Tuesday, 4 March 2025

Modi & Stalin “Deadlocked” Over National Education Policy and Delimitati...

அறிவியலின் குரலுக்கு செவிசாய்ப்பது மிக அவசியம்

 

அறிவியலின் குரலுக்கு செவிசாய்ப்பது மிக அவசியம்



பாலிகிரைசிஸ் என்றழைக்கப்படும் பிரச்சனையானது, போர்கள், காலநிலை மாற்றம், எரிசக்தி பிரச்சனைகள், தொற்றுநோய்கள், இடம்பெயர்வுகள், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் ஆகியவை ஒன்றிணைந்த வரலாற்றுச் சூழலை எழுப்புகிறது

மெரினா ராஜ் – வத்திக்கான்

வாழ்வில் முன்னேற்றம் அடையவும், நமது உறுதிகள், பழக்கவழக்கங்கள் மற்றும் பயங்களில் நிலைத்து நிற்காமல் இருக்கவும், அறிவியலின் குரலுக்கு செவிசாய்ப்பது அவசியமாகிறது என்றும், நமது வாழ்க்கைப்பயணத்தில் நம்மைத் தாங்கும் அடிப்படை அணுகுமுறை எதிர்நோக்கு என்றும் ஒரு செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 3, திங்கள்கிழமை வாழ்வுக்கான திருப்பீடக்கழகத்தின் பொதுப்பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட செய்தியானது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கையொப்பமிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

உலகத்தின் முடிவா? நெருக்கடி, பொறுப்பு மற்றும் நம்பிக்கை” என்ற தலைப்பில் தனது கருத்துக்களை வழங்கியுள்ள திருத்தந்தை அவர்கள், வாழ்க்கை, நலவாழ்வுத்துறை மற்றும் குணப்படுத்துதல் துறை ஆராய்ச்சி நடவடிக்கையின் சில அடிப்படைக் கருத்துக்களை பற்றிய பாலிகிரைசிஸ் என்றழைக்கப்படும் பிரச்சனை குறித்தும் எடுத்துரைத்துள்ளார்.

பாலிகிரைசிஸ் என்றழைக்கப்படும் பிரச்சனையானது, போர்கள், காலநிலை மாற்றம், எரிசக்தி பிரச்சனைகள், தொற்றுநோய்கள், இடம்பெயர்வுகள், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் ஆகியவை ஒன்றிணைந்த வரலாற்றுச் சூழலை எழுப்புகிறது என்றும்,  வாழ்க்கையின் வெவ்வேறு பரிமாணங்களை ஒரே நேரத்தில் தொடுகின்ற இந்த முக்கியமான பிரச்சனைகளின் பிணைப்பானது, உலகின் எதிர்கால நிலையையும் அதைப் பற்றிய நமது புரிதலையும் கேள்விக்குள்ளாக்குகிறது என்றும் எடுத்துரைத்துள்ளார்.

அறிவியல்களின் குரலைத் தொடர்ந்து கேட்பது நமக்கு புதிய நுண்ணறிவுகளை வழங்குகிறது என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், நமது வாழ்க்கைப் பயணத்தில் நம்மைத் தாங்கும் அடிப்படை அணுகுமுறை எதிர்நோக்கு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்நோக்கு ஏமாற்றத்தை நமக்குத் தருவதற்காகக் காத்திருப்பதில்லை என்றும், குறுகிய தனிப்பட்ட அளவைத் தாண்டிச் செல்கின்ற உண்மையான வாழ்க்கையை நோக்கி முழுஆற்றலுடன் செல்வதை உள்ளடக்கியது என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

முன்னாள் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களின் வரிகளான, எதிர்நோக்கு, ஒரே மக்களுடன் நம்மை இருத்தலியலில் ஒன்றிணைப்பதோடு இணைக்கப்பட்டுள்ளது, அதனை ஒவ்வொரு தனிநபரும் நமக்குள் மட்டுமே உணர முடியும் என்பதையும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

உலகப் பொது நன்மை, பசி மற்றும் துயரத்தை ஒழித்தல், அடிப்படை மனித உரிமைகளின் உறுதியான பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அதிகாரம் கொண்ட மிகவும் பயனுள்ள உலக அமைப்புகளுக்கு நாம் தொடர்ந்து உறுதியுடன் உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.

இத்தகைய உறுதியானது, மாறிவரும் அரசியல் சூழ்நிலைகளைச் சார்ந்து இல்லாத ஒரு பன்முகத்தன்மையை ஊக்குவிக்கிறது, நிலையான செயல்திறனைக் கொண்டிருக்கின்றது எனவே இது அனைத்து மனிதகுலத்தையும் பற்றிய ஒரு அவசரப் பணி என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.


