1. திருத்தந்தை : கத்தோலிக்கத் திருச்சபைக்கும் கீழைரீதி ஆர்த்தடாக்ஸ் சபைகளுக்கும் இடையேயான இறையியல் உரையாடல்கள், முழு ஒன்றிப்பை நோக்கி உறுதியுடன் செல்வதற்கு உதவுகின்றன
சன.28,2011. கத்தோலிக்கத் திருச்சபைக்கும் கீழைரீதி ஆர்த்தடாக்ஸ் சபைகளுக்கும் இடையே இடம் பெற்று வரும் இறையியல் உரையாடல்கள் இவ்விரு சபைகளும் ஒன்றையொன்று இன்னும் அதிக ஆழமாய்ப் புரிந்து கொள்வதற்கு வழி அமைப்பது மட்டுமல்ல, கிறிஸ்து நமக்கு விடுத்துள்ள முழு ஒன்றிப்பை நோக்கி உறுதியுடன் தொடர்ந்து செல்வதற்கும் உதவுவதாய் இருக்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
கத்தோலிக்கத் திருச்சபைக்கும் கீழைரீதி ஆர்த்தடாக்ஸ் சபைகளுக்கும் இடையேயான சர்வதேச இறையியல் உரையாடல் பணிக்குழுவின் முப்பது உறுப்பினர்களை இவ்வெள்ளிக்கிழமை வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார் திருத்தந்தை.
கிறிஸ்தவர்கள், தனிப்பட்ட முறையிலும் சமூகங்களாகவும் சோதனைகளையும் வேதனைகளையும் எதிர்நோக்கி வரும் பகுதிகளிலிருந்து இந்தப் பணிக்குழுவில் உள்ள பலர் வந்திருப்பது பற்றிக் குறிப்பிட்டு, இப்பகுதிகளில் அமைதியும் நீதியும் ஏற்படுவதற்கு நம்பிக்கை மற்றும் பரஸ்பர அங்கீகரிப்பு நோக்கி அனைத்துக் கிறிஸ்தவர்களும் சேர்ந்து உழைக்குமாறு கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.
2003ம் ஆண்டு சனவரியில் தனது உரையாடலைத் தொடங்கிய இப்பணிக்குழு, இரண்டு கட்டமாக நடத்தியக் கூட்டங்களில் ஏற்பட்டுள்ள பலன்கள் குறித்தும் திருத்தந்தை எடுத்துச் சொன்னார்.
2. கொலம்பியாவில் அருட்பணியாளர்கள் கொல்லப்பட்டு வருவது குறித்த விரிவான விசாரணைகளுக்குத் தலத்திருச்சபை அரசை வலியுறுத்தல்
சன.28,2011. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் அருட்பணியாளர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருவது குறித்த விரிவான விசாரணைகள் நடத்தப்படுமாறு அந்நாட்டுத் தலத்திருச்சபை அரசை விண்ணப்பித்துள்ளது.
பொகோட்டா நகரின் தென்பகுதியில் மக்கள் குடியிருப்புப் பகுதியில் இப்புதன் இரவில் இரண்டு கத்தோலிக்கக் குருக்களின் வாகனம் தனியாகக் கிடந்த நிலையில் அக்குருக்களின் உடல்களைக் காவல்துறை கண்டுபிடித்துள்ளது.
இக்கொலை குறித்துப் பேசிய கொலம்பிய ஆயர் பேரவையின் பொதுச் செயலர் ஆயர் ஹூவான் கொர்தோபா விலோத்தா, ஒரே வாகனத்தில் சென்ற இவ்விரு குருக்களும் இனம் தெரியாத ஆட்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்றார்.
இவ்விரு குருக்களும் 37,38 வயதினர். கொலம்பியாவில் 1984ம் ஆண்டு முதல் இதுவரை 74 குருக்கள், 8 துறவியர், 3 குருத்துவ மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்
3. மத்ரித் உலக இளையோர் தினத் திருப்பயணிகளுக்கு விசா இலவசம், ஸ்பெயின் அரசு தீர்மானம்
சன.28,2011. ஸ்பெயினின் மத்ரித்தில் வருகிற ஆகஸ்டு 16 முதல் 21 வரை நடைபெறவிருக்கும் உலக கத்தோலிக்க இளையோர் தினத்திற்கு வருகைதரவிருக்கும் திருப்பயணிகளுக்கு விசா அனுமதிகளை இலவசமாக வழங்குவதற்கு அந்நாட்டு அரசு இசைவு தெரிவித்துள்ளது.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கலந்து கொள்ளும் இத்தினக் கொண்டாட்டங்களின் போது ஆறாயிரம் பாதுகாப்புப் படையினரையும் பணியில் அமர்த்துவதற்கு ஸ்பெயின் அரசு ஒத்துக் கொண்டுள்ளது.
