சுற்றுச்சூழல் கல்வி நகரங்கள் மாநாட்டின் முடிவில் திருத்தந்தை
மெரினா ராஜ் – வத்திக்கான்
இளைஞர்களுக்கு கல்வி கற்பிப்பது பெற்றோர்கள் மற்றும் ஒட்டுமொத்த சமுதாயத்தின் கடமை என்றும், பள்ளிப்படிப்பை முடிக்க முடியாத குழந்தைகள் சமூகங்களின் சுமையாக மாறுகிறார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மே 25 வியாழன் மாலை வத்திக்கானில் பன்னாட்டு Scholas Occurrentes அமைப்பு மற்றும் இலத்தீன் அமெரிக்க வளர்ச்சிக்கான வங்கி ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட "சுற்றுச்சூழல்-கல்வி நகரங்கள்" மாநாட்டின் நிறைவுப்பகுதியாக, ஸ்காலர்களின் 10 ஆண்டு விழா கொண்டாடப்பட்ட போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஓரினச்சேர்க்கை, இனவெறி, கொடுமைப்படுத்துதல் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொடுமைப்படுத்துதல் என்பது, எல்லாவற்றிற்கும் மேலாக, மிகவும் கொடுமையானது மற்றும் வாழ்க்கையை அழிக்கிறது என்றும் எடுத்துரைத்தார். மேலும் ஒவ்வோர் ஆணும் பெண்ணும் உண்மையானவர்களாக இருக்க வேண்டியது அவர்கள் கடமை என்றும், மதிக்கப்பட வேண்டியது அவர்களது உரிமை என்றும் எடுத்துரைத்தார்.
உலகின் பல்வேறு நகரங்களில் இருந்து 50 மேயர்கள் பங்கேற்ற இம்மாநாடானது கடந்த ஆண்டு ஸ்கோலஸால் அறிமுகப்படுத்தப்பட்ட Laudato si' Giovani இன் அனுபவத்தின் தொடர்ச்சியாக, நடைபெற்ற நிலையில் அர்ஜென்டினா, பிரேசில், மெக்சிகோ, சிலி, கொலம்பியா, உருகுவே, பராகுவே, பெரு, கோஸ்டாரிகா, டிரினிடாட், டொபாகோ, ஏக்குவதோர், பனாமா, வெனிசுலா ஆகிய நாடுகளில் இருந்து இலத்தீன் அமெரிக்க மேயர்களும், ஐரோப்பாவைப் பொறுத்தவரை, போர்ச்சுகல் மேயர்களும் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.
பெருந்தொற்று காலத்தின் போது ஸ்கோலாஸ் அமைப்பு ஏற்படுத்திய ஒன்றிணைந்து இருத்தல் என்னும் திட்டம் செயல்படுத்தப்படும் கிரானாடா என்னும் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுடன் நேரலையில் தொடர்பு கொண்டு மகிழ்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். தலைமுறைகளுக்கிடையேயான ஒற்றுமைக்காக, ஸ்கோலஸ் உறுப்பினர்கள் திருத்தந்தைக்கு "Reviviary" என்று அழைக்கப்படும் ஒரு கலைப்பொருளைக் கொடுத்தனர்.
2001 ஆம் ஆண்டில் அர்ஜென்டினாவின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மறுமொழியாக கல்வி கருதப்பட்டு அப்போதைய பியூனஸ் அய்ரேஸ் பேராயராக இருந்த ஜார்ஜ் பெர்கோலியோவால் உருவாக்கப்பட்ட, ஸ்கோலாஸின் தோற்றத்தை நினைவு கூர்ந்தனர்.
உலகளாவிய ரீதியில் தொடங்கப்பட்ட Scholas Occurrentes அமைப்பின் பத்தாவது ஆண்டு விழா மற்றும் சுற்றுச்சூழல் கல்வி நகரங்கள் மாநாட்டின் நிறைவை 50 மேயர்களுடன் இணைந்து சிறப்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளைஞர்கள் மற்றும் இளம்பருவ குடிமக்களின் பங்கேற்பில் விரிசலை குறைக்கவும் அரசியலுக்கு எதிரான ஒரு மருந்தாக கருதப்படும் கல்வியை பயிற்றுவிக்கவும் பேரியோ 31 ஸ்கோலஸ் கட்டிடத்தில் அமைந்துள்ள பியூனஸ் அயர்ஸ் பல்கலைக்கழகத்தின் புதிய தலைமையகத்தை ஆசீரளித்து திறந்து வைத்தார்.
நிகழ்வின் முடிவில், 50 மேயர்களும், லௌதாத்தோ சி திருமடலில் கூறப்பட்டுள்ள "ஒருங்கிணைந்த சூழலியல்" என்ற தலைப்பில் நடைபெற்ற 3 நாட்கள் பயிற்சிக்குப் பின் தங்களது பயிற்சி முடிவுகளை திருத்தந்தை பிரான்சிஸிடம் வழங்கினர்.
No comments:
Post a Comment