மார்ச் 8. பன்னாட்டு மகளிர் தினம்

 

மார்ச் 8. பன்னாட்டு மகளிர் தினம்


பெண்களின் உரிமைகள் பொறுத்தவரையில் நம் சாதனைகளை மதிப்பிடுவதற்கும், தடைகளை எதிர்கொள்வதற்கும், அர்த்தமுள்ள சீர்திருத்தங்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் ஒரு முக்கிய தருணமாக மார்ச் 8 உள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அன்று தங்களின் வாக்குரிமைக்காகப் போராடி அதைப் பெற்றுத் தராவிட்டால் இன்று வாக்களிக்கும் உரிமையற்று வெறும் பதுமைகளாகவே இருந்து கொண்டிருப்பார்கள் பெண்கள். வேலை நேரத்தைக் குறைக்கச் சொல்லி அவர்கள் போராடி இருக்காவிட்டால் இன்று வெளியிலும் வீட்டிலும் பெண்களின் நேரம் சுரண்டப்பட்டிருக்கும். கொஞ்சம் உற்றுநோக்கினோமென்றால், பெண்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் உரிமைகள் எல்லாம் அவர்களேப் போராடி பெற்றவை. பல்லாயிரக்கணக்கான பெண்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்த இந்த போராட்டத்தை கௌரவப்படுத்தி சிறப்பிக்க, பன்னாட்டு மகளிர் தினத்தை ஆண்டுதோறும் மார்ச் 8ஐத் தேர்ந்துள்ளோம். பெண்களின் சாதனைகளை அங்கீகரிக்கவும், பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கவும், பெண்களுக்கு அதிகாரமளிப்பதை ஆதரிக்கவும் கொண்டாடப்படும் இந்நாள், 2025ஆம் ஆண்டில், "செயலை துரிதப்படுத்து" என்ற கருப்பொருளை தலைப்பாகக் கொண்டு சிறப்பிக்கப்படுகிறது.

பன்னாட்டு மகளிர் தினம் என்பது வழக்கமான ஒரு கொண்டாட்டத்திற்கு அப்பாற்பட்டு பாலின ஏற்றத்தாழ்வுகளை சரி செய்வதற்கான ஒரு தினமாக பார்க்கப்படுகிறது. இது பெண் அதிகாரத்திற்கான உலகளாவிய ஒற்றுமையை வளர்க்கும் அதே வேளையில், பெண்களுக்கு இருக்கும் பொருளாதார சமத்துவமின்மை, அரசியல் பிரதிநிதித்துவமின்மை மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. பெண்களின் உரிமைகளை வடிவமைக்கும் சட்டங்கள் மற்றும் சமூக மாற்றங்களைக் கொணர்வதில் நாம் உறுதியுடன் செயல்படவேண்டும் என்பதை இந்த நாள் நமக்குத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பெண்களின் உரிமைகள் பொறுத்தவரையில் இதுவரை கண்ட சாதனைகளை மதிப்பிடுவதற்கும், தடைகளை எதிர்கொள்வதற்கும், அர்த்தமுள்ள சீர்திருத்தங்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் ஒரு முக்கிய தருணமாக இந்நாள் உள்ளது.

நம்மால் உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் கொண்டாடப்படும் சர்வதேச பெண்கள் தினம், ஒரு நூற்றாண்டு காலப் பெண்களுடைய போராட்டங்களின் மீது கட்டமைக்கப் பட்டிருக்கிறது என்பது நமக்குத் தெரியுமா?. 1908ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி, உழைக்கும் பெண்களின் வேலை நேரத்தைக் குறைக்கவும், கூலியை உயர்த்தவும், பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கோரியும், ஏறக்குறைய 15,000 உழைக்கும் பெண்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஒரு பேரணியை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக,  1910இல் ஹேகனில் அனைத்துலகப் பெண்கள் நாள் மாநாடு கிளாரா ஜெட்கின் என்பவர் தலைமையில் கூடியது. அதன் தொடர்பாக பன்னாட்டு மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி ஜேர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகள், முதல் பன்னாட்டு மகளிர் தினத்தைக் கொண்டாடினர். 1911லிருந்து பல நாடுகளில், பல தேதிகளில் ‘பன்னாட்டு மகளிர் மகளிர் தினம்’ கொண்டாடப்பட்டுவந்தது. 1975ஆம் ஆண்டுதான் மார்ச் 8ஆம் தேதியை சர்வதேச பெண்கள் தினமாக ஐ.நா அறிவித்தது. அதைத் தொடர்ந்தே மெள்ள மெள்ள உலக அளவில் இது பரவ ஆரம்பித்தது.