உலக இளையோர் தினத்திற்குப் பொறுப்பான ஸ்பெயின் அமைச்சர் ரமோன் ஹூவாரெகெய் மற்றும் இத்தாலிக்கு வெளியே பாப்பிறைப் பயணங்களின் ஒருங்கிணைப்பாளர் ஆல்பெர்த்தோ கஸ்பாரி உட்பட அந்நிகழ்வுக்குப் பொறுப்பானத் திருச்சபை உறுப்பினர்களுக்கிடையே நடைபெற்ற கூட்டத்தில் இத்தகைய உறுதிகள் வெளியிடப்பட்டன.
உலகெங்கிலுமிருந்து சுமார் 2 இலட்சத்து நாற்பதாயிரம் இளையோர் இவ்வுலக தினத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் 23,000 பேர் ஐரோப்பிய சமுதாய அவை நாடுகளைச் சேராதவர்கள்.
4. சென்னையில் புத்தமதக் கோயில் தாக்கப்பட்டுள்ளது குறித்து இலங்கை பல்சமயத் தலைவர்கள் கண்டனம்
சன.28,2011. சென்னையில் ஸ்ரீ மகபோதி புத்தமதக் கோயில் தாக்கப்பட்டு நான்கு புத்தத் துறவிகள் காயமடைந்து இருப்பது குறித்தத் தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் இலங்கை பல்சமயத் தலைவர்கள்.
சென்னை புத்தமதக் கோயில் பல்சமய நல்லிணக்கத்திற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் என்று குறிப்பிட்டுள்ள இலங்கை கிறிஸ்தவ, புத்த, இந்து மற்றும் முஸ்லீம் மதத் தலைவர்கள், இத்தாக்குதலு்க்கு எதிரானத் தங்களது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
இலங்கை மக்கள் அமைதி காத்து புத்தத் துறவிகள் குணமடைவதற்காகச் செபிக்குமாறு கேட்டுள்ளார் கொழும்புக் கத்தோலிக்கக் கர்தினால் மால்கம் இரஞ்சித்.
எண்பது ஆண்டுகள் பழமையுடைய சென்னை ஸ்ரீ மகபோதி புத்தமதக் கோவிலுக்கு ஆண்டுதோறும் சுமார் 12 இலட்சம் பயணிகள் செல்கின்றனர்
இதற்கிடையே, இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருவதாகவும் ஓரிரு நாட்களில் குற்றவாளிகள் பிடிபட்டுவிடுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இலங்கைத் துணைத்தூதுரகம், மஹாபோதி சங்கம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது
5. தென் கொரிய காரித்தாஸ் வட கொரியாவுக்கு மனிதாபிமான உதவிகள்
சன.28,2011. தென் கொரிய கத்தோலிக்க காரித்தாஸ் நிறுவனம், வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து வட கொரியாவுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள கொரிய ஆயர்களின் அதிகாரப்பூர்வமான முதல் வெளிநாட்டு நிவாரண நிறுவனமான சர்வதேச கொரிய காரித்தாஸ், வட கொரியாவில் மிகவும் நலிந்த சிறார், பெண்கள், முதியோர் ஆகியோர்க்கெனப் பத்து இலட்சம் டாலர் மதிப்பிலான உதவிகளை அனுப்பும்.
கடந்த நவம்பரில் வட கொரியா, தென் கொரியத் தீவில் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலைத் தொடர்ந்து, தென் கொரிய அரசு வட கொரியாவுடனானப் பரிமாற்றத்திற்குத் தடை விதித்திருந்தது. தற்சமயம் அத்தடை இலேசாகத் தளர்த்தப்பட்டு வருகிறது என்று செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.
6. யூத இனப் படுகொலைகள் நாளை நினைவுகூர்ந்தார் கான்டர்பரி பேராயர்
சன.28,2011. இரண்டாம் உலகப் போரின் போது நடத்தப்பட்ட யூத இனப் படுகொலைகள் குறித்து மனித சமுதாயம் மீண்டும் மீண்டும் பேசாமல் இருந்தால் அச்சமயத்தில் துன்பப்பட்டவர்கள் பற்றிய நினைவையே வருங்காலத் தலைமுறை இழந்து விடும் என்று இங்கிலாந்து ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபைத் தலைவர் கூறினார்.
