Wednesday, 30 October 2013

செய்திகள் - 29.10.13

செய்திகள் - 29.10.13
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : நம்பிக்கை என்பது அனைத்தையும் மனமகிழ்வுடன் உற்றுநோக்கி முன்னோக்கிச் செல்வதாகும்

2. திருத்தந்தையின் செவ்வாய் டுவிட்டர் செய்தி

3. மியான்மார் எதிர்க்க‌ட்சித்த‌லைவ‌ர் திருத்த‌ந்தையை ச‌ந்தித்த‌து குறித்து யங்கூன் பேராய‌ர்

4. உலக வங்கித் தலைவர் : ஏழ்மைக்கு எதிரான திருத்தந்தையின் குரலுக்கு இணை எதுவுமில்லை

5. அடிமைக் குழந்தைகளின் விடுதலைக்காக உழைத்துவருக்கு அன்னை தெரெசா விருது

6. தமிழகத்தில், குழந்தைகள் இறப்பு அளவீடு குறைகிறது : ஆரம்ப நலவாழ்வு நிலையங்கள் சாதனை

7. தண்ணீர் சிக்கனம் அவசியம்! : குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : நம்பிக்கை என்பது அனைத்தையும் மனமகிழ்வுடன் உற்றுநோக்கி முன்னோக்கிச் செல்வதாகும்

அக்.,29,2013. நம்பிக்கை என்பது எதிலும் நற்கூறேக்காணும் இனிய மனவளம் அல்ல, அது அனைத்தையும் மனமகிழ்வுடன் உற்றுநோக்கி முன்னோக்கிச் செல்வதாகும் என இச்செவ்வாய்க்கிழமையன்று புனித மார்த்தா சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம்பிக்கை என்பதை புரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல என்ற திருத்தந்தை, மூன்று புண்ணியங்களுள் மிகவும் தாழ்ச்சியுடையதான இது, நம் வாழ்வுக்குள்ளேயே மறைந்திருப்பது மட்டுமல்ல, பெருநட்டத்தையும் கொணரவல்ல ஒரு புண்ணியம் என்றார்.
நாம் நம் இதயத்தை பெருங்கடலின் கரையில் நங்கூரமிட்டுள்ளோமா அல்லது, நம் ஆசைகள், குணநலன்கள், நம் சட்டவரைமுறைகள், நம் சுகங்கள் ஆகியவற்றைக் கொண்டு நாமே உருவாக்கிய ஏரியில் நங்கூரமிட்டுள்ளோமா என்பது குறித்து நாம் ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டிய நேரமிது எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
எந்த நம்பிக்கையால் நாம் மீட்கப்பட்டோமோ அந்த நம்பிக்கையால் நாம் வாழ்வது, மற்றது, நல்ல கிறிஸ்தவர்களாக நாம் வாழ்வது என்பவை பற்றி எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவெளிப்பாட்டிற்கான காத்திருப்பில் வாழ்தல் அல்லது இறைச்சட்டங்களின் துணைகொண்டு வாழ்தல் ஆகியவைகள் பற்றியும் தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தையின் செவ்வாய் டுவிட்டர் செய்தி

அக்.,29,2013. 'பணமும் இவ்வுலகப்பொருட்களும் நம் வாழ்வின் மையமாக மாறும்போது, அவை நம்மை தங்கள் வசம் இழுப்பதோடு நம்மை அடிமையாகவும் மாற்றிவிடுகின்றன' என தன் டுவிட்டர் பக்கத்தில் இச்செவ்வாய்க்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நுகர்வுக்கலாச்சாரத்திற்கு நாம் ஒருநாளும் அடிமையாகிவிடக்கூடாது என பலவேளைகளில் தன்மறையுரைகளிலும், டுவிட்டர் செய்திகளிலும் அறிவுறுத்தி வருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி

3. மியான்மார் எதிர்க்க‌ட்சித்த‌லைவ‌ர் திருத்த‌ந்தையை ச‌ந்தித்த‌து குறித்து யங்கூன் பேராய‌ர்

அக்.,29,2013. மியான்மார் எதிர்க்க‌ட்சித்த‌லைவ‌ர் Aung San Suu Kyi அவர்கள், இத்திங‌கள‌ன்று திருத்த‌ந்தையை ச‌ந்தித்த‌து, அவ‌ருக்கு ப‌ல‌ம் ம‌ற்றும் வ‌ழிகாட்டுத‌லின் ஆதார‌மாக‌ இருக்கும் என‌ கூறினார் யங்கூன் பேராய‌ர் Charles Bo.

