Monday, 24 January 2011

Catholic News - hottest and latest - 25 Jan 2011

இணையதளம் வழியாக நற்செய்தி அறிவிக்கும் கத்தோலிக்கருக்குத் திருத்தந்தை அறிவுரை

சன.24,2011. நவீன இணையதள வசதிகளைப் பயன்படுத்தி நற்செய்தி அறிவிக்கும் கத்தோலிக்கர் பிறரை மதிப்பவர்களாகவும், ஆன்லைனில் புகழ்பெற வேண்டுமென்பதைத்  தங்களது இறுதி இலக்காகக் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும் என திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
வருகிற ஜூன் 5ம் தேதி கடைபிடிக்கப்படும் 45 வது உலக சமூகத் தொடர்பு நாளுக்கென இத்திங்களன்று நிருபர் கூட்டத்தில் வெளியிடப்பட்ட திருத்தந்தையின் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
Blog, Facebook, YouTube போன்றவை வழியாக நற்செய்தி அறிவிக்கும் கத்தோலிக்கர், பொறுப்பு, நேர்மை, முன்னெச்சரிக்கை, காலமறிந்து செயல்படல் ஆகிய கிறிஸ்தவப் பண்புகளைக் கையாள வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
கடந்த ஆண்டுகளைப் போலவே இவ்வாண்டும் டிஜிட்டல் உலகத்தின் நன்மைகளையும் தீமைகளையும் எடுத்துக் கூறியுள்ள திருத்தந்தை, சமூகப் பன்வலை அமைப்புகள் உறவுகளையும் சமூகங்களையும் கட்டி எழுப்புவதற்கு நேர்த்தியான வழிகள், எனினும், உண்மையான நட்புகளின் இடத்தில் மாயத்தோற்றமான உறவுகள் வைக்கப்படுவதும், உண்மையான விவரங்களைவிட செயற்கையான பொது விவகாரங்களை உருவாக்குவதற்கு சோதிக்கப்படுவதும் குறித்து எச்சரித்துள்ளார்.
புதிய தொடர்புச் சாதனங்கள் வழியாக நற்செய்தியை அறிவிப்பது என்பது, பல்வேறு ஊடகங்களில் மதம் சார்ந்தவைகளை வெளியிடுவது மட்டுமல்ல, ஒருவர் தனது சொந்த இணையப் பக்கத்தில் தனது கிறிஸ்தவப் பண்புகளுக்குச் சாட்சியாகவும் நற்செய்தியோடு முழுவதும் அவை ஒத்திணங்கிச் செல்வதாகவும் இருக்க வேண்டும் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
நடைமுறையில் மெய்மை எனக் கொள்ளத்தக்க தொடர்பு, நம் வாழ்க்கையின் அனைத்துக் கட்டங்களிலும் இடம் பெறும் நேரடியான மனிதத் தொடர்பாக இருக்க முடியாது மற்றும் அதன் இடத்தை அது எடுக்கவும் முடியாது என்றும் அவர் கூறினார்
"டிஜிட்டல் உலகில் உண்மை, அறிவிப்பு, வாழ்க்கையின் எதார்த்தம்", என்ற தலைப்பில் இந்த 45 வது உலக சமூகத் தொடர்பு நாள், வருகிற ஜூன் 5ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. எழுத்தாளர்க்குப் பாதுகாவலரான புனித பிரான்சிஸ் தெ சேல்ஸ் விழாவான சனவரி 24ம் தேதி, உலக சமூகத் தொடர்பு நாளுக்கானத் திருத்தந்தையின் இச்செய்தி ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.
  
திருத்தந்தை, ஜெர்மனியின் லூத்தரன் சபைப் பிரதிநிதிகள் சந்திப்பு

சன.24,2011. லூத்தரன்  கிறிஸ்தவர்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையே இதுவரை இடம் பெற்றுள்ள உரையாடல்களின் பலன்கள் இத்தகைய உரையாடல்களைத் தொடர்ந்து நடத்துவதற்கு ஊக்கம் அளிப்பதாய் இருக்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்
உரோமையில் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தை நிறைவு செய்வதற்காக வந்திருக்கும் ஜெர்மனியின் இவாஞ்சலிக்கல்-லூத்தரன் ஐக்கிய அமைப்பின் பிரதிநிதிகளை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, கிறிஸ்தவர்கள் மத்தியில் நிலவும் பிரிவினைகள் கிறிஸ்து விரும்பிய திருச்சபையின் முழுமையான வாழ்வுக்குத் தடங்கலாக இருக்கின்றது என்றும் குறிப்பிட்டார்.
மார்ட்டின் லூத்தரின் கொள்கைத் திரட்டுகள் வெளியிடப்பட்டதின் 500ம் ஆண்டு 2017ம் வருடம் இடம் பெறுவதைச் சுட்டிக் காட்டிய திருத்தந்தை, லூத்தரன்  கிறிஸ்தவரும் கத்தோலிக்கரும் உலகளாவியக் கிறிஸ்தவ ஒன்றிப்பு நடவடிக்கைக்குத் தங்களை அர்ப்பணிப்பதற்கு இது நல்ல வாய்ப்பாக அமைகின்றது என்றார்.
அச்சமயத்தில் இவ்விரண்டு சபைகளும் ஒருவர் மற்றவருக்கு இழைத்தத் தவறான செயல்களுக்கு கிறிஸ்துவிடம் மன்னிப்புக் கேட்பது நமது உருக்கமான செபமாக இருக்க வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.
லூத்தரன் சபையைத் தொடங்கிய மார்ட்டின் லூத்தர் உரோமைக்கு வந்ததன் 500ம் ஆண்டின் நிறைவாக இந்த லூத்தரன் சபை பிரதிநிதிகள் குழு வத்திக்கானைப் பார்வையிட்டு வருகின்றது.
கத்தோலிக்கக் குருவாகவும் இறையியல் பேராசிரியருமாக இருந்த ஜெர்மானியரான மார்ட்டின் லூத்தர், 1517ம் ஆண்டில் 95 கொள்கைத் திரட்டுகளை வெளியிட்டார். அதைத் திரும்பப் பெறுமாறு 1520ல் அப்போதைய திருத்தந்தை பத்தாம் சிங்கராயரும் 1521ல் புனித உரோமைப் பேரரசராகிய ஐந்தாம் சார்லசும் கேட்டுக் கொண்டனர். ஆனால் லூத்தர் அதற்கு இணங்காததால் அவர் கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து நீக்கப்பட்டார். இதுவே புராட்டஸ்டாண்ட் சீர்திருத்தத்திற்கு வித்திட்டது. கடவுளின் மீட்பை ஒருவர் தனது நல்ல செயல்களிலிருந்து பெறுவதில்லை, மாறாக அது இயேசு பாவத்திலிருந்து மீட்கிறார் என்ற அவரின் மீதான விசுவாசத்தின் வழியாக அது கடவுள் அருளால் இலவசமாக்க கொடுக்கப்படுகிறது என்று மார்ட்டின் லூத்தர் போதித்தார். இவரது போதனை திருத்தந்தையின் அதிகாரத்துக்குச் சவால் விடுப்பதாக இருந்தது.  

ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையின் ஏழு குருக்களும் 300 விசுவாசிகளும் கத்தோலிக்க திருச்சபையில் இணைய‌ விருப்பம்.

சன 24, 2011.   இங்கிலாந்தின் ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த ஏழு குருக்களும் 300 விசுவாசிகளும் கத்தோலிக்கத் திருச்சபையில் இணைவதற்கான விருப்பத்தை வெளியிட்டுள்ளதாக Brentwood மறைமாவட்டம் அறிவித்துள்ளது.
ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபை ஒரு காலத்தில் கத்தோலிக்கத் திருச்சபையோடு பகிர்ந்து வந்த பாரம்பரியங்களிலிருந்து விலகிச்செல்வதால் கவலையுற்றுள்ள மக்களே கத்தோலிக்கத் திருச்சபையுடன் இணைவதில் ஆர்வம் காட்டி வருவதாக உரைத்த Brentwood ஆயர் தாமஸ் மெக்மஹொன், இது ஒரு துணிவான முடிவு என்றார்.
300 ஆங்கிலிக்கன் கிறிஸ்தவர்கள் கத்தோலிக்க மதத்தில் இணைவது, இழப்பின் வருத்தத்தை தனக்கு தருகின்றபோதிலும், அக்கிறிஸ்தவர்களின் விருப்பத்தை தான் மதிப்பதாகத் தெரிவித்தார் Chelmsford  ஆங்கிலிக்கன் ஆயர் Stephen Cottrell.

70 இலட்சம் குழந்தைகளுக்கு தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து

சன 24, 2011.   தமிழகத்தில் 40 ஆயிரத்து 399 மையங்கள் மூலம்  ஐந்து வயதிற்குட்பட்ட 70 இலட்சம் குழந்தைகளுக்கு இஞ்ஞாயிறன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
இந்தியாவில் போலியோ நோயை ஒழிக்க 1995ம் ஆண்டு முதல் சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு ஒவ்வோர் ஆண்டும் ஐந்து வயதிற்குட்பட்ட 17 கோடி குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக் கூடங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சுற்றுலா மையங்களில் 40 ஆயிரத்து 399 மையங்கள் அமைக்கப்பட்டு குழந்தைகளுக்கு ஞாயிறன்று சொட்டு மருந்து வழங்கப்பட்டது. அரசுத் துறைகள், ரோட்டரி சங்கங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இம்முகாமில் பணியில் ஈடுபட்டனர்.
தமிழகத்தின் 70 இலட்சம் குழந்தைகள் உட்பட இந்தியா முழுவதும் 16 கோடியே 80 இலட்சம் குழந்தைகளுக்கு ஞாயிறன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
இந்திய அளவில், 42 பேர் போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அரசு எடுத்து வரும் நடவடிக்கை காரணமாக போலியோவால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2011 இறுதியில் உலக மக்கள் தொகை 700 கோடியைத் தொடும்

சன 24, 2011.   உலக மக்கள் தொகை இந்த ஆண்டு இறுதியில் 700 கோடியைத் தொடும் என நேஷனல் ஜியாக்ரபிக்கின் ஆய்வு தெரிவிக்கிறது.
1800 ஆம் ஆண்டு 100 கோடியாக இருந்த உலக மக்கள் தொகை தற்போது 210 வருடங்களில் 700 கோடியாக உள்ளது.
நேஷனல் ஜியாக்ரபிக் இதழின் ஆய்வின் படி, உலகில் ஒரு வினாடிக்கு ஐந்து குழந்தைகள் பிறப்பதாகவும், அதில் இருவர் இறப்பதால், ஒவ்வொரு நொடிக்கும் மக்கள் தொகையில் மூன்று பேர் கூடிக் கொண்டே செல்வதாகவும் தெரிய வந்துள்ளது.
உலகெங்கும் ஏழாயிரம் மொழிகள் பேசக்கூடிய மக்கள் 194 நாடுகளில் வசித்து வருகிறார்கள்.
ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட நகரங்கள் இன்றைய உலகில் 21 உள்ளன.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...