சனவரி 27ம் தேதி, இவ்வியாழனன்று கடைபிடிக்கப்பட்ட யூத இனப் படுகொலை நாளுக்கெனச் செய்தி வெளியிட்ட பேராயர் ரோவன் வில்லியம்ஸ், அந்தச் சகாப்தத்தில் பரிட்டனில் வாழ்ந்த யூதர்கள் எதிர்நோக்கிய வெளிப்படையாய்ச் சொல்லாமல் விடப்பட்ட சம்பவங்களை நினைவுகூர்ந்தார்.
மேலும், இந்நாளில் பேசிய ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், இத்தகைய கொடுஞ்செயல்கள் வரலாற்றில் மீண்டும் இடம்பெறக் கூடாது என்றார்.
இரண்டாம் உலகப் போரின் போது நாத்சி வதைப்போர் முகாம்களில் சுமார் அறுபது இலட்சம் யூதர்களும் இன்னும் பெருமளவில் பிற மக்களும் கொல்லப்பட்டனர்.
7. புற்றுநோய், இதய நோய் போன்ற நோய்களை அகற்றுவதற்கு உலக வணிகத் தலைவர்களுக்கு பான் கி மூன் அழைப்பு
சன.28,2011. உலகில் இடம் பெறும் இறப்புகளில் அறுபது விழுக்காடு புற்றுநோய், இதய நோய், stroke போன்ற நோய்கள் காரணமாக இருக்கும்வேளை இந்த நோய்க்கானக் காரணிகளைக் களைவதற்கு உலக வணிகத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்குமாறு பான் கி மூன் கேட்டுள்ளார்.
தாவோ-உலகப் பொருளாதார மாநாட்டில் இவ்வாறு பேசிய மூன், 2030ம் ஆண்டுக்குள் இந்நோய்கள் வளரும் நாடுகளில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எச்சரித்தார்.
இந்நோய்களால் ஒவ்வோர் ஆண்டும் 3 கோடியே 50 இலட்சம் பேர் இறக்கின்றனர். இவர்களில் பாதிப்பேர் 70 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றுரைத்த மூன், சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள், சர்க்கரை நோய் ஆகியவையும் இவற்றில் உள்ளடங்கும் என்றார்.
தொற்று நோய்கள் அல்லாத இந்த நோய்களைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்த உயர்மட்ட அளவிலானக் கூட்டத்தை வருகிற செப்டம்பரில் நியுயார்க்கி்ல் ஐ.நா.பொது அவை நடத்தும் என்றும் மூன் அறிவித்தார்.
நாடுகள் மற்றும் அரசுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் இக்கூட்டம் பற்றிப் பேசிய அவர், இந்நோய்களைக் கட்டுப்படுத்தப் பொது மற்றும் தனியாரின் ஒத்துழைப்பு அவசியம் என்றார்.
இதில் கூறினார்.காரணமாக இருக்கும்வேளை இந்த நோய்க்கானக் காரணிகளைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளார்.
8. உணவுப் பொருட்கள் விலையேற்றம் குறித்து உலகத் தலைவர்கள் எச்சரிக்கை
சன.28,2011. உலகில் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து வருவது சமூகப் பதட்டநிலைகளுக்கும் பொருளாதாரப் போருக்கும்கூட இட்டுச் செல்லும் என்று உலகத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்து நாட்டு தாவோவில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மாநாட்டில் பேசிய இந்தோனேசிய அரசுத் தலைவர் சுசிலோ பாம்பாங் யுதோயோனோ, உலகில் அதிகரித்து வரும் மக்கள் தொகையோடு வளங்கள் பற்றாக்குறையும் போட்டி போடுவதால் இந்நிலை மோதல்களுக்குக் காரணமாக அமையக்கூடும் என்று குறிப்பிட்டார்.
தற்போது 700 கோடியாக இருக்கும் உலக மக்கள் தொகை 2045ம் ஆண்டுக்குள் 900 கோடிக்குமேல் உயரக்கூடும் என்றும் யுதோயோனோ கூறினார்.
ஜி20 பொருளாதார மாநாட்டிற்கும், ஜி8 நாடுகளின் பொருளாதாரக் கூட்டத்திற்கும் தலைமை வகித்துள்ள ப்ரெஞ்சி அரசுத்தலைவர் நிக்கோலாஸ் சர்கோசி பேசுகையில், விலைவாசிகளில் சரிப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
இம்மாதம் 26 முதல் 30 வரை இம்மாநாடு நடைபெறுகின்றது