மதங்களிடையேயான பேச்ச்சுவார்த்தைகளை ஊக்குவிக்கும் எதிர்க்கட்சித்தலைவர் Suu Kyi அவர்களுக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பு, மியான்மார் கத்தோலிக்கர்களுக்கு மகிழ்ச்சி மற்றும் மனநிறைவின் காரணமாக இருந்தது என்றார் பேராயர் Charles Bo.
மியான்மார் கத்தோலிக்கர்களால் மதிக்கப்படும் Suu Kyi அவர்களும், ஆழமான மனிதாபிமானம் உடைய திருத்தந்தையும் சந்தித்தது, எதிர்க்கட்சித்தலைவரின் மக்கள் செல்வாக்கையும் புகழையும் மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார் யங்கூன் பேராயர் Charles Bo.

ஆதாரம் : AsiaNews

4. உலக வங்கித் தலைவர் : ஏழ்மைக்கு எதிரான திருத்தந்தையின் குரலுக்கு இணை எதுவுமில்லை

அக்.,29,2013. உலகில் ஏழ்மை ஒழிப்பு குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிவரும் கருத்துக்கள், உலக வங்கியின் நோக்கங்களோடு ஒத்திணங்கிச் செல்வதால் இருதரப்பினரும் ஒன்றிணைந்து உழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக உலகவங்கித் தலைவர் எடுத்துரைத்தார்.
இத்திங்களன்று திருத்தந்தையை திருப்பீடத்தில் சந்தித்தபின் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த உலக வங்கியின் தலைவர் Jim Yong Kim அவர்கள், இருதரப்பினரும் எவ்வாறு ஒன்றிணைந்து உழைத்து, சமூக முன்னேற்றத்திற்குச் சிறப்புப் பங்காற்றமுடியும் என்பது குறித்து திங்கள் சந்திப்பின்போது திருத்தந்தையுடன் விவாதித்ததாகவும் கூறினார்.
எழ்மைக்கு எதிராக திருத்தந்தையின் குரல் ஓங்கி ஒலிப்பதை அவர் திருத்தந்தையாக பதவியேற்ற நாளிலிருந்தே காணமுடிகிறது என்ற Jim Yong Kim அவர்கள், திருத்தந்தை அவர்களுக்கு இணையான ஒரு குரலை உலகத்தலைவர்கள் மத்தியில் காணமுடியவில்லை எனவும் தெரிவித்தார்.
'வளர்ச்சி என்பது மக்களை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும், பணத்தை மையப்படுத்தி அல்ல என்ற திருத்தந்தையின் கருத்தே தன்னுடைய கருத்து எனவும் கூறினார் உலக வங்கித்தலைவர்.

ஆதாரம் :  Sydney Morning Herald

5. அடிமைக் குழந்தைகளின் விடுதலைக்காக உழைத்துவருக்கு அன்னை தெரெசா விருது

அக்.,29,2013. சூடானிலும் உகாண்டாவிலும் குழ்ந்தைகள் அடிமைகளாக நடத்தப்படுவதற்கு எதிராகப் போராடிவரும் அமெரிக்க கிறிஸ்தவரான   Sam Childers அவர்களுக்கு, இவ்வாண்டின் அன்னை தெரசா விருது வழங்கப்பட்டுள்ளது.
மும்பையில் இடம்பெற்ற விழாவில் இவ்விருதை, Harmony என்றழைக்கப்படும் அமைப்பிடமிருந்து பெற்றபோது உரையாற்றிய Childers அவர்கள், அன்னை தெரசாவின் பாதையைப் பின்பற்றும் தான், சூடானிலும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் துன்புறும் சிறார்களின் சார்பாக இவ்விருதை ஏற்றுக்கொள்வதாகக் கூறினார்.
துவக்கக் காலத்தில் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி, வன்முறைகளை ஆதரித்து வந்த Childers அவர்கள், மனம் மாறி கிறிஸ்தவத்தை தழுவிய பின்னர், கடந்த 13 ஆண்டுகளாக ஆப்ரிக்காவில், குறிப்பாக, சூடான் மற்றும் உகாண்டாவில் அடிமைக் குழந்தைகளின் விடுதலைக்காக உழைத்து வருகிறார்.

