Monday, 2 November 2026

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இந்துக்களுக்கு வத்திக்கான் வாழ்த்து!

 தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இந்துக்களுக்கு வத்திக்கான் வாழ்த்து!


வத்திக்கானின் மதங்களிடையேயான கருத்துப்பரிமாற்றங்களுக்கான திருப்பீடத்துறை, இந்துக்களின் தீப ஒளித்திருநாளான தீபாவளியை முன்னிட்டு உலகெங்கிலுமுள்ள இந்துக்களுக்குத் தனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

மதங்களிடையேயான கருத்துப்பரிமாற்றங்களுக்கான திருப்பீடத்துறை, இந்துக்களின் தீப ஒளித்திருநாளான தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, அவர்களுக்குத் திருவிழா வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. மேலும் அமைதியையும் சகோதரத்துவத்தையும் மேம்படுத்த கிறிஸ்தவர்களும் இந்துக்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.

தனது செய்தியில், இந்துக்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் சமூகங்களுக்கும் ஏராளமான மகிழ்ச்சியும் அமைதியும் செழிப்பும் கிடைக்க வாழ்த்துத் தெரிவித்ததுடன், அனைத்து நன்மைகளுக்கும் ஊற்றான இறைவனின் ஆசீருக்காக தனது இறைவேண்டலையும் தெரிவித்துள்ளது.

1986ஆம் ஆண்டு அசிசியில் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள் கூட்டிய, பல்வேறு மதங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதிக் கூட்டத்தை இச்செய்தி நினைவுகூர்ந்தது. உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதிலும் அமைதியை வளர்ப்பதிலும் மதங்களுக்கிடையேயான ஒற்றுமையின் முக்கியத்துவத்தை அந்தக் கூட்டம் எடுத்துக்காட்டியது.

அந்தக் கூட்டத்தின் 40வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், "அசிசியின் உணர்வால்" ஈர்க்கப்பட்டு அமைதிக்கான வழிகளை உருவாக்குமாறு இந்துக்களையும் கிறிஸ்தவர்களையும் அத்திருப்பீடத்துறை அழைத்துள்ளது.

புனித அசிசி பிரான்சிஸின் முன்மாதிரியைப் பின்பற்றி, அமைதிக்காக ஒன்றிணைந்து இறைவேண்டல் செய்யவும், உலகளாவிய சகோதரத்துவத்தை வளர்க்கவும் பல்வேறு மதத்தினருக்கு இச்செய்தி அழைப்பு விடுத்தது. மேலும், வளர்ந்து வரும் சகோதரத்துவம் மனித இதயங்களில் அமைதி வேரூன்ற வழிவகுக்கும் என்றும் வலியுறுத்தியது.

மதங்களுக்கு இடையேயான உரையாடலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அந்தத்துறை, மனிதகுலத்திற்கு அதன் முக்கியத் தேவையை திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் வலியுறுத்தியதையும் நினைவு கூர்ந்தது.

இந்துக்களும் கத்தோலிக்கர்களும் தங்கள் சொந்த மத மரபுகளில் வேரூன்றிய அதேவேளையில், தங்களின் பகிரப்பட்ட மதிப்புகளிலிருந்து உத்வேகம் பெற்று, இறைவேண்டல், சகோதரத்துவம் மற்றும் மதங்களுக்கு இடையேயான உரையாடல் ஆகியவற்றின் மூலம் அமைதிக்கான தங்கள் உறுதிப்பாட்டைப் புதுப்பிப்பார்கள் என்ற நம்பிக்கையை அந்தச் செய்தி வெளிப்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Pope: Youth Olympic Games a sign of hope emerging from world of sport

  Pope: Youth Olympic Games a sign of hope emerging from world of sport Pope Leo XIV sends his greetings to the participants in the Youth Ol...