உலக நிலை இப்படியிருக்க, தமிழகத்திலோ, துவக்க காலத்திலிருந்தே பெண்களின் பங்களிப்பும், அவர்களுக்குரிய மரியாதையும் அங்கீகாரமும் துவக்க காலத்திலிருந்தே இருந்தது என்றுச் சொல்லலாம். தொன்மை காலத்திலேயே ஔவையார், ஒக்கூர் மாசாத்தியார், பொன்முடியார், காக்கைப் பாடினியார், வெண்ணிக் குயத்தியார், ஆதி மந்தியார் என சங்க தமிழ் பெண் புலவர்களின் வரிசை நீண்டுகொண்டேச் செல்கிறது. ஆண்களின் அபரிவிதாமன அடக்குமுறை இருந்திருந்தால் நிச்சயமாக இவர்களால் வெளி உலகில் இவ்வளவு புகழோடு இருந்திருக்க முடியாது. இவர்கள் பெண் என்பதற்காக எங்கும் ஒதுக்கப்பட்டதாக வரலாற்றில் இல்லை.

புலமையில் மட்டுமல்ல, போராட்ட குணத்திலும் சிறந்து விளங்கிய, அதாவது இந்திய தேசிய போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் வீராங்கணைகளைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், வேலு நாச்சியார், வை. மு. கோதை நாயகி அம்மாள், கி. சாவித்திரி அம்மாள், அம்புஜத்தம்மாள், குமுதினி, தில்லையாடி வள்ளியம்மை, ருக்மணி லட்சுமிபதி, அஞ்சலையம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் என சொல்லிக் கொண்டேச் செல்லலாம். மருத்துவம் என்று பார்த்தோமானால் தமிழகத்தின் புதுக்கோட்டையில் பிறந்த முத்துலட்சுமி ரெட்டி இந்தியாவின் முதல் பெண் அறுவைச் சிகிச்சை நிபுணர். இந்தியாவின் கானக் குயில்கள் என்று பார்த்தோமானால் தமிழகத்தின் M.S. சுப்புலட்சுமி, T.K. பட்டம்மாள், M.L. வசந்தகுமாரி, K.B. சுந்தராம்பாள் என்ற வரிசை தொடர்கிறது. இவர்களெல்லாம் தமிழகத்தின் பெருமைகள்.

இத்தகைய ஒரு பின்னணியில் பார்க்கும்போது, பெண்கள் தினம் என்பது வெறும் ஒரு நாள் கொண்டாட்டம் மட்டும்தானா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. இந்த கொண்டாட்டத்தில்,  கட்டட வேலை செய்பவர்களும், விவசாயக் கூலி வேலை செய்பவர்களும் கலந்துகொள்கிறார்களா? அவர்களுக்கு இந்த நாளின் முக்கியத்துவம் தெரியுமா?. உண்மையில் அவர்களுக்கு மகளிர் தினம் என்றால் என்ன என்பது தெரியாது. பெண் உரிமை, பெண் விடுதலை பற்றித் தெரியாது. பெண் கல்வி பற்றி தெரியாது. பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவது தெரியாது. அவர்கள் பாட்டுக்கு அன்று கூட மழையில், வெயிலில், வயற்காட்டில், வீட்டில் உழைத்துக் கொண்டிருப்பார்கள். இங்கு இருவேறு காட்சிகளைத்தான் நாம் கண்டுவருகிறோம். இதுதான் யதார்த்தம், உண்மை. ஒருபுறம் மகளிர் தினத்தை அதிகமாக கொண்டாடிக் கொண்டே இன்னொரு புறம் ஒரு பகுதிப் பெண்களை அதிலிருந்து விலக்கி வைத்திருக்கிறோம். பெண்கள் தினத்தைக் கொண்டாட ஆரம்பித்த நாளிலிருந்தே இப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறது. எல்லாப் பெண்களையும் உள்ளடக்கிய ஒரு கொண்டாட்டம்தானே சரியாக இருக்க முடியும்? ஒரு பகுதி பெண்கள் அதுகுறித்த எந்த உணர்வும் இல்லாமல் இருப்பதற்கு எது காரணம்? என்பது குறித்து நாம் என்றாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா?

கல்வி சார்ந்த பணிகள் உயர்வானவை, கற்றறிந்த பெண்கள் தான் உயர்வானவர்கள், உடலுழைப்பு சார்ந்த வேலைகள் தாழ்ந்தவை, படிக்காத பெண்கள் தாழ்ந்தவர்கள் என எண்ணுதல்தான் மிகப்பெரிய காரணமாக இருக்கின்றது. இந்த மேட்டிமைத் தனத்தில் இருந்து நாம் வெளியே வரும்போதுதான் மகளிர் தினம் என்பது எல்லா பெண்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். ஆம். ஒடுக்கப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட, உடலுழைப்பு சார்ந்த பணிகளைச் செய்துவரும் பெண்களையும், ஏனையப் பெண்களோடு, பெண் அரசியலோடு இணைக்க வேண்டும். இது நிகழவில்லை என்றால் மகளிர் தினம் கொண்டாடுவதில் அர்த்தம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மேலும், பெண்கள் மீதான வன்முறைகளுக்குக் காரணம் பெண் என்னும் பாலினம் மட்டுமன்று. மாறாக, சாதி, மதம், வர்க்கம் எல்லாமுமே செயல்படுகின்றன என்பதை நாம் கண்களைத் திறந்து, பக்கச் சார்பின்றிப் பார்க்கப் பழக வேண்டும். இவற்றையெல்லாம் நாம் கேள்வி கேட்கத் துவங்க வேண்டும்.

பன்னாட்டு மகளிர் தின வாழ்த்துக்கள்

எப்போதெல்லாம் எங்கெல்லாம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கின்றனவோ, அப்போதெல்லாம் அங்கெல்லாம் பெண் உரிமைக்காகப் போராடுவதும், போராட்டத்தின் நியாயங்களை சமூகத்துக்கு எடுத்துச் செல்வதும்தான் பெண்களுக்கு உண்மையான மகளிர் தினக் கொண்டாட்டம் என்பதை உணரவேண்டும். அன்றுதான், பன்னாட்டு மகளிர் தினம் தன் நோக்கத்தில் நிறைவு காணும்.


Monday, 3 March 2025

புனிதர் பட்ட படிநிலைகளுக்கென ஐவரின் பெயர்கள் ஏற்பு

 

புனிதர் பட்ட படிநிலைகளுக்கென ஐவரின் பெயர்கள் ஏற்பு


திருஅவையில் இரு அருளாளர்களை புனிதர்களாக அறிவிப்பது குறித்த தினத்தை தீர்மானிக்க கர்தினால்கள் அவையைக் கூட்ட திருப்பீடச் செயலருடன் திருத்தந்தை ஆலோசனை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருஅவையில் இரு அருளாளர்களை புனிதர்களாக அறிவிப்பது குறித்த தினத்தை தீர்மானிக்க கர்தினால்கள் அவையைக் கூட்டவும், திருமறைக்காக உயிரை இழந்த இருவர், மற்றும் தங்களின் வீரத்துவ பண்புகளுக்காக மூவர் என ஐவரின் பெயர்களை புனிதர் பட்ட படிநிலைகளுக்கென ஏற்கவும் திருத்தந்தை ஒப்புதல் வழங்கியுள்ளார்.

மருத்துவமனையில் இருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீடத்தின் பொது விவகாரங்களுக்கான அதிகாரி, பேராயர் Edgar Peña Parra ஆகியோரை பிப்ரவரி 24ஆம் தேதி திங்களன்று சந்தித்தபோது திருத்தந்தை, புதிய இறையடியார்கள் குறித்த விவரங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

புனிதர் பட்ட படிநிலைகளுக்கான திருப்பீடத்துறைக்கு இந்த ஏற்பு அனுமதியை திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின் வழியாக வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் பிறந்து வட கொரியாவில் திருமறைக்காக தன் உயிரை இழந்த மறைமாவட்ட அருள்பணியாளர் இறையடியார் Emilio Giuseppe Kapaun, இத்தாலியில் பிறந்து திருமறைக்காக உயிரை இழந்த பொதுநிலை விசுவாசி இறையடியார் Salvo D'Acquisto ஆகியோரின் பெயர்களும், தங்கள் வீரத்துவ பண்புகளுக்காக இஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அருள்பணியாளர் இறையடியார் Michael Maura Montaner, இத்தாலியின் அருள்பணியாளர் இறையடியார் Didacus Bessi, போலந்தின் பொதுநிலைப் பெண்மணி இறையடியார் Cunegonda Siwiec ஆகியோரின் பெயர்களும் திருத்தந்தையால் புனிதர் பட்ட படிநிலைகளுக்கென ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

இது தவிர, வெனிசுவேலாவைச் சேர்ந்த அருளாளர் Joseph Gregorio Hernández Cisneros, இத்தாலியின் அருளாளர் Bartolo Longo ஆகியோரை புனிதர்களாக அறிவிக்கும் நாள் குறித்து ஆலோசிக்க கர்தினால்கள் அவையை கூட்ட உள்ளது குறித்தும் திருத்தந்தை விவாதித்ததாக திருப்பீட அறிக்கை தெரிவிக்கிறது.

