்டமிட்டு வருவதாக, Monteduro அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி

7. தென் கொரியா சமய அடக்குமுறையின் 150ம் ஆண்டு நிறைவு

ஆக.11,2016. 1886ம் ஆண்டு தென் கொரியாவில் நிகழ்ந்த Byeongin சமய அடக்குமுறையின் 150ம் ஆண்டு நிறைவைக் கடைபிடிக்க Seoul உயர் மறைமாவட்டம் தீர்மானித்துள்ளது என்று UCAN செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.
ஆகஸ்ட் 24ம் தேதி முதல் அக்டோபர் 30ம் தேதி முடிய, Seoul உயர் மறைமாவட்டத்தின் Myeong-dong பேராலயத்திலும், அதன் சுற்றுப்புறப் பகுதியிலும் "மறைசாட்சியமும் இரக்கமும்" என்ற மையக்கருத்துடன் பல்வேறு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
"மறைசாட்சியமும் இரக்கமும்" என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள 60 ஓவியங்கள் அடங்கிய கண்காட்சி இந்நிகழ்வுகளை துவக்கி வைக்கும் என்றும், இதைத் தொடர்ந்து, இசை நாடகங்கள், திரைப்பட விழா ஆகியவையும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
1866ம் ஆண்டு நடைபெற்ற சமய அடக்குமுறையில், 9000த்திற்கும் அதிகமான கத்தோலிக்கர், அதாவது, அப்போதைய கத்தோலிக்க எண்ணிக்கையில் பாதிக்கு மேற்பட்டோர், கொல்லப்பட்டனர் என்று UCAN செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி

8. அமெரிக்க தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் நாகரீகம் அவசியம்

ஆக.11,2016. அமெரிக்க ஐக்கிய நாட்டில் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்னதாக அங்கு நடைபெறும் பிரச்சாரக் கூட்டங்கள், நாகரீகமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன், அந்நாட்டின் அருள் சகோதரிகள், அனைத்து கட்சி வேட்பாளர்களுக்கும், கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
குடியரசு, ஜனநாயகம், பசுமை, சுதந்திரம் ஆகிய கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும், ஒருவரை ஒருவர் தரக்குறைவாகப் பேசுவதை நிறுத்திவிட்டு, பொது மக்களின் நன்மைகளை முன்னிறுத்தி பேசுமாறு, அருள் சகோதரிகளின் மடல் விண்ணப்பித்துள்ளது.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் பெண் துறவியர் அவை என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களில் 5,600த்திற்கும் அதிகமான அருள் சகோதரிகள் கையெழுத்திட்டுள்ள இம்மடல், ஆகஸ்ட் 8ம் தேதி, இத்திங்களன்று அனைத்து கட்சி வேட்பாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்று CNS கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.
அனைத்து குடிமக்களின் மாண்பைக் காப்பதும், பொதுநலனைப் பேணுவதும் அரசியலின் தலையாயக் கடமை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டு பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை, அருள் சகோதரிகள், தங்கள் மடலில் மேற்கோளாகக் கூறியுள்ளனர்.
தனிப்பட்ட முறையிலும், குடும்பத்திலும் பல்வேறு தியாகங்களைச் செய்து இப்போட்டியில் ஈடுபட்டுள்ள அனைத்து வேட்பாளர்களுக்கும் தங்கள் செபங்களை வாக்களிப்பதாக அருள் சகோதரிகளின் மடல் உறுதி கூறியுள்ளது என்று CNS கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி

1 comment:

  1. We are urgently in need of KlDNEY donors for the sum of $500,000.00 USD, WhatsApp or Email for more details:
    (customercareunitplc@gmail.com)
    WhatsApp +91 779-583-3215

    ReplyDelete

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...