ஆதாரம் : AsiaNews

6. தமிழகத்தில், குழந்தைகள் இறப்பு அளவீடு குறைகிறது : ஆரம்ப நலவாழ்வு நிலையங்கள் சாதனை

அக்.,29,2013. தமிழகத்தில், குழந்தைகள் இறப்பு அளவீடு, கடந்த 10 ஆண்டுகளில், 51 விழுக்காடு குறைந்துள்ளதாக, மத்திய அரசு அண்மையில் எடுத்த கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
ஆரம்ப நலவாழ்வு நிலையங்களில் செயல்திறன் மேம்பாடு மற்றும் தொடர் கண்காணிப்புகளும், மருத்துவ வசதி அதிகரிப்பும், இதற்கு முக்கிய காரணம் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மாநில அளவிலான குழந்தைகள் இறப்பு அளவீடு குறித்து, மத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தின் கீழ் செயல்படும், மாதிரி பதிவு திட்ட அமைப்பு ஆய்வு நடத்தியதைத் தொடர்ந்துஇந்த விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, தமிழகத்தில் குழந்தைகள் இறப்பு அளவீடு, கடந்த, 10 ஆண்டுகளில், 51 விழுக்காடு குறைந்துள்ளது.
கடந்த, 2002ல், குழந்தை இறப்பு எண்ணிக்கை, ஆயிரத்துக்கு, 43 ஆக இருந்தது. 2008ல், 35எனவும்2009ல், 28; 2010ல், 24; 2011ல், 22; 2012ல், 21 எனவும் படிப்படியாகக் குறைந்துள்ளது.
பத்து ஆண்டுகளில், ஆயிரத்துக்கு 43 என்ற அளவில் இருந்து, 21 என்ற அளவுக்கு குறைந்துள்ளதன் மூலம்குழந்தைகள் இறப்பு அளவீடு, 51 விழுக்காடு வரை குறைந்துள்ளது.
ஐ.நா., பொது நலவாழ்வு அமைப்பின் வழிகாட்டுதல், மத்திய அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள், மாநில அரசு ஒதுக்கும் நிதி உதவியுடன், பெண்கள் கல்வியறிவு அதிகரிப்பு ஆகிய அனைத்துக்கூறுகளும் இந்த முன்னேற்றத்திற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.
நாட்டின், 19 பெரிய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, கேரளாவில் குழந்தை இறப்பு அளவீடு ஆயிரத்துக்கு, 12 என்ற அளவில் உள்ளது. அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது. பிற மாநிலங்களில் குழந்தைகள் இறப்பு அளவீடு அதிகமாக உள்ளது.

ஆதாரம் : Dinamalar

7. தண்ணீர் சிக்கனம் அவசியம்! : குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி

அக்.,29,2013. உலக மக்கள்தொகையில், 17 விழுக்காடாக உள்ள இந்தியாவில் உலக அளவோடு ஒப்பிடும்போது4 விழுக்காடு நீர்வளமே உள்ளதால்தண்ணீர் பயன்பாட்டை இந்தியர்கள், சிக்கனமாக, திறம்பட மேற்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் இந்தியக் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி.
மக்கள்தொகை அதிகரிப்பு, நகர்புறமாதல் போன்ற காரணங்களால் நீர்வளத் தேவை அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டிய இந்தியக் குடியரசுத்தலைவர், நீர்வளத்தைப் பயன்படுத்துவதில் ஒவ்வோர் இந்தியரும் பொறுப்புடன் செயல்படவேண்டியத் தேவையை வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரம் : Dinamalar
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...