அருள்தந்தை சகாய பெலிக்ஸ் (Kottar Diocese)-ஓவியக்கலை வழியாக எதிர்நோக்கின் திருப்பயணம்

 

அருள்தந்தை சகாய பெலிக்ஸ் (Kottar Diocese)-ஓவியக்கலை வழியாக எதிர்நோக்கின் திருப்பயணம்


கர்நாடகா மாநிலத்தில் உள்ள சித்ரகலா பார்சாந்த் கலைக்கல்லூரியில் முதுகலையையும், சென்னை ஓவியக் கல்லூரியில் ஓவியத்தின் வழியாக சிகிச்சை முறை பயிற்சியையும் பயின்றுள்ளார் அருள்தந்தை சகாய பெலிக்ஸ். இயேசுவின் இதயம் எனது ஓவியத்தில் பிரதிபலிக்கின்றது என்ற விருதுவாக்குடன் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார்.

மறைந்திருக்கும் கடவுளின் மகத்துவத்தை நமது கண்கள் மற்றும் இதயத்தால் உணரவைப்பது கலைஞர்களின் பணி என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளுக்கிணங்க, கலை வழியாகப் படைத்த இறைவனின் மகிமையைப் பறைசாற்றுபவர்கள் கலைஞர்கள். அதிலும் குறிப்பாக ஓவியக்கலை வழியாக  எல்லைகளைக் கடந்து, உலகெங்கும் பரந்து வாழும் மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்டு, வியக்க வைக்கின்றனர். அவ்வகையில் தமிழகத்தின் கத்தோலிக்க ஓவியர், ஓவிய அருள்பணியாளர் என்னும் பெருமைக்குரியவர் அருள்பணி சகாய பெலிக்ஸ். தமிழகத்தின் தேவசகாயம் பிள்ளை மலை (Kottar Diocese) என்னுமிடத்தில் பிறந்த தந்தை அவர்கள், ஓவியக்கலையில் மிகவும் ஆர்வம் கொண்டவர். கர்நாடகா மாநிலத்தில் உள்ள சித்ரகலா பார்சாந்த் கலைக்கல்லூரியில் முதுகலையையும், சென்னை ஓவியக் கல்லூரியில் ஓவியத்தின் வழியாக சிகிச்சை முறை பயிற்சியையும் பயின்றுள்ளார். இயேசுவின் இதயம் எனது ஓவியத்தில் பிரதிபலிக்கின்றது என்ற விருதுவாக்குடன் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்ட இவர், கலை மற்றும் கைவினைப் பொருட்கள் வழியாக நலமான சமுதாயத்தை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையுடன் முன்னோக்கிச் செல்கிறார்.

1000 க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து, அவற்றை உலகின் பல பகுதிகளில் அதனைக் காட்சிப்படுத்தியவர். இவரின் ஓவியங்கள், ஆன்மிக நறுமணத்தையும் குணப்படுத்தும் ஒளியையும் பரப்பும், தத்துவ மற்றும் இறையியல் கதிர்களால் சூழப்பட்டவை. "புதிய நற்செய்தி அறிவிப்பு" என்ற தேசிய விருதினைப் பெற்றுள்ள தந்தை அவர்கள், ஓவியக்கலையின் மீதான ஆர்வம் மற்றும் ஈர்ப்பினால் "ஓவிய அருள்பணியாளர்" என்று மக்களால் அழைக்கப்படுகின்றார். இத்தகைய சிறப்பு வாய்ந்த அருள்பணி சகாய பெலிக்ஸ் அவர்கள், ஓவியக்கலை வழியாக எதிர்நோக்கின் திருப்பயணம் பற்றிய கருத்துக்களை இன்றைய நேர்காணலில் பகிர்ந்து கொள்ள இருக்கின்றார். தந்தை அவர்களை எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.



Cardinal Koovakad: Nonviolence is courageous commitment to justice

  Cardinal Koovakad: Nonviolence is courageous commitment to justice Speaking at an Ahimsa Day celebration at the British Parliament, Cardin...