Friday, 9 August 2024

உடல், ஆன்ம நலத்தை வழங்கும் வேளாங்கண்ணி திருத்தலம்

 

உடல், ஆன்ம நலத்தை வழங்கும் வேளாங்கண்ணி திருத்தலம்



வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு தஞ்சாவூர் ஆயர் சகாயராஜ் தம்புராஜ் அவர்களுக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது விசுவாசக்கோட்பாடுகளுக்கான திருப்பீடத்துறை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

தமிழகத்தின் வேளாங்கண்ணியில் செப்டம்பர் 8ஆம் தேதி சிறப்பிக்கப்படவிருக்கும் ஆரோக்கிய அன்னை திருவிழாவை முன்னிட்டு தஞ்சாவூர் ஆயர் சகாயராஜ் தம்புராஜ் அவர்களுக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது விசுவாசக்கோட்பாடுகளுக்கான திருப்பீடத்துறை.

வேளாங்கண்ணியின் ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் 16ஆம் நூற்றாண்டு முதல் சிறப்பிக்கப்படும் இந்த பக்தி கொண்டாட்டங்கள், அன்னை மரியா ஏழை மற்றும் நோயுற்ற சிறாரை நேரடியாக சந்தித்ததை பறைசாற்றி நிற்கின்றன எனக்கூறும் இந்த செய்தி, இயேசு நமக்கு அன்னையாகத் தந்த மரியாவின் நெருக்கமும் கனிவும் இந்த சந்திப்புகளில் வெளிப்பட்டதை நாம் அறிகிறோம் எனவும் தெரிவிக்கிறது.

லூர்து நகரில் தன்னை வெளிப்படுத்திய அன்னை மரியா வேளாங்கண்ணியிலும் ஆரோக்கிய அன்னையாக வெளிப்படுத்தியதை கௌரவிக்கும் விதமாக, 2002ஆம் ஆண்டு உலக நோயாளர் தினத்தை வேளாங்கண்ணியில் சிறப்பிக்க புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் தீர்மானித்ததையும் இந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது விசுவாசக்கோட்பாடுகளுக்கான திருப்பீடத்துறை.

உடல் நலத்தை மட்டுமல்ல, ஆன்ம நலத்தையும் மரியன்னை திருத்தலங்களில் பெறுகிறோம், ஏனெனில் அன்னை மரியாவின் திரு உருவம் குறித்து தியானிக்கும்போது, நம் கவலைகளை அகற்றி நமக்கு அமைதியைத் தரும் இயேசுவின் அன்பை கண்டுகொள்கிறோம் எனவும் அச்செய்தி மேலும் கூறுகிறது.

அன்னை மரியாவின் கையிலிருந்த குழந்தைக்கு ஏழை சிறுவன் தன் கையில் வைத்திருந்த பசும்பாலை வழங்கியது, நாமும் ஏழைகள் மீது அக்கறையுடன் செயல்படவேண்டும் என்பதை குறித்து நிற்கிறது என உரைக்கும் இச்செய்தி, கடல் புயலிலிருந்து காப்பாற்றப்பட்ட போர்த்துக்கீசிய மாலுமிகள் வேளாங்கண்ணியில் ஒரு கோவிலைக் கட்டியதும், வேளாங்கண்ணி திருத்தலக்கோவில் 2004 சுனாமியிலும் சேதமடையாமல் இருந்ததையும் சுட்டிக்காட்டுகிறது.                

விசுவாசத்துடன் வேளாங்கண்ணி திருத்தலத்திற்கு வரும் திருப்பயணிகள் பெறும் ஆன்மீகக் கொடைகள் குறித்தும், கிறிஸ்தவர்கள் அல்லாத வேறு மதத் திருப்பயணிகளும் பயன்பெற்றுவருகிறார்கள் என்பதையும் குறிப்பிடும் இச்செய்தி, தூய ஆவியாரின் அருள் இங்கு செயல்படுவதைக் காணமுடிகிறது எனவும், கத்தோலிக்க திருஅவையின் அருளடையாளங்களை பெறமுடியாதவர்களுக்கு இயேசுவின் தாயாம் அன்னை மரியாவின் ஆறுதல் மறுக்கப்படுவதில்லை என்பதற்கு சான்றாக இவ்விடம் உள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                  விசுவாசத்தின் திருத்தலமாகிய வேளாங்கண்ணியின் அழகை திருத்தந்தையோடு இணைந்து தானும் நினைவுகூர்வதாகவும், திருத்தந்தை இத்திருத்தலம் குறித்து கொண்டிருக்கும் மதிப்புடன் கூடிய பாராட்டை தன் வழியாக தெரிவிக்க கேட்டுக்கொண்டதாகவும், அவரின் தந்தைக்குரிய ஆசீரை அனைத்து திருப்பயணிகளுக்கும் வழங்குவதாகவும் அச்செய்தியில் மேலும் கூறியுள்ளார் விசுவாசக்கோட்பாடுகளுக்கான திருப்பீடத்துறையின் தலைவர், கர்தினால் Víctor Manuel Fernandez.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment