மணிப்பூர் மக்களுக்குப் பணத்தைவிட அமைதிதான் தேவைப்படுகிறது!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் புதிய வீடுகள் கட்டுவதற்குப் பணத்தை வழங்குவதற்குப் பதிலாக அமைதியை மீட்டெடுக்குமாறு அழைப்புவிடுத்துள்ளனர் அதன் பூர்வகுடி கிறிஸ்தவர்களின் தலைவர்கள் என உரைக்கிறது யூகான் செய்தி நிறுவனம்.
ஆகஸ்ட் 5, இத்திங்களன்று, மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் புதிய வீடுகள் கட்ட ரூ. 1,00,000 விநியோகம் செய்வதற்கான முடிவைப் பற்றி அம்மாநிலத்தின் முதல்வர் என். பிரேன் சிங், சட்டசபையில் தெரிவித்த வேளை, இத்தகையதொரு அழைப்பை விடுத்துள்ளனர் பூர்வகுடி கிறிஸ்தவர்களின் தலைவர்கள் என மேலும் கூறுகிறது அச்செய்திக் குறிப்பு.
கடந்த 2023-ஆம் ஆண்டு மே 3-ஆம் தேதி தொடங்கிய இந்த வன்முறையில், 18,370-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் 14,800-க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்றும் மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங் மாநில சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 6, இச்செவ்வாயன்று இதுகுறித்து யூகான் செய்தி நிறுவனத்திடம் பேசிய பாதுகாப்பு காரணங்களுக்காகப் பெயர் குறிப்பிட விரும்பாத தலத்திருஅவை தலைவர் ஒருவர், மணிப்பூரில் அமைதி மீட்டெடுக்கப்படாவிட்டால், அத்தகைய அறிவிப்பு எதுவும் பயனளிக்காது என்று எடுத்துக்காட்டியுள்ளார்.
இந்தக் கலவரத்தால் இடம்பெயர்ந்து சென்றுள்ள மக்கள் அனைவரும், மீண்டும் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பி மனித மாண்புடன் வாழ்வதற்குத் தங்களுக்கு ஒரு வீடு வேண்டும் என கோரிக்கை வைப்பதாகவும், ஆகவே, அவர்கள் இல்லங்களுக்குத் திரும்புவதற்கான சூழலை அரசு உருவாக்க வேண்டும் என்றும் அச்செய்தி நிறுவனத்திடம் மேலும் தெரிவித்துள்ளார் அவர்.
வீடுகள் கட்டித்தருவதற்கான பணத்தை முதல்வர் சட்டசபையில் அறிவித்தார், ஆனாலும், மாநிலத்தில் அமைதி நிலவாவிட்டால் இத்தகையதொரு அறிவிப்பால் எந்தப் பயனும் இல்லை என்று பூர்வகுடி கிறிஸ்தவத் தலைவர் ஒருவரும் அச்செய்தி நிறுவனத்திடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
மணிப்பூரில் உள்ள பெரும்பான்மையான மெய்தி இந்து சமூகத்திற்குப் பூர்வகுடி அந்தஸ்து வழங்குவதில் ஏற்பட்ட 15 மாத கால மோதலில் 226-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 60,000-க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து சென்றனர். அவர்களில் பெரும்பாலோர் கிறிஸ்தவர்கள் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment