மனித உயிரைப் பாதிக்கும் முடிவுகளைச் செயற்கை நுண்ணறிவிடம் ஒருபோதும் ஒப்படைக்கக் கூடாது: திருத்தந்தை
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
மனித உயிர், சுதந்திரம் மற்றும் வலிமையைப் பயன்படுத்துதல் தொடர்பான முடிவுகள் எப்போதும் மனிதர்களின் பொறுப்பான கண்காணிப்பின் கீழேயே இருக்க வேண்டும் என்றும், இத்தகைய முடிவுகளைச் செயற்கை நுண்ணறிவிடம் ஒருபோதும் ஒப்படைக்கக் கூடாது என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வலியுறுத்தினார்.
அக்டோபர் 30, வெள்ளியன்று, வத்திக்கானில் இடம்பெற்ற, ‘செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம்: அறிவார்ந்த தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மற்றும் பயன்பாடுகள் குறித்த திருப்பீடத்திற்கும் அறிவியல் உலகிற்கும் இடையிலான உரையாடல்’ என்ற தலைப்பிலான சந்திப்பில் பங்கேற்றவர்களை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு திருத்தந்தை கூறினார்.
தனது மகத்தான மானுடம் என்ற திருமடலில் எடுத்துரைத்துள்ள கருத்துகளின் அடிப்படையில், செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் மனிதர்களின் முடிவுகளைச் சார்ந்துள்ளது என்றும், இயந்திரங்கள் மனிதர்கள் அல்ல, அவை கருவிகள் மட்டுமே என்றும் திருத்தந்தை குறிப்பிட்டார்.
மேலும், மனித மாண்பு மற்றும் பொது நலனை மையமாகக் கொண்டு செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி வழிநடத்தப்பட வேண்டும் என்றும், மனித உயிர் தொடர்பான முடிவுகளை இயந்திரங்களிடம் ஒப்படைப்பது மனிதப் பொறுப்புணர்வைக் குறைக்கும் என்றும் எச்சரித்தார்.
தானியங்கிக் கொல்லும் ஆயுதங்களுக்குத் தடை விதிக்கவும், செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டைக் கண்காணிக்க அனைத்துலக அளவில் பொதுவான விதிமுறைகள், சுதந்திரமான கண்காணிப்பு மற்றும் பொறுப்புணர்வுக்கான தெளிவான நடைமுறைகள் உருவாக்கப்படவும் அரசுகளுக்கு அழைப்பு விடுத்தார்.
இறுதியாக, செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி ஒரு சிலரின் நலன்களுக்காக மட்டுமல்லாமல், அனைவருக்கும் பயனளித்து, ஒற்றுமையையும் பொதுநலனையும் வளர்ப்பதாக அமைய வேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, தனது திருத்தூது ஆசீரை வழங்கி உரையை நிறைவு செய்தார்.

No comments:
Post a Comment