வத்திக்கான் நகருக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த நபர் கைது
மெரினா ராஜ் – வத்திக்கான்
வத்திக்கானின் சுவிஸ் காவலர் மற்றும் வத்திக்கான் காவல்துறை ஆகிய இரண்டு சோதனை நிலையங்களை அத்துமீறி வத்திக்கான் நகரத்திற்குள் வேகமாக வாகனத்தில் சென்ற மனிதர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மே 18 வியாழன் உரோம் உள்ளூர் நேரம் இரவு 8.00 மணிக்கு வத்திக்கான் சாந்தா அன்னா ஆலய நுழைவு வழியாக அனுமதியின்றி அதிவேகமாக காரில் சென்ற 40 வயது மனிதர் வத்திக்கான் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உரோம் உள்ளூர் நேரம் இரவு 8.00 மணி அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 11.30 மணிக்கு நுழைந்த வாகனமானது வத்திக்கான் சுவிஸ் காவலர்கள் மற்றும் காவல்துறையினர் ஆகிய இரு சோதனை நிலையங்களின் அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும் மீண்டும் வேகமாக உள்ளே நுழைந்தது.
நிலைமை அறிந்து வத்திக்கான் காவல்துறையினர் வாகனத்தின் முன்பக்க சக்கரத்தினை துப்பாக்கியால் சுட வாகனம் வத்திக்கான் அரண்மனையின் டமாசஸ் வளாகத்தில் போய் நின்றது. அங்கு அவ்வாகனத்தை ஓட்டிவந்த 40 வயது மதிக்கத்தக்க மனிதர் வத்திக்கான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
வத்திக்கான் மருத்துவர்களால் உடல் மன பரிசோதனை செய்யப்பட்ட பிறகு வத்திக்கான் நீதித்துறை அதிகாரிகளின் கீழ் உள்ள Gendarmerie barracks, புதிய வளாகத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்கியிருக்கும் இடமான வத்திக்கானின் சாந்தா மார்த்தா இல்லம், தூய பேதுரு பெருங்கோவில், வத்திக்கான் தோட்டம் ஆகியவற்றிற்கு செல்லும் மற்றொரு நுழைவாயிலான சாந்தா அன்னா ஆலய நுழைவாயிலில் இந்நிகழ்வு நடந்தது.
கைது செய்யப்பட்ட அம்மனிதர் முதலில் சுவிஸ் காவலர்களால் வத்திக்கானுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டார் என்றும், நுழைவாயிலை விட்டு வெளியேறிய பிறகு, மீண்டும் அதிவேகமாகத் திரும்பி, சுவிஸ் காவலர்கள், ஜென்டர்மேரி என்னும் வத்திக்கான் காவலர்கள் ஆகிய இரண்டு சோதனை நிலையங்களையும் அத்துமீறி நுழைந்தவர் என்றும் தெரியவருகின்றது.
No comments:
Post a Comment