Friday, 15 December 2023

மனித உயிர்களைப் பாதுகாப்பது நமது முன்னுரிமையாக இருக்கட்டும்!

 

மனித உயிர்களைப் பாதுகாப்பது நமது முன்னுரிமையாக இருக்கட்டும்!



இன்று, ஏறத்தாழ 11 கோடியே 40 இலட்சம் மக்கள் வலுக்கட்டாயமாகவும், உள்நாட்டு மோதல்கள், வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள், மத நம்பிக்கைகள் மற்றும் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் காரணமாகவும் இடம்பெயர்ந்து சென்றுள்ளனர் : திருத்தந்தை.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மனித உயிர்களை மீட்பதும் அவற்றைப் பேணிக்காப்பதும் நமது முதன்மையான முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும், இன்று நாம் ஏராளமான செய்திகள் மற்றும் புள்ளிவிவரங்களால் மூழ்கிவிடுகிறோம், ஆனால், இந்த எண்களுக்குப் பின்னால் மனித முகங்கள் இருப்பதை நாம் அடிக்கடி மறந்துவிடுகிறோம், அவை ஒவ்வொன்றிலும் நமது சகோதரர் சகோதரிகளின் துயரம் நிறைந்துள்ளது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 13 முதல் ஜெனிவாவில் நிகழ்ந்து வரும் இரண்டாம் உலகளாவிய புலம்பெயர்ந்தோர் பொதுப்பேரவைக்கு டிசம்பர் 14, இவ்வியாழனன்று அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

முதலாவதாக, இன்று நாம் இங்கு கூடியிருப்பது, புலம்பெயர்ந்தோரின் பெரும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பொதுவான பொறுப்பாக நமது தெளிவான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது என்று கூறியுள்ள திருத்தந்தை, இது நம்பிக்கையின் அடையாளமாகவும், ஒவ்வொரு நாளும் நான் பார்க்கும் பல நேர்மறையான எண்ணங்களுக்கு வலுசேர்ப்பதாகவும் அமைந்துள்ளது என்றும் உரைத்துள்ளார்.

இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 109-வது உலக புலம்பெயர்ந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தோர் தினத்திற்காக வழங்கிய செய்தியை நினைவு கூர்ந்த திருத்தந்தை, புலம்பெயர்ந்தோரின் சவால்களைப் பற்றி விவாதிப்பதற்கு முன், புலம்பெயரலாமா வேண்டாமா என்பதைத் தேர்வுசெய்யும் உரிமை அனைவருக்கும் இருக்க வேண்டும் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என்றும், ஒவ்வொருவரும் தங்கள் சொந்த நாட்டில் மனித மாண்புடன் கூடிய வாழ்க்கை வாழ்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இன்று, ஏறத்தாழ 11 கோடியே 40 இலட்சம் மக்கள் வலுக்கட்டாயமாகவும், உள்நாட்டு மோதல்கள், வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள், மத நம்பிக்கைகள் மற்றும் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் காரணமாகவும் இடம்பெயர்ந்து சென்றுள்ளனர் என்று எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

இந்தக் காரணிகள் பெருகிய முறையில் சிக்கலானதாகிவிட்டன, இருப்பினும் அதற்கான பதில்கள் வளர்ந்து வரும் மற்றும் அழுத்தும் சவால்களை போதுமான அளவில் எதிர்கொள்ளவில்லை என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை,  இதன் விளைவாக, பாதுகாப்பைத் தேடும்போது அல்லது நம்பிக்கையற்ற எதிர்காலத்தை விட்டு வெளியேறும்போது நிலத்திலும் கடலிலும் இழந்த எண்ணற்ற உயிர்களுக்காக நாம் தொடர்ந்து வருந்துகிறோம் என்றுக் கூறினார்.

இந்த நோக்கத்திற்காக, புலம்பெயர்ந்தோராக இருப்பது என்பது வெறும் உயர்வை மட்டுமே வழங்குவதாக இருக்கக்கூடாது, மாறாக, கடவுள் கொடுத்த முழுமையான மனித மாண்பை அங்கீகரிப்பதாக இருக்க வேண்டும் என்றும், ஒரே மனிதக் குடும்பத்தின் உறுப்பினர்களாக, ஒவ்வொரு தனிமனிதரும் தங்களுக்கென்று இல்லமமைத்து வாழும் உரிமையுடையவர்கள் என்றும் கூறினார் திருத்தந்தை.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...